.

.
.

Sunday, June 14, 2015

முல்லை 8

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூகாலப்பெருவெளியில் நினைவுகளால் தடம்பதித்து வாழும் இந்த வாழ்வில் நினைப்பதெல்லாம் நடப்பதுவுமில்லை, கேட்பதெல்லாம் கிடைப்பதுவுமில்லை,  இதையெல்லாம் மனித மனம் உணர்வதுமில்லை... ஆசைகளுக்கு அளவேது ? எதிர்பார்ப்புகளுக்கு எல்லையேது ?

முல்லை...! ஆறுமுகம் ராசாத்தி இணையர் திருமணமாகி பல‌ வருடங்கள் குழந்தையின்றி வாடி, வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டி வரமாய் வந்துதித்தவள். ஆறுமுகம் முல்லையை ஆண்பிள்ளை போலவே சீராட்டி வளர்த்தார். "அப்போய்" என்று ஆண்பிள்ளையை அழைப்பதைப்போல் அன்பாய் அழைத்து பாசத்தை பொழிவார். சங்கரைபோல் அவளையும் தம்முடன் லாரிப்பயணத்திற்கு  அழைத்துச் செல்வார்.

முல்லையின் செயல்பாடுகளில் இளவயதிலே துடுக்குத்தனம் நிரம்பி வழிந்தது. பெரிய கண்களும், மாநிறமுமாய் எந்நேரமும் எதையாவது செய்து கொன்டிருக்கும் பழக்கமும் வாய்த்திருந்தது. சிறுவயதில் சங்கருடன் இணைந்து வளர்ந்த முல்லையின் குறும்புகளுக்கு அடிக்கடி இலக்காவது சங்கர்தான்.

எல்லை மீறும் தன் குறும்புத்தனங்களால் பலமுறை சங்கரை அழவைத்தாள். குறிப்பாய் தான் அதிகம் ஒட்டுதலுடன் இருக்கும் தன் தந்தையிடம் சங்கர் நெருக்கமாய் இருப்பது அவள் நெஞ்சில் துவேக்ஷம் துளிர்விட வகை செய்தது.

சங்கரின் விளையாட்டுப் பொருட்களை எடுத்து ஒளித்து வைத்து அவனுக்கு தொல்லைகள் தருவாள். அவளைவிட சில வருடங்கள் மூத்தவன் சங்கர். அதனால் கண்ணம்மாவும் முல்லை குறித்த சங்கரின் புகார்களுக்கு புன்னகையை மட்டுமே பதிலாய்த் தருவாள். சங்கருக்கு முல்லையின்மேல் கோபம் கோபமாய் வரும்.

முல்லையோ குறும்புகள் செய்தாலும் நல்ல மனமும், பிறர்க்கு உதவும் குண‌மும், தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியமும் கொன்டவளாயிருந்தாள், எதிலும் முன்னுக்கு நிற்பாள். சண்டை என்று வந்துவிட்டாள் எதிராளியை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவாள்.

முல்லை வளர்ந்து பெரியவளானாள்,  கூடவே அவளது குணங்களும் அவளோடு மலர்ந்து மணம் வீசின. பள்ளிப்படிப்பை அளவோடு நிறுத்திக்கொன்டாள்.

பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் வெளிக்காட்டு வேலைக்குச் சென்றாள். மண்வெட்டியை கையில் பிடித்து அயராது வேலை செய்தாள். எல்லோரிடத்திலும், உழைப்பாளி, சுறுசுறுப்பானவள்,  நல்ல தோழி என நற்பெயர் பெற்றாள்.

அவளிடத்தில் ஒரே ஒரு குறை,  ஆணைப்போல் கம்பீரமும் தைரியமும் தலைக்காட்டியதைப்போல் அவளிடத்தில் பெண்மை வெளிப்படவில்லை. கரடு முரடாக நடந்து கொள்வாள், மென்மையும் நளினமும் என்ன விலை என்று கேட்பாள்.

அவளுக்கு நல்ல உயரம், அள‌வான தேகம், அழகான முகம் என்று அமைந்திருந்தபோதும். அதை சீராய் பராமரித்து சிங்காரமாய் தோற்றமளிக்கத் தெரியவில்லை. அவள் தாய் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டாள், நெளி நெளியாய் அடர்ந்து வளர்ந்திருந்த தனது சுருள் கேசத்தை அள்ளி ஒற்றை குதிரைவால் இட்டுக்கொன்டு தன் தந்தையின் காற்சட்டையையும், முழுக்கை சட்டையையும் அணிந்துகொன்டு வேலைக்குச்செல்வாள். யாருக்கும் அஞ்சாத அவள் கொஞ்சம் வசப்படுவது கண்ணம்மாவுக்கு மட்டுமே.

கண்ணம்மாவிடத்தில் முல்லைக்கு ஈர்ப்பு அதிகம், தனது அத்தையின் சுயசரிதையை அவள் அறிந்து வைத்திருந்தாள். சுய‌நலம் மலிந்த இந்த‌ உலகில் ஓர் ஏழை ஊமைப் பெண்ணுக்கென தனது இல்லறத்தைத் துறந்து, இத்தனை துயரங்களை சுமந்து, எத்தனை அசாத்தியமாய் ஒரு மிகப் பெரிய தியாகத்தை செய்துவிட்டாள் இந்த அத்தை !  அவர் கதையைக் கேட்டு அசந்து போனவளுக்கு த‌ன் அத்தையின்மீது அன்பும் மரியாதையும் மலையளவு உயர்ந்திருந்தது.


அத்தை என்ன சொன்னாலும் கேட்பாள் முல்லை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓடி வந்து அவளுக்கு உதவிகள் செய்வாள், வீட்டு வேலைகளை அள்ளிப்போட்டுக்கொன்டு செய்து அவர் அன்புக்குப் பாத்திரமானாள்.

கண்ணம்மா தான் வியாபாரம் செய்யும் துணிமணிகளில் அழகழகான ஆடைகளை முல்லைகென‌ தேர்ந்தெடுப்பார். அவற்றை முல்லைக்கு அணிவித்து அழகுபார்ப்பார்.அம்மாவிடம் காட்டும் வித்தையெல்லாம் அத்தையிடம் காட்டுவதில்லை, அடக்க உடுக்கமாய் அலங்கரித்துக்கொன்டு அழகுப்பதுமையாய் வலம் வருவாள்.

எப்போதோ ஒரு முறை, வருடத்தில் சில முறை என‌ அத்தி பூத்தாற்போல் அபூர்வமாய் நிகழும் இந்த அலங்கார நிகழ்வுகள். அச்சமயங்களில் சங்கரின் கவனமும் அவள்பால் செல்வதை கண்ணம்மா கவ‌னிக்கத் தவறவில்லை.

அத்தை அத்தையென தம்மைச் சுற்றி வரும் முல்லையை உள்ளத்தில் ஏற்றி வைத்துக் கொன்ட கண்ண‌ம்மா தன் இல்லத்திலும் அவளை தன் மருமகளாக‌ இருத்திக்கொள்ள பிரியப்பட்டார்.

முல்லைக்கு சங்கரை வம்பிழுப்பதில் ஆர்வம் அதிகம். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவனை சீண்டுவாள்.அவனைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கண்ண்ம்மாவிடத்தில் சொல்லி வம்பில் மாட்டி விடுவாள்.

நடப்பதையெல்லாம் கவனித்த கண்ணம்மா சங்கருக்கு முல்லைதான் சரியானவள் என மனதில் கணித்தாள். தன் மனதில் தோன்றியதை மெல்ல மெல்ல மகன் காதில் விழச்செய்தார்,"அய்யோ அந்த கிலுகிலுப்பையை கட்டிக்கிட்டு யார் அவதிப்படுவது" என ஆரம்பத்தில் அலட்டியவன், நாளாக நாளாக அமைதி காக்க ஆரம்பித்தான். சங்கரின் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என தவறாக நினைத்துக்கொன்டார் கண்ணம்மா.

அப்போது அவருக்குத் தெரியாது மகன் மனதில் வேறொரு பிரளயம் நிகழ்ந்து கொன்டிருப்பதும் அதன் பெயர் சந்திரா என்பதும்....!

தொடரும்.......

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பி.கு :  தமிழ்ப்பூங்காவில் கதைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால், மற்ற விடயங்களைப் பதிவிட ஏதுவாக‌ எண்ணம் என்றொரு கிளை ஆரம்பித்து, அதில் எண்ணங்களும், படித்தவைகளும், பிடித்தவைகளும் இனிமேல் இடம்பெறும், நண்பர்கள் நேரம் கிடைத்தால் எண்ணம் வலைப்பதிவையும் எட்டிப்பாருங்கள், நன்றி.