.

.
.

Tuesday, October 27, 2015

முல்லை (15)
ஆச்சிக்கு அஞ்சலிசிறந்த நகைச்சுவை நடிப்பாலும், குண‌ச்சித்திர கதாபாத்திரங்களாலும்,  இனிய குரலில் பாடிய பாடல்களாலும் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஆச்சி மனோரமா அவர்கள்.  "கொஞ்சும் குமரி"யில் கதாநாயகியாக நடித்து, தமது திறன்மிகுந்த நடிப்பால் 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை" புரிந்த ஆச்சியின் மறைவு மிகவும் மன‌வேதனையளிக்கின்றது. அன்னாருக்கு நமது கண்ணீர் அஞ்சலி சமர்ப்பணம். 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

நதியாக நீயும் இருந்தாலே நானும்

நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறு நாள் பார்க்கையிலே வனமாய் மாறி விட்டாய்
நாடித்துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

(கவிஞர் பா.விஜய்)


முல்லை வீட்டில் விக்ஷேசம். முல்லையை பெண்பார்க்க வரப்போகிறார்கள். அப்படியே நிச்சயதார்த்தமும் நடப்பதாக முடிவாகியது. அதற்கு முதல் நாளிலிருந்தே முல்லையின் தாய் அஞ்சலையை பதற்றம் பற்றிக்கொண்டது. கருக்கலிலேயே கண‌வரை எழுப்பி மார்க்கெட்டுக்கு வேண்டியதை வாங்கிவர அனுப்பினார்.

குறிப்பிட்ட நாள‌ன்று வாசல் தெளித்து, வண்ணக்கலவைகளால் அழகானதொரு ரங்கோலி கோலத்தை வாசலில் வரைந்தார். வீட்டிற்கே புதுக்கலை பிறந்ததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் மன நிறைவோடு வீட்டினுள் சென்றார். முல்லை இன்னும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு உற‌ங்கிக்கொண்டிருந்தாள், இன்று அவளுக்கு விடுப்பு. அவளை எழுப்பி பிரச்சனை வள‌ர்க்காமல் சமையலறைக்குச் சென்று அன்றைய சமையல் வேலைகளை ஆரம்பித்தார் அவள் அம்மா.

சுத்தமான பசு நெய்யில் பொறிந்த முந்திரி, திராட்சைகளோடு மண‌க்க மண‌க்க கேசரி தயார் செய்து வைத்தார். அதன் பின்னர் வடை, பாயாசத்துடன் சமையல் வேலை ஆரம்பமானது. சமையல் மணம் வீடெங்கும் வலம் வர ஆரம்பித்தது. அஞ்சலை அயராது மும்முரமாய் வேலை செய்தார், அவருக்கு அப்போதிருந்த மகிழ்ச்சியில் 20 வயது குறைந்துவிட்டது போல் உணர்ந்தார்.

சமையலறை அமர்க்களப்பட்டதைப்போலவே வாசலில் ஆறுமுகம் மேற்பார்வையில் கூடாரம் அமைத்து, மேசை, நாற்காலிகள் அடுக்கி தேவை நடக்கும் வீடு என ஊருக்கு உண‌ர்த்தும் வண்ணம் செயல்கள் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தன.

ஒருவர் பின் ஒருவராக, உற‌வுகளும், நட்புகளும் வீட்டை நிறைக்க ஆரம்பித்தனர். முல்லை இந்த ஆரவாரம் எதிலும் அதிகம் அக்கரை காட்டாமல் அமைதியாய் இருந்தாள். அவள் தோழியரில் சிலர் அவளைப் பிடித்து வைத்து கைகளிலும், கால்களிலும் அழகழகாய் மருதாணிக் கோலங்கள் வரைய ஆரம்பித்தனர். முல்லையின் கைககளிலும், கால்களிலும் ஆண்பிள்ளைபோல் சற்றே அடர்ந்திருந்த உரோமங்களைக் காட்டி அவள் தோழியர் அவளை பகடி செய்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். முல்லைக்கு கோபம் பீரிட, அவர்களை உறுத்துப்பார்க்க அதையும் சிரிப்பாக்கி ஆரவாரமாக்கினர் அந்தப் பெண்கள்.

பெண் அலங்காரம் துவங்கியது, சம்கிகள் நிறைந்த பள‌பளப்பான‌ ஊதா நிற சேலை, சிவப்புக் கரையுடன், அதற்கேற்ற சிவப்பு நிற இரவிக்கை அணிவித்து, தலையலங்காரம், முகத்துக்கு முகப்பூச்சு, கண் மை, உதட்டுச் சாயம், நெற்றியில் திலகமிட்டு, நிறைய ஆபரண‌ங்கள் அணிவித்து மணப்பெண் போலவே முல்லையை அலங்கரித்து மகிழ்ந்தனர் அவள் தோழியர். பார்வைக்கு மிகவும் அழகாக காட்சியளித்தாள் முல்லை.

எப்பொழுதும் அமைதி நிறைந்த அந்த வீடு அன்று சிரிப்பொலிகளும், பேச்சுக்குரல்களும் நிறைந்து கலகலப்பாய் காட்சியளித்தது.

பெண்கள் பல வண்ண சேலை, பாவாடை தாவணி அணிந்து வலம் வர  அழகிய வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த நந்தவனம்போல் ஒளியும், ஒலியும் கலந்து உற‌வாட‌  மகிழ்ச்சியில் நிறைந்து மிளிர்ந்தது வீடு.

அன்று பொழுதோடு மழையும் பொழிய ஆரம்பித்தது. சொல்லி வைத்த‌து போல் மாப்பிள்ளை வீட்டார் வந்து இற‌ங்கினர். மாப்பிள்ளையை அனைத்துக் கண்களும் ஆவலோடு தேட ஆரம்பித்தன. செல்வச் செழிப்பு நிறைந்த மாப்பிள்ளை அழகாகவே கட்சியளித்தான். சராசரிக்கும் சற்று உயரமாய், சந்தண நிற‌த்தோடு, நிறைந்த கேசமும், சிரித்த முகமுமாய். அவன் நிறத்திற்கு எடுப்பான கருஞ்சிவப்பு சட்டையும், வெளீர் பாண்ட்டுமாய். கழுத்தில் மெல்லிய செயின், ஒவ்வொரு கையிலும் ஒரு மோதிரம், கண்களை மறைத்த குளிர்ச்சிக்கண்ணாடி சகிதமாய் சூப்பர் எனச் சொல்லத்தக்கவிதத்தில் அனைவர் கவனத்தையும் கவர்ந்தான் மாப்பிள்ளை.

அங்கே கூடியிருந்த பல பெண்களுக்கும்,  மாப்பிள்ளையைக் கண்டவுடன் முல்லையின் மேல் பொறாமையே ஏற்பட்டுவிட்டது. ஆண்பிள்ளைபோல் திரிபவள், அழகாய் உடுத்திக்கொள்ளக்கூட மாட்டாள். ஒப்பனையும் செய்யாதவள், இவளுக்கு வந்த வாழ்க்கையைப் பார் என உள்ளுக்குள் பொருமினர். அது பலரின் கண்களில் ஸ்பக்ஷ்டமாகத் தெரிய ஆரம்பித்து. பொய்யாகவா பாடின‌ர்  "உள்ளத்தின் கதவுகள் கண்களடா "என்று, வார்த்தைகள் உதிர்க்க மறுக்கும் அல்லது மறைக்கும் அன்பு, காதல் போன்ற உண‌ர்வுகளோடு பல சமயங்களில் வெளியே தெரியக் கூடாது என்று மனம் நினைக்கும் கோபம், துவேக்ஷம், பொறாமை போன்ற உண‌ர்வுகளும் கண்வழியே பிறர் கவனத்திற்கு எட்டிவிடுகிறது.

மாப்பிள்ளையின் தந்தையும் முல்லையின் தாய்மாமனுமாகிய வேலு அவளின் தாயை ஒத்த சாயலில் அவரைப்போலவே அமைதியாகக் காட்சியளித்தார். மாப்பிள்ளையின் தாய் மாதவி பணக்காரி என்பதை அடையாளம் காட்டும் விதமாய் எடுப்பாய் சேலையணிந்து, நடமாடும் நகைக்கடைபோல் காட்சியளித்தாள். சீர்வரிசைகள் அணிவகுத்து வந்து நடுக்கூடத்தை நிறைத்தன‌.

பெண்பார்க்கும் படலம் இனிதாய் நிறைவேறியது, தொடர்ந்த விருந்திற்கு நடுவே பெண்ணும், மாப்பிள்ளையும் தனியாய் பேசுவதற்கு நேரமும், இடமும் ஒதுக்கப்பட்டது.

தனிமையில் சந்தித்த முல்லையிடம், கனிவாக பேசினான் மாப்பிள்ளை. அவனுக்கு ஆம், இல்லை என சுருகமான பதில்களை தந்துகொன்டிருந்தாள் முல்லை. பேச்சின் நடுவே சிரிப்பு மாறாமல் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு மடித்த கடிதத்தை வெளியே எடுத்து வைத்தான். பார் முல்லை, உன்னைப் பற்றி எனக்கு அவதூறு கடிதம் வந்திருக்கு, என அதை நம்பாதவனாய் விளையாட்டாய் கூறினாலும், அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான்.

"அதை நான்தான் அனுப்பினேன்" அமைதியாய் முல்லை கூற அதிர்ச்சியுடன் ஆயிரமாயிரம் கேள்விக்கணைகளை கண்களில் தேக்கியவாறு அவளை ஏறிட்டான் அந்த அழகான மாப்பிள்ளை.....!


 
 


Monday, October 12, 2015

முல்லை 14

காதலி அருமை பிரிவில் 
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் 
விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் 
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்......

(கவிப்பேரரசு வைரமுத்து)சராசரி மாந்தர்களின் வாழ்வில் உற‌வும் பிரிவும், வாழ்வில் வரும் வரவு செலவு கணக்கைப்போல, வருவதும் தெரிவதில்லை, போவதும் புரிவதில்லை. பலர் வாழ்க்கைத் துணையைப் பிரிந்த சில காலங்களிலேயே அவர்களை மறந்து இன்னொருவருடன் புதிய வாழ்வை ஆரம்பித்து சகஜ வாழ்வுக்கு திரும்பிவிடுகின்ற‌னர். ஆனால் ஆழமான அன்பும், அழுத்தமான உணர்வுகளும் கொன்ட ஒரு சில இதயங்கள் மட்டும் கடந்ததை மறவாது மனதில் இருத்திக்கொன்டு சோகத்தில் சுகங்கண்டு வாழ் நாட்களை நகர்த்துகின்றன, சங்கரின் நிலை இரண்டாவது.
  
காலங்கள் கடந்த பின்னரும், வானம் நிறைக்கும் மேகத்திரள்களாய் சங்கரின் மனசெங்கும் குவிந்து குவிந்து நிறைந்து, மறைந்தன‌ சந்திராவின் நினைவுகள்.

குழந்தைப்பருவத்தில் தாயின் மறைவும், நடுத்தர‌வயதில் மனைவியின் மறைவும், மனிதனுக்கு மாபெரும் இழப்பு என்பது எத்தனை வல்லமை பொருந்திய வார்த்தைகள்! குழந்தைப்பருவம் விபரம் அறியாதது, ஆனால் வாலிபப் பருவம்? வாழ்வை இனிதாய் துய்த்துக்கொன்டிருக்கும் சமயத்தில் தன் அனுமதியின்றி தன் மகிழ்ச்சியைத் தன்னிடமிருந்து பறித்துக்கொன்டு வேதனையையும், வெறுமையையும் தனக்கு பரிசாகத் தந்த விதியை நொந்தவாறு நகரும் வாழ்க்கை. ஆசை மனைவியின் அகாலமரண‌ம் ஈடு செய்ய முடியாத இழப்பல்லவா? அவள் நினைவு வரும்போதெல்லாம், அவளின் அந்தச் செயலுக்கு காரணம் தேடி கலங்கும் மனது, உண்மையை இன்னும் அவன் அறியவில்லை, அதை அறிந்த முல்லையும், கண்ணம்மாவும் அது குறித்து அவனிடம் மூச்சுக்கூட விடவில்லை. 

பசையுள்ள சங்கரை மணமுடிக்க பல தரப்பிலிருந்தும் வரன்கள் வந்தன. உற‌வுகள், நட்புகள், தெரிந்தவர்கள் என பல வழிகளிலும் வாய்ப்புகள் வந்தபோதும் மென்மையாக அதேவேளை உறுதியாக அவற்றை தவிர்த்து வந்தான் சங்கர். தன்னை அனுகி நட்பு பாராட்ட முயலும் பெண்களிடமும் வேசமிட்டு தன்னை உயர்த்திக்காட்டிக்கொள்ளாமல் நட்புடனேயே அவர்களுக்குத் தன் வாழ்வில் இடமில்லை என்பதை நாசுக்காக உண‌ர்த்தினான்.
எனினும் தனக்கேயுரிய கலகலப்பையும், நகைச்சுவையுண‌ர்வையும் சங்கர் இழந்து பல நாட்களாகிவிட்டிருந்தன‌. யாருடனும் அதிகம் பேசுவதுமில்லை. தேடி வந்து பேசுபவர்களும் மனைவியை இழந்தவன் எனும் பொருள்பட பேசினால் அவர்களை தவிர்ப்பது வழக்கமானது.

சினிமா நடிகன்போல் அழகிய பிரகாசமான முகமும், விளையாட்டு வீரன்போல்  கவர்ச்சியான உடற்கட்டுமாய் வளைய வந்தவன் ஓரிரு வருடங்களில் இன்னும் பத்து வயது கூடியவன்போல் மனம்போலவே முகமும் உடலும் கடினப்பட்டு கரைத்துவெட்டிய முடியுடன், அடர்த்தியான மீசையும்,சிவப்பேறிய விழிகளுமாய், வைரம்போல் திடப்பட்டு காட்சியளித்தான்.

இப்பொழுது உள்ளூரிலேயே வேலையை அமைத்துக்கொன்டான், வருமானத்திற்குப் பஞ்சமேயில்லை. தொழிலைப் பெருக்கி மேலும் சில வாலிபர்களுக்கு தொழிற்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தான். தனக்கான தன் கடமைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் திறமையையும் வள‌ர்த்துவைத்திருந்தான். பெரும்பாலும் இரவிலேயே வீடு திரும்புவான். என்றாவது சற்று சீக்கிரம் வீடு திரும்பி முல்லையை எதிர்கொள்ள நேர்ந்தால் அமைதியான புன்னகை ஒன்றுடன் தன் அறைக்குள் சங்கமமாகிவிடுவான். முல்லை வீட்டில் இல்லாத பொழுதுகளில் அத்திப்பூத்தாற்போல் குழந்தைகளின் அருகாமையில் அவன் பொழுது கழியும். 

இரவு நெடு நேரங்கழித்து திரும்பும் பொழுதுகளில் பக்கத்து அறையில் ஒன்றாய் உற‌ங்கும் தாயையும் குழந்தைகளையும் எட்டிப்பார்த்து, கதவுமடலில் சாய்ந்த நிலையில் அவனுடைய சில நொடிகள் கரையும். பின்னர் தன் அறைக்குத்திரும்பி தன் தனிமை வாழ்க்கையோடு சங்கமமாகிவிடுவான், அவன் அறையின் ஒவ்வொரு சுவரும் சந்திராவின் அழகிய வதனத்தை, ஆங்காங்கே பல வர்ண‌ங்களில் பல தோரனைகளில் கண்ணாடிச் சட்டங்களுக்குள் பிரதிபலித்துக்கொன்டிருந்தன. சிலவற்றில் தனியாக‌வும் மற்றவற்றில் தன் துணையோடும். எத்தனை மகிழ்ச்சி? எத்தனை மலர்ச்சி? அவர்கள் இருவரின் கண்களிலும், புன்னகை சிந்தும் இதழ்களிலும். அவற்றைப் பார்த்துக்கொன்டும், அவள் நினைவுகளைத் தாலாட்டிக்கொன்டும் உற‌க்கம் தழுவும் வரை நகரும் அவன் பின்னிரவுகள்.

அன்று வானம் இருண்டு அடர்மழை பொழிந்துகொன்டிருந்தது. அதிசயமாய் சங்கர் பொழுதுடன் வீடு திரும்பியிருந்தான். கூடத்தில் விளையாடிக்கொன்டிருந்த குழந்தைகளுக்கு வாங்கி வந்த இனிப்பை  கொடுத்துவிட்டு கூடவே புன்னகையுடன் அவர்களின் தலையை ஆதூரத்துடன் வருடி, அம்மாவிடம் உபசரணையாக ஓரிரு வார்த்தைகள் பேசினான், தாயின் குரலில் சுரத்தில்லை, அவர் தந்த பதிலுடன் அமைதியாய் தன் அறைக்குள் அடைக்கலமானான். உடைமாற்றி கட்டிலில் சரிந்தான்.

நகர்ந்த நொடிகளில் இலேசாய் தலைவலி தோன்றுவதாய் உண‌ர்ந்தவன், அரைக்கால் சட்டையுடன், மேல் சட்டை அணியாது சமையலறைக்குச் சென்றான். சமையலறை சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளித்தது ,  தனக்காக ஒரு கோப்பை காப்பி தயாரித்துக்கொன்டு வீட்டுக்கு வெளியிலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொன்டான். 

கண்முன்னே பாரதி "வைர வைக்கோல்" எனப்பாடிய மாமழை தொடர்ந்து பொழிந்துகொன்டிருந்தது, வானுக்கும் பூமிக்கும் கோடு கிழித்தாற்போல்  சரம்சரமாய் அணிவகுத்து வழிந்தன அழகுற கோர்த்த நீர்முத்து மாலைகள், இயற்கைத்தாய் தன் மனதுக்கினியவனுக்கு தொடுத்து மகிழும் நீர்நிறை மாலைகள். வானம் ஆணாகவும், பூமி பெண்ணாகவும் மாறி நீரின் துணைகொன்டு சங்கமிக்கும் வேளை, இயற்கையின் அபூர்வங்களில் நிச்சயமாய் மழையும் ஒன்றுதான். உயிர்பெற்று உவகையுடன் உருண்டோடும் உற்சாக நீர்த்திவலைகள், காணும் கண்களின் கவனம் கவர்ந்து, உடல் தழுவி உள்ளம் நனைக்கும் மழையும் கூட அதிசயம்தான்.

இயற்கையை இரசிக்கத்தெரிந்த உயிர்களுக்கு வாழ்க்கையும் ஒரு காட்சிப்பொருள்தான், வாழ்க்கையை மட்டுமே நினைக்கத்தெரிந்த உயிர்களுக்கு ஒவ்வொரு பொழுதும் பாரம்தான். இலேசான இனிப்பும் கசப்பும் கலந்து இளஞ்சூடாய் தொண்டையில் இறங்கி உடலை சிலிர்க்க வைத்தது காப்பி. இன்று முல்லை வீட்டிற்கு வரவில்லை, ஆனால் அவள் வீட்டிலிருந்து கண்ணம்மாவுக்கும், குழந்தைகளுக்கும்  உண‌வு அனுப்பியிருந்தாள். 

அவள் வீட்டில் இன்று விக்ஷேசம், அவளை பெண்பார்க்க வரப்போகிறார்கள். இதை நேற்று இரவு வரை விழித்திருந்து சங்கரிடத்தில் சொன்னார் அவன் தாய், அந்தச்செய்தியை சாதாரணமாய் உள்வாங்கிக் கொன்டவன், "அம்மா நீங்களும், குழந்தைகளும் முல்லையின் நிச்சயத்திற்கு போகப்போறீங்களா" என சகஜமாக விசாரித்தான், இவனிடத்தில் தான் எதிர்பார்த்த சலனமோ, சஞ்சலமோ ஏன் ஒரு சிறு மாற்றமும் காணாத‌தால் ஏமாற்றமுற்ற கண்ணம்மா "இல்லேப்பா, அது சரிப்படாது" என தனக்குள் முனகியவாரே தன் அறைக்குத் திரும்பினார். சங்கர் அறியாமல் தன் கண்களை நிறைத்த சூடான நீரை விரல் நுணியால் சுண்டி விட்டார். சங்கர் அதை கவனிக்காமலில்லை.   

தன் அன்பாலும் கனிவான‌ அனுசரனையாலும் கண்ணம்மா மனதில் நீக்கமற‌ நிறைந்துவிட்டாள் முல்லை, அவளைப்பிரிய அவருக்கு மனமே வரவில்லை. அவர் சுயந‌லமி இல்லை, இருப்பினும் அவருக்கு மிகவும் வேதனையாக‌ இருந்த‌து, முல்லை திருமணமாகி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடப்போகிறாள் எனும் நிஜம் அவர் நினைவைச்சுட்டது. இந்த முல்லை தன் வீட்டிற்கே வந்துவிட்டால் எத்தனை நன்றாய் இருக்கும்? ஆனால் சங்கரின் தனிமை வாழ்க்கை அதை அனுமதிப்பதாய் அவருக்குத் தோன்றவில்லை. முல்லையும் வாழவேண்டிய பெண் அவளும் ஒருவ‌னை மண‌ந்து குழந்தை குடும்பம் என மகிழ்ச்சியடைய வேண்டுமல்லவா? அதற்குத் தான் குறுக்கே நிற்கலாகாது. தானும் குழந்தைகளும் இனி மீண்டும் அநாதைகளாகப்போகிறோம் எனும் நினைவே அவருக்கு கசந்தது. முல்லையின் அன்பையும், அரவணைப்பையும் ஈடு செய்ய ஒருவராலும் முடியாது, குழந்தைகளுக்கு மாற்றாந்தாய் வந்தாள் நிலைமாறுமோ?, அல்லது ஒரு வேலைகாரி வருவாளோ?, கண்ணம்மா எண்னச் சுழல்களில் சிக்கித் தவித்தார்.  

தாயை நினைக்கையில் வருத்தமாக இருந்தது சங்கருக்கு, குழந்தைகளுக்கும் தாயென்னும் பிடிமானம் அவசியமே, அதற்காக, முல்லையை தான் அவசியம் மணந்து கொள்ளத்தான் வேண்டுமா ?  முல்லை நல்லப்பெண், அவளுக்கு நல்ல மணவாழ்வு அமையட்டும், பிறகு நமது குடும்பத்தின் நிலையை சரிப்படுத்திக்கொள்ளலாம் என அமைதி காத்துவந்தான்.

மழைச்சாரல் உடல் நனைக்க, நினைவுச்சாரல் மனதை நனைக்க வெளியே அமர்ந்திருந்தான் சங்கர், அப்போது அவன் மூத்த மகள் கனிமொழி ஏதோ ஒரு பிராதுடன் அவனை நெருங்கி வந்தாள். "வாம்மா" என அழைத்து வாஞ்சையுடன் அவளை மடியில் இருத்திக்கொன்டு அவளின் சிவந்த தாமரைமொட்டு விரல்களை அன்புடன் வருடியவாறு அவள் சொல்வதைக்கேட்க ஆரம்பித்தான்.

கனிமொழிக்கு ஆறு வயதிருக்கும், சின்ன முகம், பெரிய கண்கள்,
பொம்மை ஒன்று உயிர்பெற்று நடப்பதுபோல், அவள் அத்தனை அழகு. சங்கரின் அதீத பாசத்திற்கு உரிய அவன் மூத்த பெண்குழந்தை. தன் தம்பி தங்கைமேல் ஏதோ புகார் கொடுக்க வந்தவளை அன்போடு அள்ளி மடியில் அமர வைத்துக்கொன்டான். தந்தையருக்கு எப்பொழுதுமே பெண்குழந்தைகளின் மேல் அதீத் பாசம் அமைவது உண்மைதான், பலர் தன் பெண்குழந்தை வடிவில் தன் தாயை பார்ப்பதனாலோ என்னவோ "அம்மா" என தன் பெண்ணை அழைத்து அவளுக்கு தாங்கள் குழந்தைகளாகிப்போகின்ற‌னர். இது ஆண்குழந்தைகளுக்கும் அவர்களை "அப்பா" என அழைத்து உருகும் அம்மாக்களுக்கும் பொருந்தும்.

குழந்தைகளுக்கு மட்டும் எப்பொழுதுமே கருத்து புரியும் வரையில் தங்கள் பெற்றோர்  பொம்மைகள்தான், கொஞ்சம் வளர்ந்து ஆளானதும் பெற்றோர் குழந்தைகள் கண்களுக்கு தான் உலகில் காண‌ப்போகும் அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன்னோடிகளாகிவிடுகின்றனர். அதே பெற்றோர் முதிர்ந்த நிலையில் தங்கள் குழந்தைகளின் தயவை எதிர்நோக்குங்கால் அவர்களுக்கு வளர்ந்த குழந்தைகளாகிவிடுகின்றனர். இது வாழ்க்கைச் சக்கரம், எழுதாத இயற்கையின் சட்டம்.

தன் மடியில் அமர்ந்த குழந்தையின் விரல்களை பற்றி அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்தான் சங்கர்.ஏதேதோ பேசிக்கொண்டுவந்த குழந்தை பேச்சினூடே விளையாட்டுத்தனமாய் சொன்ன ஒரு செய்தி கேட்டு தீயை மிதித்தவன்போல் திடுக்கிட்டுப்போனான் சங்கர். அவள் சொல்வதை கவனமாக கேட்க ஆரம்பித்தான்........     

தொடரும்....