.

.
.

Sunday, March 29, 2015

முல்லை - பாகம் 4


வீரய்யா கங்காணி தமது வாலிப பருவத்திலேயே மனைவியை பறிகொடுத்தவர். அவர் மகள் கண்ணம்மாவே தனது உலகம் என மறுமணத்தை மனதில் நினைக்காது மகளுக்காகவே வாழ்ந்தவர். அந்த மகளுக்கு சிறப்பாக மணமுடித்து பேரனையும் அள்ளிக் கொஞ்சி புளங்காகிதமடைந்தார். தன் வாழ்க்கை குறிக்கோள்  நிறைவேறிய மகிழ்ச்சியில், நிம்மதியாக தனது வாழ்நாட்களைக் கழித்து ஒருநாள் நித்திரையிலேயே இறைவனடி எய்தினார்.


தாய்க்குத் தாயாகவும் தந்தைக்குத் தந்தையாகவும், கண்ணை இமை காப்பது போல் தன்னைக் காப்பாற்றி வள‌ர்த்த தந்தையின் மறைவு கண்ணம்மாவை மிகவும் பாதித்தது. தந்தையின் பிரிவைத் தாளாது அழுது புலம்பினாள், கண்ணீர் விட்டுக் கதறினாள்.

மகனின் நிலையிலிருந்து அவரின் இறுதிப் பயணத்தை நிறைவேற்றினான் சாரங்கன். கலங்கிய கண்ணம்மாவுக்கு ஆறுதல் அளித்துத் தேற்றினான்.

வருத்தம் தோய்ந்த வாழ்க்கை சில காலம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. அவ்வேளையில் சாரங்கனுக்கு அயலூரிலிருந்த தமக்கையிடமிருந்து உடனடியாக ஊருக்குத்திரும்பும்படி அவசரத் தந்தி வந்தது.

சாரங்கனின் தமக்கை சாவித்திரி இளவயதிலேயே தாய் தந்தையை இழந்த சாரங்கனை தாயின் நிலையிலிருந்து வளர்த்து, படிக்கவைத்து ஆளாக்கியவள். சாரங்கனின் மேல் உயிரையே வைத்திருந்தவள்.

சாரங்கன் உடனே தனது தமக்கையைக் காண  புறப்பட்டான். கைக்குழந்தை வைத்திருந்த கண்ணம்மாவிடம் உடனே திரும்பிவிடுவேன் என வாக்களித்து விடைபெற்றான்.

சாரங்கனுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் கண்ணம்மா. நாட்கள் நகர்ந்து வாரங்களாகின, சாரங்கன் வீடு திரும்பவில்லை. கண்ணம்மாவின் கவலை எல்லை மீறியது. நாமே தேடிச் செல்வோம் என மனதுள் முடிவெடுத்திருந்த தருண‌த்தில், விசனத்துடன் வீடு திரும்பினான் சாரங்கன்.

அளவற்ற ஆன‌ந்தத்துடன் சாரங்கனைக் காண ஓடோடி வந்த கண்ணம்மா. அவனைக் கண்டதும் கண்களில் கண்ணீர் பெருகெடுக்க அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் நின்றாள்.....!       

Thursday, March 26, 2015

முல்லை 3

மண்ணில் இட்ட விதையானது முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, கிளைவிட்டு நாளடைவில் மரமாகி மலர் சொரிந்து, காயும் கனியுமென கண்ணைக் கவர்வதை இயற்கையின் இனிய கவிதையாகக் காண்கிறது உலகம்.

அதைப்போலவே சிறு குழந்தையாய் தன் கைகளில் தவழ்ந்த தன் மகள் தன்னில் முக்கால் உயரத்துடன், அழகிய பெண்ணாய் பார்ப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வளர்ந்திருந்தது வீரய்யா கங்காணிக்கு ஒருபக்கம் பெருமிதம் தந்தாலும், மறுபுறம் இவளுக்கு பொருத்தமான‌ மணவாளனை தேர்வு செய்து மணமுடிக்க வேண்டும் எனும் கவலை அவர் உள்ளத்தை வாட்டிக்கொன்டிருந்தது.

அவர் கவலையை புரிந்து கொன்டு கண்ணம்மாவுக்கெனவே சிருக்ஷ்டித்து அனுப்பட்டவனைப்போல் ஒரு இளங்காலை வேலையில் அவ்வூரில் தஞ்சமடைந்தான் அந்த இளம் காளை..! சாரங்கன் என்பது அவன் பெயர். மாநிறம், அளவான உயரம், ஓர வகிடெடுத்து வாரிய சுருள் கேசம். களையான முகத்தில் எப்பொழுதும் நிரந்தரமாய் ஒரு புன்னகை,
எதைப்பற்றியும் கவலைப்படாத ஆராயும் விழிகளுடன், வெள்ளை உடையும், கைப்பெட்டியுமாய் அவ்வூருக்குள் நுழைந்தான் சாரங்கன். அத்தோட்டப் பள்ளிக்கு ஆசிரியராக...!

முதல் சந்திப்பிலேயே வீரய்யா கங்காணிக்கு சாரங்கனை மிகவும் பிடித்துப் போனது..! உவகையுடன் வரவேற்று, சொந்த உற‌வினன்போல் மனதால் பாவித்து உள்ளன்புடன் உதவிகள் செய்தார். அவர் அடிமனம் பல மனக்கணக்குகள் போட்டது.

நாளடைவில் நெருங்கிப் பழகி சாரங்கனைப்பற்றிய தகவல்களை விசாரித்தார். தாய் தந்தையை இளவயதிலேயே இழந்து தமக்கையின் ஆதரவில் வளர்ந்து, படித்து ஆசிரியரான கதையைக் கேட்டுத் தெரிந்து கொன்டார்.

காலம் கனிந்தது. சாரங்கன் மிகவும் நல்ல வாலிபன், எந்த தீயப்பழக்கங்களும் இல்லாத குண‌சாலி என்பதை நன்கு உறுதிபடுத்திக்கொன்ட வீரய்யா சாரங்கனின் சம்மதம் பெற்று தனக்கு வேண்டியவர்களுடன் சாரங்கன் வீட்டாரிடம் சம்பந்தம் பேசி, சாரங்கனை தமது மருமகனாக்க ஆவன செய்தார்.

அதற்கும் இடைப்பட்ட காலத்தில், தோட்டத்தில் சாரங்கனுக்கும் கண்ணம்மாவுக்கும் இடையில் சில சந்திப்புகள் நிகழ்ந்தன. முதல் சந்திப்பிலேயே அவர்களின் பார்வைகள் ஒருவரை ஒருவர் அளவெடுக்க. உள்ளத்துள் ஒருவரை மற்றவர் வியந்து ரசிக்க, அவர்களின் மனமது ஒன்றிணைந்துகொள்ள‌ , தோற்றங்கள் மட்டும் மெள‌னமாய் விடைபெற்றுப்பிரிந்தன.

அவர்கள் இருவருக்குமே மனதுக்குள் ஒருவருக்கு மற்றவரை மிகவும் பிடித்திருக்க, பெரியோர்களால் அவர்களின் திருமண பந்தம் நிச்சயிக்கப்பட, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததைப்போல் அவர்களின் மனமெல்லாம் இனித்தது.

ஒரு நல்ல நாளில் அத்தோட்டமே வியக்க, பிரமாண்ட பந்தலிட்டு, பாராட்டும் படியாய் விருந்து வைத்து வெகு விமரிசையாய் சாரங்கன், கண்ணம்மாவின் திருமண வைபவத்தை நிகழ்த்தி நெகிழ்ந்தார் வீரய்யா கங்காணி.

வீரய்யா கங்காணியின் மகளாய் மலர்ந்த கண்ணம்மா, சாரங்கனின் மனதிற்கினிய மனைவியாய், அத்தோட்டத்தின் "வாத்தியார் வூட்டம்மா"வாகிப்போனாள்.        

அவர்களின் வாழ்க்கையில் பொங்கிப் பெருகியது மகிழ்ச்சி வெள்ளம், நாட்கள் நகர்ந்து, மாதங்கள், வருடங்கள் என உருண்டோடின,  அழகிய ஆண்மகனுக்கு தாயானாள் கண்ணம்மா, அப்போதுதான் யாருமே எதிர்பாராது......!


தொடரும்......!

Saturday, March 21, 2015

முல்லை ‍ - பகுதி 2

அது ஓர் அழகான தோட்டம். பார்க்கும் இடமெங்கும் பசுமை கொட்டிக் கிடந்தன. சேறு கலந்து செந்நிறத்தில் நீரோடும் மிகப்பெரிய ஆறும் அங்குண்டு. அதில் நிறைய நீர்வாழ் உயிர்களுமுண்டு...

தோட்டத்தின் வடக்குத் திக்கில் இரு கைகளால் இணைத்து அணைக்க முடியாதபடி பெரிய அரச மரம். அங்கே ஊர்க்காவலுக்கென‌ சிறிய தகரக் கொட்டகையில் இரண்டடி உயரத்தில் சிமென்டு சிலையாக முறுக்கிய மீசையும் முண்டக்கண்களுமாய் ஓங்கிய அரிவாளோடு ஐயன் முனியாண்டி அழகாக, அவருக்குப் பக்கத்திலேயே பரியும் பைரவரும்.

அவர் அத்தோட்ட மக்களின் ஏகோபித்த பக்தியைப் பெற்ற காவல் தெய்வம். குழந்தை வரம் வேண்டி அரச மரம் சுற்ற வரும் பெண்களிலிருந்து, திருமண‌மாக, நோய் குண‌மாக, சத்தியப் பிரமாண‌ம் எடுக்க என, அவர் அத்தோட்டத்தின் பரிபாலன தெய்வமாய் அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.

 ஒற்றையடிப் பாதைகள், ஒற்றுமையான மனிதர்கள்..!

எளிமையும் எழிலும் ஒருங்கே நர்த்தனமிட்டுக் கொன்டிருக்க, அகிலனின் "பால்மரக் காட்டினிலே " வரும் காட்சிகளும் கதாமாந்தர்களும் அங்கே உயிர்பெற்று நடமாடிக்கொண்டிருந்தனர்.

சந்திரா இப்படி கேவலமாக நடத்திய‌ அவள் மாமியார் கண்ணம்மா தனது பால்ய பருவத்தில் அத்தோட்டத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்தவர், அவர் தந்தை வீரய்யா அந்த தோட்டத்தில் கிராணியாக பணியாற்றியவர், முரட்டுத் தோற்றம் கொன்ட நல்ல மனிதர், தன் ஒற்றைப் பெண்ணின் மேல் உயிரையே வைத்திருந்தார்.

வீரய்யா, கண்ணம்மா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வனப்புமிகுந்த மங்கையாக வளர்ந்து வருவதைக் கண்டு மிகவும் பெருமிதம் கொன்டார். அடிக்கடி பட்டிணம் சென்று தன் மகளுக்கென ஆபரணங்கள் வாங்கிவந்து அவளுக்கு அணிவித்து அழகு பார்த்தார். தந்த நிறத்திலான தன் மகளை தங்கத்தால்

இழைத்து அழகு பார்த்தார்.

கண்ணம்மா, தன் பெயருக்கேயுரிய  கண்ணனின் துருதுருப்போடு வளர்ந்தாள். அந்தத் தோட்டத்திலேயே மிகவும் அழகான பெண்ணாக வலம் வந்தாள். எப்போதும் இராஜ குமாரியைப்போல் அவளை தோழிகள் புடை சூழ வலம் வந்தாள். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக அவர்களின் நாட்கள் நகர்ந்தன.  

"வெயிலுக்கு காட்டாம வளர்த்தாகளா ? உன்னை வெள்ளாவியில் வெளுத்து எடுத்தாகளா" என இன்றைய சினிமா திரைக்கவிகள் கேள்வி தொடுப்பதைப் போன்று அன்றே அத்தோட்டத்தின் பல காளையர்களுக்கும் அழகிய கண்ணம்மாவை காண்கையில் கிறுகிறுத்துப் போனது. இந்த அழகான கிளியை எவன் கொத்திக்கினு போகப்போறானோ என மனதுள் பொருமல். கூடவே அவள் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா எனும் ஏக்கமும்.....

அதற்கும் ஒரு நாள் வந்தது கண்ணம்மாவின் வாழ்வில் அடுத்த கட்டமாக...!

Wednesday, March 18, 2015

முல்லை

தொலைக்காட்சியில் அந்த பிரபல நடிகையின் சுவாரசியமான சின்னத்திரைத்தொடர் அரங்கேறிக்கொன்டிருந்தது. சந்திரா அதில் மெய்மறந்து தன்னைத் தொலைத்திருந்தாள்.

வீட்டிற்கு வெளியில் அவளுடைய ஐந்து வய்து பையனும், 3 வயது பெண்ணும் மண்ணில் விளையாடிக்கொன்டிருந்தனர், வீட்டினுள் தொட்டிலில் 8 மாத இளைய மகன் தூங்கிக்கொன்டிருந்தான்.

வெளியே திண்ணையில் அவளின் மாமியார் கண்ணம்மா, 80 வயது மூதாட்டி, காய்ந்த கம்பளிப்பூச்சியாய், சுருங்கிய தேகத்துடன் கண்பார்வை குறைந்து ஓர் ஓரத்தில் சுருண்டிருந்தார். சொந்தமாக இயங்க முடியாதபடி தள்ளாமை அவரை ஆட்கொன்டிருந்தது, எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை நாடியிருந்தார். அப்பொழுது மதியம் 2.00 மணிக்கு மேல், இன்னமும் அவர் மதிய உணவை உண்ணவில்லை, பசி வயிற்றைக்கிள்ளியது.

சின்னத்திரைத் தொடர் முடிந்த பின்னர் தான் அவர் மருமகள் சந்திரா எழுந்து வந்து உணவுத்தட்டில் கொஞ்சம் சாப்பாட்டை வைத்து அவரிடத்தில வீசுவாள், அதுவரை வெளியிலேயே சுருண்டு படுத்திருந்தார், நேரம் ஆக ஆக பசி தாங்க முடியவில்லை, கண்களை செருகிக் கொன்டு மயக்கமாக வந்தது, தாள‌ முடியாத கண்ணம்மா வாய்விட்டு அலறத் தொடங்கினார்.

தொலைக்காட்சி தொடருடன் ஒன்றிப்போயிருந்த சந்திராவுக்கு அடக்க முடியாத முடியாத எரிச்சல் பொங்கி வந்தது, "இந்தக் கிழவிக்கு எவ்ளோ கொழுப்பு? பட்டினி போட்டு சாவடிக்கிறேன்னு ஊரக் கூட்டி ஒப்பாரி வைக்குதே! எனக் கருவியவாறு அவரைக் கொல்லும்  கோபத்துடன் வெளியில் வந்தவள் கண்ணில் ஓர் ஓரமாகக் கிடந்த துடைப்பம் தென்பட்டது. அது தன்னை அழிக்க வந்த சாத்தானின் மறு உருவம் என்பதை உண‌ராது ஆத்திரம் கண்ணை மறைக்க அதைக் கையிலெடுத்தவள்   வயதானவள், தன் மாமியார் எனவும் பாராது, அந்தத் துடைப்பத்தால்  க‌ண்மண் தெரியாது கண்ணம்மாவை சாத்தத் துவங்கினாள்! ஆத்திரத்தில் அறிவிழந்தவளுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை! பசி மயக்கத்தோடு அடியும் விழ, துடைப்பத்தின் குச்சிகள் கண்ணம்மாவின் காய்ந்த தோலைக் கிழித்துச் சொருகிக் கொன்டு இரத்தம் கசிய, பெருங்குரலெடுத்து ஓலமிடத் தொடங்கினார் கண்ணம்மா.

அதே நேரத்தில் அவ்வீட்டிற்கு அருகாமையில் நடந்து சென்று கொன்டிருந்த   முல்லை சத்தம் கேட்டு அவ்வீட்டை நோக்கி ஓடினாள், அங்கே அவள் கண்ட காட்சி அவளின் இரத்தத்தை கொதிக்கச் செய்தது, அவள் கண்ணம்மாவுக்கு உறவுக்காரியும் கூட! கண்ணம்மா முல்லைக்கு அத்தை முறை. சந்திரா அவள் மாமியாரை துடைப்பத்தால் அடிப்பதைப் பார்த்து வெகுண்டு போனாள்! கண்ணம்மாவிற்கு ஏற்கனவே பசி மயக்கம், இதில் மூர்க்கமான அடிகள் வேறு, , அவர் கேசம் களைந்து, உடையும் நெகிழ கண்ணீர் வழிய தரையில் துவண்டு சரிந்து கிடந்தார். 

முல்லை சினங்கொண்ட சிம்மத்தைப்போல கர்ஜித்துக்கொன்டு சந்த்ராவை நெருங்கினாள் . நாலெட்டில் அருகில் நெருங்கி சந்திராவின் கையில் பிய்ந்து தொங்கிக் கொன்டிருந்த துடைப்பத்தை பிடுங்கி தூர வீசினாள், சந்திராவின் தலைமுடியைக் கொத்தாக கையில் பற்றிக்கொன்டு, இப்படியும் அப்படியுமாக பளார் பளாரென அவள் கன்னத்தில் நாலு அறைவிட்டாள்!

எதிர்பாராத அத்தாக்குதலில் திக்குமுக்காடிப் போனாள் சந்த்ரா! "ஏண்டி நாயே, அநாதையா கிடந்த உனக்கு வாழ்வு கொடுத்து இந்த வீட்டுக்கு மகாராணியா ஆக்கின மாமியாருக்கு இது தான் நீ குடுக்கிர மரியாதையா ? "இருடி! வெளியூர் போயிருக்கிற என் மாமன் வரட்டும், உன்னைய‌ வெளக்க மாத்தால அடிச்சு, வேற‌ பேரு வக்கச் சொல்றேன்" என ஆத்திரத்துடன் கத்தியவள், கீழே சுருண்டு கிடந்த கண்ணம்மாவை  தூக்கித் தோளில் சாய்த்துக்கொன்டு, "உனக்கு இதெல்லாம் தேவையா? என கண்கள் கசிய புலம்பிக்கொன்டே அருகிலிருந்த தன் வீட்டிற்கு கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.

கண்ணம்மாவை சுத்தப்படுத்தி, அவரது காயங்களுக்கு ம‌ருந்திட்டு, உணவளித்துப் படுக்கச் செய்தாள். பக்கத்தில் அமர்ந்து கண்ணம்மாவையே பார்த்துக் கொன்டிருந்தவள் கண்கள் குளமாக நினைவுகள் பின்னோக்க அந்நாளில் தான் கண்ட கண்ணம்மாவின் கம்பீர உருவம் நிழலாடியது.....!


அதேவேளை தன் வீட்டிற்கு வெளியே ஓங்கிப் புறப்பட்ட சந்திராவின் மரண ஓலம் அந்த வீதியையே கதிகலங்கச் செய்தது....!!!!

தொடரும்....