.

.
.

Tuesday, March 29, 2016

முல்லை 16By the lake
என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும் என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடிஉன் தோளில் சாய ஆசை இல்லை 
நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடிஎன் காதல் சொல்ல நேரம் இல்லை உன் கையில் சேர ஏங்கவில்லை

ந.முத்துக்குமார்


கடந்து செல்லும் காலம் எல்லோர் வாழ்விலும் அநுபவங்களை தடம்பதித்துச் செல்கின்றது. மாறிவரும் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என உருண்டோடி மறைகின்றன‌. நினைவுகள் மட்டுமே நேற்றைய வாழ்வுக்கு ஆதாரமாகின்றன. வாழ்வில் சந்தித்த மனிதர்களில் நினைவில் நிலைப்பவர்கள் வெகு சிலரே, அதில் உறவு, நட்பு, காதல் என இதயதோடு பிணைந்து வாழ்வைப் பகிர்ந்தவர்களுக்கே அதிகம் பங்குண்டு ஏனையோர்  வாழ்க்கைப் பயணத்தில் சில காலம் உடன் பயணித்து பின்னர் தங்கள் வாழ்க்கை வழி பிரிந்து சென்றுவிடும் பிரயாணிகளே. இவர்களுக்கு பெரும்பாலும் வாழ்வில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

சங்கரின் வாழ்க்கைத்துணையாய், மணவாழ்வில் இணைந்து, மூன்று மழலைகளுக்குத் தாயாகி தன் தவறான முடிவால் மரணித்தவள் சந்திரா. அவளின் நினைவுகள் காலைப்பனியாய் கனத்த பொழுதுகளில் சங்கரின் இதயம் நனைத்தாலும், தொடரும் அலுவல்களில் தன்னைத் தொலைத்து அந்த நினைவுகளுக்கு விடைகொடுத்து வந்தது சங்கரின் மனது. தன் தாயிடம் அவள் காட்டிய கொடூரம் மனதை நெருடினாலும், தன் தொழிலே பிரதானம் என குடும்பத்தை விட்டு அடிக்கடி தான் விலகி இருந்தது அதற்கு முக்கியக் காரணம் என்பதை மனம் மறுக்கவில்லை.

ந‌கர்ந்த பொழுதுகளில் வருடங்கள் சில விடைபெற்றிருந்தன.  குழந்தைகள் வள‌ர்ந்து ஆரம்பப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். கண்ணம்மா இன்னும் முதிர்ந்து, தளர்ந்து நாட்களை எண்ணிக்கொன்டிருந்தார். முல்லை வழக்கம்போலவே அவருக்கும் குழந்தைகளுக்குமான சகல தேவைகளையும் நிறைவேற்றி நல்லபடி அவர்களை கவனித்துக்கொண்டாள் . அவள் உறங்கும் நேரம் தவிர ஏனைய பொழுதுகள் கண்ணம்மாவுடனேயே கழிந்தது.

அவளைக் காணும்பொழுது அவள் பால் அன்பும், இரக்கமும் ஒருங்கே சுரந்தது கண்ணம்மாவிற்கு, எத்துனை அழகான வாழ்வை, நல்ல மனிதனை, அருமையான வாழ்க்கைத்துணையை தங்களை பராமரிக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காய் துறந்துவிட்டாள்.  கடந்த சம்பவங்கள் நினைவில் நிழ‌லாடின‌.

முல்லையின் வாழ்வில் அவள் மாமனுடன் நிகழ்ந்த பெண்பார்க்கும் படலம் அவர்களில் சிலரது வாழ்வை முற்றாக மாற்றியமைத்துவிட்டது.

முல்லையின் மாமன் திவாகருக்கு, முல்லையே தன் திருமண நிகழ்வை நிறுத்த அவளாகவே அவதூறு கடிதம் எழுதினாள் என்பதை அறிந்ததும், ஆத்திரம் எழவே செய்தது, இருப்பினும் அமைதி காத்து, அதற்கான காரணத்தை அறிந்துகொன்டான், அவள் தந்த பதிலைக் கேட்டதும் அவன் கோபம் இருந்த இடம் தெரியாது மறைந்தது. தன் கண்களில் துளிர்த்த வேதனையை அவள் அறியாமலிருக்க வேறு பக்கம் பார்ப்பதாய் பாவனை செய்து, அவள் பதிலை ஏற்றுக்கொன்டு அவளிடமிருந்து விடைபெற்றான்.

அழகானவன், கல்வியும், செல்வமும் ஒருங்கே படைத்தவன், யாவற்றையும் விட மனிதர்களை மதித்து அன்பு செலுத்தும் நல்லவன், இத்தனையும் வாய்த்திருந்த திவாகரை மணக்கும் பாக்கியத்தை நழுவவிடுகிறோம் என்பதை முல்லை அறியாமல் இல்லை, இருப்பினும் தன் நோக்கம் பெரிதென அவளுக்குத் தோன்றியதால் மனமுவந்து தான் நினைத்தபடி தன் திருமணத்தை நிறுத்திவிட்டாள். திவாகரை மணக்கப்போகும் பாக்கியசாலியை அவள் மனம் கனிந்து வாழ்த்தினாள்.

திவாகர் மிகவும் சகஜமாக எதுவுமே நடவாதது போல் அனைவரிடமும் விடைபெற்று, பொருள் பொதிந்த பார்வை ஒன்றை முல்லையிடம் வீசி மெளனமாய் விடைபெற்றுக்கொண்டான்.

அடுத்து சில மாதங்களில் முல்லைக்குத் திருமணம் என அக மகிழ்ந்திருந்த முல்லையின் பெற்றோருக்குப் பேரிடியாய் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி ! திவாகர் தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை பெற்றோருக்கும் தெரியாமல் பதிவுத்திருமணம் செய்து கொண்டான். திவாகரின் பெற்றோர் ஆரம்பத்தில் ஆரவாரம் செய்தாலும், தங்களின் ஒரே மகன் என்பதால் ஊரைக்கூட்டி நல்ல முறையில் அவர்களுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர். திவாகரின் தேர்வு சோடை போகவில்லை, வசதி மட்டுமே சற்று குறைவு என்ற‌போதிலும் அழகிலும், பணிவிலும் மிகவும் சிறப்பாய் அமைந்திருந்ததால், தங்கள் மருமகளை அதிகம் பிடித்துப் போனது திவாகரின் பெற்றோர்களுக்கு. முல்லையை இழந்தது பெரிய இழப்பாய் அவர்களுக்குத் தோன்றவில்லை. முல்லை தன் சகோதரியின் மகள் என்பதால் திவாகரின் தந்தை மட்டுமே சற்று வருந்தி தன் தங்கையையும், மைத்துனரையும் சந்தித்து உண்மையை உரைத்து மன்னிப்புக் கோரினார். முல்லையின் தந்தை பெருந்தன்மையுடன் அவரை மன்னித்தபோதிலும் அவள் தாய் தன் வேதனையை கண்ணீராய் வழியவிட்டார்.

அந்த அளவில் கோலாகலமாய் ஆரம்பித்த‌ முல்லையின் திருமண வேலைகள் அத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டன‌. ஊரில் பலர் பலவாறு பேசினர். முல்லையின் தாய் நோயில் வீழ்ந்தார், முல்லையின் தந்தை ஞானியைப்போல் விட்டத்தைப் பார்த்தவாறு வாளாவிருந்தார், முல்லையோ எதுவுமே நடவாதது போல் தன் வெளிக்காட்டு வேலை, அவ்வப்போது மண்டோர் பாலாவின் அனுமதியோடு டிராக்டர் ஓட்டுவது, அதன் பின்னர் கண்ணம்மா, குழந்தைகள் என தன் வாழ்வை இயந்திரமயமாக்கிக்கொண்டாள்.  

கண்ணம்மாவின் தொடர் விண்ணப்பங்களும், முல்லை குழந்தைளை பராமரிக்கும் நேர்த்தியும் சங்கரையும் வெகுவாய் கவர்ந்திருந்ததால், அவனின் கவனம் அவள்பால் சற்றுத் திரும்ப துவங்கியது. முக்கியமாய் அவள் திருமணத்தை தவிர்த்தது அவன் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. அவளுக்கும் தன்மேல் ஈர்ப்பு இருக்குமோவென மனம் கேள்விக் கணைகள் தொடுக்க ஆரம்பித்தது, சங்கரின் தூக்கம் தொலைய ஆரம்பித்தது. தன் முதிர்ந்த தாய், குழந்தைகள் இவற்றோடு முல்லையின் எதிர்காலம் குறித்த சிந்தனைகளும் மீண்டும் திருமணம் வேண்டாம் எனும் சங்கரின் நிலைப்பாட்டைத் தகர்க்க ஆரம்பித்தன. திவாகரைப்போல் வேறு யாரேனும் மீண்டும் முல்லையைக் கவர்ந்து செல்ல படையெடுத்துவிடுவார்களோ எனும் அச்சம் மெல்ல தலை தூக்கலானது.


முல்லைக்குத் தன்மேல் ஈடுபாடு இருக்குமா? சங்கரின் மனம் ஆராய்ந்தது. முல்லையோ காதல்வயப்பட்ட பிற பெண்களைப்போல் தங்கள் மனங்கவர்ந்த ஆண்மகனைக் கண்டவுன் நானிக்கோனி வெட்கப்படுவது, கால் பெருவிரலால் பூமியைக் கீறி கோலமிடுவது, இரகசியமாய் பார்ப்பது, சிரிப்பது போன்ற எந்த செயல்பாடுகளும் இன்றி இளவயதில் சங்கரிடம் எப்படி அச்சமின்றி நடந்து கொன்டாளோ அதைப் போலவே இன்றும் நடந்து வந்தாள். அவளிடத்தில் கண்ட ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் ஆரம்பத்தில் கொன்டிருந்த அதிகம் பேசும் பழக்கத்தை விடுத்து த‌ற்பொழுது அளவாகப் பேச ஆரம்பித்து விட்டாள். இவள் சம்மதத்தை எப்படிப்பெறுவது ? சங்கரின் மனம் அலைபாய ஆரம்பித்தது......

  தொடரும்.....

பி.கு : முல்லையும் சங்கரும் இணைந்தார்களா ? அவர்களின் எதிர்காலம் என்னவானது, அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விடை காண்பதோடு நமது கதாநாயகி முல்லை குறித்த சில செய்திகளுடன். கூடிய விரைவில்  இவர்களுக்கு நாம் விடைகொடுக்கலாம். நன்றி.