.

.
.

Tuesday, August 4, 2015

முல்லை (12)

வந்தது தெரியும் போவது எங்கே ?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது ?
                                                                         (கண்ணதாசன்)


சந்திராவின் மறைவு நிகழ்ந்து சில திங்கள் கடந்துவிட்டன. அவள் குடும்பம் தவிர்த்த ஏனையோர் நினைவிலிருந்தும் அவள‌ மறைந்து போனாள். உலகம் அவளை மறந்து போனது. வி(க)ரைந்தோடும் காலம் யாருக்காக‌வும் எதற்காகவும் கைகட்டி நிற்பதில்லை, பகல், இரவு என மாறி மாறி இல்லாத எல்லை நோக்கிப் பயணித்துக்கொன்டிருக்கிறது, கூடவே மனித வாழ்வும்...

இந்த‌ வாழ்க்கையில் பயணிகளாக நாம்.... இப்பயணத்தில் பலரை சந்திப்பதும், சிலரை சிந்திப்பதும் தவிர்க்கவியலா நிகழ்வுகள், அந்தச் சிலரிலும் வெகு சிலரே உற‌வுகள் எனவும் நட்புகள் எனவும் இறுதிவரை நம் வாழ்வில் உடன் பயணிப்பவர். ஏனையோர் அவரவர் எல்லை வந்ததும் விடைபெற்று பிரிந்துவிடுவர்.

உறவு பிரிந்து போனால், "நல்லது, இந்த வாழ்க்கையில் இதுவரை உடன் பயணித்ததற்கு நன்றி, இனி நம் பாதைகளும் பயணங்களும் வெவ்வேறு திசையில்.. எனவே ,
நலத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துக்கள் என விடைகொடுத்து அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் உயிர்பிரிந்து போனால்..... ?

"உன் ஆன்மா இயற்கையுடன் சங்கமிக்கட்டும்" என வேண்டி விடைகொடுப்பதைக்காட்டிலும் வேறென்ன செய்ய இயலும் ?

சங்கரின் நிலையும் அவ்வாறே ஆனது, சோர்வும் சோகமும் அவனை ஆட்கொன்டு நிலைகுலையச் செய்தது, அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள‌, ஆபத்திற்கு பயந்து பூமிக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும் தீக்கோழியைப்போல கவலைகளை மறக்க வேலைச்சுமைகளுக்குள் தன்னை சிறைப்படுத்திக்கொன்டான். இருப்பினும் இரணத்தில் துளிர்க்கும் இரத்தத்துளிகள்போல் சந்திராவின் நினைவுகள் இதயத்தின் ஓரத்தில் கசிவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. திருமண‌மான புதிதில் மருதானி வரைந்த அவள் கைகளின் ஸ்பரிசம், சிரிக்கும் அவள் கண்கள், அவளிடம் வீசும் சந்தண வாசம் என கடந்தகாலத்தின் மிச்சங்களாய் அவன் நினைவுகளில் அவள் வலம் வந்துகொன்டுதான் இருந்தாள். வீட்டில் அவளின் வெறுமை மிகவும் அதிகமாய் அவனை பாதித்தது.

முல்லையின் ஆதரவில் தாயும் குழந்தைகளும் இருப்பதால் முடிந்தளவு நேரத்தை வெளியில் செலவழித்து வெகு நேரம் கழித்து வீடு திரும்பினான். ஆனாலும் அவனிடம் மிகவும் உயர்ந்த நற்குண‌ங்கள் வாய்த்திருந்தன, தன் சோகத்தை காரணம் காட்டி மதுவையோ, மாதுவையோ, புகைப்பழக்கத்தையோ அவன் மனம் நாடவில்லை. சோகம் சுமந்த அவன் மனது ஆன்மீகத்தையும் நல்ல நூல்களையும் நாடி அமைதிபெற முயன்றது.

குடும்பத்தலைவியை இழந்த அந்த குடும்பத்தை தேவதையைப்போல் ஆதரவுக்கரம் நீட்டி ஆதரித்தாள் முல்லை. முதிர்ந்த நோயுற்ற கண்ணம்மாவையும், சின்னஞ்சிறு குழந்தைகளையும் கனிவும் கரிசனமும் கொன்டு ஆதரித்தாள். காலையில் வேலைக்குச் செல்பவள், வீடு திரும்பி தன் தேவைகளை முடித்துக்கொன்டு மரியாதைக்கு தன்னைப் பெற்ற‌வர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்துவிடுவாள், அங்கே சமைத்து, வீட்டைத் தூய்மை செய்து மூன்று குழந்தைகளையும் பராமரித்து அவர்கள் இரவில் உற‌ங்கும் வரை உடனிருந்து பின்னர் தன் வீட்டிற்கு செல்வாள்.

இதில் அதிர்க்ஷ்டம் அதிகம் கண்ணம்மாவுக்கே, அவரை முல்லை கையாண்ட விதமே அலாதியானது. நோயால் சோர்ந்திருந்தவரை ஓர் அண்டா நிறைய சுடு நீர் வைத்து தலை முதல் பாதம்  வரை நன்கு தேய்த்து குளிப்பாட்டி விட்டாள், கருப்பும் வெளுப்புமாய் பழுப்பேறிப்போன அவர் கூந்தலை
சுகமாக நீவிவிட்டு  நன்கு அலசினாள், குளித்த பின் சுத்தமான ஆடை அணிவித்து, உண‌வும் நீரும் கொடுத்து பசியாற்றினாள், அவருக்கான மருந்துகளையும் உட்கொள்ள‌ச்செய்து. வாசலில் நாற்காலியைப்போட்டு அமரவைத்து கையில் வெற்றிலைப்பையை கொடுத்துப் புன்னகைத்தாள். கண்ணம்மாவுக்கு கண்களில் நீர் துளிர்த்தது. முல்லையின் கைகளைப் பற்றிக்கொன்டார். நான் அம்மாவைப் பார்த்ததில்லை, இருந்தால் அவர் உன்போல்தான் இருக்கவேனும், குரல் உடைந்து, அவர் கண்களில் நீர் வழிந்தது. அவர் கரம் கைகூப்பியது, அய்யோ அத்தை ! இதென்ன சினிமா வசனம்? வேனாம். சட்டென்று திரும்பி முல்லை கண்ணீரில் நனைந்த விழிகளை மறைத்துக்கொண்டாள்.

தொடர்ந்த முல்லையின் பராமரிப்பில் கண்ணம்மாவின் உடலும் உள்ளமும் உற்சாகமடைய அவர் நோயின் தாக்கம் குறைந்து வெகுவிரைவில் உடல் தேறி, மனதில் அமைதியும், நிம்மதியும் ஆட்கொன்டது. இப்போதெல்லாம் கொஞ்சம் நடமாடவும், கண்ணாடி அணிந்து தொலைக்காட்சி பார்க்கும் அளவுக்கும் தேறிவிட்டார். முல்லை இல்லாத சமயங்களில் குழந்தைகளைக் கண்காணித்துக்கொன்டார்.

எல்லாம் நல்ல விதமாய் சென்றுகொன்டிருக்க பிரச்சனை ஒன்று பிரம்மாண்டம் எடுத்தது அவர்கள் நிம்மதியைக் கெடுக்க.....