.

.
.

Wednesday, November 29, 2017

கோழிக்கறியும், கரப்பான் பூச்சி கூட்டும்

ஒரு சுயபுராணப் பதிவு....

பதிவுக்குள் நுழையும் முன், இந்தப் பதிவில் அசைவ உணவு குறித்த சில சொந்த அனுபவங்களும் , கருத்துக்களும் உள்ளன, அசைவ உணவுப்பிரியர்கள் கவனிக்கவும். அப்புறம் தப்பா சொல்லிட்டோம்னு வருத்தப்படுறது, கோபப்படுறது, சைவத்திற்கு மாறுவது போன்ற பெரும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என்பதை  முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறோம். நட்பும் நன்றியும் :))

சும்மா சொல்லக்கூடாது !! அன்றும் சரி, இன்றும் சரி நாம் எப்பவுமே சாப்பாட்டு பிரியைதான் !! இது எந்தளவிற்கு நிஜம் என்பது , அம்மாவின் சமையலை சாப்பாட்டுத்தட்டு முழுக்க நிரப்பி வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து "கோபுரங்கள் சாய்வதில்லை " என உடன்பிறப்புகள் அடைமொழி வைத்ததிலிருந்து புலப்படும், அதாவது நாம் ஒரு "சாப்பாட்டு இராமாயி" என்பது :))

அம்மாவின் சமையல் அம்புட்டு ருசி, இத்தனைக்கும் அம்மாவின் சமையலில் அஜினோமோட்டோ, சுவைக்கூட்டு எல்லாம் கிடையாது. கொஞ்சமாய் கருத்து விளங்கும் அந்த இளம் பிராயத்தில் வாழ்ந்தது தோட்டப்புறத்தைத் தொட்ட கம்பம் ஒன்றில், வீட்டிற்கு முன்னால் பெரிய ஆறும் பக்கவாட்டங்களில் அதன் கிளை அருவிகளுமாய் பிரிந்தோடும் நீர்நிலைகள்.   அதற்கு
நடுவே தீபகற்பமாய் ஒரு குட்டி அத்தாப்புக்கூரை வேய்ந்த பலகை வீடு, வீட்டைச் சுற்றிலும் செம்பனை மரக்காடு, நடு நடுவே கொக்கோ பழ மரங்கள், இருள் சூழ்ந்த பிரதேசம்.

அந்த வாழ்க்கையையும் சலிக்காது, சளைக்காது வாழ்ந்தவர் அம்மா, வீட்டிற்கு பக்கத்தில் மரவள்ளித் தோட்டம், குட்டிக் குட்டியாய் கத்தரி இன்னும் அவரால் பராமரிக்க முயன்ற பயிர்கள் அணிவகுத்து பலன் தந்தன.

வீட்டிற்கு முன்னால் தூண்டிலிட்டு மீன்பிடித்து, சொந்தமாய் மசாலை அரைத்து மரவள்ளியும், மாங்காய் பிஞ்சுகளும் சேர்த்து அம்மா  சமைக்கும் மீன்குழம்பு அத்தனை சுவை , மணம். அம்மாவின் ஓரிரண்டு தோழிகளுக்கும் அந்தக் குழம்பில் பங்கு போகும். இப்படியாக அம்மாவின் சுவையான உணவுகளுக்கான காலக்கட்டம் வேற்றூருக்கு வேலை, படிப்பு என புலம் பெயர்ந்ததில் விடைபெற்றுப்போனது.

அதன் பின்னர்தான் வாழ்வில் வந்தது முக்கியக்கட்டம், அம்மாவின் சமையல் இல்லாத வெறுமையோ, அல்லது பிரம்மகுமாரிகள் (ஒரு காலத்தில்) இயக்கத்தின் ஈடுபாடோ ஏதோ ஒன்று மனதை மாற்ற நாம் முழு சைவம் ஆயாச்சு. யார் சொல்லியும் மண்டையில் ஏறவில்லை, கூட்டாளிகள் கூட்டிப்போய் KFC இல் வைத்து கண்முன்னே கோழியைக் கடித்துக் குதறும் போதும் , நமக்குப் பிடித்த சிவப்பு fantaவைக் குடித்துக்கொண்டு சலனப்படாமல் இருக்க முடிந்தது.

எல்லாம் நல்லபடிதான் போய்க்கொண்டிருந்தது, பொறுமைசாலி ஆகிவிட்டதாய் சிலர் சொன்னார்கள் , கோபம் குறைந்து (கொஞ்சம் முன்கோபம் என்பது சொல்லக் கேள்வி !!) , சாந்தசொரூபியாகிவிட்டதாய் சிலர் பாராட்டு மழை பொழிந்து உச்சிக் குளிர வைத்தனர். அதற்கும் வந்தது முடிவு, ரொம்பவும் வேண்டப்பட்ட ஒரு ஜீவனுக்காக எட்டு வருட சைவம் கைவிட்டுப்போனது. கொஞ்சம் வருத்தம்தான், ஆனால் நாம் அன்புக்கு அடிமையல்லவா ( வேறென்ன சொல்ல ? )  ஆச்சு மீன்,  கோழியோடு மீண்டும் துவங்கியது பிடி கடி போராட்டம் :))

 வேற்றூரில் வாழ்ந்த சைவ வாழ்வில் மறக்க முடியாத மனதிலாடும் இரு நிகழ்வுகள்...

 முதலாவது, அது ஓர் பெரிய உணவுப் பேரங்காடி, பல வகை உணவுகள் அணிவகுக்கும் நிறைய அங்காடிகள், கொஞ்சம் பேமசான இடம், உணவு வேளைகளில் அலைபாயும் கூட்டம் , அங்கே நாம் எப்பொழுதுமே சாப்பிடுவது  சைவ உணவுகள் விற்கும் ஒரு சீனப் பெண்மணியின் அங்காடியில், அப்பெண்மணி பார்க்க  நாற்பதுகளின் துவக்கத்தில் நல்ல உயரம், நடுத்தர உடல்வாகு, குழந்தைத்தனமான முகம் எனக் காட்சியளித்தாள். சுவையாய் சமைப்பதில் வல்லவள், மசாலை சேர்த்த நம்மூர் குழம்புகளைப் போலவும் பதார்த்தங்கள் அவள் கடையில் நிறைந்திருக்கும்.

அவள் கடையின் சைவ உணவு பிடித்துப்போக எப்பொழுதும் நாம் அவள் கடைக்குச் செல்வதுதான் வாடிக்கை. அவளின் வாடிக்கையாளரான கொஞ்ச நாளில் நம் உணவுப் பழக்க வழக்கத்தை கண்டு பிடித்துவிட்டாள் அம்மணி, என்னென்ன பிடிக்கும் என்பதைத்  தெரிந்துகொண்டு அவற்றை தட்டில் சற்று அதிகம் பரிமாறி வைப்பாள். உண்டு எழுந்ததும், கொஞ்சம் கோபமும் நிறைய  அக்கரையுமாய், ஏன் இதை மீதம் வைத்தாய், ஏன் சாப்பிட்டு முடிக்கவில்லை என கேள்விக்கனைகள் தொடுப்பாள். ஆரம்பத்தில் கொஞ்சம் விசித்திரமாக இருந்த அவள் போக்கு நாளடைவில் சகஜமாகிப்போனது.

 தம்மைப் பற்றி எதிர்மறையாய் கருத்துக் கூறும் பிறர் மேல் பலருக்கு எழும் கோபம் போல்  அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை, குறை கூறுபவர் யாருமே இல்லையென்றால் நம் சிறு பிழைகளை யார் உணர்த்துவது ? அதுகூட ஒருவகை அக்கரை தானே ? அதை ஏன் சில மழலை மனங்கள் வெறுக்கின்றன ? இதுகூட ஒருவகை வாழ்வின் விசித்திரங்கள் தான் போலும் :))

யாருமற்ற அந்த ஊரில் தாயை ஞாபகப்படுத்தும் அவள் அக்கரை பிடித்துத்தான் இருந்தது. அம்மாகூட தட்டில் ஏன் மீதம் வைத்தாய் எனக் கேட்டதில்லை ( மீதம் வைத்தால்தானே கேட்பதற்கு :0) இனத்தாலும், மதத்தாலும் , மொழியாலும் வேறுபட்ட ஒரு பெண் , வாங்கும் பணத்திற்கு மேல் உபசரிக்கின்றாளே என்ற மரியாதைதான் பிறந்தது.

வருடங்கள் பல கடந்தும் இன்றும் நினைவிலாடுகிறாள் அந்த சீன அண்ணபூரணி :))

இரண்டாவது சம்பவம், ஜோகூரில் புகழ்பெற்ற உணவுக்கடையில், ஒரு வாரக்கடைசி, மதியம், ஒரே பசி , அந்தக் கடையில் நுழைந்து சைவ உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு , கைகழுவி அமர்வதற்குள் மின்னல் வேகத்தில் தலைவாழையிலையில் உணவு பறிமாறப்பட்டுவிட்டது. இருக்கும் பசி அத்தனையும் ஒன்று திரண்டு எட்டிப்பார்க்க ஓடிவந்து இலைக்கு முன் அமர்ந்து உணவைப்பார்த்தால் ......

பால் போன்ற பச்சரிசி சாதத்தில் பொன்னிற சாம்பார் மின்ன அதற்கு மத்தியில் சாம்பாரில் விழுந்து, வெந்து, ஊறிப்போய் , இறந்து கிடந்தது ஒரு பெரிய "கரப்பான் பூச்சி" கொதிக்கும் சாம்பாரில் விழுந்திருக்கும் போல , ரொம்பவே துடிதுடித்து சிறகுகள் பிரிய பருத்து பெருத்துக் குலைந்து கிடந்தது. வந்த பசி அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோக, அழாத குறைதான், கடையில் வேறு நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, மெல்ல எழுந்து போய் தொட்டுக்கூட பார்க்காத அந்த உணவுக்கான கட்டணத்தை அழுதுவிட்டு, ஏன்மா, சாப்பிடலையா ? சாப்பிடலையா? என துரத்திய கடைக்காரரின் குரலை சட்டை செய்யாமல் பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடியதெல்லாம் நினைவோடையில் தெளிவாய் மின்ன. அந்தக் கடைக்கு அத்தோடு ஒரு பெரிய கும்பிடு.

அதுவெல்லாம் பழைய கதை, இப்போ நாமும் நம் அசைவ உணவும் எனும் மகிழ்ச்சியான வாழ்விற்கு வந்திருப்பது பெரிய ஆபத்து. முதலில் ஆடு , அதன் மணம் பிடிப்பதில்லை, சரி ஆடு மாமிசத்திற்கு குட்பை, அப்புறம் கடல் உணவுகள் இதில் இறால், புழு வகையைச் சேர்ந்ததாமே என சிலர் புரளியைக் கிளப்பிவிட, படித்துப்பார்த்தால் அதில் கொஞ்சம் உண்மையிருக்க ஊடான் என்னும் இறாலுக்கும் விடுதலை, அப்புறம் இறால் புழு வகை என்றால் நண்டு பூச்சி வகையில்லையா (இன்னும் ஆராய்ச்சியில்) !!

அப்புறம் மீன்கள் அதற்கு வந்த ஆபத்தும் விநோதமானதே, அதாகப்பட்டது சுனாமி வந்ததல்லவா ? அப்போது மனித சடலங்கள் ஆழிப்பேரலையில் கடலில் சங்கமமாக, அவற்றை உண்டு கொழுத்தனவாம் மீன்கள் , இப்படி ஊடகங்களில் மீன் உணவுக்கு எதிர்ப்பு வெடித்தது. சரி மீன் உணவுக்கும் விடுதலை, மிஞ்சியிருப்பது என்ன ? கோழி மட்டும்தான், அதற்காகத்தான் இந்தப் பதிவே . (மகனும் , தந்தையும் கழுதை மீதேறிய கதை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது என்பதை அறிய முடிகிறது )

சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும் உணவு கோழி என்பதற்கு அதன் துரித உணவு வணிகத்தில் சக்கைப்போடு போடும் KFC, McDonald போன்ற துரித உணவு அங்காடிகளே தக்க சான்று, அதுமட்டுமா மசாலை மணக்க அம்மா வைக்கும் கோழிக்குழம்பிற்கு எதுவுமே ஈடாகாது அல்லவா ? விடயம் இப்படியிருக்க..

ஏற்கனவே கோழி தலையை உண்ணக்கூடாது, கழுத்து, ரெக்கை , கால்கள் என யாவற்றையும் விடமாக்கி ஊடகங்களில் பரப்பபட்ட விக்ஷமங்களில் என்னங்கடா இது !! இந்த கோழி உணவுக்கு வந்த சோதனை , போற போக்கை பார்த்தால் கோழி எலும்பு மட்டும்தான் உண்ணத் தகுந்தது போலும் என பயந்திருந்த வேளை  அது நடந்தேவிட்டது , எப்படி என்றுதானே கேட்கிறீர்கள், இதோ சொல்கிறேன் விலாவாரியாக ஆனால் முழுதும் படித்துவிட்டு தங்களுக்கும் கோழி உணவு அலர்ஜியாகிப்போனால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதை மீண்டும் சொல்லிவிடுகிறேன்.

நம் நாட்டில் அனல் பரக்கும் வானொலி அறிவிப்பாளர், அவர் சொல்கிறார் தற்போது சில பல பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு உணவாக ரொட்டித் துகள்கள் உணவளிக்கப்பட்ட போக்ஷாக்கு நிறைந்த "கரப்பான் பூச்சிகள் " உணவாக்கப்பட்டு , கொழுக் மொழுக்கென வளர்ந்த கோழிகளாய் வியாபாரத்திற்கு வருகின்றன என்று, நெருப்பில்லாமல் புகையுமா ? ஆதாரமில்லாமலா அந்த மனுக்ஷன் இப்படி ஒரு தகவலை பொதுவெளியில் வெளியிடுவார் ? அவ்ளோதான் கோழி உணவுக்கும் அடித்துவிட்டார்கள் சாவுமணி !! இனி கோழி உணவைப் பார்த்தாலே
 

பெருத்து, பருத்த கரப்பான் பூச்சிகள் அதற்குள் ஊர்வதாய் உணர்வுகள் சிலிர்க்க ( கரப்பான் பூச்சியையும் சிலர் உணவாக்கிக் கொல்லு(ள்ளு)ம் உலகில் வாழ்ந்தாலும்)  இனிமேல் கோழி உணவுக்கும் குட்பை, போற போக்கப் பார்த்தா திரும்பவும் நம்மள சைவமா மாத்தாம விடமாட்டாய்ங்க போலிருக்கே சாமி :((


பி.கு :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

மேற்காணும்  குறள் வழி நிறைய அனுபவங்களும் சில ஆராய்ச்சிகளும் கலந்ததே மேற்கூறிய பதிவு :))





























Tuesday, November 21, 2017

நா.பாவின் இலட்சியப் படைப்பு "குறிஞ்சி மலர்" - படித்ததும் பிடித்ததும்

காலம் எனும் நதியில்
கரைந்திடும் பொழுதில்
நினைவிலாடும் சில
தருணங்கள் - வாழ்வு

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என் சகோதரி
ரத்னா எனக்கொரு மேசைக்கணிணியை பரிசளித்தார், ரெம்ப ஸ்ட்ரிக்கான இடை நிலைப்பள்ளி ஆசிரியை அவங்க. ( அது என்ன எப்பப் பார்த்தாலும் பரிசு வாங்கின கதையாவே இருக்கே, இவிங்க யாருக்கும் பரிசு  ஏதும் கொடுக்கவே மாட்டாய்ங்களா என சந்தேகிப்பவர்களுக்கு, நாமளும் சின்னக் கலைவாணர் மாதிரி தானுங்க, கொடுக்குறதுக்கு முன்ன யோசிக்கிறதில்ல, கொடுத்தப்புறம் அதப்பத்தி பேசிக்கிறதில்லே :P

அன்று முதல் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி போல் ஆகிவிட்டது அந்தக் கணிணி, வாய்ப்புக் கிடைக்கும் நேரமெல்லாம் கணிணி முன் அமர்ந்து பதிவுகள் எழுதுவது, கவிதைகள் வரைவது, மடலாடுவது தொடங்கி கணிணி விளையாட்டுக்கள் என வாழ்வின் பெரும் பகுதி கணிணியுடன் கழிந்தது. எழுதுவது நமக்கு மிகவும் பிடிக்கும், ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் தாமறிந்த தொழில் வழி , கலைகளின் வழி தம்மை வெளிப்படுத்துகிறார்கள், அவ்வகையில் நம்மால் எழுத்தின் வழி உலகோடு உறவாட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி, இருந்தாலும் நம் எழுத்துக்கு உதவியாய் இருந்த கணிணிக்கு இப்பொழுது நலமில்லை, பழுதாகிப்போய் கடையில் படுத்துவிட்டது :(( திரும்பி வரும்வரை எழுதுவதில்லை எனும் நமது விரதத்தை தோழி ஸ்டெல்லாவின் விண்ணப்பம் தகர்த்துவிட்டது, எனவே கையகல அலைபேசி ( tab) வழி இப்பதிவு உதயமாகிறது.

 

நா.பா என எழுத்துலகில் அறியப்பட்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற நெடுங்கதை படைப்பாளி நா பார்த்தசாரதி அவர்களின் சிறந்த படைப்புகளில் ஒன்று "குறிஞ்சி மலர்" . ஏறக்குறைய 93 நாவல்களை இவர் படைத்திருக்கிறார். இவ்வளவு அருமையான படைப்பைத் தந்த கதாசிரியரைப் பற்றி மேலும் நாம் அறிந்து கொள்ள அவர் வரலாறு நமக்கு உதவும்.

"குறிஞ்சி மலர்"1960 ஆண்டு வெளியீடு கண்ட படைப்பு , மு.வ அவர்களின் கருத்தாழமிக்க முன்னுரையோடு துவங்கி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்தப் படைப்பு ஏற்கனவே தமிழ் நாட்டின் புகழ் பெற்ற கல்கி இதழில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடர்கதையாய் வெளிவந்து பின் நாளில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்து அசத்தியதாய் விக்கி வழி அறியமுடிகிறது ( ஆஹா ! இதையும் விட்டு வைக்கலையாப்பா தயாரிப்பாளர்களே ? சீரியல் பார்க்காதது எவ்வளவு பிழை என்பது இப்பொழுதுதான் புரிகிறது :)


இந்நாவலுக்கான தகவல்கள் பல இணையத்தில் விரவிக்கிடப்பதால், இதற்கு மேலும் அறிமுக விழா நடத்தாமல் குறிஞ்சி மலர் எனும் நீண்ட புதினத்தின் கதாமாந்தர்களையும் , கதைச்சுருக்கத்தையும் காண்போம் வாருங்கள்.

இப்படைப்பின் முதன்மைக் கதைமாந்தர்கள் பூரணியும், அரவிந்தனும் ஆவர்.

பூரணி, பூரணத்துவமான பெண்மணி எனும் பொருள்பட இவள் பெயரை படைத்திருக்கிறார் கதாசிரியர், இருள் சூழ்ந்த வெளியில் ஒளியேந்திய மங்கையாய் அறிவொளி மிளிர மிகவும் பண்பார்ந்த தைரியசாலியாய் இப்புதினம் முழுக்க வலம் வருகிறாள் பூரணி.

தமிழ்ப்பேராசிரியர் சிற்றம்பலத்தின் மூத்த பெண், இப்புதினம் ஆரம்பித்த தருணத்தில் அவளுக்கு 15 வயது. கல்லூரி செல்லாமலேயே தந்தையின் ஆதரவுடன் வீட்டிலேயே கல்வி கற்று தேறுகிறாள். கொள்கை பிடிப்பு நிறைந்த இப்பெண் , தன் தந்தையின் புகழுக்கு பங்கம் நேராமல் வறுமையை தாங்கிக் கொண்டு நேர்வழியில் நடக்கிறாள்.  தன் சகோதர சகோதரிகளை அன்புடன் பராமரிக்கின்றாள். பிரசங்கியாய் பணி ஏற்கிறாள். தேர்ந்த பிரசங்கியாய் நாடு முழுக்க புகழ்பெறுகிறாள், வெளி நாடுகளுக்கும் சென்று வருகிறாள். அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துமளவு வல்லமை பெற்ற பெண்ணாய் படைக்கப்பட்டிருக்கிறது பூரணியின் கதாபாத்திரம்.

அரவிந்தன் ஓர் இலட்சியவாதி. ஊருக்கு உதவுபவன், தனக்கு உறவினர் வழி சேர்ந்த பெரும் செல்வத்தையும் பிறருக்கு ஈந்த தயாள குணத்தினன். பிறருக்கு நன்மை செய்யும் குணசாலியான இந்த இளைஞன் தன்னை தற்காத்துக்கொள்ள மறந்து , சூழ்நிலைக்கு பலியாகும் வண்ணம் படைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இவன் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளாமல் தனக்காக காத்திருந்த பெண்ணையும் கரம் பிடிக்க முடியாதவனாகிவிடுகிறான். வெளிப்படையாய்ச் சொல்வதானால் கொஞ்சம் இளிச்சவாய் கதாபத்திரமாகவே காட்சியளிக்கிறான் அரவிந்தன்.

ஒருவேளை பூரணியை மேன்மையாய்க் காட்ட இவன் கதாபாத்திரம் இவ்வாறு பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது.

கதைப்படி பார்த்தால்...

தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தமிழ்ப் புலமைக்கும், உண்மை, நேர்மைக்கும் பேர் போனவர். மனைவியை இழந்த இவருக்கு நான்கு குழந்தைகள். அவர்களுள் மூத்தவள் பூரணி. தன் பிள்ளைகளுக்கு கல்வியுடன் நற்போதனைகளும், வாய்மையும் போதித்து வளர்க்கிறார். திடீரென ஒரு நாள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார்.

தந்தையை இழ்ந்த மக்கள் ஆதரவற்று நிற்கின்றனர். 15 வயதே நிரம்பிய இளம் பெண்ணான பூரணி தன் பெற்றோர்களின் கடமையை ஏற்றுக்கொள்கிறாள். வறுமையின் பிடியில் சிக்கி அலைபாய்கிறது குடும்பம். இருப்பினும் இலவசங்களை ஏற்க மறுத்து, தனது நகையை விற்று குடும்பத்தை பராமரிக்கிறாள் பூரணி. அவர்கள் குடியிருந்த வசதியான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். சொத்து எதையும் அவர்கள் தந்தை விட்டுச்செல்லாததால் குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. மூத்த ஆண் மகன் தவறான வழியில் செல்ல முயன்று மீட்கப்படுகிறான்.

துயரத்தில் அல்லாடும் பூரணி வாடகை வீடு தேடி அலைந்து ஒருவழியாய் தோழியின் துணையுடன், ஒரு சிறிய வாடகை வீட்டை தன் குடும்பத்தினர்க்கு ஏற்பாடு செய்துகொள்கிறாள். அப்பொழுது தன் தோழியின் சங்கிலியை அபகரித்த திருடனை விரட்டிப் பிடித்து அவனைத் தாக்கி சங்கிலியை மீட்கிறாள். அவள் மனதிடத்திற்கும் தைரியத்திற்கும் இந்நிகழ்வு ஓர் உதாரணம்.

அடுத்து வாழ்வைத் தொடர வேலை தேடி அலைகிறாள் பூரணி. பசியுடன் கடும் வெயிலில் வெறும் காலுடன் வேலை தேடி அலையும் பூரணி வீதியில் மயங்கி விழுகிறாள்.

அச்சமயத்தில் அவள் வாழ்வின் முக்கியமான இருவரின் கவனம் அவள் மேல் விழுகிறது, ஒருவர் பூரணியின் மனதைக் கவர்ந்த அரவிந்தன் அவன் தான் பணிபுரியும் அச்சகத்திலிருந்து வீதியில் ஒரு பெண் மயங்கி வீழ்ந்ததைக்கண்ணுற்று வேதனையடைகிறான், அவன் அவளைப் காப்பாற்ற முயற்சிக்கும் முன்னரே அவள் பிறரால் காப்பாற்றப்படுகிறாள், அழகான பூரணியை கவிதையாய் வடித்து மனதுள் மடித்து வைத்துக்கொள்கிறான் அரவிந்தன். பின்னாட்களில் பூரணியின் தந்தை அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை பதிப்பிக்க அவளை மீண்டும் சந்திக்கும் அரவிந்தன் அவளுடன் நல்ல நட்பை வளர்த்துக்கொள்கிறான். அவள் வாழ்வின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொள்கிறான். அவளுக்கு மிகப்பெரிய ஆதரவாக நாவல் முழுதும் வலம் வருகிறான். அவள் மேல் ஆசை இருந்தாலும் திருமணம் அவள் பொதுவாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும் என எண்ணி அவளை மணமுடிக்கும் நோக்கத்தை இறுதிவரை தவிர்க்கிறான்.

பூரணி மயங்கி வீழ்ந்த அதே சந்தர்ப்பத்தில் அவளை சந்தித்த மற்றொருவர் மங்களேஸ்வரி அம்மாள், பணக்காரப் பெண்மணியான இவர் டாம்பீகம் ஏதுமின்றி நல்ல மனது, ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஆர்வம் கொண்டவராய் திகழ்கிறார்.  இவர் பூரணியைக் காப்பாற்றி அவளுடன் நட்புறவு கொள்கிறார். பூரணியின் குணநலன்களை அறிந்து அவளை இக்கட்டான சூழ் நிலையிலிருந்து மீட்டு அவளுக்கு பிரசங்கியாய் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்.

இப்படியாய் அபலையான பூரணிக்கு ஆதரவு அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாள் மற்றும் தோழி, அண்டை அயலார் வழி அமைந்தாலும் அவள் வாழ்வில் வில்லன்களும் இல்லாமலில்லை, அவள் தந்தையின் படைப்புகளை வெளியிடுவதில் தில்லுமுல்லு செய்த அச்சக நிறுவனர் மற்றும் அவள் அரசியலில் வெற்றிபெறக்கூடாது எனத் தடுக்கும் அரசியல்வாதிகள் என சிலர் இருக்கின்றனர், அவர்கள் பூரணியை அரவிந்தனுடன் இணைத்து அவதூறு பரப்பி, பிறர் பார்வையில் அவள் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அரவிந்தனை கடத்தி பூரணியை அரசியலில் இருந்து விலகுமாறு வற்புறுத்துகின்றனர்.

வானில் சூழ்ந்த மேகங்கள் மழையாய் கரைவதைப்போல் பூரணியின் வாழ்வில் சூழ்ந்த இடர்களுக்கும் முடிவு ஏற்பட்டு சுபம் என எண்டு கார்டு போடப்படவேண்டிய வேளையில் அவள் மணமுடிக்க நினைத்த அரவிந்தன் இறந்து போகிறான். வேதனை பூரணியை மீண்டும் விழுங்குகிறது. தனக்கென ஒரு பணியைத் தேடிக்கொண்டு அரவிந்தன் நினைவோடு வேறு திருமணம் புரியாமல் வாழ்கிறாள் பூரணி.புராணத்தில் வரும் திலகவதி அம்மையார் - (அப்பர் சுவாமிகளின் தமக்கையார்) போல் தன் வாழ்வை அமைத்துக்கொண்டு தன் உடன்பிறப்புக்களை ஆளாக்கி விடுகிறாள் பூரணி.

 இலட்சியவாதிகளான பூரணி, அரவிந்தன் இருவரின் வாழ்வும் ஒன்றாகவே பயணித்தும் ஒன்றுசேரமுடியா இரயில் தண்டவாளங்களை ஒத்ததாய் அமைந்துவிடுகிறது.  இவ்விருவரின் எண்ணப்போராட்டங்களும், மனப்போராட்டங்களுடன் சுயநலத்தால் பிறர் இவ்விருவரின்  இலட்சியத்தைத் தகர்க்க குறுக்கு வழிகளைக் கையாண்டு, சூழ்ச்சி, வன்முறை கொண்டு தகர்க்க முயல்வது அதிலும் அவர்கள் ஜெயித்து மீள்வது என நீள்கிறது படைப்பு.

இவர்கள் மட்டுமன்றி அரவிந்தனின் தோழன், மங்களேஸ்வரி அம்மாளின் மகள் வசந்தியின் மணவாழ்வு மற்றும் சிலரின் வாழ்வும் நாவலில் பகிரப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வந்த நாவல், நல்ல மொழிவளமும், கற்பனை வளமும் விரவிய புதினம், சமூக சீர்திருத்தம் பேசும், பெண்மையை பெரிதாய் போற்றும் ஒரு படைப்பு. 12 ஆண்டுகளுக்கொரு முறை மலரும் அபூர்வ குறிஞ்சி மலரைப்போல் பெண்களுள் சிறந்த பூரணி எனும் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம் இது. வாய்ப்புக்கிடைக்கும் நண்பர்கள் வாசிக்கலாம்.









Wednesday, June 21, 2017

பறவைகள் பலவிதம்


அர்ஜுன், நடுத்தர வயது ஆடவன், நல்ல உயரம், வாட்ட சாட்டமான தேகம். சிரித்த முகம். நகைச்சுவை குண‌ம் நிறைந்தவன். ஒரு பட்டதாரிப்பெண்ணை காதலித்து மணந்தவன். அவளை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக்கொண்டான். அவர்களுக்கு இரண்டு ஆணும் இரண்டு பெண்ணுமாய் நான்கு குழந்தைகள்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொன்டிருந்தது. தொழிற்சாலை மேலாளராய் பணியாற்றும் அர்ஜுனுக்கு இரு உயிர் நண்பர்கள். ஒன்றாய் வேலை பார்ப்பவர்கள், அனைவரும் ஜாலி கைகள். வாரக்கடைசியானால் ஒன்று கூடி ஏதாவதொரு சீனன் "சீ புட்" கடையில் ஒன்றாய் அமர்ந்து மதுவும், உண‌வுகளுமாய் வாரக் கடைசியை கொண்டாடி மகிழ்வார்கள். அவரவர் அறிந்த தகவல்களை பறிமாறிக்கொள்வதிலிருந்து, குடும்ப விடயங்களை பகிர்ந்துகொள்வது, அவசரத்திற்கு ஒருவர் மற்றவரிடமிருந்து ஐம்பதோ, நூறோ கைமாற்றாய் கடன் வாங்குவது என அமைந்திருந்தது அவர்களின் நட்பு.

அர்ஜுனுக்கு தன் நண்பர்கள் என்றால் உயிர். தன் குடும்பத்தைவிட, உடன் பிற‌ந்தவர்களை விட அந்த நண்பர்கள் அவனுக்கு நெருக்கமாய் திகழ்ந்தனர்.

எல்லாம் நல்லபடியே போய்க்கொன்டிருந்தது. ஒரு நாள் முன்னிரவு வேலை விட்டு வீடு திரும்பிய அர்ஜுன் குளித்துவிட்டு அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொன்டிருந்தான்.

ஆஸ்ட்ரோவில் ஒரு நடிகர் தாய்மையைப் போற்றும் பாடலுக்கு அபிநயித்துக்கொன்டிருந்தார். நிகழ்ச்சியில் இலயித்துப்போன அர்ஜுனை உலுக்கினாள் அவன் மனைவி யமுனா.

 என்னங்க! என்ன இது ? பரபரப்புடன் அவள் சுட்டிக்காட்டிய தன் விலாவை நோக்கிய அர்ஜுன் சிவந்த நிறம்கொன்ட தனது உடலில் பருப்பு அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெண்மையாய் நீர்கோர்த்த முத்துக்கள் திட்டுக்கள் இட்டிருப்பதைக் கண்டான்.

உங்களுக்கு பெரியம்மை வந்திருச்சுங்க, பதறினாள் யமுனா.

 அதை அலட்சியப்படுத்திய அர்ஜுன்  அட இவ ஒருத்தி ! எப்பப் பார்த்தாலும் நொய்நொய்ன்னிட்டு ! இது ஏதோ சாதாரண நீர்க்கட்டி தாம் பிள்ள ! இது ஒன்னும் அம்மையில்ல, நீ வீணா உளராத, கடுப்புடன் அவன் எடுத்தெரிந்து பேச, யமுனா மெள்னமாகிவிட்டாள். அர்ஜுனின் உழைப்பை நம்பியே அவர்கள் குடும்ப‌ வாழ்க்கை நகர்ந்தது. அவன் நலமும் ஆரோக்கியமும் அந்தக் குடும்பத்திற்கு மிக முக்கியம். சொல்லமுடியாத பயமும் பதற்றமும் யமுனாவின் மனதில் குடையத் துவங்கியது.

தொடர்ந்த ஓரிரு நாட்களை வழக்கம் போலவே கழித்தான் அர்ஜுன். தன் உடலில் மேலும் அதிகமான நீர்க்கட்டிகளும், லேசான காய்ச்சலுடன் தலைவலி எடுப்பதையும் சட்டை செய்யாமல் நாசி கண்டார் க‌டையில் வாங்கிய பெனடோல் இரண்டை விழுங்கிவிட்டு சாதாரணமாய் இருந்தான்.

அதற்கடுத்த சில நாட்களில் யமுனா பயந்தபடியே அர்ஜுனுக்கு உடல் முழுதும் பெரியம்மை போட்டுவிட்டது.

தனது கம்பெனியின் பேனல் கிளினிக்கிற்கு விரைந்த அர்ஜுனை, தொட்டும் பார்க்காமல் சில வலி நிவாரண மாத்திரைகளை வாரிக்கொடுத்து, இரண்டு வார வேலை விடுப்பு கொடுத்து அனுப்பினார் அங்கிருந்த‌ இந்திய மருத்துவர். அம்மைநோய் பயம் படித்துப் பட்டம் வாங்கிய மருத்துவரைக்கூட விட்டுவைக்கவில்லையே ! தனது அலட்சிய சுபாவத்தின் மீது முதல் முறையாய் கோபம் வந்தது அர்ஜுனுக்கு.

இரண்டு வாரம் விடுப்பு முடிந்தது. அர்ஜுன் உடலிலும் முகத்திலும் தோன்றிய அம்மைப்புண்கள் ஆறின, தீய்ந்த கருந்திட்டுக்களாய் முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே அம்மைத்தழும்புகள் அடையாள‌மிட்டிருந்தன‌. உடல் நலம் தேறிவிட்டது என நினைத்த சமயத்தில் தொடந்தாற்போல் அர்ஜுனின் கைகளும் கால்களும் நிரந்தரமாய் மர‌த்துப்போய்விட்டன. சாதாரணமாய் நமக்கு ஒரு சில நிமிடங்கள் கால்கள் மர‌த்துப் போனாலே அத்தனை சிரமமாய் இருக்கும். அர்ஜுனுக்கோ உடல் முழுதும் மர‌த்துப்போய் மிகவும் அசெளகரியமாக இருந்தது.

மருத்துவர் அது சாதாராண பிரச்சனை எனக் கூறி மேலும் சில நரம்புக்கான சத்து மருந்துக்களும் வேலை விடுப்பு நீட்டிப்பும் கொடுத்து அனுப்பினார்

நோயின் தீவிரத்துடன் அடங்காத பசி உண‌ர்ச்சியும் அர்ஜுனுக்கு ஏற்பட்டது.

எந்நேரமும் பசி பசி என வருந்தினான், மனைவி நிறைய உணவு கொடுத்தும்

பசி அடங்கவில்லை, நாளுக்கு நாள் உடல் மர‌ப்பும், தீராத பசியும், கூடவே சொல்ல முடியாத வேதனை நிறைந்த உடல் நோவும் அர்ஜுனை வாட்டி வருத்தியது.

அர்ஜுனின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி மனநிலை குழம்பியது.  வாய் ஒருபுறம் கோணிக்கொன்டது, வாய் குளர ஆரம்பித்தது. முகம் பொழிவிழந்து வீங்கி, கண்கள் சிவந்து நோயாளியாய் காட்சியளித்தான்.

யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்துத்துவிட்டனர் எனப் புலம்ப ஆரம்பித்தான். இரவில் தூக்கம் தொலைத்தான். ஒரு மாதம் கழிந்த பின்னர்  ஓரிரவு நோவின் உச்சக்கட்ட வேதனையில் செய்வதறியாது மனைவி மக்களை காரில் அள்ளிப்போட்டுக் கொன்டு அருகாமையிலிருந்த முனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றான்.

உலகை இருள் சூழ்ந்திருக்க, இரவுப் பறவைகளின் சன்னமான ஒளிகள் அங்குமிங்கும் ஒலித்து மறைய, மணியோ பன்னிரன்டைத் தான்டியிருந்தது, ஆலயம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. காரை ஆலயத்தின் முன்னே நிறுத்தி ஆலயத்தின் வாசலில் பரிதாபமாய் நின்று ஐயாவிடம் தனது வேண்டுதலை கலங்கியபடியே முன்வைத்தான்.


அவன் நிலையைக் கண்டு யமுனாவும் மனம் நொந்து அவன் நலம் வேண்டி ஐயாவிடம் தீவிரமாய் வேண்டிக்கொன்டாள். அவள் மனதின் வேதனை யாவும் கண்ணீராய் பொங்கி வழிந்தது.

பளிச்சிடும் எஃகு கதவுகளுக்குப் பின்னே அஜானுபாகுவான தோற்றத்துடன் சடாமுடி தரித்து, பெரிய கண்களில் கருணை கசிய, முறுக்கிய மீசைக்குள்ளிருந்து மெலிதாய் இதழ் பிரிந்து புன்னகைக்க‌ ஐயா வாசலுக்கு வெளியே நின்று கலங்கும் அர்ஜுனையும் யமுனாவையும் கவனித்துக்கொன்டிருந்தார்.

அந்த இரவு விடியும் வரை உறக்கமின்றி நீண்டது அர்ஜுன் யமுனாவுக்கு.

அர்ஜுன் உற‌வுகள் யாரிடமும் தன் பிரச்சனையைத் தெரிவிக்கக் கூடாது என யமுனாவைத் தடுத்திருந்தான், ஆனால் நிலைமை மிகவும் மோசமாவதை உணர்ந்த யமுனா அதற்குமேல் அமைதி காப்பது சரிவராது என தன் மாமியாரிடத்தில் உதவி கேட்க முடிவு செய்தாள். மறுநாள் விடிந்தும் விடியாமலும் பக்கத்து பட்டிணத்தில் இருக்கும் தனது மாமியாரை தொலைபேசியில் தொடர்புகொன்டு கணவனின் உடல் நிலையைத் தெரிவித்து அழுதாள்.

மாமியார் இளைய மகனை அழைத்துக்கொன்டு விரைந்து வந்தார். நோயில் வாடி வதங்கிப்போன தன் மகனைக் கண்டு கலங்கினார். உடன் வந்த மச்சினன் சுரேஸ் உடனே தனது அண்ணனை அழைத்துச் சென்று ஊரிலேயே பெரிய தனியார் மருத்துவமனையில் முன் பண‌ம் செலுத்தி சேர்ப்பித்தான்.

அர்ஜுனுக்கு "guillen barre syndrome “ எனும் நரம்புச் சிதைவு நோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய அந்த நோய் துரதிர்க்ஷ்டவசமாய் அர்ஜுனை பீடித்திருந்தது. அதற்கான மருத்துவம் மலேசிய ரிங்கிட் ஐம்பதாயிரத்தைத் தாண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதைத்தான் ஆரம்ப காலங்களில் நமது முன்னோர், அம்மை கண்ட பின்னர் ஏற்படும் "மறுமுள் பாய்தல்" என்று குறிப்பிட்டார்கள் போலும்.

சிகிச்சைக்குப் பணம் போதவில்லை. என்ன செய்வது, மருத்துவ அட்டை (மெடிக்கல் கார்டு) ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை அவசியம் ? யமுனா குடும்ப நலனை கருத்தில் வைத்து மருத்துவ அட்டை எடுக்கும்படி வலியுறுத்தினாலும் தொடரும் செலவுகளால் அதற்கு அர்ஜுன் முக்கியத்துவம் தரவில்லை. மருத்துவ அட்டை இல்லாத அர்ஜுன் பணத்திற்கு தத்தளித்தான்.

யமுனா உற‌வுகளிடம் கையேந்தினாள். யாரால் 50 ஆயிரம் ரொக்கமாய் தர முடியும்? அவள் வேதனையில் வாடினாள். பத்தாயிரம் வெள்ளிக்குமேல் அவளால் திரட்ட முடியவில்லை, வீட்டை விற்க நினைத்தாள், ஆனால் நேரம் மிகவும் குறைவாய் இருந்ததால் அவள் வழியின்றி வாடினாள்.

தூக்க மருந்து செலுத்தப்பட்டு அர்ஜுன் உறங்கிய பின்னர், மருத்துவமனையின் கண்ணாடிக் கதவுகளூடே இருள் சூழ்ந்த வெளியில் குவிந்திருக்கும் இருளையும், ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் நட்சத்திரங்ககளையும் வெறித்தபடி, கண‌வனையும், குழந்தைகளையும் எண்ணியபடியே எதிர்காலத்தை நினைத்து வாடிக் கலங்கினாள் யமுனா. அவளின் உறக்கத்தை வேதனைகள் விழுங்க, அவளின் பொழுதுகள் பெரும் பாரமாய் கழிந்தன.

தனக்கும் மேலான சக்தியிடம் அவள் தொழுது நின்றாள். ஏதாவது ஓர் அதிசயம் நிகழ கசிந்து கண்ணீர் மல்கினாள். அந்த அபலையின் வேண்டுதல் பிரபஞ்சத்திற்கு கேட்டது போலும்..

யமுனாவின் வேண்டுதல் நிறைவேறியது. அர்ஜுனின் நிலையறிந்து  மருத்துவ செலவுக்கான மொத்த தொகையையும் அவன் வேலைசெய்யும் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்காம் நாள் பணம் செலுத்தப்பட்டது. யமுனாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. உடனடியாய் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் யமுனா.

“நீங்க மருத்துவ அட்டை வச்சிருந்தா எவ்வளவோ வசதியாயிருந்திருக்குமேங்க” என அர்ஜுனிடம் புலம்ப நினைத்த யமுனா அவனே நொந்துபோயிருக்க‌ தனது வேதனையை தொண்டைக்குழியிலேயே அடக்கிக்கொன்டாள்.

அர்ஜுனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. கோழி முட்டை வடிவத்திலான கண்ணாடிக்குடுவைகளிலிருந்து ஒரு பாட்டில் 500 வெள்ளி என கணக்கிடப்பட்டு 75 மருந்து பாட்டில்கள் அர்ஜுன் உடலில் செலுத்தப்பட்டன.

மருந்து செலுத்தப்பட்ட ஓரிரு நாட்களில் அர்ஜுனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தான். யமுனா மகிழ்ச்சியுடன் புன்னகைக்க ஆரம்பித்தாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணவனின் கைகளைப்பற்றிக்கொண்டு மகிழ்ச்சியாய் பேச ஆரம்பித்தாள். அர்ஜுனும் கொஞ்சம் கொஞ்சமாய் தேறிக்கொன்டு வந்தான். உடலை அசைக்கவே முடியாத நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சகஜ நிலைக்கு உடல் நிலைக்கு திரும்பியது.

மருத்துவமனையில் அர்ஜுன் சேர்க்கப்பட்ட விடயம் அவன் நிறுவன‌த்தில் மிகவும் பரபரப்பான செய்தியாய் பேசப்பட்டது. அர்ஜுனுக்கு அறவே பிடிக்காத அவனது மலாய்க்கார அதிகாரி முதல் ஆளாய் பழங்களும் பிஸ்கெட்டுகளும் வாங்கிக் கொன்டு அவனை மருத்துவமனையில் வந்து கண்டார். உண்மையான கரிசனம் அந்த மனிதனின் பேச்சிலும் செய்கையிலும் கண்ட அர்ஜுன் வேலைக்கு அப்பாற்பட்டு சைனி எனும் தனது அதிகாரி மிகவும் நல்லவர் என்பதை அன்று கண்டு வியந்தான்.

சில மணி நேரம் செலவிட்டு ஆறுதல் கூறியபின் அந்த அதிகாரி புறப்பட்டு சென்றார். நெகிழ்ந்து போனான் அர்ஜுன். மேலும் பலர் அவனை வந்து கண்டனர், நலம் விசாரித்தனர், ஆனால் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் தன்னுடன் கூடிக் கும்மாளமிட்ட தனது ஜாலி நண்பரில் ஒருவர் கூட எட்டிப்பார்க்காததும் , ந‌லம் விசாரிக்காததும் அவனுக்கு மிகவும் வேதனையளித்தது.

அட அம்மை தீய நோய்தான், ஆனால் நலம் விசாரிப்பதால் கூட ஒட்டிக்கொள்ளுமா என்ன? ஏன் இவர்களுக்கு இந்த பாராமுகம்? நொந்து போனான் அர்ஜுன். தொலைபேசி வழியாகவோ கூட அவர்கள் தொடர்புகொன்டு நலம் விசாரிக்கவில்லை என்பது மிகவும் வேதனையாய் இருந்தது அர்ஜுனுக்கு, எத்தனை முறை மனைவியிடம் பகைத்துக்கொன்டு அவர்களோடு கும்மாளம் போட்டிருப்பான்? எவ்வளவு பணம் அவர்களோடு செலவழித்திருப்பான்? தனது நட்புகளின் செய்கையை யமுனா விமர்சித்தால் என்ன செய்வது, அவமானமாக இருந்த‌து அர்ஜுனுக்கு. நடப்பதை உணர்ந்திருந்தும் யமுனா எதுவும் கேட்கவில்லை.

அடக்கடவுளே, எத்தனை முறை இந்த நண்பர்களுக்காக மனைவியிடம் சண்டையிட்டு பணம் பிடுங்கிக்கொன்டு போய் கொடுத்திருப்பேன். அட வந்து பார்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரே நிறுவனத்தில்தானே வேலை செய்கிறோம், நமக்கு நெருக்கம் என்று நினைத்திராத பலர் வந்து பார்த்துவிட்டுச் சென்ற‌னரே, இவர்களில் ஒருவருக்குக் கூட தன் நலம் விசாரிக்கத் தோணலியே? மனம் குமைந்தது அர்ஜுனுக்கு. நண்ப‌ர்கள் என்றால் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் உடனிருப்பவர்கள் தானே ?

விரைந்த நாட்களில் படிப்படியாய் உடல்நிலை தேறி நல்லபடி குணமடைந்தான்அர்ஜுன். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வேலைக்கு கிளம்பினான்.

நிறுவன‌த்தில் அனைவரும் அர்ஜுனை மகிழ்வுடன் நலம் விசாரித்தனர். அவனது நெருங்கிய சகாக்கள் இருவரும் எதுவுமே நடவாதது போல் மேலோட்டமாய் நலம் விசாரித்தனர். அர்ஜுன் தனது கடுப்பை அடக்கிக்கொன்டான். சகஜமாய் பட்டும் படாமல் பேசி தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

அந்த வாரக் கடைசி வந்தது. வழக்கம்போல் கூடிக் கும்மாளமிட அவனையும் அழைத்தனர் அவன் நண்பர்கள். அர்ஜுன், இல்லை எனக்கு வேற வேல இருக்கு, வரமுடியாது என மறுத்துவிட்டு, அந்த வார இறுதியை தனது குடும்பத்தினருடன் தனது தாயை சென்று கண்டுவரக் கிளம்பினான். மனைவியும், பிள்ளைகளும் மிகவும் மகிழ்ந்துபோயினர். இனிமேல் எப்போதும் வாரக் கடைசிகள் தனது குடும்பத்தினர்க்கே என மனதில் நினைத்தபடியே, குடும்பத்துடன் தாய் வீடு நோக்கி காரைச் செலுத்திக்கொன்டிருந்தான் அர்ஜுன்.





மலேசிய நண்பன் இதழில் வெளியான படைப்பு

ஆக்கம்


சிவ.ஈஸ்வரி,

பினாங்கு











Thursday, April 27, 2017

பழைய டைரியும் புதுநிலவின் கவிதைகளும்

பள்ளிப்பருவத்தில் புத்தகங்கள் படிப்பது மிக மிக‌ விருப்பமான விடயமாய் அமைந்திருந்தது. ஆரம்பப்பள்ளியில் நூலகத்தில் இருந்த சொற்ப புத்தகங்களை திரும்பத் திரும்பப் படிக்கமுடிந்தது, அங்கே அறிமுகமானதுதான் மு.வ வின் எழுத்தோவியங்கள் மீதான ஈர்ப்பு.

மு.வ‌ க்கான பட முடிவுமு.வ, அன்றும், இன்றும், என்றும் நமக்குப் பிடித்த மிகப்பெரிய எழுத்து ஆசான். அவரை வாத்தியார்தனம் நிறைந்தவர் என்றும் ஒழுக்கவாதி எழுத்தாளர் என்றும் இன்றைய இலக்கியவாதிகள் வர்ணிக்கின்றனர். அது 100 % உண்மையே. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று அவசியம். 

இள‌ம்பருவத்தில் பிள்ளைகளுக்கு வீட்டில் பெற்றோர்களும், பள்ளியில் ஆசான்க‌ளும் ந‌ன்னெறிகளை போதிக்கும் கடப்பாடுகளைக் கொன்டிருந்தாலும், வள‌ர்ந்துவிட்ட மாந்தர்களுக்கும் நற்போதனைகள் அவசியம்தான் என்பதை மறுக்கமுடியாது அல்லவா?  எனவே தனது படைப்புகளின் வழி நற்பண்புகளையும் தனிமனித‌ விழுமியங்களையும் முன்னிறுத்தும் இவர்போன்ற ஒழுக்கவாதி எழுத்தாளர்களும் நமது சமுதாயத்திற்கு அவசியமானவர்களே.  

மு.வ வின் கரித்துண்டு, அகல் விளக்கு, மண் குடிசை இன்னும் பல படைப்புகள் நினைவைவிட்டு நீங்காதவை, ப‌டித்த மு.வ படைப்புகள் குறித்து சில பதிவுகள் எழுதவேண்டும் எனும் ஆசையும் நிறைய உண்டு. பார்க்கலாம்.

நமது பொழுதுபோக்கே வாசிப்பது என்பதினால், கிடைக்கும் எழுத்துக்கள் நிறைந்த எந்தத் தாளையும் விட்டுவைப்பதில்லை. உடனே படித்துக் கிழித்துவிடுவதுதான் வாடிக்கை :))

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வாசிப்புப் பழக்கம் அம்மா வழி வந்த‌து. அம்மா அந்நாளைய இரண்டாம் வகுப்பு. இவரது கல்வி வரலாறு கேட்பவரை பிரமிக்க வைத்துவிடும், இளவயதில் பாட்டி அம்மாவை எழுப்பி பள்ளிக்கு அனுப்ப தயார் பண்ணினால், அம்மா வயிற்று வலி என்று பாத்ரூமுக்குள் ஓடி ஒளிந்துகொள்வாராம். இப்படியே பள்ளிக்கு மட்டம்போடும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியாய் அம்மா மாறிவிட பாட்டி அவரிடம் மாட்டிக்கொன்ட வேதாளமாய் விழி பிதுங்கி அம்மா வழிக்கே வந்து ஒரு கட்டத்தில் அம்மாவை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துவிட்டார். அம்மாவின் பள்ளிப்படிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒருவேளை பள்ளி சென்றிருந்தால் அம்மாவும் ஒரு நல்ல ஆசிரியையாய் விளங்கியிருப்பார் போலும், ஆனாலும் அம்மா அவர் குடும்பத்தில் நிறைய ஆசிரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். 
books க்கான பட முடிவுபள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர, அம்மாவின் வாசிப்ப‌னுபவம் அசாத்தியமானது. தமிழ் மட்டுமே படிக்கத்தெரியுமாதலால் கிடைக்கும் எல்லா தமிழ்ப்புத்தகங்களையும் ஒரு கை பார்த்துவிடுவார். நித்திரைக்கு முன்பதாக  படுத்திருக்கும் பொழுதும், வேலைகள் முடிந்த ஓய்வான தருணங்களிலும் அம்மாவின் அருகாமையில் பிள்ளைகளைவிட புத்தகங்களுக்குத்தான் அனுமதி அதிகம்.

இன்றும் தென்றல், மன்னன், குமுதம், ஆன‌ந்த விகடன் மற்றும் வானம்பாடியும் அம்மாவின் நெருங்கிய நண்பர்கள். நமது வாசிப்பிற்கு ஆசான் அம்மாதான். இன்றும் நமது படைப்புகளின் முதல் விமர்சகர் அம்மாதான்.

அடுத்தததாக எழுத்தின் மீது பிரியம் வரக் காரணமான நம் நாட்டு எழுத்தாளர்கள் வெள்ளைரோஜா (அழகான இவர் பெயரைக் கண்டு இவர் நிச்சயம் ஓர் அழகான பெண் எழுத்தாளர் என்று நானும் தோழிகளும் நெடுங்காலம் நம்பிக்கொன்டிருந்தோம் :) அவர் படைப்புகள் பிடிக்கும், பிறகு ஆர்.வி.ரகு, பி.சுமீதன் ஆகியோரின் படைப்புகளும் அதிகம் கவர்ந்தவை.

இந்தச் சமயத்தில்தான் அந்த மென்மையான சூராவளி எங்களைத் தாக்கியது. புதுநிலவு!! அடடா, எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை, அவர் கவிதைகள் ரொம்ப அதிகமாகவே எங்களைக் கவர்ந்திழுத்தது.. அந்த இள‌ம் வயதில் இதயத்தின் ஆழம் வரை நின்று பாதித்தது. மனுக்ஷன் உணர்வுகளைப் பிழிந்து வார்த்தைகளின் வடிவம் கொடுத்து கவிதையாக்கி நம் கவனத்தை ஈர்க்கும் அழகோ அழகு. பூவுக்குள் புயலைச் சிறைவைத்தாற்போன்ற‌ மென்மையான சொல்லடுக்குகளில் இழையோடும் பிர‌மாண்ட வார்த்தை ஜாலங்கள், இன்றளவும் பிரமிக்கவைக்கும் அவருடைய படைப்புகள்.

அந்தச் சமயத்தில் நயனம் இதழின் நடுப்பக்கத்தில் வழவழப்பான தாளில் அழகிய வண்ண ஓவியங்கள் பிண்ணனியில் மெருகூட்ட புதுநிலவின் கவிதைகள் பூத்து மலர்ந்திருக்கும், ஒருமுறை, இருமுறை, பலமுறை என ஒவ்வொரு முறையும் படிக்கப் படிக்கத் தெவிட்டாது மகிழ்வூட்டும் புதுநிலவின் கவிதைகள். அவர் கவிதைகளின் படைப்பு பார்க்கவும் அழகு, படிக்கவும் அருமை.

இவரின் நிஜப்பெயர் இராஜகுமாரன் என்பதும் இவர் பிண்ணனியும் அப்பொழுது  அறிந்திருக்கவில்லை.

வீட்டில் அப்பா கொஞ்சம் கண்டிப்பு (கொஞ்சமில்லை ரொம்பவே !!) இடை நிலைப்பள்ளியில் பயில்கையில் உடன் பயிலும் தோழிகள் யாவரும் பாப் கட்டிங் சிகையலங்காரங்களுடன், நாகரீக உடையலங்காரங்கள், ஒப்பனைகள் "ஹைஹீல்ஸ்" காலணிகள் என அழகழ‌காய் உடுத்தி பட்டாம்பூச்சிகளாய் பவனி வருகையில், தியேட்டர் சென்று சினிமா பார்க்கையில் நாம் மட்டும் அப்படியெல்லாம் இல்லாமல் நீள‌மாய் முடிவள‌ர்த்து :( இரட்டைச்சடை பிண்ணி, கவுனா, மெக்சியா என அறியக் கடினமான பள்ளிச்சீருடை அணிந்து நடமாடிக்கொன்டிருந்தோம். தோழிகள் வீட்டிற்கெல்லாம் நாமும் செல்லக்கூடாது. அவர்களும் வரக்கூடாது. அத்தனை கண்டிப்பு (உலகத்திலேயே இல்லாத அதிசயமான பெண்ணைப் பெற்றுவிட்டார், ரொம்பத்தான் ஓவர் கண்டிப்பு :P (மைன்ட் வாய்சுன்னு நினைச்சு, சத்தமா பேசிட்டோம் போல :))

இத்தனை கறார் கண்டிப்புக்களுக்கு மத்தியிலும் அப்பாவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் வல்லமை படைத்த தோழி ஒருத்தி எனக்கு வாய்த்திருந்தாள் அவள் பெயர் நிர்மலா, இவள் என் உயிர்த்தோழி கோமளத்தின் உற‌வுக்காரப் பெண், நாங்கள் மூவரும் ஒன்றாய்த்தான்  படித்தோம்.

நிர்மலா ரொம்பவும் சுவாரசியமான கதாபாத்திரம். சீனப்பெண்ணைப்போன்ற தோற்றம், பாப் கட்டிங் தலைமுடி,  தலையில் முன்னால் முடிவெட்டிவிட்டுக்கொன்டு இருப்பாள். அந்தக்கால மலாய் அலிபாபா படத்தில் நாயகன் பி.ரம்லி ஒரு மினி சைக்கிளில் வருவாரே, அதேபோன்று ஒரு நீல நிற மினி சைக்கிள்தான் அவள் வாகனம். வீட்டில் கடைக்குட்டி, அதனால் செல்லம் அதிகம். வசதி படைத்த குடும்பம். ஒழுங்காய் படிக்காவிட்டாலும் கண்டிக்க மாட்டார்கள். 

நிர்மலா மாலை வேளைகளில், கண்ணில் கண்ட ஏதாவது ஒரு புத்தகம், நயனமோ, மன்னனோ, வானம்பாடியோ (வார இதழ்) வாங்கிக்கொள்வாள், வீதி ஓரத்தில் வீற்றிருக்கும் அங்காடிக் கடையில் ஒரு சிறிய பை நிறைய வெறும் ஐஸ்கட்டிகளை வாங்கிக்கொள்வாள் (வெயில் வேளைகளில், ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு நறநறவென கடித்து மெல்வது அவளுக்கு அலாதி ஆன‌ந்தம். கூடவே புளிப்புமிட்டாய், சாக்லெட்டுக்கள் என தின்பண்டங்கள் வாங்கி சட்டைப்பைகளில் நிரப்பிக்கொள்வாள். தனது சைக்கிளில் ஏறி ஒரு பத்து நிமிடம் அந்த வேகாத வெயிலில் மண்டை காய பயணித்து வீட்டிற்கு வருவாள்.

அவள் வந்ததும், ஒரே அரட்டைதான். திண்பண்டங்களைக் கொரித்துக்கொண்டே வாசிக்க ஆரம்பித்துவிடுவோம், அவள் ரொம்பவும் கற்பனைத்திறன் வாய்த்தவள். அனைத்தையும் அறிந்தவள்போல் பொய்யைக்கூட ஆணித்தரமாய் பேசி நம்பவைத்துவிடுவாள். எங்களைக் கவர்ந்த எழுத்தாளர்களைப்பற்றி நாங்கள் பேசும்போது அவள் என்னென்னமோ கூறுவாள். அந்தப் பொய்களை அப்பொழுது உண்மை என்றே பல காலத்திற்கு நம்பியிருந்தேன் என்றால் பாருங்களேன் அவள் திறமையை !!

சில நேரங்களில் நிர்மலா வீட்டிற்கு வரும்பொழுது அப்பா வீட்டிலிருப்பார். வேறு யாராயிருந்தாலும் அப்பாவின் அருமையான விருந்தோம்பல் குண‌மறிந்து வந்த வழியே ஒரே ஓட்டமாய் திரும்பி ஓடிவிடுவார்கள், ஆனால் இந்த நெஞ்சழுத்தக்காரி இருக்கிறாளே போகவே மாட்டாள். வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அப்பாவைக் கண்டாலும் காணாத‌து போலவே பூனைக்குட்டி மாதிரி வீட்டிற்குள் ஓடி வந்துவிடுவாள், பெரிய சிங்கமான அப்பாவின் கர்ஜனையும் முறைப்பும் அந்தச் சின்னப் பூனைக்குட்டியிடம் செல்லாது :) (பூனையும் சிங்கமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த‌து என்றுதானே விஞ்ஞானமும் சொல்கிறது ? ) 

வீட்டில் அம்மாவுக்கும் எங்களுக்கும் நிர்மலாவின் துணிச்சலைக்கண்டு வியப்பும் சிரிப்பும் ஒருங்கே பொங்கி வழியும். ஒரு முறை அஜானுபாகுவான அப்பா வாசலில் குறுக்கே அமர்ந்திருக்க, அம்மாவைக் காணவந்த ராணிப்பாட்டி திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொன்டிருக்க, இந்த நல்லவள் சொகுசாய் தன் துவிச்சக்கர வண்டியிலிருந்து இற‌ங்கி வந்து "அங்கிள் கொஞ்சம் நகர்ந்துகோங்க" என நாசுக்காய் சொல்லி, அப்பாவும் வேறு வழியில்லாமல் நகர்ந்துகொள்ள, கம்பீரமாய் உள்ளே அறைக்குள் அவள் வந்தவுடன் ஏற்பட்ட சிரிப்பு அடங்க வெகு நேரமாகியது.

நல்ல தைரியசாலிதான் !!

உண்மையில் அன்று சிம்மசொப்பனமாய் திகழ்ந்த அப்பாவின் கோபங்க‌ளெல்லாம் இன்று யோசிக்கையில் வேடிக்கையாக இருக்கிறது, ஓர் அடிகூட அடித்ததில்லை, சீ என்றோ ஏய் என்றோ மரியாதைக்குறைவாய் எந்தப் பிள்ளையையும் திட்டியதில்லை, அவரின் சிவந்த பெரிய விழிகளின் கூர்மையான பார்வை ஒன்றே போதும் எங்களை அடக்கிவைக்க.

அதுதான் உண்மையில் நடந்த‌து எனும் நிதர்சமும் இப்பொழுதுதான் புரிகிறது. அவரின் முறைப்பு ஒன்றே மிகப்பெரிய கோபக்காரராய் அவரை நிலை நிறுத்தியிருக்கிற‌து 

அவள் கொன்டுவரும் புத்தகங்களை சேர்த்துவைக்கும் பழக்கமெல்லாம் அவளுக்குக் கிடையாது, வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவாள். அதில் புதுநிலவின் கவிதைகளை மட்டும் எடுத்து நான் பத்திரப்படுத்திக்கொள்வேன்.

ஒரு சமயம் என் தந்தை உபயோகிக்காமல் வைத்திருந்த ஒரு பெரிய டைரியை கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டதும் ஒரே மகிழ்ச்சி. முதல் வேளையாய், பள்ளிக்குக் கிடைக்கும் பணத்தில் கத்தரிக்கோல், பசை, வண்ணக் காகித அலங்காரங்கள்(stickers) வாங்கி வைத்துக்கொன்டேன்.

பின்னர் ஆற அமர அமைதியாய் அமர்ந்து நான் சேகரித்து வைத்திருந்த புது நிலவின் கவிதைகள் யாவற்றையும் ஒவ்வொரு பக்கத்திலும் அழகுபடுத்தி ஒட்டி வைக்க ஆரம்பித்தேன்.

old diary க்கான பட முடிவுபுத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை என்னிடமிருந்த புதுநிலவின் கவிதைகளை ஒட்டி அழகான (scrap book) தயார் செய்துவிட்டேன். அழகிய படங்கள், காகிதப்பூக்கள், தீபாவளி அட்டைப் படங்கள் என என் மனதிற்குத் தோன்றிய வண்ணம் அந்த டைரியை அலங்கரித்து வைத்தேன். எனக்குப் பிடித்த மிகவும் அழகான புதுநிலவின் கவிதைத் தொகுப்பை எனக்கு நானே மிக மிக மெச்சிக்கொன்டேன். நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவர் கவிதைகளை எடுத்துப்படிப்பேன், மெல்லிய சோகம் இழையோடும் அந்தக் கவிதை வரிகள் வாசிப்பதற்கு மிகவும் அருமையாய் அமைந்திருக்கும்.

அந்த டைரி எனது அந்தரங்க உடமைகளில் முதலிடம் பெற்றது, யாருக்கும் அதைக் கொடுக்கவே மாட்டேன் நான். இப்படியே சில வருடங்கள் அந்தத் தொகுப்பு என்னிடத்தில் இருந்தது. மேற்படிப்பு ஆரம்பித்து, வேலைக்கும் செல்ல ஆரம்பித்தவுடன் அந்தப் பழைய டைரியை புரட்டிப்பார்ப்பது கொஞ்சம் குறைய ஆரம்பித்துவிட்டது.

காலங்கள் மாற காட்சிகளும் மாறுமல்லவா? சிங்கையில் படிப்பையும் தொழிலையும் தொடர புற‌ப்பட்டேன். உடமைகளை எடுத்துவைத்து புற‌ப்படும்போது எனது அந்த டைரியைக் காணவில்லை, எங்கேயோ தவறி வைத்துவிட்டேனோ ?  மனம் மிக வருந்தியது, யாராவது எடுத்துச் சென்று விட்டனரோ? தேடித்தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை, என்ன செய்வது ? வீட்டில் அனைவரிடமும் விசாரித்தால் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் போகிக்கு வீட்டைச் சுத்தப்படுத்துகிறேன் என்று எனது புத்தகத்தையும் பழைய உபயோகிக்காத புத்தகம் என்று எரித்துவிட்டிருந்தனர். எனக்கு அழுகை அழுகையாய் வந்தது, என்ன செய்வது, போனது போனதுதானே L  
           
வருடங்கள் பல கடந்து இன்றும் புதுநிலவின் கவிதை வரிகளில் நினைவில் நிழலாடும் ஒரு வரி "அரசாண்ட அற்புதம் நீ" !!


Tuesday, February 21, 2017

கண்ணம்மா @ ஹரி ஓம் பாட்டி




இரவில் மலரும் மலர்கள் காலையில் பிறர் ஆராதிக்கும் முன் உதிர்ந்து மறைவதைப்போல் சராசரி மனிதர்களாய் வாழ்ந்து மறைந்த உன்னத உயிர்கள் எத்தனையெத்தனை இம்மண்ணில் ? பிறர் அறியாவிட்டாலும் மண் மட்டும் அறியும் அந்த மலர்களின் அழகையும் மணத்தையும்... இது என் மனதில் தடம்பதித்த அன்பு மலர் ஒன்றின் வரலாறு . நான் வியந்த என்னை பாதித்த, பிரமிக்கவைத்த‌ ஒரு சிலரில் இவரும் ஒருவர்...

இவ்வுலகில் பிறந்த எல்லா மாந்தருள்ளும் ஏதேதோ ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள். தோன்றிர் புகழோடு தோன்றுக என்று வள்ளுவர் சொல்லிச் சென்றதைப் பின்பற்றி தம் இருப்பை இவ்வுலகிற்கு புகழுடன் புலப்படுத்த‌ மனிதர்கள்  தாம் எப்படியெல்லாம் பிரயத்தனப்படுகின்றனர் ?

இலக்கியவாதியாய், ஆன்மீகவாதியாய், தொழில் அதிபனாய், அரசியல்வாதியாய், நடிகனாய், கலைஞனாய், விளையாட்டு வீரனாய், சமூக சேவகனாய் இன்னும் எத்தனை எத்தனை அவதாரங்கள் !! அத்தனையும் அவனை உலகிற்கு உணர்த்தும் விலாசங்கள்.

எனினும் அப்படி எந்தப் புகழுமின்றி சராசரி மாந்தராய் நம் கண் முன்னே நாம் வியக்க நமது மரியாதைக்குரியவர்களாய், அன்பிற்குரியவர்களாய்  தம் இருப்பால் தம்மைச் சார்ந்தவர்கள் புகழத்தக்க வாழ்ந்து மறைந்தவர்களும் உண்டல்லவா ? அவரில் ஒருவரே நமது இன்றைய பதிவின் கதாநாயகி..!!


ஹரி ஓம் பாட்டி ! பெயரே விசித்திரமாய் இருக்கிறதல்லவா ? ஆம் அதுதான் அவரின் செல்லப்பெயர், சுவாமி பிரமானந்த சரஸ்வதி அவர்களின் சத்சங்கங்களில் எங்களுடன் தவறாது பங்கு கொள்ளும் அந்தப் பாட்டி எந்த ஓர் இந்தியரை எதிர்கொண்டாலும் சொல்லும் முதல் வார்த்தை "ஹரி ஓம்" என்பதுதான், அதனாலேயே அவருக்கு "ஹரி ஓம் பாட்டி" என்ற காரணப் பெயர் உண்டானது. அவர் பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் கண்ணம்மா.

பாட்டியின் வாழ்விடம் ஒரு மலாய்க்கார கம்பத்தில் அமைந்திருந்த‌து. அங்கே மலாயர்களோடு இந்தியர்கள், சீனர்களும் வீடுகட்டிக் குடியிருக்கின்றனர். அங்கே வாழும் அனைவருக்கும் வேண்டப்பட்டவர் நம்ம ஹரி ஓம் பாட்டி.

இவரது வரலாறு மிகவும் சுவாரசியமானது. பாட்டி இளம் வயதிலேயே அதாவது பதின்ம வயதிலேயே திருமண‌ம் முடித்தவர். அவரது கணவர் ஓர் உடல் உழைப்புத் தொழிலாளி. ஓரளவு படித்தவர், இலக்கிய மணம் கமழ இனம், மொழி, கலை, கலாச்சாரம் என விஸ்தரிப்பாய் பேசுபவர், ஆனால்
உள்ளுக்குள் ஆள் பெரிய தில்லாலங்கடி. . பெண்கள் விடயத்தில் படு கில்லாடி. இவரைப் பற்றி ஊருக்குள் பிரபலமான கிசு கிசு ஒன்று...

அந்நாளில் பாட்டி ரொம்ப அழகு அப்படின்னுலாம் சொல்ல முடியாது. ஆள் கருப்பு, குள்ளம் வேறு, ஈர்க்குச்சி தேகம். அதனால் தானோ என்னவோ நான்கு குழந்தைகள் பிறந்த பின்னரும் வேறு பெண்ணை நாடியிருக்கிறார் அவர் கணவர்.

அவர்கள் வாழுமிடத்தில் ஒரு பெண்மணி, கணவனை இழந்தவர், தோசை வியாபாரம் செய்து பிழைப்பவர். நல்ல நிறமும் அழகும் வாய்த்தவர்.பாட்டியின் கணவர் எப்படியோ அவரை கவர்ந்துவிட்டார். மறுமணம் புரிவதாய் வாக்களித்து அவ‌ருடன் குடும்பம் நடத்தி பின்னர் முடியாது என மறுத்துவிட்டார். கடுப்பாகிப்போன அந்தப் பெண்மணி அவ‌ருக்குப் பிற‌ந்த தன் குழந்தையை தூக்கி வந்து பாட்டியின் கையில் கொடுத்து, "இது ஒன் வீட்டுக்காரருக்கு பொறந்த பிள்ளைதான், என்னால கவனிக்க முடியாது" எனக்கூறி விட்டுவிட்டு போய்விட்டார். பாவம் பாட்டி என்ன செய்வார், தன் கணவரை எதிர்த்துப் பேசவும் முடியாது.

சோகம் தாங்க முடியாத பாட்டி, குழந்தையை பாயில் கிடத்திவிட்டு, வீட்டின் கொல்லையிலிருந்த ஆழமான கிணற்றில் "தொபுக்கடீர்" என்று குதித்துவிட்டார். இதை அக்கம் பக்கத்திலுள்ளவர் யாரோ பார்த்து உடனடியாய் பாட்டியை காப்பாற்றிவிட்டனர். இவ்வளவு துரோகம் செய்திருந்தும் அவர் கணவரை எதிர்த்து பாட்டி ஒரு வார்த்தையும் பேசியதில்லை. வெளியே சொல்லாது எல்லா வேதனைகளையும் தனக்குள்ளே பூட்டி வைத்துக்கொள்ளும் குண‌ம் படைத்தவர். தன்னிடம் கொடுக்கப்பட்ட தன் கணவருக்குப் பிறந்த அந்த ஆண்குழந்தையையும் தன் குழந்தையாகவே பாவித்து அன்பாய் வளர்த்து மணமுடித்து வைத்தார்.

ஒழுங்காய் வேலைக்குப் போகாத கணவர், குடும்பத்தில் வறுமை, பாட்டி இரவும் பகலும் யோசித்து ஒரு நல்ல தீர்வை கண்டுபிடித்தார். தன் தாய் வீட்டிலிருந்து சீதனமாய் கொண்டுவந்த நகைகளை அடகு வைத்து தனது நடமாடும் துணிக்கடையைத் துவங்கினார். அறிமுகமான துணிக்கடைகளில் அழகழகாய் பெண்களுக்கான புடைவைகளும், பாவாடை தாவணிகள் மற்றும், வளையல்கள், அலங்காரப்பொருட்கள் என நெகிழிப்பைகளில் சுமந்துகொண்டு பஸ்ஸில் பிரயாணித்து தோட்டப்புரங்களுக்கு செல்லும் பாட்டி அங்கே வாழும் தனக்கு அறிமுகமானவர்களிடம் தனது துணி வியாபாரத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தார்.

பாட்டி மிகவும் நேர்மையானவர், கறாறானவரும் கூட. யாரையும் ஏமாற்றமாட்டார், யாரிடமும் ஏமாறவும் மாட்டார். அவரிடம் பழகிய அனைவருக்கும் அவரின் இந்த குணாதிசயம் தெளிவாய் புரிந்திருந்தது. நல்ல அழகிய துணிமணிகளை வீட்டிலேயே கொன்டு போய் வியாபாரம் செய்தார்.  முதலில் கடனுக்கு துணிகளை தந்துவிட்டு, சம்பளகாலங்களில் சென்று  துணிக்கடனை வசூல் செய்துவிடுவார். அவரிடம் தொடர்ந்து வியாபாரம் வைத்துக்கொன்டவர்களுக்கு மேலும் சலுகையாய் அலங்காரப்பொருட்களும் , குழந்தைகளுக்கு வண்ண வண்ண ரிப்பன்களும் பரிசளித்து அவர்களை தனது  நிரந்தர‌ வாடிக்கையாளர்களாய் மாற்றிவைத்திருந்தார்.        

அந்தக்காலத்தில், சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு, கார் வசதி குறைவான காலம் அல்லவா ? இப்பொழுது போல் அப்பொழுது வீட்டிற்கு மூன்று கார் நிற்பது குறைவாயிற்றே! எனவே பட்டண‌ங்களில் அமைந்திருக்கும் துணிக்கடைகளுக்குச் சென்று துணிமணிகள் வாங்கும் வசதியற்றவர்கள் பலரும் பாட்டியின் நடமாடும் துணிக்கடையையே பெரிதும் எதிர்பார்த்து அவரிடம் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொன்டனர். பாட்டி இந்த வியாபாரத்தின்வழி வந்த பணத்தை மிகவும் சிக்கனமாய் செலவுசெய்து பெருமளவு பணத்தை முறையாய் சேமிப்பில் வைத்தார். துளித்துளியாய் பாட்டி சேமித்த‌ பணம் பெருவெள்ளமாய் வளர்ந்திருந்தது. பாட்டி தன் கையிருப்பைக்கொன்டு தனது பலகை வீட்டை மிகவும் அழகான இரண்டடுக்கு மச்சு வீடாய் மாற்றிக்கட்டினார், தன் பெண்களுக்கு சீரும் சிறப்புமாய் மணமுடித்து வைத்தார். வண்டி நிறைய சீதனங்களும் மனம் நிறைய மகிழ்ச்சியுமாய் தன் பெண்களை புகுந்த வீட்டிற்கு அனுப்பினார். தன் மகன் ஒருவனுக்கு லாரி வாங்கித்தந்து தொழில் துவங்க உதவினார்.
   
தன் இறுதிக்காலம் வரை தான் கட்டிய அந்தப் பெரிய இரண்டடுக்கு வீட்டில் சிறப்பாய் வாழ்ந்தார் பாட்டி.துணைக்கு அவர் மகள்களில் ஒருவர் அவரோடு தங்கியிருந்தார். இறுதிநாட்கள் வரை யாரிடமும் அவர் கையேந்தியதில்லை, அனைவருக்கும் நிழல் தரும் ஆலவிருட்க்ஷமாய் தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னாலானதை ஈந்து தன் சேமிப்பைக்கொன்டே தனது தேவைகளை நிறைவேற்றிக்கொன்டு   இறுதிக்காலம் வரை மகாராணி மாதிரி வாழ்ந்தார்.

தனது உடை விடயத்திலும் பாட்டி வித்தியாசமானவரே, ஆண்கள் அணியும் கட்டம் போட்ட கைலியும் மேல்சட்டையும் அணிவார். ஆண்கள் வேஸ்டிக்கு அணியும் வெள்ளை நிற துண்டைத்தான் தோளில் அணிந்திருப்பார். எண்ணெய் வைத்து படிய வாரி கொண்டையிட்டிருப்பார். நெற்றியில் கீற்றாய் திருநீறு துலங்கும். பார்ப்பதற்கு சுத்தமாகவும் மரியாதைக்குரியவராகவும் காட்சியளிப்பார்.    

பாட்டி தனது தேவைகளை முடிந்தவரை தானே நிறைவேற்றிக்கொன்டார், முடியாதவற்றை தன் பணத்தின் மூலம் பிற‌ர்வழி சாதித்துக்கொன்டார். திடீரென பக்கத்து வீட்டிற்கு செல்வார், அந்த வீட்டுப் பெண்மணியிடம் "அம்மா கேள்வரகு புட்டு வேணும் செஞ்சு கொடு” என உரிமையுடன் கேட்டுவிட்டு கொஞ்சம் பணத்தை அவர் வேண்டாமென்று மறுத்தாலும் கையில் திணித்துவிட்டு வருவார். மறு நாள் காலை கேள்வரகு புட்டு காலைப்பசியாரலுக்கு டானென்று அவர் வீட்டுக் கதவைத் தட்டும்.
பட்சணங்களும், சமையல் வகைகளும் என பாட்டி தான் விரும்பியதைச் சாப்பிட்டு மகிழ்வாய் காலம் கடத்தினார்.

பாட்டி பொது நோக்கு சிந்தனைகள் நிறையப் பெற்றவர் 80 வயதிற்கு மேலும் கண்களைச் சுருக்காமல் அனுதினமும் தமிழ் நாளிதழ் படிக்க அவரால் முடிந்தது. அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என எந்த விடயத்தையும் அறிவுப்பூர்வமாய் அணுகி ஆதாரத்துடன் பேசுவதில் வல்லவர். தன் வாழிடத்தில் எல்லார் வீட்டுத் தேவையிலும் முன்னின்று நடத்திக்கொடுப்பார். தேவையானவர்களுக்கு சிறு தொகைகளை அன்பளிப்பாகவும், பெரும் தொகைகளை கடனாகவும் தந்து உதவுவார்.



அக்கம் பக்கத்திலுள்ள சின்னஞ் சிறுசுகளைக் கூப்பிட்டு உண‌வு, தின்பன்டங்கள் போன்ற‌வறை தந்து மகிழ்வார். தமக்குப் பழக்கமான வாலிபப் பையன்கள் புதராய் மண்டிய தாடி மீசையுடன் கண்ணில் பட்டால் உரிமையுடன் அழைத்து கையில் 10 வெள்ளியைக் கொடுத்து தாடி மீசையை மழித்து சுத்தமாய் இருக்கவேணும் என சொந்தப் பாட்டியைப்போல் உரிமையுடன் கூறி அனுப்பி வைப்பார்.


எனக்கும் அவர் சிறந்த தோழி, இள‌மையும் முதுமையும் எப்படி ஒத்துப்போகும் என்று கேட்காதீர்கள், அது ஒரு சிறந்த நட்பாய் அமைந்தது. பாட்டி நல்ல மூடில் இருந்தால் தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவார். வா சந்தைக்குப் போகலாம் என அழைத்துப்போவார். வேண்டாம் என்றாலும் ஏதாவது வாங்கிக்கோ என வற்புறுத்துவார்.

பாட்டியிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவர் வீட்டு மாங்காய்கள். இனிப்பும் புளிப்புமாய் நார் நாறாய் சாறு நிறைந்து அத்தனை அருமையா0ய் இருக்கும். எனக்கு அவை மிகவும் பிரியம் என்பதை தெரிந்துகொன்ட பாட்டி அம்மரம் காய்க்கும் சமயங்களில் அனுதினமும்  அப்பழங்களைப் பறித்து வீட்டிற்கு எடுத்துவந்து தருவார். அத்தனை அன்பு நிறைந்த மனம் !! பாட்டியின் அன்பில் கனிந்த அந்த மாம்பழங்கள் இன்றும் நினைவில் நின்று நாவில் நீறூர வைக்கின்றன‌.



இப்படியாக மகாராணிபோல் வாழ்ந்த பாட்டி வாழ்விலும் இறுதிக்கட்டம் வந்தது. தனது 80களின் இறுதிக் காலக்கட்டத்தில் ஒரு நாள் சாதாரணமாய் படுக்கைக்குச் சென்ற பாட்டி, மறு நாள் அசாதாராணமாய் எழுந்தார், எழும்போதே தனது இரு கைகளாலும் தலையைப் பற்றிக்கொன்டு தட்டுத்தடுமாறி தளர்ந்து படியிறங்கியவர் கடைசிப்படியில் அப்படியே அமர்ந்துகொன்டார். என்னம்மாவென்று ஓடிவந்து அவரைத்தாங்கிய மகளிடம், விளங்கிக்கொள்ள முடியா வண்ணம் ஏதேதோ முனுமுனுத்தவாரே வாந்தியெடுக்க ஆரம்பித்துவிட்டார், இரத்த வாந்தி !! மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிய ஆரம்பித்தது. அவர் மகள் ஓவென பெருங்குரலெடுத்து அலரத் துவங்க பாட்டி தன்னிலை மறந்து மயங்கிச் சரிய ஆரம்பித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை அயலார் பாட்டியை உடனே மருத்துவமனைக்கு கொன்டுசென்றனர், இருப்பினும் சிகிச்சை ஏதும் பலனளிக்காமல் அன்று மாலை பாட்டி மீளா உலகிற்கு சென்றுவிட்டார்.

அப்போது நான் பாட்டியின் வீட்டிற்கு அருகில் இருக்கவில்லை, விக்ஷயம் என்னை வந்தடையும்போது இரவு மணி பத்தைத்தாண்டியிருந்தது , இருந்தாலும் இரவே சென்று பாட்டிக்கு இறுதி மரியாதை செலுத்தவேண்டுமென்று புறப்பட்டாகிவிட்டது. வழி நெடுகிலும் பாட்டியின் நினைவுகள், அவரோடு கழிந்த பொழுதுகள், அவர் உதிர்த்த வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாய் மனதில் நிழலாடின.எப்பொழுதும் மகிழ்ச்சியாய் தொடரும் பயணங்களில் விதிவிலக்காய் அதுவொரு வேதனை தோய்ந்த பயணமாய் அமைந்தது.

மீளா நித்திரையில் பாட்டி படுத்திருந்தார். அன்று அவர் பக்கத்தில் அமர்ந்து திருவாசகம் படிக்கையில் பலமுறை கண்கள் கசிந்தன. பாட்டியின் இறுதிப்பயணம் மறுநாள் சுற்றமும் அண்டை அயலாரும் புடை சூழ நிகழ்ந்து முடிந்தது. ஆளுமை நிறைந்த கண்ணம்மா என்ற ஹரி ஓம் பாட்டி எல்லோர் காட்சிகளிலிருந்தும் மறைந்து நினைவாகிப்போனார்.

 

Sunday, January 22, 2017

இதுவும் கடந்து போகும்...!!







அது ஓர் அற்புதமான இயற்கை வள‌ங்கள் சூழ்ந்த அழகிய வனப்பிரதேசம்.
நவநாகரீகம் முழுதாய் முற்றுகையிடாத‌ ஆரம்பகால மலை நாட்டின் ஒரு பகுதி. காணும் இடமெங்கிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ப‌ச்சைப்பசுமைகள். மிக மிகப் பெரிய மரங்கள், அவற்றில் கூடு கட்டி குடியிருக்கும் பல வண்ணப்பறவைகள், நிறைய‌ சிறிய பெரிய சைவ, அசைவ வனவிலங்குகள், புழு பூச்சிகள் என நிரம்பி வழியும் காடு , அது பலவித விநோத சப்தங்கள் சதா தவழ்ந்து வரும் இயற்கையின் மிகப்பெரிய வீடு.

அகன்ற அந்த வனாந்தரத்தின் உட்புரத்தில் நாக‌ரீகத்தின் நிழல் படியாத
ஆதிவாசிகளின் அமைதியான குட்டி குட்டி குடியிருப்புகள். அதில் மக்கள்
வாழ்கிறார்களா இல்லையா என சந்தேகம் எழச்செய்யும் அமானுக்ஷ்ய அமைதி. ஆதிவாசிகள் அங்கே இயற்கையின் குழந்தைகளாய் வாழ்ந்து வரும் சூழல்.

அந்தக் காட்டின் விளிம்பில் அமைந்திருந்தது அந்த‌ அதரப் பழைய  குடிசை.
அது அத்தாப்புக் கூரை வேய்ந்த, கரையான்கள்  செல்லரித்துக் கொண்டிருக்கும் மக்கிய பலகைகளைச் சுவர்களாகக்கொன்டு, சீரற்ற சிமென்டுத் தரையுடன் கூடிய ஏழ்மை நர்த்தனமிடும் எளிய‌ வாழ்விடம். தூரத்திலிருந்து பார்க்கும் போதே அதிலும் மக்கள் வாழ்கிறார்கள் என்ப‌தற்கு அடையாளமாய் வெளியே கொடியில் உலர்த்தப்பட்டிருக்கும் ஒன்றிரண்டு துணிகள் காற்றிலே அசைந்தாடிக்கொண்டிருக்கும்.



அங்கே வேடனாக ஜீவ‌னம் நடத்தும் சின்னான்  தனது மனைவி மங்கா மற்றும் அழகான இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அவர்களின் வாழ்வாதாராம் அந்தக் காட்டை நம்பியே  அமைந்திருந்தது.

சின்னான் மின்னும் கரிய நிறத்தில், நல்ல நெடுநெடு உயரம், நடுத்தர
உடல்வாகு என பலசாலியாய் காட்சியளித்தான். அவனுக்கு அந்தக்காட்டின் மூலை முடுக்கெல்லாம் அத்துப்படி, அவன் அந்தக் காட்டில் எழும் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் புரிந்தவன் . அந்தக் காடு, அவனுக்கு தாய்வீடு. அவனுக்கு அங்கே பறக்கும் பறவைகளின் கீச்சுகளுக்கு அர்த்தமும் புரியும், அந்த காட்டில் என்னென்ன எங்கே இருக்கும் எனும் சூட்சுமமும் தெரியும், போதாதற்கு அந்த காட்டில் வாழும் ஆதிவாசிகளுடன் நட்பு வளர்த்து, அவர்களுடன் சைகை மொழி, அவர்கள் பாசையில் ஓரிரு வார்த்தைகள் என பேசவும் தெரியும். அங்கே அச்சமயம் முகாமிட்டிருந்த இராணுவத்தினரையும் ஓரளவு சிநேகம் பிடித்து வைத்திருந்தான். அவர்களுக்கு ஒரு வழிகாட்டிபோல் செயல்பட்டதால் அவர்களுக்கும் அவனைப் பிடித்திருந்தது. இப்படியாக அந்தக் காட்டின் செல்லப் பிள்ளைபோல் உலா வந்து கொண்டிருந்தான் சின்னான். அந்தக் காட்டில் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி என அவன் மனதுள் கர்வம்
துளிர்த்திருந்தது.

அவன் தன் வாழ்வாதாரத்திற்கும், உணவுக்கும் அந்தக் காட்டில் விளையும் காய் கனி கிழங்கு வகைகளையும், பறவைகள், சிறிய மிருகங்கள் என வேட்டையாடுவதை தன் வாழ்வியலின் முக்கிய அத்தியாயமாகக்கொன்டு மனைவி மக்களுக்கு அரை வயிறு, கால் வயிறு நிரப்பி காலம் தள்ளி வந்தான்.

சின்னானின் மனைவி ஸ்ரீமதி மங்கா ரொம்ப நல்ல பெண்மணி, தன் கணவனுக்கு பிடித்த மனையாள், ஒல்லியாய், தங்க நிறத்தில், முழங்கால் வரை கூந்தலுடன், அதை வாகாய் அள்ளி வலது பக்கம் கோடாலி முடிச்சு போட்டு  நெற்றியிலும் கன்னங்களிலும் கற்றையாய் முடிகள் சுருண்டு விளையாட, குங்குமப் பொட்டு வைத்த களையான முகத்தினள். அவள் கைவசம் இருப்பது இர‌ண்டே இரண்டு சீலைகள். தாய் வீட்டு சீதனம் ஒரு சீலை மற்றதோ ஏதோ ஒரு தீபாவளிப் பண்டிகைக்கு சின்னான் ஆசையாய் வாங்கித் தந்தது, இரண்டு சீலைகளும் இப்போது நிறம் மங்கி, சொலிப்பும், வனப்பும் குறைந்து பழசாய்ப்போனாலும் மறந்தும் "சீ" என மருகாது, நாளொரு சீலையைச் சுற்றிக்கொன்டு, குமிழ் போன்ற வாயில் வெற்றிலைக் காவி படிந்து சிவந்திருக்க என்றுமே மாறாத புன்னகையுடன் கணவனையும், குழந்தைகளையுமே உலகமென மனதில் வரித்து, இருப்பதைக் கொன்டு
நிறைவாய் வாழும் மனதினள். எல்லோரிடமும் அன்பும் நட்பும் பாராட்டும்
வெள்ளந்தி, கூடவே கடும் உழைப்பாளி. அவள் வீட்டுப் பக்கத்தில் அவள்
கைவண்ணத்தில் வள‌ர்ந்து மலர்ந்திருக்கும் பூச்செடிகளும், புளிச்சன்,
தபசு, முருங்கை, மரவள்ளிச் செடிகளும் அவள் உழைப்பிற்கு சாட்சி.

மங்கா மனசு பூப்போன்றது, தன் கணவன் மீது எல்லையற்ற அன்பு. தன் கணவனுக்கு ஒன்றென்றால் உயிரையே விட்டுவிடுவாள், அதுவே தான் பெற்ற மக்களுக்கு என்றால் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற அல்லாடுவாள். காட்டுக்கு அப்பால் பக்கத்து தோட்டத்தில் வாழும் தன் பிற‌ந்தகத்தை திருவிழா, தீபாவளி என நல்ல நாள் திருநாளில் கால் நடையாய் குடும்பத்தோடு போய்ப் பார்த்து வருவதோடு சரி, மற்றபடி கணவனே உலகம், தன் இரு பொண்களே தன் கண்கள், தன் குடிசையே தன் அரண்மனை,  கணவன் கொன்டுவரும் காட்டு வளங்களே தன் செல்வம் என நாளும் பொழுதும் தன் கண‌வன் வண‌ங்கும் வீரனையும் , தான் வண‌ங்கும் துர்க்காம்மையையும் வேண்டி தன் வாழ்வின் பாதியை ஓட்டிவிட்டாள்.

தன் பெண்கள் வளர்ந்தபின் ஊர், உறவுகளில் சின்னானைப்போல் நல்ல உழைப்பாளி பையன்களாய்ப் பார்த்து கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் தன் கடமை முடிந்தது. அப்புறமென்ன ? அவளாச்சு அவள் கணவனாச்சு. ஆங், தன் கணவன் அடிக்கடி ஆசையாய் சொல்லும் " நீ கெடைக்க நான் ரொம்ம்ப்ப கொடுத்து வச்சிருக்கனும் புள்ள " எனும் ஆதர்ச பாராட்டை அனுதினமும் கேட்டுக்கொள்ளவேனும். இரவில், நிலவொளியில் தன் காதில் கிசுகிசுக்கும் கணவன் குரலை வாழ்வின் இறுதிவரை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

பின்னர் வாழ்ந்து முடித்த மகிழ்ச்சியில் கிழவியான பின் ஒரு நாள் வாழ்ந்த
வாழ்க்கைக்கு வணக்கம் சொல்லி அவன் மடியிலேயே உயிரை விட்டு இதே இயற்கையோடு காற்றாய் கலந்துவிடவேண்டும். இந்த உலக மகா ஆசைகளை உள்ளத்தில் தேக்கிக்கொன்டு அந்த உருக்குலைந்த வீட்டில் உற்சவ தேவதையாய் உலா வந்து கொண்டிருந்தாள் மங்கா.

மங்கா பெற்றது ரெண்டு புலிக்குட்டிகள். ரெண்டும் பெண்ணாய் போச்சு!
சிங்கக்குட்டி ஒன்னு பிற‌க்கலையே என்ற கவலை சின்னானுக்கும் மங்காவுக்கும்  நெஞ்சுக்குழியில் ஓர் ஓரம் இருந்தாலும் ஒரு நாளும் அதை பெரிசுபடுத்திப் பேசியதில்லை. தங்களின் பொண்பிள்ளைகளைப் பார்த்தே கவலை மறந்தனர். அவர்களின் கணக்கில் ஆணும் பெண்ணும் ஒண்ணுதான். பிற‌ந்த இரண்டுமே இரண்டு கண்கள்தான்னு அந்த அப்பனும் ஆத்தாளும் தங்கள் பிள்ளைகளை சீராட்டி பாராட்டி வளர்த்தனர். பொண்கள் இரண்டுமே கொள்ளை அழகு, ஆத்தாளைப்போல தங்கச்சிலையாட்டமா , அப்பனைப்போலவே தலைகொள்ளாத சுருட்டை முடி தோள்பட்டை வரை புரள, என்றோ வாங்கிக்கொடுத்த பாவாடை சொக்காயை போட்டுக்கொண்டு உடுப்பு கலர்மங்கிப்போனாலும் உடுத்தியவள் தங்க நிற‌த்தில் தன் தாயைப்போலவே களை மங்காமல் காட்சியளிப்பவள்,  பெரியவள் காமாட்சி, அவளைவிட குட்டியாய் உருண்டை முகத்தில் பெரிய உருப்படிகளாய் குண்டு குண்டு கண்களோடு இடுப்பில் மட்டுமே பழைய கால்சட்டை அணிந்து அடித்தாலும் மேல்சட்டை போடாத பிடிவாதக்காரி சின்னவள் மீனாட்சி.

ஆறு வயதும் , நாலு வயதுமாய் அவர்கள் இருவரும் வைத்த பெயர் மறந்து
பெரியவள், சின்னவள் எனும் பெயரிலேயே அந்த வீட்டை மகிழ்ச்சிகரமான
நந்தவனமாய் மாற்றியமைத்து வைத்திருந்தனர். அவ்வப்போது அவர்களுக்குள் நிகழும் சின்னச் சின்ன தகராறுகளுக்கும், குட்டிச் சண்டைகளுக்கும் மங்காதான் நீதிபதி. சின்னவள் பெரும்பாலும் அக்காவின் அருகாமையிலேயே பொழுதைப்போக்குவாள். பெரியவளும் சண்டைபோட்டாலும் ச‌டுதியில் அன்பாய் மாறி அவளுடன் விளையாடுவாள்.

இப்படித்தான் அந்தக் காட்டின் விளிம்பில் இயற்கையின் அரசாட்சியில்
நாளையும் பொழுதையும், நல்லபடி கடத்தி வந்தனர் சின்னான் குடும்பத்தினர்.

ஒரு நாள் பொழுது சாய்ந்த வேளை, வேட்டைக்குப் போன சின்னான் இன்னும் வீடு திரும்பவில்லை, அந்த இலேசான இருள் வேளையில் தன் குடிசையின் முன்புற‌த்தில் கொசு விரட்ட காய்ந்த சருகுகளையும், இலை தழைகளையும் குவித்து நெருப்பு மூட்டி புகை மூட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் மங்கா, நெருப்பு குவிந்து எழுந்து கொழுந்துவிட்டு சாம்பல் நிறப்புகையை கக்கியபடி கனன்று கொண்டிருந்தது. சோதியாய் எழுந்து காற்றின் அசைவுகளுக்கேற்ப நளினமாய் நர்த்தனமிடும் அந்த நெருப்புச் சுவாலைகளின் அழகில் மனதைப் பறிகொடுத்து அதையே மெய்மறந்து  இரசித்துக்கொன்டிருந்தாள் மங்கா. கனன்று எரியும் நெருப்பின் ஆரஞ்சு நிற‌ பிரகாசம் அவள் அழகிய முகத்தில் பிரதிபலித்து அவள் முக அழகை மேலும் பன்மடங்கு அழகாகக்காட்டியது. அச்சமயம் உள்ளேயிருந்து தன்னை அழைத்த‌ பெரியவளின் குரல் மங்காவை சுய நினைவுக்கு மீட்டுவந்தது.

வீட்டின் உள்ளேயிருந்த சின்னவளுக்கு இயற்கை உபாதை, சரியாய்
பேசத்தெரியாதவளின் உடல் மொழியை அறிந்து தாயிடம் முறையிட்டாள் பெரியவள். உடனே தாய்க்காரி "சரிம்மா நீ அவளைக் கூட்டிப்போய் பின்புறம் ஓர் ஓரமா குந்தவை !! தோ அம்மா வந்திர்றேன் என்றவாரே, ஏற்கனவே கைவசமிருந்த தண்ணீரை புழங்கி முடித்துவிட்டதால் ஒரு பழைய வாளியை தூக்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி இருந்த ஆற்றில் நீர் முகந்துவர ஓடினாள்.

பெரியவள் , தன் தங்கையை அழைத்துக் கொன்டு வீட்டின் பின்புறமிருந்த
திறந்தவெளிக் கழிவறைக்கு இழுத்துச் சென்றாள். சிமெண்டுத்தரை முடிந்து
மண்தரை துவங்கும் அந்த இடத்தில் அவளை மங்கலான முன்னிரவின் சன்னமான இருளொளியில் அமரச்செய்துவிட்டு கொஞ்சம் த‌ள்ளி அவளுக்கு எதிரே தான் நின்றுகொண்டாள், சில நொடிகள் கடந்திருந்தன.

அவ்வேளை தன் தங்கைக்குப் பின்னால் சரசரக்கும் சப்தத்துடன் மங்கலாய் ஏதோ ஒன்று நிழலாடுவதைக் கண்டு, கண்களைக் கூர்மையாக்கி உற்று நோக்கினாள் மூத்தவள், மங்கிய இருளில் கரிய நிறத்தில் ஏறக்குறைய தன் உயரத்தில் ஏதோ ஒன்று தன் தங்கையின் பின்னே சில அடிகளில் இருந்து தன் தங்கையை எட்டிப்பிடிக்க எத்தனிப்பதைப்போல் புலப்பட, அதை அதிர்ந்து பார்த்தவளுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, என்னவென்று சொல்லத் தெரியாத ஏதோ ஒன்று, ஆனால் அது நிச்சயம் தீயது என அவள் இள‌மனது உண‌ர்த்த சற்றும் தாமதியாது அதைத்தான் முந்திக்கொண்டு எட்டி தங்கையின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு "அம்மா" வென அலறியபடி வீட்டினுள் ஓடினாள். சின்னவள் பாவம் பாதி முடிந்தும் முடியாமலும் கழிவுகள் கால்வழியே வழிய‌ பெரியவள் போட்ட சத்தத்தில் மிகவும் பயந்துபோய் தன் அக்காள் கையைப்பற்றிக்கொன்டு அவளுடன்
தலைதெரிக்க வீட்டிற்குள் ஓடினாள்.

snakes images Scary ! HD wallpaper and background photos

நீர் எடுத்துவந்த தாயும் என்னவோ ஏதோ எனப் பதறியடித்துக்கொண்டு
ஓடிவந்தவள், பின்புறம் எட்டிப் பார்க்க, அவள் காணவிருந்த அந்த ஒன்று
இருளின் போர்வையில் தன்னை மறைத்துக்கொண்டு விட்டதால் வெறும் இருளின் அடர்த்தியே அவள் கண்களில் தென்பட்டது.

"ஏம்மா சத்தம் போட்டே" என பயந்து நடுங்கிக்கொண்டிருந்த பெரியவளிடம் மெல்ல அவள் முதுகைத் தடவிக் கொடுத்து விசாரித்தாள் மங்கா. அவள் என்னவோ ஏதோவென மங்காவைக் கட்டிக்கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டினாள். எதுவும் புரியாமல் சின்னவள் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள்.

மங்காவிற்கு பெரியவள் கூறியது தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, ஏதோவொன்றைக் கண்டு பயந்திருக்கிறாள் என்பது மட்டும் விளங்கியது. அவளின் பயமும் பதற்றமும் மங்காவிற்கு அடிவயிற்றைப் பிசைந்தது. என்னமோ சரியில்லை, இது சாதாரண விக்ஷ‌யமுல்லை என மூலையில் மின்னலடித்தது. அவள் குழந்தைகள் இலேசில் பயப்படும் ரகமல்ல ! விளையாட்டுத் தனமாய் எதையும் எதிர்கொள்ளும்
சின்னக் குழந்தைகள், அதிலும் பெரியவள், இருளில் கூட பயப்படாமல் நடமாடும் குணம் படைத்தவள், அவள் இப்படி பயந்து அதிர்ந்தது மங்காவிற்கு ஆச்சரியத்தை வரவழைத்தது, பேய், பிசாசா இருக்குமோ?  மனதில் தோன்றியதை மறைத்துக்கொன்டு போலிப் புன்ன‌கையுடன், சரிம்மா! சரிம்மா! அது காட்டுப் பூனையாயிருக்கும் நீ பயப்படாதே என ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினாள். அவளோ மிரள மிரள விழித்தபடி மேலும் மேலும் அழுது கொண்டே இருந்தாள்.

மங்கா பின்வாசல் கதவை இழுத்து மூடி, மண்ணெண்ணெய் விளக்கின் திரியை தூண்டிவிட்டு குழந்தைகள் இருவரையும் சுத்தம் செய்து தூங்கவைத்து தானும் அவர்கள் பக்கத்தில் சுருண்டு படுத்துக்கொண்டாள். கணவன் இன்னும் வீடு திரும்ப‌வில்லை. குழந்தையின் பயமும், அலறலும்  அவளை சஞ்சலமடையச் செய்திருந்தது. என்னவாயிருக்கும் ? நாமே வீட்டின் பின்புறம் போய்ப்பார்ப்போமா? மனசு முரண்டு பிடித்தது.

அவள் வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து வளைய வரும் இடம் அது, அங்கே
அவளுக்கு பயமொன்றும் இல்லை, இருந்தாலும் குழந்தையை இவ்வளவு பயமுறுத்தியது என்னவாய் இருக்கும் ? விடைகாணத் தவித்தது மனசு. பெரியவள் தூக்கத்தில் இருமுறை அலறி எழுந்தாள், அவளை முதுகில் தட்டி மறுபடியும் தூங்க வைத்தாள் மங்கா. இவ்வளவு பயந்திருக்கிறதே குழந்தை ! மங்காவிற்கு பிரமிப்பாய் இருந்தது. எழுந்து போய்ப் பார்ப்போமா? ஆர்வத்தைத் தூண்டியது மனது, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், பிள்ளைகளை விட்டு எங்கும் நகர வேண்டாம் என அடுத்த கணம் அதே மனசு தடுத்த‌து. கணவன் வரட்டும் , பின்னர் பார்க்கலாம் என நினைத்தபடியே படுத்திருந்தவளுக்கு வாசலில் அரவம் கேட்டது, சின்னான்
வீடு திரும்பிவிட்டான்.

குழந்தையின் புலம்பல்களால் ரொம்பவே சோர்ந்து போயிருந்த மங்காவிற்கு போன உயிர் திரும்பி வந்து, இழந்த பலம் மீண்டதைபோலிருந்தது. விருட்டென படுக்கைவிட்டு எழுந்து, அவிழ்ந்து புரண்ட கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு, குவளை ஒன்றில் நீர் எடுத்து வீடு திரும்பிய கணவனை மெல்லிய சிரிப்புடன் வரவேற்று உபசரித்தாள்.

கணவன் வேட்டையாடி கொன்டுவந்தவற்றை பத்திரப்படுத்தி, அவனுக்கு ஆகாரம் இட்டு, அவன் படுக்கையில் ஓய்ந்து சாய்ந்த வேளை அன்று அந்தியில் நடந்ததை அவனிடத்தில் சொன்னாள், சின்னானோ ஓடியாடி வேட்டையாடி வந்த களைப்பில் அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அலுப்பில் குறட்டை விட்டு உறங்க ஆரம்பித்து விட்டான். வேறு வழியின்றி அன்று இரவு முழுதும் கொட்டக் கொட்ட விழித்திருந்து குடும்பத்தை பாதுகாத்தாள் மங்கா. வெளியே இரவு நிசப்தமாய் கரைந்து கொண்டிருந்தது. மங்காவின் மனது மட்டும் ஆர்ப்பரித்து அலைபாய்ந்துகொன்டிருந்த‌து.

மறு நாள் காலையிலேயே கணவன் கண்விழித்தவுடன் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சொல்லிப் புலம்பினாள் மங்கா. முழுக்கதையையும் கேட்ட சின்னான், அதெல்லாம் ஒன்னுமிருக்காது புள்ளே!  இது காட்டுப் பிரதேசம், ஒன்னுரெண்டு மிருகம் ஓடியாறச் செய்யும், அதைப் போய் பேயி, பிசாசுன்னு சொல்லுறியே! என அவளைப் பழித்துச் சிரித்தான்.

சின்னான் சிரித்தவாறே சற்று தூரத்தில் கிள்ளிப் போட்ட தாமரை மொட்டு போல் துவண்டு படுத்திருந்த பெரியவளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவ, காய்ச்சலால் அவள் உடல் அனலாய் தகிப்பதைக்கண்டு திடுக்கிட்டுப் போனான். சிரிப்பும், பழிப்பும் மாறி அவனுள்ளும் சலனம் எழத் துவங்கியது, காத்து கருப்பு எதுனாச்சும் இருக்குமோ ? மனதுள் நினைத்தவன், வார்த்தைகளை கடிவாள‌மிட்டு மறைத்துவிட்டு மங்காவிடம் சரிசரி நான் போய் அங்கே என்னதான் இருக்குனு பார்க்கிறேன் ! எதுவா இருந்தாலும் நாலு வேப்பங்கொத்தைக் கிள்ளிப்போட்டு அப்பன் வீரன் பேரைச்சொன்னா, நிக்காம ஓடிப்போகாதா?

நீ புள்ளயை கவனிச்சுக்க, காய்ச்சலடிக்குது. எதையோ பார்த்து பயந்திருச்சு,
கக்ஷாயம் வச்சுக்குடு, காய்ச்சல்  இற‌ங்காட்டி அப்புறமா ஆராகிட்டே
கொண்டுபோய் மந்திரிக்கலாம் என்றவாறே வீட்டின் ஓரமிருந்த
வேப்பமரத்திலிருந்து சில வேப்பங் கொத்துக்களை ஒடித்துக்கொண்டு
வீட்டின் பின்புற‌ம் நோக்கி நடந்தான்.

ஆரா அந்த காட்டின் வடகோடியில் வாழும் சின்னானின் ஆதிவாசி நண்பன்.
அமானுக்ஷ்யங்களில் ஈடுபாடு கொண்டவன். அந்தக் காட்டில் அவனொரு மந்திரவாதி. சின்னானுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் ஆராவுடனும், அவன் குடும்பத்தினரிடமும் நல்ல பழக்கம் உண்டு.

மங்காவிடம் பேசியபடியே வீட்டின் பின்புற‌ம் சென்று நோட்டமிட்டவாறே
நடந்தவனின் பார்வை சட்டென‌ ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது, அது என்ன? அந்த சிமெண்டுத்தரையின் அடிப்புற‌த்தில் இத்தனைப் பெரிய பொந்து!  இவ்வளவு பெரியதாய் எப்பொழுது உண்டான‌து? அடிக்கடி வீடு தங்காமல் வேட்டையாட காட்டிற்குச் சென்றுவிடுவதால் தன் வீட்டைச் சுற்றியே தான் பார்க்க தனக்கு நேரமில்லாமல் போய்விட்டதே, எனக்குத்தான் வெளிவேலை , இந்த மங்கா ஏன் இதையெல்லாம் கவனிக்கவில்லை, கோபம் கசிய தன் மனதில் எழுந்த கேள்வியுடன் அந்தப் பொந்தை நெருங்கி , உற்று கவனித்தான் ? ஒருவேளை தன் குழந்தை கண்டு பயந்த அந்த ஏதோவொரு ஜந்து இதிலிருந்து வெளிப்பட்டிருக்குமோ ?  வெகு நேரம்
ஆச்சரியத்துடன் அருகில் சென்று பார்த்தவன், தன் வீட்டின் உட்பகுதி நோக்கி இருண்டு நீண்டிருந்த அந்த  பொந்தைக்கண்டு அதிசயித்து பின்வாங்கினான். கையில் கிட்டிய நீண்ட கழி ஒன்றைக்கொண்டு எட்டியமட்டும் உள்ளே துழாவினான். நிச்சயமாய் இது முயல், எலி போன்ற சிறு மிருகங்கள் வாழும் பொந்தாய் தோன்றவில்லை, அப்படியென்றால் ?

சுர்ரென்ற பய உண‌ர்வு உடம்பை உலுக்கி எடுக்க, ஒரு விக்ஷயம் அவனுக்கு
விளங்கியது. சட்டென்று வீட்டிற்குள் ஓடினான். மங்காவிடம் வெளியே சென்று வருவதாய் கூறிவிட்டு காட்டினுள் ஓடி மறைந்தான்.

கொஞ்ச நேரத்தில் தன் ஆதிவாசி நண்பன் ஆரா மற்றும் ஐந்தாறு ஆதிவாசிக‌ளுடன் வீடு திரும்பினான். அனைவரையும் அழைத்துச் சென்று பின்புறத்தில் தன் வீட்டிற்கு அடியில் தான் கண்ட அந்த ஆறுவயதுக் குழந்தை உள்ளே புகக் கூடிய அளவு அகலத்தில் உட்புறம் கொண்ட அந்த பொந்தைக் காண்பித்தான், அதை உற்று நோக்கிய அனைவர் முகத்திலும் கலவரம் தொற்றிக்கொண்டது, அவர்களில் தலைவனைப்போல் இருந்தவன் அருகில் நெருங்கி அந்த வளையின் மண்ணைக் கொஞ்சம் தொட்டு முகர்ந்தான் , பின்னர் அவர்கள் தங்கள் பாக்ஷையில் தங்களுக்குள்ளாக மெதுவாகப் பேசிக்கொண்டு சின்னானிடமும் கை சாடையில் இந்தப் பொந்திற்குள் ஓர் ஆபத்தான விலங்கு புகுந்திருக்கிறது, சின்னான் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது என விள‌க்கினர். தொடர்ந்து ஆதிவாசிகளில் மூத்தவன், நீ குடும்பத்தை கொன்டுபோய் வேறு இடத்தில் விட்டுவா, என ஜாடை காட்டினான்.

சின்னான் இந்தக் காட்டிற்கு புதியவனல்ல, நெடுங்காலமாய் அந்தக் காட்டின்
விளிம்பில் வாழ்ந்து வருபவன். வேட்டைக்காய் ஆபத்துகளை அதிகம் சந்தித்தவன் தான் இருப்பினும், தன் மனைவி மக்களை எந்த ஆபத்திலும் சிக்கவைக்கக்கூடாது என்பதே அவன் விருப்பமும் ஆதலால் உடனே காரியத்தில் இறங்கினான்.

பின்னால் இருக்கும் பொந்தினை பற்றி எடுத்துக்கூறி, மங்காவையும், அவள் தந்த கக்ஷாயத்தில் இலேசாய் காய்சல் தனிந்திருந்த மூத்தக்குழந்தையையும், விளையாடிக்கொண்டிருந்த இளையக் குழந்தையையும் ஆதிவாசி தலைவன் கூறியபடியே தன் நண்பன் ஆராவின் வீட்டில் அவன் மனைவி குழந்தைகளோடு விட்டுவிட்டு வந்தான், மங்காவிடம் சுருக்கமாக நிலமையை விளக்கியபோதே அவள் பதறிப்போனாள். அவளை சமாளித்து விரைவில் வந்து அழைத்துப்போவதாய்க் கூறி விடைபெற்றான் சின்னான். பொங்கிய கண்ணீரை மறைத்துக் கொண்டு புன்னகையுடன் விடைகொடுத்தாள் மங்கா.

அதற்குள் காவிக்கறை படிந்த பற்கள், செம்பட்டை படர்ந்த தலைமயிருடன், சலவை என்பதை மறந்த கைலி சட்டையுடன் புன்ன‌கைத்தவாரே ஆராவின் மனைவி மங்காவுக்கும் அவள் குழந்தைகளுக்கும் காப்பித்தண்ணியும் , மலை வாழைப்பழங்களும் எடுத்து வந்து முற்றத்தில் வைத்து அன்புடன் உபசரித்தாள். மங்கா மனமெல்லாம் வருத்ததில் வலிக்க குழந்தைகளை மடியிலிட்டு தட்டியவாரே சின்னானையும், விட்டுவந்த வீட்டையும் நினைத்து விசனத்தில் ஆழ்ந்தாள்.

சின்னான் வீட்டிலோ மளமளவென வேலைகள் ஆரம்பித்தன. சின்னான் வீட்டுக்கு அடியில் ஏதோ மர்ம மிருகம் குடியிருக்கிற‌து எனும் செய்தி காட்டுத்தீயாய் அந்தக் காட்டை ஆக்ரமித்து மேலும் ஆதிவாசிகள் அங்கே திரள, அதற்குள் செய்தியறிந்து அங்கே முகாமிட்டிருந்த இராணுவ வீரர்களும் அந்த மர்ம விலங்கை வேட்டையாட களத்தில் இற‌ங்கினர்.

அவர்களின் இராணுவத் தலைவன் சின்னானுக்கு நல்ல பழக்கம் என்பதால் செய்தி அறிந்து அவனும் ஒரு வண்டி நிறைய வெடிமருந்து துப்பாக்கிகளுடன் வந்து இறங்கினான். சின்னானுக்கு உதவுவதாய் கூறி தன் வீரர்களை ஏவினான்.

அந்த இராணுவ வீரர்களில் நான்கு துப்பாக்கி ஏந்தியவ‌ர்கள் குறிப்பிட்ட
அந்த பொந்து ஆரம்பிக்கும் தரைக்கு அடியிலிருந்த பொந்திற்கு மேலே
துப்பாக்கியால் சுட்டு அந்த சிமென்டை உடைக்க ஆரம்பித்தனர், சிமென்டுக்கு அடியில் துளைபோல் பொந்து நீண்டிருக்க, இராணுவத்தலைவனின் ஆணைப்படி தரையைச்சுட்டு பொந்து செல்லும் வழி நோக்கி துப்பாக்கிச் சூடு தொடர, வீட்டின் உட்புறத் தரைச் சிமெண்டில் கோடாய் உடைத்துத் தாண்டி மீண்டும் மண‌ல் தரை என ஏற‌க்குறைய 60 அடிகள் சுட்ட பின்னர், அந்தப் பள்ளத்தின் உள்ளே இராட்சத குழாய் வடிவில் கருப்பாய் ஒரு பெரிய உருவம் நீண்டிருப்பதைக்கண்டு கொஞ்சமும் தாமதியாது அதை நோக்கி நான்கு வீரர்களின் துப்பாக்கிகளும் குண்டு மழையைக் கக்கின‌. அந்தக் கருத்த உருவத்தின் அசைவுகள் துடிதுடித்து அடங்கியதும் மேலும் அந்தப் பள்ளத்தின் மேலே மேலே துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்ந்தது அந்தப் பொந்தின் முடிவு நோக்கிய துப்பாக்கி வீரர்களின் துப்பாக்கிச் சூடுகள்.

எல்லாம் முடிந்து இறுதியில் வெளியே இழுத்து எடுத்து தரைமேல் வைக்கப்பட்ட அந்த நீண்ட பொந்தின் முடிவில் பதுங்கியிருந்த ராட்சத விலங்கினைக் கண்டு அனைவருக்கும் சர்வ நாடியும் அடங்கிப்போனது, சின்னானுக்கோ மூச்சே ஒரு கணம் நின்று போனதைப் போலிருந்தது. அது ஒரு மிகப்பெரிய  இராட்சத பாம்பு!!





நாற்பது அடி நீள‌த்தில் ஆறு வயதுக்குழந்தையின் உடல் பருமனுடன் ,பசுவின் தலையை ஒத்த பெரிய தலையுடன், கன்னங் கரேலென்ற உடலில் , துப்பாக்கிச் சூடுகளின் தாண்டவத்தில் சிதறிப் பிய்ந்து தொங்கிய சதைகளும் வழியும் கருஞ்சிவப்பு குருதி வெள்ளத்திலும்  நனைந்திருந்தது பத்துப் பண்ணிரண்டு இராணுவ வீரர்கள் ஒன்றாய் சேர்ந்து பொந்திலிருந்து மேலே இழுத்துப் போட்ட அந்த இராட்சத பாம்பு !!


உலகம் ஓர் ஆடுகளம் என்பது உண்மைதான். இங்கே உயிர்கள் அனைத்திலும் போட்டிகள் உண்டு, சரியான சமயத்தில் சரியான முடிவை எடுத்து, அதை விரைவாய் செயல்படுத்துபவருக்கே இங்கே வெற்றி. சமய சந்தர்ப்பம் நோக்கி காத்திருந்து தாமதித்தால் வெற்றி எதிராளிக்கே. அந்த இராட்சத பாம்பு தன்னையும் தன் குடும்பத்தினரையும் இரையாக்கிக் கொள்ளும் முன்,  சின்னான் தன்னைச் சேர்ந்தவர்களுடன் தான் முந்திக்கொன்டு அந்த இராட்சத பாம்பை வீழ்த்தி அதற்கு மரணத்தை பரிசளித்துவிட்டான். ஒரு பெரிய ஜீவப் போராட்டத்தில் அவன் ஜெயித்து அந்த விலங்கை வீழ்த்திவிட்டான்.

சின்னான் தன்னுள் ஒரு கணம் உறைந்து போனான், இயற்கையின் பேராற்றலை உணர்ந்து அவன் உள்ளமும் உடலும் கூனிக்குறுகிப்போனது. அந்தக் காட்டில் தான் அறியாதது எதுவுமே இல்லை என இதுவரை இறுமாந்திருந்தவனின் கர்வத்தில் விழுந்த சம்மட்டி அடியாய் அவன் குடிசைக்கு அடியில் அங்கேயுள்ள அனைத்தையும் அறிந்தவன் என இறுமாந்திருந்த அவன் இத்தனை நாள் அறியாமலேயே குடித்தன‌ம் செய்து வந்து இன்று அவன் கண்ணெதிரேயே இற‌ந்து கிடந்தது அந்த இராட்சத பாம்பு !!
இயற்கையின் எத்தனை விநோதமான படைப்பு   !!

எத்தனைக் காலம் இந்த பூமிக்கடியில் எத்தனை எத்தனை நிலவறைப் பாதைகள் வைத்து ஆங்காங்கு பொந்துகளாய் வாசல் வைத்து இன்னும் இதன் இரகசியப் பாதைகள் இந்தக் காட்டில் எங்கெங்கே அமைந்திருக்கும் ? தானாறியாமலேயெ தன் படுக்கைக்கு கீழே எத்தனை நாள் இது ஊர்ந்து சென்றிருக்கும் ? ஏன் இத்தனை நாள் ந‌ம்மை விட்டு வைத்தது ? தன் மகளை கபளீகரம் செய்ய வந்து இத்தனை பேர் கையால் இன்று மாண்டு போனது. அவனுள் எழுந்த ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு பதிலின்றி மெளனத்தையே பரிசளித்து அமைதியாய் செத்துக் கிடந்தது அந்த விலங்கு.  இயற்கை மனிதனுக்கு உண‌ர்த்துவது பனிப்பாறையில் மேலே தெரியும் சிறு குன்றுகள் போன்ற‌ கொஞ்சமான காட்சியே, அதன் எஞ்சிய அதிசயங்கள், அமானுக்ஷ்யங்கள், மர்மங்கள்  சின்னான் சந்தித்ததுபோன்ற பிரம்மாண்டம் யாவும் கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் பனிமலைப்பாறைகளைப்போல் கணக்கிலடங்காதவை. இயற்கையை முழுதாய் உணர்ந்து அதை ஆட்சிசெய்யும் தெளியும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. இயற்கையை  மனிதன் என்றுமே வெல்ல முடியாது என்ற உண்மையை அவன் மனது உண‌ர்ந்து சிலிர்த்தது.

எல்லோரும் அந்த இராட்சத பாம்பைச் சற்று தூரத்தில் நின்றே எட்டி எட்டி
பார்த்துக்கொன்டிருந்தனர். இற‌ந்த பின்னும் அவர்களை பயமுறுத்திய‌ அந்த
மிகப்பெரிய பாம்பின் இறந்த உடல் இறுதியில் ஓர் இராணுவ வண்டியில் ஏற்றி கொசுவத்திச் சுருள் போல் சுருட்டி வைக்கப்பட்டது. அதன் எடை அந்த வண்டியின் பின்புறம் முழுமையையும் ஆக்ரமித்துக்கொண்டது. அந்த வண்டியில் டிரைவரைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லாமல் போனது. அதுவும் ஒருவகையில் அவர்களுக்கு நல்லதாகவே பட்டது. இற‌ந்துவிட்டாலும் அது கொடிய பாம்பல்லவா ?

அந்தப் பாம்புடன் பயணிக்க யாருக்கும் விருப்பமில்லை, ஆனால் அந்த
வண்டியின் டிரைவருக்கோ வேறு வழியில்லை ! பயத்துடன் தொடர்ந்தது பாம்புடனான அவரது பயணம்.

ஒரு வழியாக சின்னான் வீட்டுக்கு அடியில் பாதை வைத்து நடமாடிய அந்த
இராட்சத மலைப்பாம்பின் இறுதி ஊர்வலம் ஆரம்பித்த‌து, அங்கே கூடிய
கூட்டமும் தங்களுக்குள்ளாகவே அதைப்பற்றி மேலும் மேலும் வியந்து
பேசிக்கொன்டு களைய ஆரம்பித்தது.

இதன்பின் அந்தப் பாம்பின் கதி என்னவாகும் ? பாடம் செய்யப்பட்டு
காட்சிப்பொருளாகுமோ ? அல்லது புதைத்தோ, எரித்தோ அதன் உடல்
அழிக்கப்பட்டுவிடுமோ ? சின்னானின் மனதில் எழுந்த கேள்விகளுக்கு
யாரிடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை.

ஆதிவாசிகளுக்கும், இராணுவ வீரர்களுக்கும் நன்றி கூறினான் சின்னான்.
சிதைந்து போய்விட்ட தன் குடிசையை சில நாட்களில் சீர்படுத்தினான், அவனை அந்த இடத்தை விட்டுவிட்டு வேறிடம் தேடி வாழ்விடம் அமைக்குமாறு அவன் நண்பர்கள் அறிவுறுத்தினர். ஆனால் சின்னான் அதை ஏற்கவில்லை, காட்டிலிருந்து பிரிந்து வாழ சின்னானால் முடியாது, அப்படி ஒரு நிலை வந்தால் நீரிலிருந்து எடுத்து தரையில் வீசப்பட்ட மீனின் நிலையை ஒத்த‌தாய் அவன் வாழ்வு அமைந்துவிடும் என்பதால் அங்கேயே தன் வீட்டை புனரமைப்பு செய்து வாழும் தன் நோக்கத்தை செயல்படுத்தத் தொடங்கினான்.

சின்னானின் மனவோட்டத்தை தெள்ளத் தெளிவாய் உண‌ர்ந்திருந்த‌தால் தன்
கணவனின் ஆசைக்கு மறுப்பேதும் கூற‌வில்லை மங்கா. அவனது வீடு ஓரளவிற்கு சீரமைக்கப்பட்டது. எல்லாம் முடிந்தபின் ஆராவின் குடும்பத்தினருக்கு நன்றி கூறி கையில் கிடைத்த காட்டுப்பழங்களை மூட்டைகட்டி பரிசாய் கொடுத்துவிட்டு தன் மனைவி மக்களை வீட்டிற்கு அழைத்துவந்தான் சின்னான்.

அந்த இரவு குழந்தைகள் உண்டு உற‌ங்கிய பின்னர், மனைவி கொடுத்த தாம்பூலத்தை தரித்துக்கொண்டு அவளுடன் பேசி மகிழ்ந்து கொண்டிருந்த சின்னான் வீட்டின் பின்புறம் ஏதோ விசித்திர அரவம் கேட்க என்னவென்று பார்க்க எழுந்து சென்றான், மங்காவின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது....!

ஆக்கம் : சிவ.ஈஸ்வரி, பினாங்கு
வல்லினம் சிறுகதைப்போட்டி 2016 ‍ (ஆறுதல் பரிசு)

பி.கு : வல்லினம் சிறுகதைப்போட்டி 2016 ஏற்பாட்டுக்குழுவினருக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும்... :)