.

.
.

Friday, May 6, 2016

முல்லை (நிறைவு)


அன்றைய தினம் முல்லையால் ஒழுங்காக வேலைசெய்ய‌வே இயலவில்லை, மனதில் ஏதோ இனம்புரியாத குழப்பம் கூடுகட்டி வாட்டியது. பெயருக்கு தன் பங்கு வேலைகளை இழுத்துப்போட்டு  முனைப்பில்லாது ஏனோ தானோவென்று செய்துகொண்டிருந்தாள்.

அச்சமயத்தில் அவளுக்கு அருகாமையில்  "முல்ல, முல்ல" என ஆண் குரல் ஒன்று தன்னை உர‌க்க அழைக்கும் ஓலி கேட்டு கையில் பிடித்திருந்த மண்வெட்டியை ஓரமாய் சாய்த்துவிட்டு சோர்வுடன் நிமிர்ந்தாள். டிராக்டர் ஓட்டும் ராமையா அண்ணன் அவளிடத்தே அரக்கப் பரக்க ஓடிவருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றாள், ஏண்ண ? என்ன விக்ஷ‌யம், இப்படி மூச்சு வாங்க ஓடியாறிங்க ? எனக் கேட்டாள்.  ராமையா அண்ணன், அவளுடன் பணியாற்றும் கருத்த, இரட்டை நாடி சரீரம் கொண்ட நல்ல மனிதர், தலையின் முன்வழுக்கை அவருக்கு அகவை நாற்பதைக் கடந்திருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியது. ஓடிவந்ததில் வியர்த்து விறுவிறுத்து அவரின் முழங்கை வரை மடித்துவிட்ட முழுக்கை சட்டை முக்கால்வாசி வியர்வையால் நனைந்திருந்தது, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு "சேதி தெரியுமா முல்ல, உன் அத்த பையன், பேரென்னா ? ஆங், சங்கரு, அந்தப் பையன் அடிபட்டுட்டானாம் !!!

செய்தி காதில் விழுந்த மாத்திரத்தில், சம்மட்டியால் தன்னை  யாரோ தாக்குவதைப்போல் மனம் முழுதும் வலி பரவியது முல்லைக்கு,  கைகால்கள் சோர்ந்து, உதடுகளும் உலர்ந்து போய்விட்டன. "ஓவென கதறி அழவேண்டும்போல் இருந்தது. கண்கள் இருள‌ மயக்கம் வருவதைப் போலிருந்தது, வெகு சிரமப்பட்டு தன்னையும், சிதறி விழக் காத்திருக்கும் கண்ணீரையும் கட்டுப்படுத்திக்கொன்டாள்,

"ரொம்ப அடியாண்ணே" ? அவள் குரல் அள‌வுக்கு மீறி சன்னமாய் ஒலித்தது, "தெரியலையேம்மா, ஆஸ்பத்திரிக்கி கொண்டுபோயிருக்காங்களாம்," லாரி ஓட்டும் என் மச்சான் ரவிதான் சேதி சொன்னாரு, ஆளைப் பார்க்க முடியலையாம், ஆம்புலன்சுல கொண்டுபோயிட்டாங்களாம். காடி நம்பர வச்சி அடையாள‌ம் கண்டு விசாரிச்சு வந்து சேதி சொன்னாரு,"  மூச்சு விடாமல் சொல்லி மூச்சு வாங்க நிறுத்தினார் ராமையா அண்ணன்.  ராமையா அண்ணன் பேசுவதை நிறுத்தி அவளை ஏறிட்டார். அதுவரை உதட்டைக் கடித்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்தவள் அதற்குமேல் தாங்க இயலாமல் உடைந்து அழுதுகொண்டிருந்தாள், அவள் முகமும், கண்களும் சிவந்து  கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்.

"சரிம்மா, நீ போயி மண்டோர் பாலாகிட்டே சொல்லிட்டு வீட்டுக்குப் போ," கண்ணம்மா பாவம் சின்னப் புள்ள‌ங்கள வச்சிக்கிட்டு தவிச்சிக்கிட்டிருக்கும், அதுக்கு கண்ணு வேற சரியா தெரியாது, கடவுள் ஏந்தான் இப்படி நல்லவங்கள சோதிக்கிறானோ தெரியல," சொல்லிக்கொன்டே ராமையா அண்ணன் அவர் வழியில் சென்றுவிட்டார்.

முல்லையால் நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை, நேற்றுவரை நல்லபடி இருந்தவர், லாரி பயணத்தில் கூட ஒருமுறையும் விபத்தை சந்திக்காத மனிதர், இப்போ இப்படியாகிப்போனதே, மனம் ஓலமிட்டு வருந்தியது. இந்த விபத்திலிருந்து சங்கர் மீண்டு வரவேண்டுமே, இறைவா காப்பாற்று !! , அவரை நல்லபடி மீட்டுக்கொடு !!, கைவிட்டுவிடாதே !!" வானில் பார்வையை பதித்து, விழிகள் அழ, மனதால் தொழுதாள் முல்லை.

மண்டோர் பாலாவிடம் அனுமதி கேட்க அவரைத் தேடி விரைந்தாள்.
மண்டோர் பாலா அவள் தந்தையின் பால்ய சினேகிதர். அவர் பார்த்து வளர்ந்தவள் முல்லை, அவள் குடும்பப் பின்புலமும் அவர் அறிந்த‌துதான். ஆணைப்போல் நடந்துகொள்பவள் முல்லை, தந்தையின் செல்லம் தந்த விளைவு அது. தந்தையுடன் லாரி ஓட்டிய அநுபவத்தில் அடிக்கடி டிரக்டர் ஓட்ட அவரிடத்தில் அனுமதி கேட்டு நிற்பாள். சில சமயங்களில் அனுமதி கொடுத்தாலும், பாதுகாப்பை மனதில் நிறுத்தி பல சமயங்களில் மறுத்துவிடுவார் பாலா. "பார்த்துகிட்டே இருங்க, எங்கப்பாகிட்டே சொல்லி ஒரு நாளைக்கு 10 சக்கர லாரி ஒன்னு வாங்கி இதே ஊரில உங்க கண்ணு முன்னாலேயே ஓட்டிக் காட்டுறேன், அப்பத் தெரியும் இந்த முல்லை யாருன்னு,"  வீராப்பாய் சவால் விடுவாள் முல்லை.

மனதுள்  தோன்றும் நகைப்பை மறைத்தபடி, "எதுக்கு ஒரு நாளைக்கு ? உங்கப்பாவ இப்பவே வாங்கச் சொல்லு, அப்படியே உங்கப்பா அடுக்கடுக்கா வச்சிருக்கிற புஸ்தகத்து மத்தியிலே கட்டுக் கட்டா மறைச்சி வச்சிருக்கிற‌ பணத்திலே முடிஞ்சா என‌க்கும் ரெண்டு கட்டு கெண்டாந்து கொடு, உங்கள‌யெல்லாம் மேய்க்கற இந்தப் பொழப்பை விட்டுட்டு இமயமலைக்கி போயி சந்நியாசி ஆவப்போரேன்" என்பார் பாலா.

அதற்குள் மண்டோர் பாலாவின் சம ஈடு தோழரான சோலைமுத்து அப்புச்சி "உனக்கு எதுக்கு ரெண்டு கட்டு துட்டு ? சன்னியாசியாவ ஒரு முழம் கோவணத் துணி போதுமே ? என நகை வெடியைக் கொளுத்திப் போட அவ்விடமே சிரிப்பால் அதிரும், மண்டோர் வாயில் சுருட்டு புகைய நமுட்டுச் சிரிப்புடன் அவ்விடம் விட்டு அகல்வார். சிரிப்ப‌லை மட்டும்  ஓயாது.  சிரிப்புக்கும் சேட்டைகளுக்கும் அங்கே பஞ்சமேயில்லை. இப்படியாக அங்கே வேலை செய்யும் அனைவரும், உறவு முறை வைத்து அழைத்துக்கொண்டும், நகைச்சுவை பேச்சுக்களை வாரியிறைத்துக்கொண்டும் உற்சாகமாய் பணியாற்றும் களம் அது.

அந்த மகிழ்ச்சியான சூழலுக்கு சற்றும் சம்பந்தமில்லாது  தன்முன் கன்றிச் சிவந்த முகத்துடன் நிற்கும் முல்லையைப் பார்த்தவுடனே விடயம் அவருக்கு புரிந்து போனது. காட்டுத்தீயாய் பரவிய சங்கரின் விபத்துச் செய்தி அவரை மட்டும் விட்டு வைத்திருக்குமா என்ன ? அதிகம் பேசாமல் "போய் வா" என அவளுக்கு விடைகொடுத்து அனுப்பினார். முல்லை தன் பொருட்களையும் எடுக்க மறந்து விடுவிடென ஓட்டமும் நடையுமாய் தன்னை கடந்து விரைவதை பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொன்டே நின்றார். அவளுக்காக அவர் மனம் வருந்தியது

நல்ல பெண்ணாச்சே...!! இவளுக்கா இப்படி ஒரு கதி ? பாலாவின் மனதும் அவளுக்காக கலங்கியது. அவள் கண்ணீர் அவருக்கு சில விடயங்களை புரியவைத்தது.

ஆரம்பத்தில் எல்லோரும்   எண்ணியதைப்போலவே சங்கர் இவளை மணமுடிப்பான் என்றே அவரும் நினைத்திருந்தார், ஆனால் விதி வேறுவிதமாய் வழியமைக்க முல்லை மேல் அவருக்கு பரிதாபமாய் இருந்தது, இன்று அவள் மனமுடைந்து செல்வது பிள்ளையில்லாத அந்தப் பெரியவருக்கு பெரும் வருத்ததைத் தந்தது.

முல்லையின் கால்கள் முன்னோக்கி நடக்க அவள் நினைவலைகளில் காலம் பின்னோக்கி நடக்க ஆரம்பித்தது. ஐந்து வயது சிறுமியாய் தான் அப்பாவின் மடியிலிருந்த ஒரு நாள் மாலையில் தன் வீட்டு வாசலில் தாயின் அரவணைப்பில் குறுகுறுத்தபடி நின்ற இளவயது சங்கர் !!  அவனோடு விளையாடி, சண்டையிட்டு, கோள்சொல்லி, வம்பு வளர்த்து, பொறாமைப்பட்டு, பருவம் வளர உள்ளத்தில் இரகசியமாய் அவன்மேல் ஈர்ப்பு எழக் காரணமான சங்கர் !! பருவ வயதில் அழகாய் துளிர்த்த அரும்பு மீசையுடன் குறும்புடன் வளைய வந்த சங்கர்!! கம்பீரமான ஆண்மகனாய் சொந்தத் தொழிலில் முன்னேறி மதிப்பிற்குறிய மனிதனாய் மாறிய சங்கர் !! மனதுள் அவன்பால் முல்லை வளர்த்த ஆசையை நொறுக்கி வேறொரு அழகான பெண்ணை கரம் பற்றிய சங்கர் !! மனைவியை இழந்து மூன்று இளங்குழந்தைகளுடன் வாடி நின்ற சங்கர் !!. தன்னோடு வாழ நினைத்து, தன்னால் காயப்படுத்தப்பட்ட சங்கர் !! என பலப்பல காட்சிகளாய், சம்பவங்களாய்  அவள் நினைவலைகளில் மீண்டும் மீண்டும் நிறைந்து அவள் கண்களில் நீராய் வழிந்தான் சங்கர். அவன்மேல் அவள்கொன்ட அன்பு எத்தனை வலிமையானது என்பதை அந்தக் கனமான கணங்கள் இதயத்தில் இரண‌ங்களாய் தடம் பதித்து உணர்த்தின.
முல்லையின் கால்கள் தரையில் படவில்லை, நடந்தாளா, ஓடினாளா என்பதும் புரியவில்லை.  அரக்கப் பறக்க வீடு வந்து சேர்ந்தாள். ஆறுமுகம் அவசரமாய் வெளியே கிள‌ம்பிக்கொன்டிருந்தார். வீடு திரும்பிய முல்லை வேகமாய் ஓடிச்சென்று அவள் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

சில காலமாய் முல்லையின் தாய் முல்லையிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தார், அவள் திருமணத்தை முறித்ததால் எழுந்த கோபம், முல்லை மேல் எழுந்த கோபத்தில் அவளை நாலு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது அவருக்கு, என்ன ஓர் ஆண்பிள்ளை போன்ற தான்தோன்றித்தனம் !!. முல்லைமேல் வெறுப்பாய் இருந்தது.   அவள் கண‌வர் அவரைக் கண்டித்து அமைதிபடுத்தி வைத்திருந்தார். கோபமிருந்தாலும் தான் ஈன்று புறம் தந்த தன் மகளல்லவா ? , அவர் மெளனமாய் முல்லையின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டுதான் இருந்தார். வீட்டுக்குள் ஓடி வந்த முல்லை அவசரமாய் தன் அறைக்குள் சென்று தன் துணிமணிகளை ஏறக்கட்டி எங்கோ புற‌ப்பட ஆயத்தம் செய்வதைக் கண்டு குழ‌ம்பியவர், மெல்ல தன் கண‌வரின் காதில் விடயத்தை ஓதினார்.

முல்லையின் தந்தை அவரைச் சாந்தப்படுத்திவிட்டு எதையும் காட்டிக்கொள்ளாமல்"முல்லை ! இங்க வாம்மா" என அழைத்தார்.
 
சிவந்த கண்களுடன் தன் அறை வாசலில் வந்து நின்றாள் முல்லை,  விக்ஷயத்தை கேள்விப்பட்டியாம்மா ? சங்கருக்கு அடிபட்டுடுச்சாம், நான் இப்போ ஆஸ்பத்திரிக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன், நீயும் வர்ரீயாம்மா ? உண‌ர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கேட்டார் அவள் தந்தை. மெல்ல தலையை ஆட்டி தான் வரவில்லை என்பதை உணர்த்தினாள் முல்லை.

"சரி பரவாயில்லை நீ கண்ணம்மா அத்தையைப் போய் பார்த்து ஆறுதல் சொல், நான் போய் விவரமறிந்து வருகிறேன்", அவளை எதுவும் கேட்காமலேயே புறப்பட ஆரம்பித்தார் அவள் தந்தை.

வாசல் வரை புறப்பட்டுவிட்டவரை "அப்பா" !  என அழைத்து நிறுத்தினாள் முல்லை. "ஏன்மா ? ஏதும் வாங்கி வரணுமா" ? அவள் தந்தை கேட்டார்.

"அப்பா, நான் அத்தை வீட்டுக்கே நிரந்தரமாய் போகப் போறேன்", என்றாள் முல்லை. ஆறுமுகம் சட்டென்று நின்று அவளை ஏறிட்டார், அவர் விழிகளில் கொஞ்சம் கோபமும் நிறைய வருத்தங்களும் தொனிக்க "வாழ்க்கையிலே நிறைய நிதானம் தேவையம்மா, நினைச்சபடியெல்லாம் முடிவெடுக்க வாழ்க்கை ஒன்னும் சினிமா இல்ல !, நீயும் சின்னப்பிள்ளை இல்ல !, அவசரமின்றி யோசிக்க வேண்டிய விசயங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என நீ எடுக்கும் முடிவுகள் உன்னை மட்டுமல்ல, உன்னைச் சார்ந்த அனைவரையும் பாதிக்கும் என்பதை மறந்து விடாதே , அமைதியாய் கூறி முடித்தவர். ஏற்கனவே திருமண ஏற்பாட்டை முறித்து அவள் தாயை நோயாளியாக்கிவிட்டதை நினைத்துக்கொன்டார். இன்னும் இவளின் தடாலடி முடிவுகளால் என்ன‌வெல்லாம் நிகழக்கூடுமோ எனும் கேள்விக்குறியுடன் அவள் முகத்தை நோக்கினார்.

அவர் எதிர்பார்த்தபடியே முல்லை "இல்லையப்பா, இது என் இறுதி முடிவு, நான் நிச்சயம் அத்தை வீட்டோடு செல்லப்போகிறேன், இறுதிவரை அத்தைக்கு ஆதரவாகவும், அந்தக் குழந்தைகளுக்கு தாயாகவும் வாழப்போகிறேன் , சங்கர் மாமா மீண்டு வந்தால் அவர் நினைத்ததுபோல் அவரை மணந்துகொள்வேன், அவர் எந்த நிலையில், எப்படி வந்தாலும், அவரை ஏற்று என் வாழ்வை அவருடன் பகிர்ந்துகொள்வேன். அவர் நிலையறிந்த பின் நான் எடுக்கும் முடிவு சுயநலம் சார்ந்ததாகவோ, அனுதாபம் சூழ்ந்ததாகவோ அமையக்கூடும், அதை அவரும் விரும்பமாட்டார். என் கருத்துத் தெரிந்த காலம் முதல் நான் மறைத்து மறைத்து என் மனதுள்ளே அவர்பால் வளர்த்த அன்பால் நான் எடுக்கும் முடிவு இது. அவர் மீண்டு வரவில்லை என்றாலும் வேறொருவருக்கு என் வாழ்வில் இடமில்லை, இது என் மேல் சத்தியம். அதற்குமேல் அவள் எதுவும் பேசவில்லை. தீர்க்கமான பார்வையுடன் அவர் பதிலை எதிர் நோக்கி நின்றாள்.

ஆறுமுகம் அமைதியானார். அதற்கு மேல் அவளைத் தடுத்து ஆவதொன்றுமில்லை என்பதை உண‌ர்ந்து கொண்டார். " நீ அத்தை வீட்டுக்கு கிளம்பும்மா, என்று அவளுக்கு விடைகொடுத்தார், முல்லையின் தாய் நடப்பது அனைத்தையும் மெளனமாய் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பதிலுக்காகவே காத்திருந்தது போல் கண்ணம்மாவின் வீடு நோக்கி சிட்டெனப் பறந்துவிட்டாள் முல்லை.

ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரைக் காண விரைந்தார், "நானும் வரேங்க" என நோயையும் பொருட்படுத்தாது மல்லுக்கட்டிக்கொன்டு அவர் மனைவியும் தங்கள் மருமகனைக் காண உடன் விரைந்தார்.

சங்கர் பிழைத்து அவன் கரங்களால் முல்லையின் கழுத்தில் மங்கள நாண் சூடுவதை காண‌வேண்டும் எனும் வேட்கையுடன், அவன் நலமடைய வேண்டி பிரார்த்தனைகளுடன் தன் கணவரின் கைபற்றி தொடங்கியது அவர் பயணம்.
   
கண்ணம்மா வீட்டில் முல்லை குழந்தைகளுக்கு உண‌வளித்து உறங்கச் செய்துவிட்டு, கலங்கிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த கண்ணம்மாவையும் ஆறுதல் வார்த்தைகளால் ஆசுவாசப்படுத்தினாள். அந்த ஆறுதல் வார்த்தைகள் கண்ணம்மாவைவிட தனக்கே அதிகம் தேவைப்படுவதை அவள் உண‌ர்ந்து வருந்தினாள். வெளியே எதுவும் நடவாதது போல் நடந்துகொண்டாலும், உள்ளம் ஓங்காரமாய் ஓலமிட்டு கலங்குவது ஆர்ப்பரிக்கும் அலையோசையாய் அவள் மனதுள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. நேரமாக ஆக அவள் மனம் ஒரு நிலைகொள்ளாது தவித்தது. மனதுள் ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள் பிரவாகமெடுத்தன.


இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் தந்தை கொண்டு வர‌ப்போகும் செய்திக்காக கண்ணம்மா வீட்டு வாசலில் ஏக்கங்களை விழியிலும் எதிர்பார்ப்புகளை இதயத்திலும் சுமந்தபடி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் முல்லை....

நாட்கள் சில நகர்ந்த பின்னர் விபத்திலிருந்து மீண்ட சங்கர் மருத்துவமனையிலிருந்து முழுமையாய் குண‌மடைந்து வீடு திரும்பினான். எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகமெடுக்க மிகவும் அன்பும், கணிவும் நிறைந்து அவனை எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டாள் முல்லை. சங்கரின் விசனமும் வேதனையும் மறைய அவன் மனதில் முல்லையின்பால் அன்பும் நெகிழ்ச்சியும் நிறைந்தது. காலம் அவர்களின் கனவை நிறைவேற்றி இல்லற வாழ்வில் அவர்களை இனைத்து வைத்தது. அவர்களின் இனிய இல்லற வாழ்விற்கு எனது வாழ்த்துக்களை சமர்ப்பித்து விடைபெறுகிறேன் நீங்களும் சேர்ந்து வாழ்த்துங்கள். விடைபெறுவோம்.நன்றி