.

.
.

Wednesday, November 30, 2016

படித்த‌தில் பிடித்தது - அலை ஓசை

நிகழ்கால வாசிப்பில்....!

அலை ஓசை,  பேனா மன்னர் கல்கி அவர்களின் எழுத்தாக்கத்தில் உருப்பெற்று உயரிய இலக்கிய விருதா சாகித்திய அகாடமி விருது (1956) பெற்ற அரசியல் + சமூக நாவல்.

இப்புதினம் பூகம்பம் (34 பகுதிகள்), புயல் (28 பகுதிகள் ), எரிமலை (26 பகுதிகள் ) மற்றும் பிரளயம் 43 பகுதிகளாகப் படைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றங்களை மனித வாழ்வோடு ஒப்புவமை செய்து சுதந்திர போராட்ட கால பின்புலத்தில் இப்புதினத்தைத் தீட்டியிருக்கிறார் கதாசிரியர்.


நீண்ட நெடிய இப்புதினம் சீதா, சூரியா, இராகவன், தாமினி ஆகிய நால்வரை முதன்மைக் கதாமாந்தர்களாகக்கொன்டு, பின்னிப் பிணையும் இவர்கள் நால்வரின் வாழ்க்கைச் சிக்கல்களுடன், இயற்கைப் பேரிடரான பீஹார் பூகம்பம், அரசியல் பேரிடரான பஞ்சாப் கலவரம், மகாத்மா காந்தியின் வாழ்க்கை முடிவு ஆகியவற்றை முக்கிய சம்பவங்களாகக் கொன்டு மலர்ந்திருக்கிற‌து. ஆச்சரியங்களும், திடுக்கிடும் சம்பவங்களும், அதிக திருப்புமுனைகளும் சூழ்ந்த சிறந்த புதினமே "அலை ஓசை".

இப்புதினத்தின் முதன்மைக் கதாமாந்தர்களைக் கொஞ்சம் கவனிப்போம்...

சீதா, அழகும், கலகலப்பும் நிறைந்த படித்த பெண். பேச்சுத்திறமை வாய்த்தவள். காந்தீயக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவள். தவறான நபரை மணந்ததினால் வாழ்வில் ப‌ல்வேறு சோதனைகளை சந்தித்த‌ துர்பாக்கியசாலி.

சூரியா எனும் சூரியநாராயண‌ன், சீதாவின் மாமன் மகன், விவேகமும், மதி நுட்பமும் நிறைந்த வாலிபன். அரசியல் ஈடுபாடுகொன்டு காங்கிரசில் இணைந்து செயல்படுபவன். சீதா இராகவனை மண‌க்க முக்கிய காரணியானவன். தனது அத்தை ராஜம்மாளுக்கு கொடுத்த வாக்கின்படி பின்னாட்களில் சீதாவுக்கு பெரும் துணையாய் விளங்கியவன். தன் இலட்சியத்தோடு ஒத்துப்போன தாமினியிடம் மனதைப் பறிகொடுத்தவன். 

இராகவன் நன்கு படித்த, தோற்றச் சிறப்பு மிக்க நவநாகரீக வாலிபன். நல்ல உத்தியோகத்திலிருப்பவன். மேல்தட்டு வாழ்க்கை வாழ்பவன். எனினும் நல்ல குணநலன்கள் வாய்த்திராத சந்தேகப் பேர்வழி. தாமினியை காதலித்து அது நிறைவேறாத பட்சத்தில் அவளைப் போன்ற உருவ ஒற்றுமை படைத்த சீதாவை மண‌முடித்தவன்.   

தாமினி நன்கு படித்த அழகான நவ‌நாகரீக மங்கை. இவள் பிறப்பும், வளர்ப்பும், வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்தது. இராகவனுடன் தன் காதல் ஈடேறாததை பெரிதுபடுத்தாது மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொன்டு தன் வாழ்வை பயனான வாழ்வாக மாற்றிக்கொன்ட மிகச் சிறந்த பெண்மணி. அன்பும், தியாகமும், சேவை மனப்பான்மையும் நிறைந்தவள். இப்புதினத்தில் நம் மனதைத் தொட்ட மிகச் சிறந்த கதாபாத்திரம்.

இந்த புதினத்தைப் படித்து முடித்த பின்னரும் நம் மனதில் நின்று நினைவை நிறைப்பவள் இந்தத் தாமினியே. அழகு, அறிவு ம‌ட்டுமின்றி அன்பும், தியாகமும் ஒரு பெண்ணை எத்தனை உயர்ந்த பெண்ணாய் உலகம் உணரச் செய்யும் என்பதற்கு உதாரணமானவள் தாமினி. இந்த உலகில் இன்னமும் அன்பும், மகிழ்ச்சியும் நிலைகொள்வதற்கு தாமினி போன்ற அற்புத ஜீவன்களே காரணம்.       

இனி அலை ஓசையெனும் மிகப்பெரிய புதினத்தின் மிகச்சிறிய கண்ணோட்டம் காண்போம் வாருங்கள்....

இராகவன், தாமினியை காதலித்து மண‌முடிக்க எண்ணுகிறான், இருப்பினும் அவன் தாயாரின் குறிக்கீட்டால் அவர்களின் திருமணம் தடைபட தாமினி அவனைவிட்டு பிரிந்து சென்று பீஹார் பூகம்பத்தில் சிக்கிய மக்களுக்குத் தொண்டு புரியும் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். தன் எதிர்பார்ப்பு நிறைவேறாது மனவேதனையில் வாடும் இராகவன் பெற்றோரின் வற்புதலுக்கிணங்க லலிதா எனும் பெண்ணை மணமுடிக்க ராஜம்பேட்டைக் கிராமத்திற்கு வருகிறான்.

அவன் பெண்பார்க்க வந்த இடத்தில் மணப்பெண் லலிதாவின் அத்தை மகளாகிய சீதா எனும் அழகிய பெண்ணின் தோற்றம் தன் காதலி தாமினியின் தோற்றத்தை ஒத்திருப்பதைக் கண்டு பிரமித்து அவளையே திருமண‌ம் புரிய முயல்கிறான். சீதாவின் துறு துறுவெனும் செயல்பாடுகளும், கலகலப்பான பேச்சும், அழகிய தோற்றமும் இராகவனின் பெற்றோரையும் கவர லலிதாவை விட்டுவிட்டு சீதாவையே பெண் கேட்கின்றனர்.

பல்வேறு மனஸ்தாபங்களுக்கிடையில் சீதாவின் மாமனும் லலிதாவின் அண்ணனுமாகிய சூரியாவின் ஒத்துழைப்பினால் சீதா இராகவன் திருமணம் நடந்தேறிவிடுகிறது. இத்திருமணத்தை சீதாவின் தந்தை துரைசாமி அய்யர் தடுத்து நிறுத்த முயல்கிறார். எனினும் அவர் எண்ணம் ஈடேறாமல் செய்துவிடுகிறான் சூரியா. இதுவே சீதாவின் வாழ்வில் நிகழும் மிகப்பெரிய விபரீதமாய் பின்னாட்களில் அவள் வாழ்வை சிதைத்துச் சூரையாடுகிறது.

இராகவன் அதிகம் படித்தவன் என்றாலும் குண‌நலன்களில் சிற‌ந்தவனல்ல. திருமணமான பின் சிலகாலம் மனைவியுடன் மனமொன்றி வாழ்ந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானாலும், மீண்டும் தாமினியின் பின்னே தறிகெட்டு ஓடுகிறது அவன் மனம், போதாதற்கு சீதாவையும், சூரியாவையும் இணைத்து சந்தேகித்து சீதாவை சொல்லாலும் செயல்களாலும் துன்புறுத்துகிறான். இதனால் சீதாவின் வாழ்வு அலையில் சிக்கிய ஓடம்போல் அல்லாடுகிறது. அந்நாட்களில் மகாத்மா காந்தியின் புகழ் நாட்டில் வெகுவாய் பரவ காந்தியின் தீவிர பக்தையாய் மாறிவிடுகிறாள் சீதா.
அலை ஓசை க்கான பட முடிவு

தன் கண‌வனின் துர்நடத்தையாலும், ச‌ந்தேக குணத்தாலும் வேதனையடைந்து சீதா தற்கொலையை நாடுகிறாள், இருப்பினும் அதிர்ஸ்டவசமாக சூர்யாவினால் காப்பாற்றப்படுகிறாள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான‌ சூரியாவும் தாமினியும் போலீசாரால் வலைவீசி தேடப்படுகின்றனர், இந்நிலையில் தாமினியிடம் மறுபடியும் இராகவனுக்கு சந்திப்பு ஏற்பட்டதால் இராகவனின் போக்கு மிகவும் மாறிவிடுகிறது. தாமினியோ தனது இலட்சியங்களோடு ஒத்துப் போகும் சூரியாவை மண‌முடிக்கப் போகிறாள் எனும் செய்தியறிந்து குரோதத்துடன் சீதாவை மேன்மேலும் துன்புறுத்துகிறான்,  இதனால் மனமுடைந்த சீதா வாழ்வே வெறுத்து ஒரு கட்டத்தில் தன் மகள் வசந்தியை தன் மாமியாரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு இல்லற வாழ்விலிருந்து விலகிப்போக முயற்சிக்கிறாள். 

மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் இணைந்து சேவையாற்றப் புற‌ப்படுகிறாள் சீதா. ஆனால் தாமினி என நினைத்து தவறுதலாய் சிலரால் கடத்தப்பட்டு மீளும் சீதா மீண்டும் கணவனை நாடாமல் கல்கத்தாவில் வசிக்கும் லலிதாவின் தோழியாகிய சித்ரா அமர்நாத் தம்பதிகளிடம் சேர்ந்து பின்னர் தேவப்பட்டணத்தில் வாழும் லலிதா பட்டாபிராமன் தம்பதியரிடம் அடைக்கலமாகிறாள். அவர்கள் ஊரில் நடைபெறும் நகரசபைத் தேர்தலில் பட்டாபிராமனுக்கு சேர்மேன் பதவி கிடைக்க பொதுச்சேவையில் களமிறங்கிப் பாடுபடுகிறாள். இதனால் அவள் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

பட்டாபிராமன் தேர்தலில் வெற்றியடைகிறான். தனது வெற்றிக்கு பாடுபட்ட சீதாவின் அழகில் மயங்கி அவளிடத்தில் மனதைப் பறிகொடுக்கிறான். அவனின் தவறான நோக்கத்தை அறிந்து வேதனையடைகிறாள் சீதா. எனினும் இவ்விவரம் அறிந்து அதுவரை அவளுக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரியாகவும், தோழியாகவும் விளங்கிய லலிதா மிகவும் கோபமுற்று சீதாவை வீட்டைவிட்டே துரத்திவிடுகிறாள்.

லலிதா, சூரியா உடன்பிறப்புக்களுக்கு சுண்டு(சியாம சுந்தர்) என்றொரு இளைய சகோதரனும் உண்டு, லலிதாவின் வீட்டிலிருந்து வெளியேறும் சீதாவை பின்தொடர்ந்து வந்து அவளின் அழகைப் பலவாறாக‌ப் புகழ்ந்து அவளை சினிமாவில் நடிக்கும்படி ஆசைகாட்டுகிறான் சுண்டு. எனினும் வேதனைகள் தந்த அனுபவப் பாடங்களில் கொஞ்சம் விவரம் புரிந்துகொன்ட சீதா அவன் ஆசையை நிராகரித்து தன் வாழ்க்கை பயண‌த்தைத் தனியே தொடர கல்கத்தாவிற்கு இரயிலேறுகிறாள்.

கல்கத்தாவில் சீதா அமர்நாத் சித்ரா தயவால் மீண்டும் தன் கண‌வனையும், குழந்தையையும் சந்திக்கிறாள் . கடும் காய்ச்சலால் பாதிப்புற்று உயிருக்குப் போராடும் இராகவன் சீதாவின் பணிவிடைகளால் உயிர் பிழைத்துவிடுகிறான். பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிற‌து.  இராகவன் மனம் திருந்தி சீதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொன்டு தொழில் மாற்றலாகி பஞ்சாப்பிற்கு செல்கிறான்.

சில காலம் கழித்து தொழில் விடயமாக அவன் டில்லி சென்றிருந்த‌ சமயத்தில் பஞ்சாப்பில் கலவரம் வெடிக்கின்றது, அண்ணன் தம்பிகளாய் பழகிய இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்க்கின்றனர். இரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தன் குழந்தை வசந்தியுடன் அந்தக் கலவரத்தில் சிக்கிக்கொள்கிறாள் சீதா. அச்சமயம் ஒரு முஸ்லீம் சாகீபு அவளைக் காப்பாற்றுகிறார். அவள் குழந்தை வசந்தியை தாமினி தீவிரமான போராட்டத்திற்குப்பின் காப்பாற்றுகிறாள். அந்த முயற்சியில் அவளின் ஒரு கை துண்டாகிவிடுகிறது. ஒரு கண் சிதைந்து, முகத்தில் நீண்ட வெட்டுக்காயம் ஏற்பட்டு தாமினி குரூபியாகிவிடுகிறாள்.

டில்லியில் இருக்கும் இராகவன் தன் மனைவி சீதாவையும்,  குழந்தை வசந்தியையும் தேடி பஞ்சாப்புக்கு வருகிறான், தன் மனைவியை முஸ்லீம் சாகிபு ஒருவன் காப்பாற்றிக்கொன்டு சென்றுவிட்டான் என்பதை அறிந்து கடும் சினம் கொள்கிறான். தன் அரசாங்கப் பதவியைப் பிரயோகித்து தான் தங்கியிருந்த வீட்டு இராணுவ அதிகாரியின் ஒற்றர்கள் மூலம் ஒரு பெண் இரு ஆண்களுடன் படகிலேறி தப்பிச் செல்லும் செய்தியைக் கேள்விப்பட்டு உண்மையை தீர விசாரிக்காது துப்பாக்கியுடன் அவர்களைத் தேடிவந்து சுடுகிறான், துப்பாக்கிச் சூட்டில் படகில் துளை விழ அதிலிருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் நீரில் விழுவதைக் கண்டு குடும்ப கெளரவத்தைக் காக்கும் தன் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகல்கிறான்.

உண்மையில் அந்த சாகிபு சீதாவின் தந்தையாகிய துரைசாமி அய்யர், தன் மகளைக் காப்பாற்ற மாறுவேடத்தில் வந்தவர், அவர்களுடன் பயணித்த மற்றொரு ஆண் சூரியா. சூரியா சீதாவைக் காப்பாற்றிக் கரைசேர்க்கிறான். அவள் தந்தையும் பிழைத்துக்கொள்கிறார். ஆனால் பின்னாட்களில் சீதா இறந்துவிட்டாள் என்றே சூரியா இராகவனிடம் தெரிவித்துவிடுகிறான். சீதாவை அவள் கண‌வனிடமிருந்து மணவிலக்கு பெறச் செய்து தானே அவளை மண‌முடித்து மகிழ்ச்சியாய் வாழவைக்க வேண்டும் எனும் புரட்சிகரமான சிந்தனையைக் கையிலெடுக்கிறான் சூரியா. இதற்காகத் தன் மனங்கவர்ந்த தாமினியையும் துறக்கத் தயாராகிறான்.

நீரில் விழுந்த அதிர்ச்சியில் சீதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துவிடுகிறது.,  காது கேளாது, வாய் பேச முடியாது அடிக்கடி தளர்ச்சியுற்று மயங்கி அதீத பலவீனத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். அவள் செவிகளில் அலை சை போன்ற பேரிரைச்சல் இடைவிடாது ஒலிக்கிறது, ஆரம்ப காலத்தில் இந்நிலை நோயுற்று மறைந்த அவள் தாய் ராஜம்மாளுக்கும் ஏற்பட்டிருந்திருக்கிறது.

தன் தந்தையின் அரவணைப்பிலும் சூரியாவின் பாதுகாப்பிலும் இருக்கும் சீதா தனது இறுதி ஆசையாக மகாத்மா காந்தியை நேரில் சென்று காண‌ வேண்டும் என விரும்புகிறாள். அச்சமயம் காந்தி சுடப்பட்ட செய்தி நாட்டை உலுக்குகிறது. அவள் அதிக நாள் உயிரோடிருக்கமாட்டாள் எனும் நிதர்சனத்தைப் புரிந்துகொன்ட சூரியா அவள் இறுதி ஆசையை நிறைவேற்ற உண்மையை தெரிவிக்காமலேயே அவளை மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்திற்கு அழைத்துச்செல்கிறான்.

காந்தியை தெய்வமாய் போற்றி வழிபட்டு வந்த சீதா, அவருக்கு நேர்ந்த முடிவறிந்து மிகவும் வேதனையடைகிறாள். தன்னிலை மறந்து கால்போன போக்கில் சூரியாவைப் பிரிந்து நடந்துவிடுகிறாள். அவள் செல்லும் வழியில் அவள் காதில் தீராது ஒலித்துக்கொண்டிருந்த அலைஓசை சப்தம் நின்றுபோய் குணமாகிவிடுகிறது. அவள் காதுகளுக்கு கேட்கும் சக்தியும், வாய் திறந்து பேசும் வலிமையும் மீண்டும் கிடைத்துவிடுகிறது. சீதா மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறாள்.

போகிறபோக்கில் ஏதேச்சையாக இராகவன் வாழ்ந்து வரும் தனது புகுந்த வீட்டையே வந்தடைகிறாள் சீதா. மீண்டும் கணவனுடன் இணைந்து மகிழ்ந்து வாழ்வோம் எனும் பிரயாசையுடன் வீட்டை நெருங்க, தாமினியும், இராகவனும் சந்திப்பதைக் கண்டு அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறாள். தனது குழந்தை வசந்தி தாமினியால் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மன நிம்மதி அடைகிறாள். இராகவன் பர்தா அணிந்து தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் தாமினியிடம் அவள் உணமை நிலையறியாது தன்னை மண‌ந்துகொள்ளும்படி மன்றாடுகிறான்.

இராகவனின் செய்கையால் மீண்டும் மனமுடைந்த சீதா அங்கிருந்து புறப்பட்டு கால் போன போக்கில் நடந்து ஓரிடத்தில் மூர்ச்சையடைந்து வீழ்கிறாள். அவளைக் காப்பாற்றும் அவர்களின் குடும்ப நண்பர் பாமா எனும் பெண்மணி இராகவனுக்கு தகவல் அனுப்புகிறாள். இராகவனும், தாமினியும், சூரியா, குழந்தையுடன் சீதாவை வந்தடைகின்றனர். சீதா தாமினியிடம் இராகவனையும் குழந்தையையும் ஒப்படைத்து உயிர் நீத்துவிடுகிறாள்.

இறுதியில், இராகவன் தாமினியையே மணந்துகொள்கிறான். சூரியா இராகவன் மணக்கவிருப்பதாக இருந்த பாமாவை கரம்பிடிக்கிறான். புதினம் நிறைவை நாடுகிறது.

இப்புதினத்தில் இவையன்றி நம்மை வியப்பில் ஆழ்த்தும் வேறு பல சம்பவங்களும் உண்டு...

* சுதேசி மன்னர் ரஜினிபூர் மகாராஜாவிற்கும் தாமினியின் பிறப்பிற்கும் உள்ள சம்பந்தம்.
* தாமினியை வளர்த்த அவள் பெரியம்மா ரஸியா பேகத்திற்கும் துரைசாமி அய்யருக்கும் உள்ள தொடர்பு.
* சீதா, தாமினி இருவரின் உருவ ஒற்றுமையின் மர்மம்.
* ரஸியா பேகம் மனந‌லம் குன்றிய கொலைக்காரியாக  மாறியதற்கான பிண்ணனி.

அலை ஓசை க்கான பட முடிவுஇணையத்தில் இப்புதினம் நுட்பமான மனத் தருணங்களை சென்றடையும் மொழி வீச்சு எனப் புகழப்பட்டும், உயர்ந்த இலக்கியம் அல்ல என இகழப்பட்டும் இரு வித கருத்துக்களுடன் வலம் வருவதைக் காணமுடிகிறது. மேலும் காந்தியடிகளின் புகழ் பேசும் இப்புதினத்தில் அவரின் பிழைகள் எனவும் சில விடயங்கள் கதாபாத்திரங்களால் அலசி ஆராயப்படுவதை வாசகர்கள் காணலாம். 

இவை யாவற்றையும் இங்கே விள‌க்கிக்கொன்டிருந்தால் இதுவே ஒரு குறு நாவல்போல் ஆகிவிடும் என்ற காரண‌த்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் புதினத்தைப் படித்து முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பித்து விடைபெறுவோம்.

Friday, May 6, 2016

முல்லை (நிறைவு)


அன்றைய தினம் முல்லையால் ஒழுங்காக வேலைசெய்ய‌வே இயலவில்லை, மனதில் ஏதோ இனம்புரியாத குழப்பம் கூடுகட்டி வாட்டியது. பெயருக்கு தன் பங்கு வேலைகளை இழுத்துப்போட்டு  முனைப்பில்லாது ஏனோ தானோவென்று செய்துகொண்டிருந்தாள்.

அச்சமயத்தில் அவளுக்கு அருகாமையில்  "முல்ல, முல்ல" என ஆண் குரல் ஒன்று தன்னை உர‌க்க அழைக்கும் ஓலி கேட்டு கையில் பிடித்திருந்த மண்வெட்டியை ஓரமாய் சாய்த்துவிட்டு சோர்வுடன் நிமிர்ந்தாள். டிராக்டர் ஓட்டும் ராமையா அண்ணன் அவளிடத்தே அரக்கப் பரக்க ஓடிவருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றாள், ஏண்ண ? என்ன விக்ஷ‌யம், இப்படி மூச்சு வாங்க ஓடியாறிங்க ? எனக் கேட்டாள்.  ராமையா அண்ணன், அவளுடன் பணியாற்றும் கருத்த, இரட்டை நாடி சரீரம் கொண்ட நல்ல மனிதர், தலையின் முன்வழுக்கை அவருக்கு அகவை நாற்பதைக் கடந்திருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியது. ஓடிவந்ததில் வியர்த்து விறுவிறுத்து அவரின் முழங்கை வரை மடித்துவிட்ட முழுக்கை சட்டை முக்கால்வாசி வியர்வையால் நனைந்திருந்தது, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு "சேதி தெரியுமா முல்ல, உன் அத்த பையன், பேரென்னா ? ஆங், சங்கரு, அந்தப் பையன் அடிபட்டுட்டானாம் !!!

செய்தி காதில் விழுந்த மாத்திரத்தில், சம்மட்டியால் தன்னை  யாரோ தாக்குவதைப்போல் மனம் முழுதும் வலி பரவியது முல்லைக்கு,  கைகால்கள் சோர்ந்து, உதடுகளும் உலர்ந்து போய்விட்டன. "ஓவென கதறி அழவேண்டும்போல் இருந்தது. கண்கள் இருள‌ மயக்கம் வருவதைப் போலிருந்தது, வெகு சிரமப்பட்டு தன்னையும், சிதறி விழக் காத்திருக்கும் கண்ணீரையும் கட்டுப்படுத்திக்கொன்டாள்,

"ரொம்ப அடியாண்ணே" ? அவள் குரல் அள‌வுக்கு மீறி சன்னமாய் ஒலித்தது, "தெரியலையேம்மா, ஆஸ்பத்திரிக்கி கொண்டுபோயிருக்காங்களாம்," லாரி ஓட்டும் என் மச்சான் ரவிதான் சேதி சொன்னாரு, ஆளைப் பார்க்க முடியலையாம், ஆம்புலன்சுல கொண்டுபோயிட்டாங்களாம். காடி நம்பர வச்சி அடையாள‌ம் கண்டு விசாரிச்சு வந்து சேதி சொன்னாரு,"  மூச்சு விடாமல் சொல்லி மூச்சு வாங்க நிறுத்தினார் ராமையா அண்ணன்.  ராமையா அண்ணன் பேசுவதை நிறுத்தி அவளை ஏறிட்டார். அதுவரை உதட்டைக் கடித்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்தவள் அதற்குமேல் தாங்க இயலாமல் உடைந்து அழுதுகொண்டிருந்தாள், அவள் முகமும், கண்களும் சிவந்து  கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்.

"சரிம்மா, நீ போயி மண்டோர் பாலாகிட்டே சொல்லிட்டு வீட்டுக்குப் போ," கண்ணம்மா பாவம் சின்னப் புள்ள‌ங்கள வச்சிக்கிட்டு தவிச்சிக்கிட்டிருக்கும், அதுக்கு கண்ணு வேற சரியா தெரியாது, கடவுள் ஏந்தான் இப்படி நல்லவங்கள சோதிக்கிறானோ தெரியல," சொல்லிக்கொன்டே ராமையா அண்ணன் அவர் வழியில் சென்றுவிட்டார்.

முல்லையால் நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை, நேற்றுவரை நல்லபடி இருந்தவர், லாரி பயணத்தில் கூட ஒருமுறையும் விபத்தை சந்திக்காத மனிதர், இப்போ இப்படியாகிப்போனதே, மனம் ஓலமிட்டு வருந்தியது. இந்த விபத்திலிருந்து சங்கர் மீண்டு வரவேண்டுமே, இறைவா காப்பாற்று !! , அவரை நல்லபடி மீட்டுக்கொடு !!, கைவிட்டுவிடாதே !!" வானில் பார்வையை பதித்து, விழிகள் அழ, மனதால் தொழுதாள் முல்லை.

மண்டோர் பாலாவிடம் அனுமதி கேட்க அவரைத் தேடி விரைந்தாள்.
மண்டோர் பாலா அவள் தந்தையின் பால்ய சினேகிதர். அவர் பார்த்து வளர்ந்தவள் முல்லை, அவள் குடும்பப் பின்புலமும் அவர் அறிந்த‌துதான். ஆணைப்போல் நடந்துகொள்பவள் முல்லை, தந்தையின் செல்லம் தந்த விளைவு அது. தந்தையுடன் லாரி ஓட்டிய அநுபவத்தில் அடிக்கடி டிரக்டர் ஓட்ட அவரிடத்தில் அனுமதி கேட்டு நிற்பாள். சில சமயங்களில் அனுமதி கொடுத்தாலும், பாதுகாப்பை மனதில் நிறுத்தி பல சமயங்களில் மறுத்துவிடுவார் பாலா. "பார்த்துகிட்டே இருங்க, எங்கப்பாகிட்டே சொல்லி ஒரு நாளைக்கு 10 சக்கர லாரி ஒன்னு வாங்கி இதே ஊரில உங்க கண்ணு முன்னாலேயே ஓட்டிக் காட்டுறேன், அப்பத் தெரியும் இந்த முல்லை யாருன்னு,"  வீராப்பாய் சவால் விடுவாள் முல்லை.

மனதுள்  தோன்றும் நகைப்பை மறைத்தபடி, "எதுக்கு ஒரு நாளைக்கு ? உங்கப்பாவ இப்பவே வாங்கச் சொல்லு, அப்படியே உங்கப்பா அடுக்கடுக்கா வச்சிருக்கிற புஸ்தகத்து மத்தியிலே கட்டுக் கட்டா மறைச்சி வச்சிருக்கிற‌ பணத்திலே முடிஞ்சா என‌க்கும் ரெண்டு கட்டு கெண்டாந்து கொடு, உங்கள‌யெல்லாம் மேய்க்கற இந்தப் பொழப்பை விட்டுட்டு இமயமலைக்கி போயி சந்நியாசி ஆவப்போரேன்" என்பார் பாலா.

அதற்குள் மண்டோர் பாலாவின் சம ஈடு தோழரான சோலைமுத்து அப்புச்சி "உனக்கு எதுக்கு ரெண்டு கட்டு துட்டு ? சன்னியாசியாவ ஒரு முழம் கோவணத் துணி போதுமே ? என நகை வெடியைக் கொளுத்திப் போட அவ்விடமே சிரிப்பால் அதிரும், மண்டோர் வாயில் சுருட்டு புகைய நமுட்டுச் சிரிப்புடன் அவ்விடம் விட்டு அகல்வார். சிரிப்ப‌லை மட்டும்  ஓயாது.  சிரிப்புக்கும் சேட்டைகளுக்கும் அங்கே பஞ்சமேயில்லை. இப்படியாக அங்கே வேலை செய்யும் அனைவரும், உறவு முறை வைத்து அழைத்துக்கொண்டும், நகைச்சுவை பேச்சுக்களை வாரியிறைத்துக்கொண்டும் உற்சாகமாய் பணியாற்றும் களம் அது.

அந்த மகிழ்ச்சியான சூழலுக்கு சற்றும் சம்பந்தமில்லாது  தன்முன் கன்றிச் சிவந்த முகத்துடன் நிற்கும் முல்லையைப் பார்த்தவுடனே விடயம் அவருக்கு புரிந்து போனது. காட்டுத்தீயாய் பரவிய சங்கரின் விபத்துச் செய்தி அவரை மட்டும் விட்டு வைத்திருக்குமா என்ன ? அதிகம் பேசாமல் "போய் வா" என அவளுக்கு விடைகொடுத்து அனுப்பினார். முல்லை தன் பொருட்களையும் எடுக்க மறந்து விடுவிடென ஓட்டமும் நடையுமாய் தன்னை கடந்து விரைவதை பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொன்டே நின்றார். அவளுக்காக அவர் மனம் வருந்தியது

நல்ல பெண்ணாச்சே...!! இவளுக்கா இப்படி ஒரு கதி ? பாலாவின் மனதும் அவளுக்காக கலங்கியது. அவள் கண்ணீர் அவருக்கு சில விடயங்களை புரியவைத்தது.

ஆரம்பத்தில் எல்லோரும்   எண்ணியதைப்போலவே சங்கர் இவளை மணமுடிப்பான் என்றே அவரும் நினைத்திருந்தார், ஆனால் விதி வேறுவிதமாய் வழியமைக்க முல்லை மேல் அவருக்கு பரிதாபமாய் இருந்தது, இன்று அவள் மனமுடைந்து செல்வது பிள்ளையில்லாத அந்தப் பெரியவருக்கு பெரும் வருத்ததைத் தந்தது.

முல்லையின் கால்கள் முன்னோக்கி நடக்க அவள் நினைவலைகளில் காலம் பின்னோக்கி நடக்க ஆரம்பித்தது. ஐந்து வயது சிறுமியாய் தான் அப்பாவின் மடியிலிருந்த ஒரு நாள் மாலையில் தன் வீட்டு வாசலில் தாயின் அரவணைப்பில் குறுகுறுத்தபடி நின்ற இளவயது சங்கர் !!  அவனோடு விளையாடி, சண்டையிட்டு, கோள்சொல்லி, வம்பு வளர்த்து, பொறாமைப்பட்டு, பருவம் வளர உள்ளத்தில் இரகசியமாய் அவன்மேல் ஈர்ப்பு எழக் காரணமான சங்கர் !! பருவ வயதில் அழகாய் துளிர்த்த அரும்பு மீசையுடன் குறும்புடன் வளைய வந்த சங்கர்!! கம்பீரமான ஆண்மகனாய் சொந்தத் தொழிலில் முன்னேறி மதிப்பிற்குறிய மனிதனாய் மாறிய சங்கர் !! மனதுள் அவன்பால் முல்லை வளர்த்த ஆசையை நொறுக்கி வேறொரு அழகான பெண்ணை கரம் பற்றிய சங்கர் !! மனைவியை இழந்து மூன்று இளங்குழந்தைகளுடன் வாடி நின்ற சங்கர் !!. தன்னோடு வாழ நினைத்து, தன்னால் காயப்படுத்தப்பட்ட சங்கர் !! என பலப்பல காட்சிகளாய், சம்பவங்களாய்  அவள் நினைவலைகளில் மீண்டும் மீண்டும் நிறைந்து அவள் கண்களில் நீராய் வழிந்தான் சங்கர். அவன்மேல் அவள்கொன்ட அன்பு எத்தனை வலிமையானது என்பதை அந்தக் கனமான கணங்கள் இதயத்தில் இரண‌ங்களாய் தடம் பதித்து உணர்த்தின.
முல்லையின் கால்கள் தரையில் படவில்லை, நடந்தாளா, ஓடினாளா என்பதும் புரியவில்லை.  அரக்கப் பறக்க வீடு வந்து சேர்ந்தாள். ஆறுமுகம் அவசரமாய் வெளியே கிள‌ம்பிக்கொன்டிருந்தார். வீடு திரும்பிய முல்லை வேகமாய் ஓடிச்சென்று அவள் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

சில காலமாய் முல்லையின் தாய் முல்லையிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தார், அவள் திருமணத்தை முறித்ததால் எழுந்த கோபம், முல்லை மேல் எழுந்த கோபத்தில் அவளை நாலு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது அவருக்கு, என்ன ஓர் ஆண்பிள்ளை போன்ற தான்தோன்றித்தனம் !!. முல்லைமேல் வெறுப்பாய் இருந்தது.   அவள் கண‌வர் அவரைக் கண்டித்து அமைதிபடுத்தி வைத்திருந்தார். கோபமிருந்தாலும் தான் ஈன்று புறம் தந்த தன் மகளல்லவா ? , அவர் மெளனமாய் முல்லையின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டுதான் இருந்தார். வீட்டுக்குள் ஓடி வந்த முல்லை அவசரமாய் தன் அறைக்குள் சென்று தன் துணிமணிகளை ஏறக்கட்டி எங்கோ புற‌ப்பட ஆயத்தம் செய்வதைக் கண்டு குழ‌ம்பியவர், மெல்ல தன் கண‌வரின் காதில் விடயத்தை ஓதினார்.

முல்லையின் தந்தை அவரைச் சாந்தப்படுத்திவிட்டு எதையும் காட்டிக்கொள்ளாமல்"முல்லை ! இங்க வாம்மா" என அழைத்தார்.
 
சிவந்த கண்களுடன் தன் அறை வாசலில் வந்து நின்றாள் முல்லை,  விக்ஷயத்தை கேள்விப்பட்டியாம்மா ? சங்கருக்கு அடிபட்டுடுச்சாம், நான் இப்போ ஆஸ்பத்திரிக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன், நீயும் வர்ரீயாம்மா ? உண‌ர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கேட்டார் அவள் தந்தை. மெல்ல தலையை ஆட்டி தான் வரவில்லை என்பதை உணர்த்தினாள் முல்லை.

"சரி பரவாயில்லை நீ கண்ணம்மா அத்தையைப் போய் பார்த்து ஆறுதல் சொல், நான் போய் விவரமறிந்து வருகிறேன்", அவளை எதுவும் கேட்காமலேயே புறப்பட ஆரம்பித்தார் அவள் தந்தை.

வாசல் வரை புறப்பட்டுவிட்டவரை "அப்பா" !  என அழைத்து நிறுத்தினாள் முல்லை. "ஏன்மா ? ஏதும் வாங்கி வரணுமா" ? அவள் தந்தை கேட்டார்.

"அப்பா, நான் அத்தை வீட்டுக்கே நிரந்தரமாய் போகப் போறேன்", என்றாள் முல்லை. ஆறுமுகம் சட்டென்று நின்று அவளை ஏறிட்டார், அவர் விழிகளில் கொஞ்சம் கோபமும் நிறைய வருத்தங்களும் தொனிக்க "வாழ்க்கையிலே நிறைய நிதானம் தேவையம்மா, நினைச்சபடியெல்லாம் முடிவெடுக்க வாழ்க்கை ஒன்னும் சினிமா இல்ல !, நீயும் சின்னப்பிள்ளை இல்ல !, அவசரமின்றி யோசிக்க வேண்டிய விசயங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என நீ எடுக்கும் முடிவுகள் உன்னை மட்டுமல்ல, உன்னைச் சார்ந்த அனைவரையும் பாதிக்கும் என்பதை மறந்து விடாதே , அமைதியாய் கூறி முடித்தவர். ஏற்கனவே திருமண ஏற்பாட்டை முறித்து அவள் தாயை நோயாளியாக்கிவிட்டதை நினைத்துக்கொன்டார். இன்னும் இவளின் தடாலடி முடிவுகளால் என்ன‌வெல்லாம் நிகழக்கூடுமோ எனும் கேள்விக்குறியுடன் அவள் முகத்தை நோக்கினார்.

அவர் எதிர்பார்த்தபடியே முல்லை "இல்லையப்பா, இது என் இறுதி முடிவு, நான் நிச்சயம் அத்தை வீட்டோடு செல்லப்போகிறேன், இறுதிவரை அத்தைக்கு ஆதரவாகவும், அந்தக் குழந்தைகளுக்கு தாயாகவும் வாழப்போகிறேன் , சங்கர் மாமா மீண்டு வந்தால் அவர் நினைத்ததுபோல் அவரை மணந்துகொள்வேன், அவர் எந்த நிலையில், எப்படி வந்தாலும், அவரை ஏற்று என் வாழ்வை அவருடன் பகிர்ந்துகொள்வேன். அவர் நிலையறிந்த பின் நான் எடுக்கும் முடிவு சுயநலம் சார்ந்ததாகவோ, அனுதாபம் சூழ்ந்ததாகவோ அமையக்கூடும், அதை அவரும் விரும்பமாட்டார். என் கருத்துத் தெரிந்த காலம் முதல் நான் மறைத்து மறைத்து என் மனதுள்ளே அவர்பால் வளர்த்த அன்பால் நான் எடுக்கும் முடிவு இது. அவர் மீண்டு வரவில்லை என்றாலும் வேறொருவருக்கு என் வாழ்வில் இடமில்லை, இது என் மேல் சத்தியம். அதற்குமேல் அவள் எதுவும் பேசவில்லை. தீர்க்கமான பார்வையுடன் அவர் பதிலை எதிர் நோக்கி நின்றாள்.

ஆறுமுகம் அமைதியானார். அதற்கு மேல் அவளைத் தடுத்து ஆவதொன்றுமில்லை என்பதை உண‌ர்ந்து கொண்டார். " நீ அத்தை வீட்டுக்கு கிளம்பும்மா, என்று அவளுக்கு விடைகொடுத்தார், முல்லையின் தாய் நடப்பது அனைத்தையும் மெளனமாய் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பதிலுக்காகவே காத்திருந்தது போல் கண்ணம்மாவின் வீடு நோக்கி சிட்டெனப் பறந்துவிட்டாள் முல்லை.

ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரைக் காண விரைந்தார், "நானும் வரேங்க" என நோயையும் பொருட்படுத்தாது மல்லுக்கட்டிக்கொன்டு அவர் மனைவியும் தங்கள் மருமகனைக் காண உடன் விரைந்தார்.

சங்கர் பிழைத்து அவன் கரங்களால் முல்லையின் கழுத்தில் மங்கள நாண் சூடுவதை காண‌வேண்டும் எனும் வேட்கையுடன், அவன் நலமடைய வேண்டி பிரார்த்தனைகளுடன் தன் கணவரின் கைபற்றி தொடங்கியது அவர் பயணம்.
   
கண்ணம்மா வீட்டில் முல்லை குழந்தைகளுக்கு உண‌வளித்து உறங்கச் செய்துவிட்டு, கலங்கிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த கண்ணம்மாவையும் ஆறுதல் வார்த்தைகளால் ஆசுவாசப்படுத்தினாள். அந்த ஆறுதல் வார்த்தைகள் கண்ணம்மாவைவிட தனக்கே அதிகம் தேவைப்படுவதை அவள் உண‌ர்ந்து வருந்தினாள். வெளியே எதுவும் நடவாதது போல் நடந்துகொண்டாலும், உள்ளம் ஓங்காரமாய் ஓலமிட்டு கலங்குவது ஆர்ப்பரிக்கும் அலையோசையாய் அவள் மனதுள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. நேரமாக ஆக அவள் மனம் ஒரு நிலைகொள்ளாது தவித்தது. மனதுள் ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள் பிரவாகமெடுத்தன.


இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் தந்தை கொண்டு வர‌ப்போகும் செய்திக்காக கண்ணம்மா வீட்டு வாசலில் ஏக்கங்களை விழியிலும் எதிர்பார்ப்புகளை இதயத்திலும் சுமந்தபடி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் முல்லை....

நாட்கள் சில நகர்ந்த பின்னர் விபத்திலிருந்து மீண்ட சங்கர் மருத்துவமனையிலிருந்து முழுமையாய் குண‌மடைந்து வீடு திரும்பினான். எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகமெடுக்க மிகவும் அன்பும், கணிவும் நிறைந்து அவனை எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டாள் முல்லை. சங்கரின் விசனமும் வேதனையும் மறைய அவன் மனதில் முல்லையின்பால் அன்பும் நெகிழ்ச்சியும் நிறைந்தது. காலம் அவர்களின் கனவை நிறைவேற்றி இல்லற வாழ்வில் அவர்களை இனைத்து வைத்தது. அவர்களின் இனிய இல்லற வாழ்விற்கு எனது வாழ்த்துக்களை சமர்ப்பித்து விடைபெறுகிறேன் நீங்களும் சேர்ந்து வாழ்த்துங்கள். விடைபெறுவோம்.நன்றி

  

Tuesday, April 12, 2016

முல்லை 18

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா ?
கேட்கும் பாட்டில் 
ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா ?
நெஞ்சு நனைகின்றதா ?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா ?
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்ப்பேன்
ஓயும் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா....

கவிப்பேரரசு வைரமுத்து


சங்கர் தன் காரை அதிவேகத்தில்  செலுத்திக் கொண்டிருந்தான். தம்மை தாண்டிச் செல்லும் வாகனங்களையும், எதிரே வரும் வாகனங்களையும் சட்டை செய்யாது, தன்னைச் சூழ்ந்த சோகம், கோபம் யாவற்றையும் புறந்தள்ளிவிட்டு விலகி ஓடுவதான‌ பாவனையில் அந்தச் சாலையில் நிலைமறந்து காரை அழுத்தினான். காற்றாய் பறந்தது கார். அவன் கவனம் முழுதும் முல்லையைச் சுற்றியே பற்றிப் படர காரை விட வேகமாய் கடந்த காலம் நாடி விரைந்தது மனது.....

அன்றும் வழக்கம் போல் முல்லை நேரத்தில் வந்துவிட்டாள். நடந்து முடிந்த சம்பவங்கள் தந்த மனக்கசப்பில் அவள் வீட்டிற்கு வந்ததையறிந்தும் அவன் தன் அறையிலேயே புத்தகங்களோடு பழியாய்க் கிடந்தான். அவள் முகத்தைப் பார்க்கவும் வருத்தமாய் இருந்த‌து, தன் செயலால் அவளை அழ வைத்து விட்டோம் எனும் குற்ற உணர்ச்சி மேலோங்கி இருந்த‌து. 

இருந்தாலும் தான் அப்படியென்ன அழுது புலம்பும்படி மிகப்பெரிய தப்பை செய்துவிட்டோம் எனும் ஆண்மைக்கேயுரிய தன்மானமும் கூடவே கோபமும் அவனுள் கிளர்ந்துகொன்டிருந்தது.  தன் கடமைகளை முடித்து புற‌ப்படும் முன் முல்லை அவன் அறை வாசலில் தயங்கியபடியே வந்து நின்றாள்

முல்லை தன் வாசலுக்கு வந்ததை அறிந்த‌தும் படித்துக் கொன்டிருந்த நூலை மேசைமேல் வைத்துவிட்டு, இதயப் படபடப்பை மறைத்துக்கொண்டு அமைதியாய் அவளை ஏறிட்டு நோக்கினான்.  

உள்ள‌த்தில் ஊற்றெடுக்கும் அன்பையும், காதலையும் விவரிக்க வார்த்தைகளின் உதவி தேவையில்லையே. பார்வை ஒன்றே போதுமே. வார்த்தைகளின்றி சோகம் நிறைந்த அவ‌ன் விழிகள் தம்மிடம் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசுவதை உண‌ர்ந்தாள் முல்லை. அந்த‌ விழி வீச்சின் வேகத்தை தாளாமல் தமது பார்வையை தழைத்துக்கொன்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

மாமா, நீங்கள் காவேரியை கல்யாணம் செய்வது நல்லது. அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோக்ஷமாய் குறுக்கிட்டான் சங்கர், "அதைப்பற்றி உனக்கென்ன கவலை" ?  "யாரோ ஒருத்தியைக் நான் கட்டிக்கொள்ள நீ ஏன் என்னை வற்புறுத்தனும்"  ? ஆத்திரத்துடன் வெடித்து சிதறின வார்த்தைகள். 

அமைதி காக்க எவ்வளவோ முயன்றும் தோற்றுப் போனான் சங்கர். அவன் இதயத்தின் வலியும், அவள் புற‌க்கணிப்பின் ஏமாற்றமும் ஒன்றாய் இணைந்து உயிரை அழுத்த, அதன் வேகம் வார்த்தைகளில் சீறிப் பாய்ந்தது.

முல்லை தரையை நோட்டமிட்டவாறு அமைதி காத்தாள், அவளின்  அமைதி சங்கருக்கு இன்னும் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. அவன் நிதானமும் பொறுமையும் சுக்கு நூறாய் நொறுங்கிப் போக ஆத்திரத்தில் அவன் தன்னை மறந்தான். 

"உன் மனசுல நீ என்னதான் நினச்சுட்டிருக்க ? நான் என்ன பொறுக்கியா ? கல்யாணத்துக்கு அலையிற‌னா ? என் குழந்தைகளோடு என் தாய்க்கும் தாயாய் அன்பைக் காட்டும் உன்னை என் வாழ்வோடு இணைத்துக்  கொள்ள எண்ணியது தவறா ? எனக்கு கல்யாணம் வேனும்னா, அதை நீ செய்து வைக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் நீ நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொள், அப்புறம் இந்த பாட்டி வேலையெல்லாம் பார்க்கலாம் ? அனலில் இட்ட கடுகாய் ஆத்திரத்தில் பொறிந்து தள்ளினான் சங்கர்.

இவன் கோபத்தில் தன்னிடம் ஆர்ப்பரிப்பதை முல்லை அமைதியாகவே  கேட்டுக்கொன்டிருந்தாள். அதற்கொரு முக்கியக் காரணம் இருந்தது.  ஆத்திரத்தில் அறிவிழந்து அவனுடன் சண்டையிட்டு பிரிந்தால், பின்னர் திரும்பவும் இந்த வீட்டுக்குள் கால் வைக்க முடியாது. அதன் பின்னர் கண்ணம்மாவையும், குழந்தைகளையும் கவனிக்கும் கடமையையும் அவள் இழக்க நேரிடும், அதில் அவளுக்கு உடன்பாடில்லை.அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாய் நின்றிருந்தாள், ஆனால் உள்ளுக்குள் அவன் ஆத்திரம் கண்டு கவலையுற்றது அவள் மனம். 

தன் மனதிலுள்ளதையெல்லாம் ஆத்திரமாய் கொட்டித் தீர்த்து ஓய்ந்தான் சங்கர். அந்த அறை புயலடித்து ஓய்ந்ததைப்போல் இருந்து . கடுமையைக் குறைத்து மீண்டும் அமைதியான குரலில் கேட்டான் "முல்லை நாம ஏன் கல்யாண‌ம் செஞ்சுக்கக் கூடாது ? என்னை ஏன் வெறுக்கிறாய் ? 

"ஏற்கனவே நான் செய்த பாவத்திற்கே விமோசனமில்லை, இதில திரும்பவும் இன்னொரு பாவம் பண்ணனுமா ? விரக்தியாய் ஒலித்தது அவள் குரல்.

என்னது பாவமா ? நீ என்ன பாவம் பண்ணே ?  சங்கர் குழம்பினான்.

ஆமாம், உங்களுக்கு நான் ரொம்பப் பெரிய பாவம் பண்ணியிருக்கேன், நீங்க மனைவியை இழந்ததற்கும், உங்கள் குழந்தைகள் தாயை இழந்ததற்கும் நான் தான் காரணம், என்னுடைய ஆத்திரம் தான் காரணம். அவள் குரல் உடைந்து அழுதுவிடுவதைப் போலிருந்தது, அவள் கண்களில் தேங்கிய கண்ணீர் அணை உடைத்து சிதறும் நிலையில்...

ச‌ங்கர் தமது கவனத்தை கூர்மையாக்கி அவள் கூறுவதை அவதானிக்கலானான்.

முல்லை கவலை தோய்ந்த குரலில் அந்த கடந்த கால சம்பவத்தின் மறுபக்கத்தை அவனிடம் விவரிக்கத் துவங்கினாள்....

"நீங்க வெளியூர் வேலைக்கு போயிருந்த சமயம், உங்கள் மனைவி சந்திராவுக்கும், அத்தைக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், நான் தலையிட்டேன்".

"நான் மிகவும் மதித்து, நேசிக்கும் அத்தையை, சந்திரா தாக்கியதை நேரில் கண்டதும், என்னால் தாங்க முடியவில்லை, என் கோபம் எல்லை மீறியது".

"சந்திராவை தடுத்து, அவள் கன்னத்தில் அறைந்தேன், நீங்கள் வீடு திரும்பியதும் உங்களிடமும் உண்மையைச் சொல்லி தண்டனை வாங்கித் தருவதாக மிரட்டினேன். .

என் செயலால் சந்திரா உணர்ச்சிவசப்பட்டு பயத்தில் தன்னையே தீவைத்துக் கொளுத்திக்கொன்டு மாய்ந்து போவாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ! 

எல்லாத் தவறுகளும் என் மீதே, நான் செய்த பிழை ஓர் உயிரை பலிவாங்கிவிட்டது. சந்திரா தன் வாழ்வின் கடைசி நொடிகளில் நெருப்பில் துடித்த அந்தக் கொடூரக் காட்சி இன்றுவரை என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அன்று காற்றில் வீசிய‌ அவள் கூந்தலின் கருகிய வாடையும், கரிந்து சிதைந்த அவள் மேனியின் தோற்றமும் இன்றுவரை என் நினைவைவிட்டு அகலவேயில்லை.

"நான் எவ்வளவோ முயற்சித்தும் அவளைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மாய்ந்து போன அவளை நினைத்து நான் வருந்திக் கலங்காத நாளில்லை. அந்த நொடியிலிருந்து இன்றுவரை  குற்ற உணர்வால் என் மனம் என்னைத் தீய்த்துக்கொன்டிருக்கின்றது."  

"நீங்கள் வருந்தி வாடியதும், உங்கள் குழந்தைகள் ஆதரவின்றி நிர்க்கதியானதும் என் ஆத்திரத்தினால்தானே ? உங்களிடமிருந்து உங்கள் மனைவியையும், மூன்று சின்னஞ் சிறிய குழந்தைகளிடமிருந்து அவர்களின் தாயையும் நான் பிரித்துவிட்டேன். உங்கள் இழப்புக்கும் , துயருக்கும் நான்தான் காரணம். என் பாவத்தைப் போக்கிக் கொள்ள‌ நான் எடுத்த முடிவுதான் திருமணம் தவிர்த்து உங்கள் குழந்தைகளை என் குழந்தைகளாய் 
ஒரு குறையுமின்றி வளர்த்துவிட வேண்டும் என்பது....!"

என்னைப் பெண் கேட்டு வந்த என் மாமனிடத்தில் இந்த உண்மையைக் எடுத்துச் சொல்லி என் திருமண‌த்தை நிறுத்தினேன். 

என் தாய் தந்தை தாங்களாகவே இந்த உண்மையையும் என் மனதையும் புரிந்து என் செயலை அனுமதித்தனர்.

இப்பொழுது உங்களை மணந்து கொள்வது சந்திராவைக் கொன்று அவளிடமிருந்து உங்களை அபகரிப்பதைப் போல் என் மனதை வருத்துகிறது, உங்களை மணப்பவள் நிச்சயம் நானாக இருக்க முடியாது, என்னுடைய இறுதிக்காலம் வரை நெருஞ்சி முள்ளாய் எனை வருத்தும் இந்தப் பழியையும் பாவத்தையும் என்னால் சுமக்க முடியாது," முல்லை தன் உள்ளத்தில் அதுவரை ஆழப்பாய்ந்திருந்த அத்தனை வேதனைகளையும் மடை திற‌ந்த வெள்ளமாய்க் கொட்டித்தீர்த்தாள்.

"குழந்தைகளும், கண்ணம்மா அத்தையும்தான் நான் பாவ விமோச‌னம் பெற ஆதாரம் என அவர்களுக்கு பணிசெய்வதை என் கடமையாக எண்ணி வாழ்ந்துகொன்டிருக்கிறேன், இல்லையென்றால் இந்த வேதனை தந்த அழுத்தத்தில் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும், அல்லது என் மனம் தற்கொலையை நாடியிருக்கும். இப்பொழுது நீங்கள் எனக்குப் பிரச்சனை தருகிறீர்கள். இது தொடர்ந்தால் நானும் தீக்கு இரையாவதை நீங்கள் தடுக்க‌ முடியாது". 

அவன் கோபத்தில் கொதித்ததைப்போல் இல்லாமல் அமைதியாகவும், தீர்க்கமாகவும் தனது எண்ணத்தை மிரட்டல் வடிவில் முன் வைத்தாள் முல்லை.

அவள் வாய்மொழியாய் அனைத்தையும் கேட்ட சங்கரிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்ப‌ட்டது.

இந்த விடயம் அவனுக்கு அதிகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை காரணம் உண்மைக‌ள் யாவும் அவன் ஏற்கனவே அறிந்தவைதான். 

ஒரு மழை நாளில் அவன் பெண் மடியில் அமர்ந்துகொன்டு மழலை மொழியில் தன் வீட்டில் நிகழ்ந்த அசம்பாவிததை, தன் தாய் தீக்குளிக்கும் முன் தன் பாட்டியைத் தாக்கியதையும், முல்லையிடம் அடிவாங்கியதையும் விளையாட்டுத் தனமாய் சொல்லிவிட்டிருந்தாள். அதைக் கேட்டு அதிர்ந்த சங்கர் தன் தாயிடத்தில் வற்புறுத்தி விசாரித்து அனைத்து உண்மைகளையும் அறிந்து வைத்திருந்தான். 

சங்கருக்கு எதுவுமே தெரியாது என எண்ணிக்கொண்டு, தனக்குத் தானே குற்ற‌ம் கற்பித்துக் கொள்ளும் முல்லையிடத்தில் தான் என்ன பேசுவது என்பதே தெரியவில்லை சங்கருக்கு.

ஓர் ஆணின் மனதில் ஆசை எழக் காரணமாகி பின்னர் அந்த ஆசை அழிவதற்குக்கும் காரணமாகும் பெண்ணைவிட  பொல்லாத விக்ஷம் வேறெது இருக்க முடியும் உலகில்    ? அப்படிப்பட்ட பெண் இருப்பதைவிட இற‌ப்பதே மேல். வாழ்வே வெறுத்துப்போனது முல்லைக்கு. ஆனால் அவளுக்கென்று சில கடமைகள் இருப்பதை அறிவுறுத்தியது மனது.தன் செயல்பாடுகள் ஒரு நல்லவனின் மனதில் காயம் விளைவித்துவிட்டதே, என எண்ணி வருந்தியது அவள் மனம்.
    
 உண‌ர்ச்சிக்குவியலாய் முல்லை மாறியிருக்கும் இந்தச் சூழ்நிலையில் தான் எதைக் கூறினாலும் எடுபடாது என்பதை உணர்ந்து அமைதியாய் அமர்ந்திருந்தான் சங்கர். விடைபெற்றுச் சென்றாள் முல்லை.

பேரிரைச்சல் கவனத்தைச் ஈர்க்க‌, கடந்த கால நினைவுகளினின்று விடுபட்டு சுயநினைவுக்கு மீண்டவன், தான் செலுத்திக் கொன்டிருக்கும் வாகனம் தன் வழியை விட்டு எதிரே வரும் கனரக வண்டிக்கு மிகமிக அருகாமையில் சென்றுவிட்டதை அறிந்து அதிர்ந்தான். 

வெகுவேகமாய் வண்டியைத் திருப்ப, அவன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அசுரவேகத்தில் அரைவட்டமடித்து சாலை ஓரத்திலிருந்த விளக்குக் கம்பத்தில் பெரும் சத்தத்துடன் மோதிச் சிதைந்தது......

அடுத்த பதிவில் நிறைவை நாடும்....

  
  


    

Monday, April 4, 2016

நூறாவது பதிவு, முல்லை 17

                                                         
என் சுவாசக் காற்று 
வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்....
மலர்கொண்ட பெண்மை 
வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்....
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை  ண்ணே
அதற்காகவா பாடினேன் ?
வரும் எதிர்காலம் 
உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்....
முதலா முடிவா அதை 
உன் கையில் கொடுத்துவிட்டேன்.

கவிப்பேரரசு வைரமுத்துஇப்பொழுதெல்லாம் சங்கரின் கண்களுக்கு முல்லை மிகவும் அழகாகத் தெரிந்தாள். சங்கர் தானே வலியச் சென்று அவளிடம் பேச்சுக்கொடுத்து அவள் கவனத்தை ஈர்க்க முயன்றான்.

நீ சாப்பிட்டாச்சா முல்லை ?

முல்லை இன்னிக்கு என்ன சமையல்  ?

ஏதும் வாங்கி வரனுமா முல்லை ?

தொடர்ந்த அவன் கேள்விகள் முல்லைக்கு மகிழ்ச்சிக்கு பதில் ஆச்சரியத்தையே பரிசாகத் தந்தன. முல்லை ஓரிரு வார்த்தைகளில் அந்தப் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து வந்தாள்.

அதன் பின்னர் ஒரு நாள் கண்ணம்மாவுடன் தனித்திருந்த வேளை முல்லை அவரிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்தாள் ,

"அத்தே, நம்ம பார்வதி சின்னம்மா பொண்ணு காவேரி செவப்பா, மூக்கும் முழியுமா ரொம்ப அழகா இருக்கு,  அப்பா இல்லாத ஏழைக் குடும்பம், படிப்பும் பரவாயில்லே, இப்போ அவளுக்கு மாப்பிள்ளை பார்கிறாங்களாம், சங்கர் மாமாவுக்கு கேட்டுப் பார்க்கலாமா அத்தே" ? கேள்வியைத் தொடுத்த முல்லையின் குரல் அவளுக்கே அன்னியமாகப்பட்டது.

கண்ணம்மா அவள் கேள்வியை அலட்சியம் செய்து, " ஏம்மா, நீயே என் பையனை கட்டிக்கோயேன், அவனுக்கென்ன குறை ? மறுதாரம்னு பார்க்கிறியா ? கேள்வி கேட்டவளை தன் கேள்வியால் மடக்கினார் கண்ணம்மா.

முல்லை அவர் கேள்விக்கு சிரித்து மழுப்பி, பதில் கூறாமல் சமாளித்தாள். தொடர்ந்த நாட்களிள் தன் சின்னம்மா மகள் காவேரியை தன்னுடன் கண்ணம்மா வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

சின்ன வயசு குக்ஷ்பு மாதிரி காவேரி கொழுக் மொழுக்கென்று இருந்தாள், இரட்டை சடை பிண்ணல், அதிலொன்றை முன்னால் விட்டு, தலையில் வாச மல்லி சரம், கண்மை, திலகம் என அசத்தலாக காட்சியளித்தாலும்  கண்ணம்மா வீட்டிலுள்ளோரை முல்லை கவர்ந்தவாறு அவளால் கவர இயலவில்லை.

கண்ணம்மாவும் சங்கரும் ஒன்றும் பேசவில்லை, கண்ணம்மா ஒப்புக்கு ஓரிரு முகமன் வார்த்தைகளுடன் அமைதியாகிவிட்டார், சங்கரிடம் அதுவும் இல்லை, பேசாமல் தன் அறையில் ஐக்கியமாகிவிட்டான். குழந்தைகளும் இவள்தான் சித்தியாக வரப்பார்க்கிறாள் என்று தெரிந்தவுடன், தங்களுக்குள் கிசுகிசுத்து காவேரியிடம் முகத்தைத் திருப்பிக்கொன்டன. எல்லாம் கண்ணம்மாவின் ஏற்பாடு.

காவேரி ! 'சங்கர் மாமாவுக்கு காப்பி கொடு'. சங்கர் மாமாவுக்கு இதைச்செய் அதைச்செய் என ஏவினாள் முல்லை. வசதியானவன் என்ற‌ காரணத்தினால் இவனை மணக்கும் எண்ணத்தில் முல்லை சொன்னபடியெல்லாம் காவேரியும் ஆடினாள்.

"சரிக்கா", "தோ போரேன்க்கா" என முல்லையிடம் பதில் சொல்லி பரபரப்புடன் சங்கரிடம் ஓடினாள். "இந்தாங்க மாமா காப்பி", "சாப்ட வாங்க மாமா" முல்லையின் நோக்கம் புரிந்திருந்ததால் தன்முன் தலை கவிழ்ந்து நானிக்கோனி நிற்கும் காவேரியை சங்கர் நிமிர்ந்து கூட‌ப் பார்க்கவில்லை .

தொடர்ந்த நாட்களில் சங்கரின் அலட்சியத்தால் அலுப்படைந்த காவேரி "போக்கா , அந்தாளு சரியான முசுடு. என்னை பார்க்கக்கூட மாட்டுது, பிள்ளைங்களும் , கண்ணம்மா அத்தையும் கூட என்கிட்டே சரியா பேசமாட்டுறாங்க. "நான் உன்கூட வரலை போ" என காவேரி தன் வழியே போய்விட்டாள்.

அடுத்தடுத்த நாட்களில் தனியாக‌ வீட்டிற்கு வந்த முல்லையிடம் "காவேரி வரலையா முல்லை" என கண்களில் குறும்பு மின்ன அப்பாவியாய் கேட்டான் சங்கர். கடுப்புடன் முல்லை அவனை ஏறிட்டு நோக்க, முகத்தில் தவழ்ந்த கள்ள நகையுடன் அவ்விடம் விலகினான் சங்கர்.

சங்கர் இயற்கையிலேயே குறும்புத்தனம் நிறைந்தவன், தன நகைச்சுவை உண‌ர்வால் எல்லோருக்கும் மகிழ்வூட்டுவதில் வல்லவன், இருப்பினும் இடையில் அவன் வாழ்வில் சூழ்ந்த சோகங்களால் அமைதியாகிப்போனான், இப்போது அதிலிருந்து மீண்டு மகிழ்வான பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தான்.

சங்கருக்கு காவேரியை மணமுடித்து, தான் குழந்தைகளுடனேயே வாழ்ந்துவிடலாம் என மனப்பால் குடித்த முல்லையின் எண்ண‌ம் ஈடேறவேயில்லை.

அன்று இரவு கண்ணம்மா வீட்டில் தன் கடமைகள் அனைத்தும் முடிந்து குழந்தைகளும் கண்ணம்மாவும்,படுக்கப் போன பின்,  தன் வீட்டிற்கு புற‌ப்பட ஆயத்தமானாள்.

இருளும் நீலமும், பஞ்சுப் பொதியல்களாய் ஆங்காங்கே சிதறிக்கிடந்த மேகங்களுமாய், நடுவே மூன்றாம் பிறையுடன் இரவு நிதானமாக நகர்ந்துகொண்டிருக்க கூட‌வே மெல்லிய தென்ற‌ல் இருளின் ஒலிகளை பிரதிபலித்தவாறு புவியை பவனிவந்து கொண்டிருந்தது.

சங்கர் வாசல் முற்றத்தில் அமர்ந்து இரவை வெறித்துக்கொண்டிருந்தான், அவன் மனம் அலைபாய்ந்தது. முல்லையிடம் "சம்மதம் கேள், கேள்" என மனம் நச்சரித்தது. தலையைச்சாய்த்து கண்களை மூடி உள்ளே மனத்திரையில் முல்லையை இருத்தி ஒத்திகை பார்த்தான்.

முல்லை வெளியே வந்தாள் . "வீட்டிற்கு கிளம்பிட்டீயா முல்லை ? கேள்விக்கணை தொடுத்தவாரே அவளை நெருங்கினான் சங்கர்,  "உம்" வார்த்தைகளின்றி ஒலியால் பதில்கூறி முல்லை கிளம்ப‌,  மனதுள் மனனம் செய்தவை யாவும் மறந்துபோக, அவளை நிறுத்த‌ அனிச்சையாய் எட்டி அவள் கையைப் பற்றிக்கொண்டான் சங்கர்.

அவன் பிடியில் ஆயிரம் கோடி மின்சாரம் தன்னுள் பாய்ந்ததைப் போன்று அதிர்ச்சியில் ஆடிப்போனாள் முல்லை. கையை நெறித்து முரட்டுத்தனமாய் அவனிடமிருந்து விலக முயற்சித்தவளை சங்கர் மேலும் தனக்கருகில் இழுத்து தன்னுடன் இணைத்துக்கொன்டான் . இருவருக்கும் இடையே இடைவெளி குறைந்த நிலையில் சங்கரின் பெருமூச்சு உக்ஷ்ணமாய் தன் மேல் படர்வதை உண‌ர்ந்தாள் முல்லை. இருவரைச் சுற்றியும் உலக இயக்கம் ஒரு கணம் நின்று போனது.

எல்லா மனித உயிர்களும் தாம் அன்பு பூண்ட த‌ன்மீது அன்பு கொண்ட‌ பிற‌ரால் நினைக்கப்படுவதையும், நேசிக்கப்படுவதையும் விரும்பியே வாழ்கின்றன. தாயின் அணைப்பில் மெய் மறந்ததைபோல தனக்கு பிரியமானவரிடத்தில் தஞ்சமடைய அன்பு நெஞ்சங்கள் தவிக்கின்றன.

முல்லைக்கு  தன்னைச்சுற்றி நெருப்பு வளையங்கள் பற்றிப் படர்ந்து பிண்ணிப் பிணைந்து அனலாய் தகிப்பதாகவும், எங்கோ தூரம், தூரம், வெகுதூரமென ஆழமான பள்ளத்தாக்கில் அசுர வேகத்தில் அப்படியே அள்ளி தான் வீசப்படுவதாகவும் உண‌ர்ந்தாள்.

ஒரே ஒரு கணம் தன்னை மறந்தவளின் பெண்மை சட்டென்று விழித்துக்கொண்டது. முல்லை ஆவேசத்துடன் சங்கரை உதறி தன்னை விடுவித்துக் கொன்டாள் , ஏமாற்ற‌த்துடன் அவளை ஏறிட்ட சங்கர் அவள் விழியில் வழிந்த கண்ணீரைக் கண்டு வேதனையுற்றான். "மன்னிச்சிடு முல்லை, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" ,

முல்லை பதிலேதும் பேசாமல் அவனை ஏறிட்டும் நோக்காமல்  சட்டென்று புற‌ப்பட்டு,  இருளில் ஓடி மறைந்தாள்  . சங்கர் வருத்ததுடன் தலை கவிழ்ந்தான்.

சங்கரின் அன்றைய இரவு கவலைகளைச் சுமந்து விடியும் வரை விழித்திருந்தது...

முல்லையும், அன்றைய இரவை கண்ணீருக்கு அர்ப்பணித்து தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள்...

இனியும் அமைதி காத்துப் பலனில்லை, மனதில்லுள்ளதை சங்கரிடம்  சொல்லிவிட வேண்டும், எண்ணத்தையும் ஏக்கத்தையும் மனதில் தேக்கி  விடியும் பொழுதை வரவேற்கக் காத்திருந்தன நான்கு விழிகள்......

  தொடரும்....  


   
    

 Tuesday, March 29, 2016

முல்லை 16By the lake
என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும் என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடிஉன் தோளில் சாய ஆசை இல்லை 
நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடிஎன் காதல் சொல்ல நேரம் இல்லை உன் கையில் சேர ஏங்கவில்லை

ந.முத்துக்குமார்


கடந்து செல்லும் காலம் எல்லோர் வாழ்விலும் அநுபவங்களை தடம்பதித்துச் செல்கின்றது. மாறிவரும் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என உருண்டோடி மறைகின்றன‌. நினைவுகள் மட்டுமே நேற்றைய வாழ்வுக்கு ஆதாரமாகின்றன. வாழ்வில் சந்தித்த மனிதர்களில் நினைவில் நிலைப்பவர்கள் வெகு சிலரே, அதில் உறவு, நட்பு, காதல் என இதயதோடு பிணைந்து வாழ்வைப் பகிர்ந்தவர்களுக்கே அதிகம் பங்குண்டு ஏனையோர்  வாழ்க்கைப் பயணத்தில் சில காலம் உடன் பயணித்து பின்னர் தங்கள் வாழ்க்கை வழி பிரிந்து சென்றுவிடும் பிரயாணிகளே. இவர்களுக்கு பெரும்பாலும் வாழ்வில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

சங்கரின் வாழ்க்கைத்துணையாய், மணவாழ்வில் இணைந்து, மூன்று மழலைகளுக்குத் தாயாகி தன் தவறான முடிவால் மரணித்தவள் சந்திரா. அவளின் நினைவுகள் காலைப்பனியாய் கனத்த பொழுதுகளில் சங்கரின் இதயம் நனைத்தாலும், தொடரும் அலுவல்களில் தன்னைத் தொலைத்து அந்த நினைவுகளுக்கு விடைகொடுத்து வந்தது சங்கரின் மனது. தன் தாயிடம் அவள் காட்டிய கொடூரம் மனதை நெருடினாலும், தன் தொழிலே பிரதானம் என குடும்பத்தை விட்டு அடிக்கடி தான் விலகி இருந்தது அதற்கு முக்கியக் காரணம் என்பதை மனம் மறுக்கவில்லை.

ந‌கர்ந்த பொழுதுகளில் வருடங்கள் சில விடைபெற்றிருந்தன.  குழந்தைகள் வள‌ர்ந்து ஆரம்பப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். கண்ணம்மா இன்னும் முதிர்ந்து, தளர்ந்து நாட்களை எண்ணிக்கொன்டிருந்தார். முல்லை வழக்கம்போலவே அவருக்கும் குழந்தைகளுக்குமான சகல தேவைகளையும் நிறைவேற்றி நல்லபடி அவர்களை கவனித்துக்கொண்டாள் . அவள் உறங்கும் நேரம் தவிர ஏனைய பொழுதுகள் கண்ணம்மாவுடனேயே கழிந்தது.

அவளைக் காணும்பொழுது அவள் பால் அன்பும், இரக்கமும் ஒருங்கே சுரந்தது கண்ணம்மாவிற்கு, எத்துனை அழகான வாழ்வை, நல்ல மனிதனை, அருமையான வாழ்க்கைத்துணையை தங்களை பராமரிக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காய் துறந்துவிட்டாள்.  கடந்த சம்பவங்கள் நினைவில் நிழ‌லாடின‌.

முல்லையின் வாழ்வில் அவள் மாமனுடன் நிகழ்ந்த பெண்பார்க்கும் படலம் அவர்களில் சிலரது வாழ்வை முற்றாக மாற்றியமைத்துவிட்டது.

முல்லையின் மாமன் திவாகருக்கு, முல்லையே தன் திருமண நிகழ்வை நிறுத்த அவளாகவே அவதூறு கடிதம் எழுதினாள் என்பதை அறிந்ததும், ஆத்திரம் எழவே செய்தது, இருப்பினும் அமைதி காத்து, அதற்கான காரணத்தை அறிந்துகொன்டான், அவள் தந்த பதிலைக் கேட்டதும் அவன் கோபம் இருந்த இடம் தெரியாது மறைந்தது. தன் கண்களில் துளிர்த்த வேதனையை அவள் அறியாமலிருக்க வேறு பக்கம் பார்ப்பதாய் பாவனை செய்து, அவள் பதிலை ஏற்றுக்கொன்டு அவளிடமிருந்து விடைபெற்றான்.

அழகானவன், கல்வியும், செல்வமும் ஒருங்கே படைத்தவன், யாவற்றையும் விட மனிதர்களை மதித்து அன்பு செலுத்தும் நல்லவன், இத்தனையும் வாய்த்திருந்த திவாகரை மணக்கும் பாக்கியத்தை நழுவவிடுகிறோம் என்பதை முல்லை அறியாமல் இல்லை, இருப்பினும் தன் நோக்கம் பெரிதென அவளுக்குத் தோன்றியதால் மனமுவந்து தான் நினைத்தபடி தன் திருமணத்தை நிறுத்திவிட்டாள். திவாகரை மணக்கப்போகும் பாக்கியசாலியை அவள் மனம் கனிந்து வாழ்த்தினாள்.

திவாகர் மிகவும் சகஜமாக எதுவுமே நடவாதது போல் அனைவரிடமும் விடைபெற்று, பொருள் பொதிந்த பார்வை ஒன்றை முல்லையிடம் வீசி மெளனமாய் விடைபெற்றுக்கொண்டான்.

அடுத்து சில மாதங்களில் முல்லைக்குத் திருமணம் என அக மகிழ்ந்திருந்த முல்லையின் பெற்றோருக்குப் பேரிடியாய் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி ! திவாகர் தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை பெற்றோருக்கும் தெரியாமல் பதிவுத்திருமணம் செய்து கொண்டான். திவாகரின் பெற்றோர் ஆரம்பத்தில் ஆரவாரம் செய்தாலும், தங்களின் ஒரே மகன் என்பதால் ஊரைக்கூட்டி நல்ல முறையில் அவர்களுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர். திவாகரின் தேர்வு சோடை போகவில்லை, வசதி மட்டுமே சற்று குறைவு என்ற‌போதிலும் அழகிலும், பணிவிலும் மிகவும் சிறப்பாய் அமைந்திருந்ததால், தங்கள் மருமகளை அதிகம் பிடித்துப் போனது திவாகரின் பெற்றோர்களுக்கு. முல்லையை இழந்தது பெரிய இழப்பாய் அவர்களுக்குத் தோன்றவில்லை. முல்லை தன் சகோதரியின் மகள் என்பதால் திவாகரின் தந்தை மட்டுமே சற்று வருந்தி தன் தங்கையையும், மைத்துனரையும் சந்தித்து உண்மையை உரைத்து மன்னிப்புக் கோரினார். முல்லையின் தந்தை பெருந்தன்மையுடன் அவரை மன்னித்தபோதிலும் அவள் தாய் தன் வேதனையை கண்ணீராய் வழியவிட்டார்.

அந்த அளவில் கோலாகலமாய் ஆரம்பித்த‌ முல்லையின் திருமண வேலைகள் அத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டன‌. ஊரில் பலர் பலவாறு பேசினர். முல்லையின் தாய் நோயில் வீழ்ந்தார், முல்லையின் தந்தை ஞானியைப்போல் விட்டத்தைப் பார்த்தவாறு வாளாவிருந்தார், முல்லையோ எதுவுமே நடவாதது போல் தன் வெளிக்காட்டு வேலை, அவ்வப்போது மண்டோர் பாலாவின் அனுமதியோடு டிராக்டர் ஓட்டுவது, அதன் பின்னர் கண்ணம்மா, குழந்தைகள் என தன் வாழ்வை இயந்திரமயமாக்கிக்கொண்டாள்.  

கண்ணம்மாவின் தொடர் விண்ணப்பங்களும், முல்லை குழந்தைளை பராமரிக்கும் நேர்த்தியும் சங்கரையும் வெகுவாய் கவர்ந்திருந்ததால், அவனின் கவனம் அவள்பால் சற்றுத் திரும்ப துவங்கியது. முக்கியமாய் அவள் திருமணத்தை தவிர்த்தது அவன் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. அவளுக்கும் தன்மேல் ஈர்ப்பு இருக்குமோவென மனம் கேள்விக் கணைகள் தொடுக்க ஆரம்பித்தது, சங்கரின் தூக்கம் தொலைய ஆரம்பித்தது. தன் முதிர்ந்த தாய், குழந்தைகள் இவற்றோடு முல்லையின் எதிர்காலம் குறித்த சிந்தனைகளும் மீண்டும் திருமணம் வேண்டாம் எனும் சங்கரின் நிலைப்பாட்டைத் தகர்க்க ஆரம்பித்தன. திவாகரைப்போல் வேறு யாரேனும் மீண்டும் முல்லையைக் கவர்ந்து செல்ல படையெடுத்துவிடுவார்களோ எனும் அச்சம் மெல்ல தலை தூக்கலானது.


முல்லைக்குத் தன்மேல் ஈடுபாடு இருக்குமா? சங்கரின் மனம் ஆராய்ந்தது. முல்லையோ காதல்வயப்பட்ட பிற பெண்களைப்போல் தங்கள் மனங்கவர்ந்த ஆண்மகனைக் கண்டவுன் நானிக்கோனி வெட்கப்படுவது, கால் பெருவிரலால் பூமியைக் கீறி கோலமிடுவது, இரகசியமாய் பார்ப்பது, சிரிப்பது போன்ற எந்த செயல்பாடுகளும் இன்றி இளவயதில் சங்கரிடம் எப்படி அச்சமின்றி நடந்து கொன்டாளோ அதைப் போலவே இன்றும் நடந்து வந்தாள். அவளிடத்தில் கண்ட ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் ஆரம்பத்தில் கொன்டிருந்த அதிகம் பேசும் பழக்கத்தை விடுத்து த‌ற்பொழுது அளவாகப் பேச ஆரம்பித்து விட்டாள். இவள் சம்மதத்தை எப்படிப்பெறுவது ? சங்கரின் மனம் அலைபாய ஆரம்பித்தது......

  தொடரும்.....

பி.கு : முல்லையும் சங்கரும் இணைந்தார்களா ? அவர்களின் எதிர்காலம் என்னவானது, அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விடை காண்பதோடு நமது கதாநாயகி முல்லை குறித்த சில செய்திகளுடன். கூடிய விரைவில்  இவர்களுக்கு நாம் விடைகொடுக்கலாம். நன்றி.