.

.
.

Tuesday, July 28, 2015

Mullai (11)தோன்றிற் புகழோடு தோன்றுக  
அக்திலார் தோன்றலில் தோன்றாமை நன்று


எனும் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுப்படி வாழ்ந்து, ஆற்றல்மிகு விஞ்ஞானியாகவும், அறிவார்ந்த மெய்ஞ்ஞானியாகவும் உலகப் பேரேட்டில் தடம் பதித்தவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், உலகத் தமிழர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவருமாகிய பெருமைமிகு டாக்டர்.அப்துல்கலாம் அவர்கள் மறைவுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இயற்கையன்னையை பிரார்த்திக்கிறோம்.
.................................................................................................................................................

உன்னோடு நான் வாழும் ஒவ்வொரு மணித்துளியும்
மரண‌த்திலும் எனக்கு மறக்காது என்(இன்)னுயிரே  (இருவர் திரைவசனம்)


உயிரினங்களில் உயர்ந்த இனமாக ஆறாம் அறிவெனும் பகுத்தறிவுடன் பிற‌ந்தவன் மனிதன். நல்லது, கெட்டது, வேண்டியது, வேண்டாத‌து என பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ள‌வும், விலக்கிக்கொள்ள‌வும் உதவும் அறிவாற்றல் அவனுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ளது, எனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பரிதாபத்திற்குறிய சில மனித‌உயிர்கள் தன்னை மற‌ந்து ஆசை, கோபம் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடுகின்றன . பாவங்கள் புரிந்து, தவறுகள் இழைத்து, தன்னையே அழித்துக்கொன்டு மரண‌த்தை வரவழைத்துக்கொள்ளும் அவல நிலைக்கும் ஆளாகி விடுகின்ற‌ன‌ சந்திராவைப்போல....

மருத்துவமனையில் சந்திரா உயிருக்குப் போராடிக்கொன்டிருந்தாள். மருத்துவர்கள் அவள் வாழ்நாட்களுக்கு கெடு வைத்து விட்டனர். அவள் அழகிய வதனம் கருகித்தீய்ந்து கர்ண கடூர‌மாகிப்போயிருந்தது. உடல் வெந்து ஆங்காங்கே தோல் வெடித்து புண்களாகி அதில் நீர் வடிந்து, பேச இயலாமல், உண்ண வழியில்லாமல் மருத்துவ சாதனங்களின் துணையுடன் படுக்கையில் அவள் முடங்கிக்கிடந்தாள். அவள் உள்ளுறுப்புக்களும் வெடித்து, பாதிப்படைந்து விட்ட‌தாக மருத்துவ அறிக்கைகள் அறிவித்தன. அவளின் மிகவும் கடினமான கடைசி நொடிகள் காற்றில் கரைந்து கொன்டிருந்தன...

அவள் அருகில் அமர்ந்து, அவளையே உற்று நோக்கிக்கொன்டிருந்தான் அவள் கணவன் சங்கர். சொல்ல முடியாத வேதனை சுரந்து கொன்டிருந்தது அவன் மனதில், தன்னில் பாதியாக, தனது வாழ்க்கைத்துணையாக தான் மிகவும் விரும்பி மண‌ந்துகொன்டவள் இன்று தன் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக இற‌ந்து கொன்டிருக்கும் கொடுமையை அவன் இதயம் வெடிக்க கவனித்துக்கொன்டிருந்தான். மனம் முழுக்க அவள்பால் விளைந்த அன்போடும், கனிவோடும் கூடவே மெலிதாய் பூத்த‌ ஒரு கோபத்தோடும்...! என்ன ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டாள் ? தன்னை விட்டுப்பிரிய இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்துவிட்டாளே...?

சங்கர், சந்திராவுடனான தன் கடந்தகால மண‌வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை மனதுள் புரட்டிக்கொன்டிருந்தான். முதன் முதலாய் அவளைச்சந்தித்தது, பின்னர் ஓயாமல் அவளையே சிந்தித்தது, ஒரு போராட்டத்திற்குப் பின் நடந்த அவர்களின் திருமணம், தேனிலவு, முதல் குழந்தையின் பிற‌ப்பு....இன்னும் என்னென்னெவோ ஞாபகங்கள், அவன் இதயம் நூறு, ஆயிரம், கோடி என பல துகள்களாய் வெடித்துச் சிதறி ஒவ்வொன்றும் ஒரு காட்சியை தன்னில் ஏந்தி அவன் மனக்கண்ணில் வலம் வந்து கொன்டிருந்தன‌..., இரண்டு நாட்களாய், தூக்கம் மறந்து, துக்கம் சுமந்து சிவந்த இரு நீரணைகளாய் அவன் கண்கள். தலைகலைந்து, உண‌வும் ஒய்வும் மற‌ந்து, இப்போதுவிட்டால் இனி எப்போதும் இவள் உடனிருக்க முடியாதே எனும் ஏக்கத்தோடு அவள் பக்கத்திலேயே பழியாய்க்கிடந்தான் சங்கர்.

அவனுடைய தாயும், குழந்தைகளும் முல்லையின் பாதுகாப்பில், யாரும் சங்கரிடம் எதைப்பற்றியும் பேசவில்லை. நல்லாதானே இருந்தா ? இவளுக்கு ஏன் புத்தி இப்படிப் போச்சி ? பச்சைப்புள்ளைகளை பரிதவிக்கவிட்டு பாவி இப்படி செஞ்சிட்டாளே ? ஊர்தான் அவளை அவலாய் மென்றது. சில உற‌வுகளும் நட்புகளும் மருத்துவமனை வரை வந்து எட்டிப்பார்த்து நகர்ந்தன‌.

நினைக்க நினைக்க ஆறவில்லை சங்கருக்கு. குழந்தைகள் பிறந்து குடும்பம் செழிக்க, வேலைக்கெனவே அதிக நேரம் ஒதுக்கி, சந்திராவின் பொறுப்பிலேயே நோயுற்ற‌ தாயையும், குழந்தைகளையும் விட்டு விட்டு வார‌த்தில் பல நாட்கள் வெளியூர்களில் பணிக்காக செலவிட்டது தவறோ என்று தோன்றியது இப்போது,  தன்னுடனான அவளின் வாழ்நாள் இத்தனை குறுகியது என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் அவளுக்கென கூடுதல் நேரங்களை அர்ப்பணித்திருக்களாமே ? மனம்தான் அலைமோதியது, வேறென்ன செய்ய முடியும் பரிதவிக்கும் அந்த பாவப்பட்ட மனதால்.. ?

ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து, மேலும் நல்ல வசதியான நிலைக்குத் தன்னைத் தயார் ப‌ண்ணிக்கொள்ளவேணும், பிள்ளைகளை நல்லபடி ஆளாக்கிவிட்டு, மனைவியின் கையை பற்றிக்கொன்டு உலகமெல்லாம் சுற்றிப்பார்க்க வேணும், அழகான உலக அற்புதங்களை, ஆன்மீகம் செழித்த புண்ணிய பூமிகளை கைகோர்த்து இவளுடன் இரசிக்கவேணும், என் கடைசிக்கால‌ம் இவள் மடியிலேயே முடிய வேண்டும். இவளுடன், இவளுடன் மட்டுமே என தான் மனதில் தீட்டிவைத்த ஓவியங்கள் அத்தனையும் உயிர்பெறாமலேயே, தான் மட்டும் தனியாக இறுதி யாத்திரைக்கு புற‌ப்பட்டுவிட்டாளே ? எத்தனை சுயநலம் இவளுக்கு ? ஊருக்கும் உலகுக்கும் தெரியாமல் ஓல‌மிட்டு அழுதது சங்கரின் ஆழ்மனது..

மூன்று நாட்கள் கடந்த பின்னர்  சோகம் சூழ்ந்த ஒரு சிவந்த மாலைப் பொழுதில், சங்கரிடம் சோர்ந்த கண்களால் விடைபெற்று மீளாத பயண‌த்திற்கு முதல் அடி எடுத்து வைத்தாள் சந்திரா. மருத்துவமனை என்பதையும் மறந்து சந்திராவின் பெயர் சொல்லி கதறினான் சங்கர். மருத்துவர் வந்தார், பரிசோதித்தார். இற‌ப்பை உறுதி செய்தார், போய்விட்டார். பிணைக்கப்பட்டிருந்த மருத்துவ சாதனங்களிலிருந்து விடுதலைபெற்றது சந்திராவின் உயிரற்ற உடல்.

ஒரு காதல், ஒரு கனவு, ஒரு குடும்பம், ஒரு கவிதை என  ஒட்டுமொத்தமாய் சிதைந்து போன ஓர் உயிரின் சோகக்கதையை சொல்லாமல் சொல்லி அழுதன‌ அன்றைய பொழுதின் இரவும் நிலவும்......

   

     
        

Sunday, July 19, 2015

பொன்னியின் செல்வரும் பொல்லாத சதிகளும்...!

தேன் சாகரத்தில் சிறு தேனீயின் அநுபவம் : பொன்னியின் செல்வன்
Preview


சுயநலம் மலிந்த இப்புவியில், தான், தனக்கு என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் தியாகமே உருவாய் சில அற்புத மாந்தர்களும் அவதரிப்பதுண்டு, அவ்வகையில் தமக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தை மற்றொரு அரசவாரிசுக்கு விட்டுத்தந்து தியாகச் சிகரமாய் உயர்ந்த ஓர் இளவரசன் கதையே "பொன்னியின் செல்வன்".

1950 - 1955 வரை ஐந்தாண்டுகள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டு வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற வரலாற்றுப்புதினமே பொன்னியின் செல்வன். சோழப்பேரரசில் சுமார் ஆறு மாத காலத்தில் நிகழ்ந்த வரலாற்று மற்றும் கல்கியின் அபார கற்பனை கலந்த சம்பவங்களை இப்புதினம் முன்வைக்கிறது.

ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு புதுவெள்ளம் (57 அத்தியாயங்கள்), சுழல்காற்று  (53 அத்தியாயங்கள்), கொலைவாள் (46 அத்தியாயங்கள் ), மணிமகுடம் (46 அத்தியாயங்கள் ), தியாகச் சிகரம் (91 அத்தியாயங்கள்)  என மொத்தம் 293 அத்தியாயங்களாக பொன்னியின் செல்வன் புதினம் வாசகர்களுக்கு அற்புதமாக படைத்தளிக்கப்பட்டிருக்கின்ற‌து.

ஓர் ஊரில் ஒரு ராஜா.......!

கி.பி 1000 ஆண்டு வாக்கில் சோழ நாட்டை பராந்தக சுந்தர சோழர் எனும் அரசர் ஆண்டு வருகிறார். அவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டு வாடுகிறார். அவர் கூடிய விரைவில் மரணமடைந்து விடுவார் எனும் எண்ணம் எல்லோர் மனதிலும் குடிகொன்டு விடுகிறது, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் சிலருக்கு உதிக்கிறது. சதித்திட்டங்கள் வெடிக்கின்றன. மன்னரையும், அரச வாரிசுகளையும் வேருடன் அழிக்கும் திட்டங்கள் சதிகாரர்களால் அரங்கேற்றம் பெறுகிறது, அவற்றில் பெரும்பங்கு அரச விசுவாசிகளாக வரும் முக்கிய கதாமாந்தர்களால் முறியடிக்கப்படுகிறது. இப்போராட்டங்களை வீரம், அழகு, விவேகம், காதல் எனும்  வண்ண‌ங்களைக்கொன்டு பொன்னியின் செல்வன் எனும் அற்புத ஓவியத்தை நமக்கென படைத்திருக்கிறார் கல்கி.

அரசர் சுந்தர சோழருக்கு மூன்று வாரிசுகள். மூத்தவர் ஆதித்த கரிகாலர். பட்டத்து இள‌வரசர். மிகவும் இளம் வயதிலேயே போர்க்களம் புகுந்து வீரசாகசங்கள் புரிந்து பாண்டிய மன்னனை போரில் வீழ்த்தி அவன் சிரசைக் கொய்தவர். வடதிசை மாதண்டநாயகராக பொறுப்பேற்று, காஞ்சியில் வீற்றிருந்தவர். மாவீரரான இவர் அழகிய தோற்றம் கொன்டவர்.  பேரழகி நந்தினியின் மீது அன்பு பூண்டு அது நிறைவேறாத பட்சத்தில் திருமணத்தையே வெறுத்து ஒதுக்கி வந்தவர். இவர் தமது தந்தை மீது ஆழ்ந்த அன்பு கொன்டு அவருக்காக காஞ்சியில் பொன் மாளிகை எழுப்பியவர். தமது உடன்பிறப்புகள் மீது நிறைந்த அன்பு பூண்டவர் என்பதை அவர் கதாபாத்திரம் நமக்கு உண‌ர்த்துகிறது.

இரண்டாவது மகள் பேரழகும், பேறறிவும் வாய்க்க‌ப் பெற்ற குந்தவை தேவியார். பொன்னியின் செல்வர் மீது மிகுந்த அன்பு கொன்டவர். அவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொன்டவர். இவர் தனது மனங்கவர்ந்த மணாள‌னாக நமது கதாநாயகன் வந்தியத்தேவனை மனதில் வரித்துக்கொள்கிறார்.

அரசரின் மூன்றாவது புதல்வர் அருள்மொழி எனும் பொன்னியின் செல்வர், இப்புதினத்திற்கு பெயர் தந்தவர். குழந்தைப்பருவத்தில் பொன்னி நதியில் வீழந்து காப்பாற்றப்பட்டவர். அதனால் பொன்னியின் செல்வர் என சிறப்பித்து அழைக்கப்படுபவர். அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், வீரம், விவேகம்  ஆகிய அனைத்து சிறப்பியல்புகளும் ஒருங்கே அமையப்பெற்றவர். யானைகளின் பாக்ஷை அறிந்து அவற்றை வழி நடத்தும் திறமையும் கைவரப்பெற்ற‌வர். குடிமக்கள் அனைவராலும் மிகவும் விரும்பிப் போற்றப்படும் இள‌வரசர். பின்னாளில் மகோன்னதம் மிக்க மன்னராக "இராஜராஜசோழன்" என பெரும்புகழ் பெற்றவர். இப்புதினம் எழுதப்பட்ட தருண‌த்தில் அவர் இலங்கைக்கு போர் புரிய சென்றிருக்கிறார். குந்தவையின் நெருங்கிய தோழியாக வரும் வானதி தேவி இவர் மனதில் இடம் பிடித்துக்கொள்கிறார்.இக்கதையின் நாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன். இவன்  தொன்மைமிக்க வாணர் குல வழித்தோனறலாவான். தமது நாடு சோழப்பேரரசுக்கு கட்டுப்பட்டுவிட்ட நிலையில் வல்லவரையன் ஆதித்த கரிகாலரிடம் ஒற்றராக பணிபுரிகிறான். வந்தியத்தேவனுக்கு வீரம், அழகு, அன்பு ஆகியவை நிறைந்திருப்பினும் எந்தவொரு காரியத்திலும் ஆழம் அறியாமல் காலைவிடும் இயல்பும் அவசரபுத்தியும் கூடவே அமைந்துள்ள‌ன. இதனால் வந்தியத்தேவன் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறான். கந்தமாரனைக் கொல்ல முயன்றான் எனவும், பொன்னியின் செல்வரைக் கொன்றான் எனவும், ஆதித்த கரிகாலரைக் கொன்றான் எனவும் பல சமயங்களில் பல அபவாதங்களில் சிக்கிக்கொள்கிறான், இருந்தாலும் தமது வீரத்தாலும் விடா முயற்சியாலும், அரச விசுவாசிகளின் ஆதரவாலும், குந்தவையின் அன்பாலும் எல்லாப் பழிகளையும் களைவதில் வெற்றிகொள்கிறான் இறுதியில் வந்தியத்தேவன்  வாழ்க்கையிலும், காதலிலும் வெற்றி வாகை சூடுகிறான். தமது வீரத்தால் பல சாகசங்கள் நிகழ்த்தும் வந்தியத்தேவனுக்கு ஆதரவாக அரச விசுவாசி மந்திரி அநிருத்தரின் ஒற்றன் ஆழ்வார்க்கடியான், பூங்குழழி மற்றும் சேந்தன் அமுதன் ஆகியோர் பேருதவிகள் புரிகின்றனர்.

ஆரம்பத்தில் வந்தியத்தேவன் மூலம் ஆதித்த கரிகாலர் தமது தந்தைக்கும் தங்கைக்கும் ஓலை அனுப்புகிறார். சோழநாட்டின் தலைநகராகிய பழையாரை நகரை நோக்கி வந்தியத்தேவனின் பயணம் துவங்குகிறது   வழியில் வந்தியத்தேவன் தமது நண்பனான கடம்பூர் இளவர‌சன் கந்தமாறன் அரண்மனையில் இரவு தங்குகிறான். அங்கே ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாகக் கொன்டாடப்ப‌ட்டு, பல சிற்றரசர்களும் கடம்பூருக்கு வருகை மேற்கொன்டுள்ளனர். அன்றிரவு அங்கே மன்னரின் மறைவுக்குப் பின்னர் ஆதித்த கரிகாலரை ஆட்சியில் அமர்த்தாமல், அவருக்கு சிற்றப்பனாகிய மதுராந்தகத்தேவருக்கு மகுடம் சூட்ட சதியாலோசனை நடைபெறுகிறது. அதை முன்னின்று நடத்துபவர் சிற்றரசர்களின் தலைவரும் சோழ ராஜ்யத்தில் தனாதிகாரி எனும் மிகப்பெரிய பொறுப்பையும் வகிக்கும் மாவீரர் பழுவேட்டரையர் ஆவார். இவர் மதுராந்தகருக்கு பெரிய மாமனாரும் ஆவார். இவரின் விசுவாசம் குன்றுவதற்குக் காரணம் இவர் தமது முதிய பிராயத்தில் மணமுடித்துக்கொன்ட நந்தினி எனும் மாயமோகினியே.

நந்தினி முதலில் ஆதித்த கரிகாலனை விரும்பி தமது ஆசை நிறைவேறாத பட்சத்தில் பாண்டிய மன்னனை மணந்து கொள்ள விழைகிறாள். எனினும் ஆதித்த கரிகாலனால் பாண்டிய மன்னன் வீழ்த்தப்பட்டு மரணத்தைத் தழுவியதால் சோழவம்சத்தை கருவறுக்கப் புற‌ப்படுகிறாள். இவளுக்கு மறைந்த பாண்டிய மன்னனின் விசுவாசிகள் "ஆபத்துதவிகள்" எனும் பெயரில் பணியாற்றுகின்றனர். இவள் காண்போரை மயக்கும் பேரழகி, இவள் மோகவலையில் சிக்கி இவள் சொன்னபடியெல்லாம் தலையாட்டுகிறார் பெருவீரரான பழுவேட்டரையர்.இவர் மட்டுமன்றி கந்தமாறன், பார்த்திபேந்திரன் போன்ற மாவீரர்களும் இவளுக்கு கட்டுப்பட்டுவிடுகின்றனர்.

அரசாட்சியைக் கைப்பற்ற உள் நாட்டில் நிகழும் சதிகள், கூடவே பாண்டிய நாட்டின் வெளி நாட்டு சதிகள். இதனால் சோழ அரசும், அரச வாரிசுகளும்
எதிர்கொன்ட‌ எண்ணற்ற பிரச்சனைகள் இப்புதினத்தில் பகிரப்பட்டுள்ளன‌.

வந்தியத்தேவன் தாம் அறிந்துகொன்ட சதித்திட்டத்தை அரசரிடமும், இள‌வரசி குந்தவையிடமும் தெரிவிக்க‌ முயல்கிறான். அரசர் அவன் கூற்றை சட்டை செய்யவில்லை. மேலும் அவன் த‌ன் தோழன் கடம்பூர் இள‌வரசன் கந்தமாறனை கொல்ல முயற்சி செய்தான் எனும் வீண்பழியும் அவன்மேல் சுமத்தப்படுகிறது. எனினும் மதிநுட்பம் வாய்ந்த குந்தவை தமது சகோதரர்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தை உண‌ர்ந்து, அவர்களை காப்பாற்ற பாடுபடுகிறாள். இள‌வரசி குந்தவை வந்தியத்தேவன் மீது கொன்ட நம்பிக்கையால் பொன்னியின் செல்வனைக் காப்பாற்ற இலங்கைக்கு வந்தியத்தேவனையே அனுப்புகிறாள்.

இலங்கை செல்லும் முயற்சியில் வந்தியத்தேவனுக்கு பூங்குழழி எனும் அற்புதமான படகோட்டிப் பெண் தோழியாகிறாள், "சமுத்திரக்குமாரி" என
பொன்னியின் செல்வரால் புகழப்பட்ட இக்காரிகை வந்தியத்தேவனுடன் இணைந்து பல சாகசங்கள் புரிந்து நமது மனங்களில் நீங்கா இடம்பிடிக்கிறார். இவரின் மாமன் சேந்தன் அமுதனும், அத்தை ஊமை ராணி எனும் மந்தாகினி தேவியும் சோழ அரசைக் காப்பாற்ற பெரிதும் உதவுகின்ற‌னர். இதில் பல முறை பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய ஊமை ராணி இறுதியில் தமது உயிரைக்கொடுத்து மன்னர் பராந்தக சுந்தர சோழரை பாண்டிய ஆபத்துதவிகளின் கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்கிறார்.

இலங்கையில் பொன்னியின் செல்வரின் நெருங்கிய நண்பராகிவிடுகிறான் வந்தியத்தேவன். இல‌ங்கையிலிருந்து திரும்பும் வழியில் மீண்டும் இள‌வரசர் அருள்மொழி பிரச்சனையில் சிக்கிக்கொன்ட வந்தியத்தேவனை காப்பாற்ற கடலில் மூழ்கி சுரம் கண்டு புத்த பிட்சுக்களின் பாதுகாப்பில் யாருமறியாமல் விடப்படுகிறார். அவரைக் கொன்றார் எனும் பழியும் வந்தியத்தேவனை வந்தடைகிறது.

அதிலும் மீண்டு, ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவழைத்து தீர்த்துக்கட்டும் சதிவலை பின்னப்படுவதை அறிந்து அதிலிருந்து ஆதித்தனைக் தடுத்துக் காப்பாற்ற வந்தியத்தேவனை ஏவுகிறாள் குந்தவை. எவ்வளவோ முயன்றும் வந்தியத்தேவனால் ஆதித்தனைக் காப்பாற்ற இயலாமல் போய், ஆதித்தன் கொலை செய்யப்பட்டு விடுகிறான். அந்தப் பழியும் வந்தியத்தேவன் தலையில் வீழ்கிறது. ஈடிணையற்ற பேரிழப்பான ஆதித்த கரிகாலன் மறைவை "விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆசையால் ஆதித்தன் மறைந்தான்"  என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. இயற்கையின் குறியீடாக தூமகேதுவின் தோற்றமும் மறைவும் ஆதித்தனின் மறைவுக்கு கட்டியங்கூறுவதாய் அமைகிறது. இதற்குக் காரணமானவர்கள் பின்னாளில் பொன்னியின் செல்வரால் அடையாள‌ங்கண்டு தண்டிக்கப்பட்டனர் என வரலாறு பகர்கிற‌து.

இதற்கிடையில் கரிகாலன் மரணம் தொட்டு, பழுவேட்டரையர் மனந்திருந்தி அப்பழியைத்தாமே ஏற்று உயிர் துறக்கிறார். அவரின் மனைவியாக வந்த நந்தினி தாம் மேற்கொன்ட சபதம் ஜெயித்த மகிழ்சியில் பழுவேட்டரையரை விட்டுப் பிரிந்து போய் விடுகிறாள். இவள் ஊமை ராணிக்கும் பாண்டிய மன்னனுக்கும் பிறந்தவள் என்பதை பின்னாளில் தெரிந்து கொள்கிறாள். மேலும் வாரிசு போராட்டத்தில் ஈடுபட்ட மதுராந்தகரும் உண்மையில் இவளின் சகோதரனே. இந்த உண்மையை அறிந்து பாண்டிய ஆபத்துவிகளுடன் போய் இணைந்து விடுகிறான்.

இறைவனின் திருத்தொன்டில் ஆழ்ந்திருக்கும் உண்மையான மதுராந்தகர் பின்னர் வெளிப்படுகிறார். ஆனால் அவர் அரசு ஏற்க மறுக்கிறார்.

இப்புதினத்தின் முத்தாய்ப்பாக பொன்னியின் செல்வர் நோயிலிருந்து மீண்டு நாடு திரும்புகிறார். தாமே அரச பொறுப்பை ஏற்பதாகக்கூறி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளச் செய்கிறார். எனினும் இறுதியில் யாராலும் இயலாத மாபெரும் தியாகத்தைச் செய்து நம் மனதை முழுதாய் ஆட்கொன்டு விடுகிறார். ஆம் அவர் தமது அரச பதவியை உண்மையான மதுராந்தகருக்குத் தாரை வார்த்து அவரை அரசராக்கிவிடுகிறார்.அத்துடன் இப்புதினம் நிறைவை நாடுகிறது.

பின்னர் 15 ஆண்டுகள் கழித்து அதே பொன்னியின் செல்வர் "முதலாம் இராஜராஜன்" எனும் பெயருடன் அரசு கட்டிலில் அமர்ந்து செயற்கரிய சாதனைகள் செய்து வரலாற்றில் தடம் பதித்தவை, கல்வெட்டுகளில் இடம் பெற்றவை, இன்று உலகப் பாரம்பரியச் சின்ன‌மாக அங்கீகரிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்தது யாவும் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய உன்ன‌தங்கள்....!

நமது கதாநாயகன் வந்தியத்தேவன் பின்னாளில் குந்தவை தேவியை மணந்து மிகவும் மரியாதைகுரியவராகத் திகழ்கிறார்.

இப்புதினத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை உலா வரும் ஒரு கதாபாத்திரமே மதுராந்தகர். அவர் யார் என்பதை நாம் இங்கே தெரிவிக்கவில்லை. நமது நோக்கம் படித்ததை பகிர்வது மட்டுமல்ல, இப்புதினத்தை இன்னும்  படிக்காதவர்களை படிக்கத் தூண்டுவதும் ஆதலால், முழுதும் சொல்லிவிட்டால் சுவாரசியம் இல்லாமல் போய்விடும். புதிதாக படிப்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாக அமையட்டுமே எனும் பரந்த நோக்கில் அவர் பெயர் இங்கே மறைக்கப்பட்டு விட்டது. :)


 
பொன்னியின் செல்வன் எனும் இந்த மாபெரும் புதினத்தை நமக்கு ஆக்கித்தந்த எழுத்துலக மேதை கல்கி அவர்களைப் பற்றி சில விடயங்கள் பகிராவிட்டால் இப்பதிவு நிறைவை நாடாது.

த‌ஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலம் எனும் ஊரில் 9 செப்டம்பர் 1899 ஆம் ஆண்டு திரு ராமசாமி அய்யருக்கும், திருமதி தையல் நாயகி அம்மையாருக்கும் பிறந்த ரா.கிருக்ஷ்ணமூர்த்தி எனும் கல்கி அவர்கள்  "நவசக்தி", "விமோசனம்", "ஆனந்த விகடன்" ஆகிய பத்திரிக்கைகளில் தமது எழுத்துப்பயணத்தைத் துவங்கி மிகச் சிறந்த எழுத்தாளராக பீடுநடை போட்டவர்.

இவர் "கல்கி" எனும் சொந்தப் பத்திரிக்கை ஆரம்பித்து தமிழின் முதல் சரித்திர நாவலான "பார்த்திபன் கனவு" புதினத்தை எழுதினார். தொடர்ந்து அவருக்கு ஈடிணையற்ற புகழை ஈட்டித்தந்த "சிவகாமியின் சபதம்", அவருக்கு சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுத் தந்த சமூக நாவலான "அலை ஓசை" தொடர்ந்து "பொன்னியின் செல்வன்" என ஏற‌க்குறைய 30 ஆண்டுகாலம் தமது பேனாவின் துணைகொன்டு இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் ஆவார்.

த‌மது எழுத்தாற்றலால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த பேனா மன்னர் கல்கி அவர்கள் 1954 டிசம்பர் 5ம் திகதி தமது 55ம் பிராயத்தில் தாம் எழுதிக்கொன்டிருந்த "அமரதாரா" எனும் தொடர் கதையை முடிக்காமலேயே இறைவனடி எய்தினார்.(அவரது புதல்வி ஆனந்தி கல்கியின் குறிப்புகளின் துணைகொன்டு அத்தொடர்கதையை முடித்தார்)

கல்கியைப் பெருமைப்படுத்தும் வகையில் "கல்கி நூற்றாண்டு விழா" 9.9.1999 வரை ஓராண்டு காலம் கொண்டாடப்பட்டது. கல்கியின் உருவம் தாங்கிய தபால் தலை வெளியிடப்பட்டது. கல்கி வசித்த அடையாறு காந்தி நகர் தெருவுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இன்று இவருடைய படைப்புகள் அனைவரும் படித்து இன்புறும் வகையில் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டன‌. காலத்தில் அழியாத காவியம் பல‌ தந்த மாபெரும் எழுத்து மன்னர் கல்கி அவர்களை வண‌ங்கி விடைபெறுவோம்.Tuesday, July 14, 2015

முல்லை (10)

தளிர்க்கொடியாய் நடையிழந்து தவித்தது ஒன்று..
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று..
இதற்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது ?
பழி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது ? 
                                                                                                      உடுமலை நாராயணகவி

சந்திரா, ஆத்திரமும், அவமானமும் சூழ வீட்டிற்குள் ஓடினாள் ! முல்லை அவளுக்குக் கொடுத்த அடிகளைவிட, சங்கரிடம் தன்னைப்பற்றி புகார் கூற‌ப்போகிறேன் என மிரட்டல் வேறு விடுத்திருக்கிறாளே ? அது அவளுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. கண‌ நேரத்தில் தான் உண‌ர்ச்சிவசப்பட்டு தன் மாமியாரைத் தாக்கியது எத்தனை பாதகமான பின்விளைவுகளைக் கொன்டுவந்துவிட்டது ?

சங்கருக்குத் தன் தாயிடம் பிரேமை அதிகம் என்பது அவள் அறிந்ததே, அது இப்போது நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்தியது. இல்லையென்றால் கண‌வனை கைக்குள் போட்டுக்கொன்டு   அவள் ஆரம்பத்திலேயே கண்ணம்மாவை அந்தக் குடும்பத்திலிருது  அப்புறப்படுத்தியிருப்பாள்.

சந்திராவின் மனது அலைபாய்ந்தது. நடந்த‌தை நினைத்துப் பயனில்லை, இனி நடப்பதை மட்டுமே நினைக்க வேண்டும், ஏதாவதொரு பூதாகர‌மான பிரச்சனையை கிள‌ப்பிவிட்டு சங்கரின் அன்பையும் அநுதாபத்தையும் தன் பக்கம் இழுக்க வேண்டும். அதுவே சரி, அதற்கு இப்பொழுது என்ன செய்யலாம் ? திடீரென்று சிந்தையில் பளிச்சிட்ட அந்தக் கொடூர எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கப் பரபரத்தன கைகள்.

வேகமாய் பின்கட்டுக்கு ஓடிச்சென்ற‌வள், அங்கிருந்த மண்ணென்ணெய் டின்னை கையில் எடுத்துக்கொன்டாள். குழந்தைகள் வீட்டிற்குள் இருக்க அதில் இளைய குழந்தை தூளியில் படுத்திருக்க எதையுமே கவனத்தில் கொள்ளாமல் திடுதிடுவென வீட்டிற்கு வெளியே ஓடினாள்.

அங்கே நடுவீதியில் நினறு, கன நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணையை பாய்ச்சிக்கொன்டு தீயும் வைத்துக்கொன்டுவிட்டாள். அவளின் நோக்கம் வீதியிலுள்ளவர்களால் காப்பாற்றப்படவேண்டும் என்பது.
ஆனால் துரதிர்க்ஷ்டவசமாய் யாரும் அச்சமயம் அங்கிருக்கவில்லை, நெருப்போ நொடியில் அவளைப்பற்றிப் படர்ந்து அசுர வேகத்துடன் அவள் தேகத்தை பதம்பார்க்க ஆரம்பித்தது. வீசிய அந்திக்காற்றில் சுழலும் பெரு நெருப்பாய் மாறி விரைவில் அவள் உடல் பற்றி முழுதுமாய் எரித்தெடுத்தது, அவள் தேகம் தீய்ந்து, தலைமுடி கருகிய வாடை காற்றில் கலந்து வீசியது.

அச்சமயம் பார்த்து அனைவரும் வீட்டிற்குள் இருந்ததால் யாரும் அவளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை, அவளின் கோர அலரல் சத்தம் கேட்ட பின்னரே முல்லை உட்பட அனைவரும் ஓடிவந்து பார்க்கும் போது முக்கால்வாசி வெந்துபோய்தீக்காயங்களால் பாள‌ம் பாள‌மாய் வெடித்த தேகத்தோடும் , தீய்ந்த முகத்தோடும்  நெருப்பின் உக்கிரத்துக்குப் மேலும் ஈடுகொடுக்க வலுவின்றி கரிக்கட்டையாய் பூமியில் சரிந்தாள் சந்திரா !

அய்யோ ! என அலறிக்கொன்டு அவள் அருகில் முதலில் வந்தவள் முல்லைதான். அவளுடன் அண்டை அயலாரும் சேர்ந்து வாழையிலை

களால் அவளைப்போர்த்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரா தீய்ந்து வீழ்ந்த இடம் போர்தீர்ந்த களம்போல் நெருப்பின் எச்சங்களைத் தாங்கி மெளனம் காத்தது.

சந்திரா தீயவள் என்பதில்லை, அவள் நல்ல பெண்மணியே, இளவயதில் பெற்றோரை இழந்தவளாயினும் தன்னை வள‌ர்த்து ஆதரித்தவர்களுக்கு மரியாதையாய் நடந்து தமது உண்மையான உழைப்பையும் தந்து அவர்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவி அவர்களின் அபிமானத்தைப் பெற்றவள். அழ‌கும், இள‌மையுமாய் ஒளிர்ந்த பருவத்தில்  மனதிற்கு உகந்தவனை மானசீகமாய் விரும்பி கரம்பிடித்தவள். அவனுடன் அன்பான வாழ்க்கையில் அழகான மூன்று மக்களை ஈன்று வளர்த்தவள். இத்தனை சிறப்புகளும் வாய்த்தவள் தன் கணவனுக்கு முல்லையை மண‌க்க முடிவெடுத்து தன்னை ஆரம்பத்தில் மறுதலித்தார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக கண்ண‌ம்மாவை விக்ஷம்போல வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தாள். பாராமுகம் காட்டி உதாசீனப்படுத்தவும் தலைப்பட்டாள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நோயால் முடங்கிவிட்ட அவரிடத்தில் வன்மம் காட்டினாள். தன் வினை தன்னைச் சுடுமல்லவா ? ஒருநாள் அது அவளையே அவள் எண்ண‌த்தின் வழியிலேயே சுட்டுப்பொசுக்கியது....! மரணம் கட்டிலுக்குப் பக்கத்தில் நின்று அவள் காலமுடிவை கண‌க்கிடத்துவங்கியது, உடலாலும், மனதாலும் அள‌விடமுடியாத ஆழ்ந்த  வேதனை தோய்ந்த இறுதிப்பயண‌த்திறுகு தயாராகிக்கொன்டிருந்தாள் சந்திரா...! :(


   
  

Wednesday, July 1, 2015

முல்லை 9ம் பாகம்

என்னை விட்டு நான் போனேன் தன்னாலே 
கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே 
பேச வழியே இல்லை மொழியே இல்லை தவியாய் நான் தவித்தேன் 
காதல் கனவில் உன்னை முழுதாய் காண பிறையாய் நான் இளைத்தேன்.....
                                                                                                                                       கபிலன்(கவிஞர்)                                   

சந்திரா ‍பூரண சந்திரனைப்போல் அழகானவள். எழுமிச்சை நிறமும், அளவான உயரமும், அள‌வெடுத்ததைப்போல் அமைந்த ‍அங்கங்களும் அவள் பேரழகி என்பதை சொல்லாமல் சொல்லின‌.

அழகான அவளின் பின்புலன் அத்தனை சிற‌ப்பாக அமைந்திருக்கவில்லை. சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து உற‌வினர் வீட்டில் அண்டியிருந்தாள். அவர்கள் சொந்தமாக உணவுக்கடை நடத்திவந்தனர். அழகான சந்திராவை கல்லாப்பெட்டியில் உட்காரவைத்துவிட்டனர். அவள் அழகு பலரை கவர்ந்ததால் கடையில் கூட்டம் பெருகியது. அவ்விடம் லாரி ஓட்டுனர்கள் நின்று இளைப்பாறிச் செல்லும் இடமும் என்பதால் சங்கரும் அந்த உணவுக்கடைக்கு வாடிக்கையாளனாகிப்போனான்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பலர் அவளிடத்தில் ப‌ல்லிளித்து, ஜொள் வடித்து நிற்கையில். கண்ணியமாகவும் , மரியாதையாகவும் நடந்து கொன்ட சங்கரின் பால் சந்திராவின் கவனம் முழுதும் சென்றது. அவனுடைய லட்சணமான தோற்றமும், அழகிய சிரிப்பும் அவள் ஆசைக்கு மேலும் தூபம் இட்டன. வலிய அவனிடம் பேசி சிநேகம் வளர்த்துகொன்டாள். அழகான பெண் வலிய வந்து பேசினால் எந்த ஆணுக்குத்தான் பிடிக்காது ? அதிலும் சந்தணச்சிற்பம் போன்ற அழகிய பெண் மயில் தன்னிடம் ஆசை வார்த்தைகள் பேசினால் உறுதியான ஆண்  மனதும் சிறிது சலனமடையத்தானே செய்யும். சங்கரும், சந்திராவும் ஆகாய வீதியில் காதல் பறவைகளாய் உலா வரத் துவங்கினர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் காதல் மலர்ந்து வள‌ர்ந்து வந்தது. சந்திராவின் குடும்பத்தினர் சங்கருக்கு அவளை மணமுடிக்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் மகிழ்வுடன் அவனுக்கு அவளை மணமுடிக்க முன்வந்தனர். ஆனால் சங்கரின் நிலைதான் இக்கட்டாகிப்போனது...

கண்ணம்மாவை நினைத்து சங்கர் தயங்கினான். தன் தாய் முல்லையை தனக்கு மணமுடிக்கக் காத்திருக்கிறாள் என்பது அவனுக்கு பரிதவிப்பை ஏற்படுத்தியது. ஆரம்ப முதற்கொன்டே கல்வி, தொழில் என அனைத்திலும் அவள் ஆசையில் மண்ணை வாரிப்போட்டவன் சங்கர், இப்போது தன் திருமணத்திலும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை என்பது அவனுள் மனவருத்ததை விதைத்தது.

தைரியத்தை வரவழைத்துக்கொன்டு, சந்திராவைப் பற்றி கண்ணம்மாவிடம் எடுத்துக் கூறினான். கண்ணம்மா ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டுவாள் , தன்னை திட்டுவாள், முல்லையையே மணமுடிக்க வற்புறுத்துவாள் என எதிர்பார்த்த சங்கருக்கு வியப்பளிக்கும் வகையில் பதிலேதும் கூறாமல் மெளனமாய் அமர்ந்திருந்தாள் கண்ணம்மா. அவர் அடைந்த உச்சக் கட்ட வேதனையில் மனம் மருத்து அவர் பதுமைபோல் காட்சியளித்தார். சம்மதம் என்ற ஒரு வார்த்தை மட்டும் தப்பித்தவறியும் அவர் வாயிலிருந்து உதிரவேயில்லை.

அதன் பின்னர் சங்கர் தன் தாயிடம் சரியாக பேசாமலும், வீட்டில் உண்ணாமலும் வேடிக்கை காட்டத்துவங்கினான். அவனுக்குத் தெரியும், தன் தாய் தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்றும், நிச்சயம் தன் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டுவாள் என்றும். அவன் நினைத்தது நடந்தது. இறுதியில் சந்திராவை மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தாள் கண்ணம்மா. முல்லையை தன் மருமகளாய் அடை முடியவில்லையே எனும் ஏக்கம் அவரை நோயாளியாக்கியது.

சங்கருக்கு தன் தாயின் சம்மதம் கிடைத்ததும், மிக்க மகிழ்வுடன் தடபுடலாக திருமண ஏற்பாடுகள் செய்து, ஒரு நல்ல நாளில் சந்திராவை தன் மனைவியாக்கிக் கொன்டான். அவன் திருமண‌த்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொன்டு செய்தாள் முல்லை. அவளைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது கண்ணம்மாவுக்கு.

திருமணம் முடிந்து, சங்கரும் சந்திராவும் தங்கள் இல்லரத்தை இனிதே துவங்கி மகிழ்வுடன் வாழ்ந்தனர். கால ஓட்டத்தில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிற‌ந்தன.

சந்திரா, இப்பொழுதெல்லாம் ரொம்பவும் மாறிப்போய்விட்டாள். ஆதரவின்றி
உற‌வினர் வீட்டில் அண்டிய சந்திரா அல்ல இவள், நல்ல வசதிபடைத்த சங்கரின் மனைவியல்லவா, அதனால் அவள் மிகவும் தற்பெருமையும், அகங்காரமும் கொன்டு விள‌ங்கினாள். நோய்வாய்ப்பட்டிருந்த தனது மாமியாரை அறவே அவளுக்குப் பிடிக்கவில்லை. கணவன் வீட்டிலிருக்கும் போது நல்லவளாகவும், அவன் வேலைக்குப் போய் விட்ட சமயங்களில் சீரியல்களே கதி எனவும் ஆனாள்....!

(இனி நாம் கடந்தகாலத்திலிருந்து விடைபெற்று நிகழ்காலத்திற்கு வருவோம்)

அப்படியான ஒரு நாளில்தான் சீரியலில் அவள் மூழ்கிக்கிடக்க, கண்ணம்மா பசியால் துடிக்க, அவளை துடைப்பத்தினால் தாக்கி முல்லையிடத்தில் செம்மையாக பூசை வாங்கினாள், ஆத்திரமும் அவமானமும் ஆர்ப்பரிக்க யாரும் செய்யத் துணியாத ஒரு செயலை செய்ய முடிவெடுத்தாள் அபாக்கியவதி சந்திரா......