.

.
.

Friday, September 18, 2015

முல்லை 13

நடக்கும் என்பார் நடக்காது, 
நடக்காதென்பார் நடந்துவிடும், 
கிடைக்கும் என்பார் கிடைக்காது, 
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்... (கவியரசு கண்ணதாசன்)


முல்லை சங்கர் சந்திராவின் குழந்தைகளை மிகவும் நேசித்தாள், குழந்தைகளும்தான். கண்ணம்மா குழந்தைகளை முல்லையை அம்மாவென அழைக்கும்படி தூண்டிவிட்டிருந்தார், முல்லை அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. 

அந்த வீட்டில் மூத்த பெண் அதிகம் பேசும் அழகான கனிமொழி, இரண்டாமவள் கண்ணம்மாவை தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் உரித்து வைத்திருந்த மணிமொழி, மூன்றாமவன் ஒன்றரை வயதான இலக்கியன், தன் தாயைப்போலவே வெண்மையும், பெரிய விழிகளும். ஆலக்கரை சங்கு போல அழ ஆரம்பித்தால் இலேசில் ஓயாத ரோசக்காரன், ஏதேனும் அதட்டிப் பேசினால் உதடு பிதுங்கி, கண்கள் மாலை மாலையாய் நீர் சொரிய ஒரு பெரிய கலவரத்தையே உண்டுபண்ணும் வல்லவன். முல்லையைக் கண்டால் தாவிக்கொன்டு பாய்வான், அவள் கழுத்தைக் கட்டிக்கொன்டு தன் ஒற்றைப் பல் வாயால் முத்தம் வைத்து எச்சில் படுத்துவான். அந்தக் குழந்தைகளின் வள‌ர்ப்பு முல்லையின் பொருப்பாகிப் போனது.

குழந்தை வளர்ப்பு என்பது ஓர் அரிய கலை, பல பெற்றோர் தாங்கள் பெற்ற குழந்தைக்கு உண‌வு, உடை, உறைவிடம் அளித்துப் பராமரிப்பதும், கல்வி பயிலச் செய்வதும், அவர்களின் இன்ன பிற‌ தேவைகளை நிறைவு செய்வதும்தான் குழந்தை வளர்ப்பு என நினைகின்ற‌னர். இது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும், முழுமையல்ல ! 

இன்றைய போராட்டம் மிகுந்த உலகில் வல்லவரே வாழ்பவர், பெற்றோரின் முழுமுதற்கடன் தங்களின் குழந்தையை நாளைய உலகில் நல்லவனாகவும் வல்லவனாகவும் வலம் வரும் வகையில் வாழத் த‌யார்படுத்துவதுதான் ! 

அதற்கான தேவை கல்வியறிவுடன் கூடிய நற்போதனைகள், வழிகாட்டுதல்கள், சமய அறிவு, தன் கடமைகளை தானே நிறைவேற்றிகொள்ளும் சுய அறிவு, நல்லவை கெட்டவையை பகுத்தாய்ந்து ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிவு, மனிதாபிமானம், அன்பு, கருணை, வீரம், விவேகம் ஆகியனவுமாகும். 

இதைப் பெற்றோரே குழந்தைகளுக்கு போதிப்பது சிற‌ப்பாகும், இதை நன்கு மனதில் கொன்டு செயல்பட்டாள் முல்லை. குழந்தைகளை அதிகள‌வு பாசத்தோடு கூடவே கண்டிப்பும் போதனைகளும் கொன்டு நல்ல வழியில் நடத்திக்கொன்டுவந்தாள். இதைக் கண்ட கண்ணம்மாவுக்கு, காலையில் எழுந்து அழும் குழந்தைகளுக்கு தொலைக்காட்சியை திற‌ந்துவிட்டு கார்ட்டூன் நிகழ்ச்சிகளால் அமைதிப்படுத்தும் சந்திராவின் நினைவு வந்தது. இப்போது அதுவெல்லாம் கிடையாது. அவர்களுக்கு எல்லாம் முறையாக நடந்தன நல்ல சாப்பாடு, முல்லையா இப்படி சமைக்கிறாள் ? என சங்கரே ஒரு முறை வியந்தான். அந்தளவுக்கு அருமையான சமையல், அளவான உப்பு, குறைந்த உறைப்பு என நிறைய காய்கறிகளை தயிர் அல்லது தேங்காய் சேர்த்து  சமைத்து அருமையாய் குழந்தைகளுக்கு புகட்டிவிட்டாள். எழும்பு நீக்கிய கறியும், முள் நீக்கிய மீனும் பக்குவமாய் சமைத்து பறிமாறினாள். தனக்கு எட்டிய ஆத்திச்சூடியும், எண்ணும், எழுத்துக்களும் கற்றுக்கொடுத்தாள்.

பெரியவளான கனிமொழி, நல்ல சூட்டிகை, கற்பூரப் புத்தி, தான் வீட்டில் இல்லாத சமயங்களில் பாட்டிக்கும், தம்பி, தங்கைக்கும் உதவும் வகைகளை அவளுக்கு போதித்து வைத்திருந்தாள் முல்லை.
  
இவர்கள் மூவரும், தங்கள் தாய் தவறியபின், தந்தையாலும் அதிகம் அக்கரை காட்டப்படவில்லை, அந்தப்பொறுப்பு முழுதையும் தன் தலைமேல் போட்டுக்கொன்டு செயல்பட்டாள் முல்லை, குழந்தைகளை பராமரிப்பதிலும், அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவள் எந்த அயர்வையும் காட்டியதில்லை.

நேற்றுவரை ஆணைப்போல் உடை தரித்து வேலைக்குப் போய் வருவதும், வீட்டில் ஒரு துரும்பையும் எடுத்துப் போடாமல், அம்மா சமையலை சாப்பிட்டு ஏப்பம் விட்டுத் திரியும் முல்லையா இது ? அவள் நடவடிக்கைகளை நம்புவது பலருக்கும் கக்ஷ்டமாகவே இருந்ததது, அவள் அம்மா அப்பா உட்பட அனைவருக்குமே அதிர்ச்சியும் வியப்பும், ஊரார் நடப்பதை மூக்கின்மேல் விரல்வைத்து அதிசயித்தனர். பலருக்கும் பலவித சந்தேகம். ஆனால் முல்லையிடம் கேட்கத்தான் பயம், பெரியவர்களாயிருந்தாலும் வெடுக்கென்று எதையாவது சொல்லி விடுவாள்.  சமஈடாகவோ அல்லது இளையோராகவோ அமைந்துவிட்டால் கையையும் நீட்டி விடுவாள் என்ற‌ பயம் பலருக்கும். இருந்தாலும் நாசுக்காக சிலர் முல்லையின் தாயார் அஞ்சலையின் காதில் விழும் வண்ணம் முல்லையையும் சங்கரையும் இணைத்து சற்று வக்கிரமாகப் பேசி தங்கள் மன அரிப்பைத் தீர்த்துக்கொன்டனர்.

முல்லையின் தாய் அஞ்சலை பாவம், வாயில்லாப் பூச்சி, அவர் உலகம் கண‌வனும் முல்லையும்தான். சங்கரையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆண் குழந்தை அவருக்கு இல்லையல்லவா, அதனாலும் இருக்கலாம். அவன் முல்லையை மணப்பான் என மனப்பால் குடித்தார், அது நடக்கவே இல்லை என்றதும் ரொம்பவே நொந்து போனார். கண்ணம்மாவின் மேல் அவருக்கு  மதிப்பும் மரியாதையும் உண்டு. அதனாலேயெ முல்லையின் செயல்களை அவர் அனுமதித்தார். எனினும் முல்லை மனைவியை இழந்த பணக்கார சங்கரை வளைத்துப்போடத்தான் இப்படி பாடுபடுகிறாள் என அவர் காதில் விழும் வண்ணம் பிறர் பேசியது அவர் மனதில் நெருப்பைக் கொட்டியது போல் சுட்டது. 

பரோபகாரியான அவர் கண‌வர், நல்ல மனிதர், நாலுந்தெரிந்தவர், நல்ல நூல்களைப் படித்து, பிற‌ருக்கு அதிலுள்ள‌ கருத்துக்களை பகிரும் அறிவாளி, தன் மகளை ஆணைப்போல் வளர்த்தவர், லாரியில் பயணிக்கவும், சில சமயம் லாரிகளில் பயணிக்கையில் அவளுக்கு அதை இயக்கவும் கற்றுக்கொடுத்தவர். அதனாலேயே முல்லை இன்று வெளிக்காட்டு வேலையில் அவ்வப்போது பொதுவாக ஆண்களே அதிக்கம் செலுத்தி இயக்கும் டிராக்டரையும் இயக்கி பிறரை மிரள வைக்கிறாள். முல்லைக்கு நல்லது கெட்டது சொல்வதில் தன்னை முந்தி நிற்பவர். தற்போதைய அவள் செயல்களின் சாதக பாதகங்களை எவ்விதம் அறியாது போனார் ? அஞ்சலைக்கு அயர்வாகவும் கூடவே ஆத்திரமாகவும் இருந்தது. 

அஞ்சலை தான் கேட்டு வேதனையுற்ற அவதூறுகளை கலங்கியவண்ண‌ம் மெல்ல அவர் கனவர் காதில்  போட்டு வைத்தார். அவர் அதைக்கேட்டு மெளனமாய் அமர்ந்திருப்பதைக் கண்டு தன் மனதிலுள்ளதைச் சொல்ல ஆரம்பித்தார். தன் அண்ணன் பையன் வேலு, பக்கத்து ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் குடும்பம், ஒரே வாரிசு, ஏகப்பட்ட சொத்து. அவனை முல்லைக்கு முடித்துவிட்டால், உறவும் சொத்தும் விட்டுப்போகாது எனும் எண்ணம் அஞ்சலையின் அண்ணனுக்கு. 

அவனுக்கு குடிப்பழக்கம் இருக்கே ?  என இழுத்தார் ஆறுமுகம், ஆமாம் ஊரில் பத்திலே ஏழு ஆண்கள் குடிப்பவர்கள் தான், அவர்களெல்லாம் குடும்பத்தை காப்பாற்ற‌வில்லையா ? அஞ்சலை இதுவரை ஆறுமுகத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசியதில்லை, மகளின் வாழ்வை முன்னிட்டு இன்று தன்னையே எதிர்த்துப் பேசுவதைக் கண்டு ஆறுமுகம் துனுக்குற்றார். மனைவியின் ஆதங்கம் புரியவே, சரி மேற்கொன்டு பேசலாம் என பச்சைக்கொடி காட்டினார். அஞ்சலைக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஊரார் வீட்டு விக்ஷேசங்களை எல்லாம் பார்த்து ஏங்கியவருக்கு தன் வீட்டில் நடக்கப்போகும் விக்ஷேசம் மிக மகிழ்வை மனதில் உண்டு பண்ணியது.

முல்லை வீடு திரும்பி தன் தேவைகள் முடித்து கண்ணம்மா வீட்டிற்கு புற‌ப்பட எத்தனித்த சமயத்தில் வீட்டு வாசலில் கொன்றை மர நிழலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அவள் தந்தை அவளை அழைத்தார். நெற்றியைச் சுருக்கியபடி முல்லை அவரை நெருங்கி நின்றாள், உட்காரம்மா என தனக்கு பக்கத்தில் சுட்டிக் காட்டியதும் ஏதோ முக்கியச் சமாச்சாரம் என்பது முல்லைக்கு விள‌ங்கியது. மெல்ல அமர்ந்து அவர் முகத்தைப் ஏறிட்டாள், வழக்கத்துக்கு மாறாய் அந்த முகம் கனிவு நீங்கி கண்டிப்புடன் காட்சியளிப்பதைக் கண்டு அமைதியாய் சொல்வதைக் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். 

பக்கத்து டவுனில் மளிகைக்கடை வைத்திருக்கிறாரே உன் மாமா வேலு, அவர் மகன் திவாகருக்கு உன்னை பெண் கேட்க வரப்போராங்கம்மா, என்றார் அவள் தந்தை. ஆறுமுகம் தெளிவான மனிதர் எதையும் சுற்றி வளைத்துப்பேசாமல் நேரடியாகவே பேசுபவர். முல்லை வியப்புடன் ஏம்பா? அவர்கள் நம்மைவிட பணக்காரங்க ஆச்சே எப்படி சரிப்படும் ? வார்த்தைகளை மென்று விழுங்கினாள். அதுவரை கதவின் ஓரமாய் நின்றிருந்த அவள் அன்னை, அதெல்லாம் சீர்செனத்தி ஒன்னும் பெரிசா தேவையில்லையாம், முடிஞ்சதைச் செஞ்சா போதுமாம் "தங்கச் சிலையாட்டம் இருக்கா முல்ல, அவ என் மாட்டுபொன்னா வந்தாப் போதும்னு என் அண்ணனும் அண்ணியும் சொல்றாங்க, தன் பங்குக்கு சொல்லி வைத்தார் அஞ்சலை. ஓ அப்படியா சரிப்பா, மெதுவாகக் கூறிவிட்டு கிளம்பினாள் முல்லை, ஆறுமுகமும், அஞ்சலையும் தங்கள் வீட்டில் நிகழப்போகும் பெண்பார்க்கும் படலத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். இதன் முடிவை விதி வேறு விதமாய் யோசித்து வைத்திருக்கிற‌து என்பதை உண‌ராமல்.....!