.

.
.

Friday, May 9, 2014

ஜஸ்டீனா..!!

மனித வாழ்க்கை மகத்தானது அது தனக்கும் பிற‌ர்க்கும் பயன்விளைவித்து மகிழும்பொழுது..! அழுதுகொன்டே பிறக்கிறோம், அழுதுகொன்டும், சிரித்துக்கொன்டும் காலத்தை முடித்து, முடிந்தால் சில வாரிசுகளை விட்டுவிட்டு, வாழ்வை முடித்து பிற‌ரை அழவைத்துப் புறப்படுகிறோம் .

ஆறடியில் முடிந்துவிடும் வாழ்க்கை என்பதை உணர்ந்த பொழுதிலும்  பணம், புகழ், அந்தஸ்த்திற்காக அல்லும் பகலும் பாடுபடுவதே நிரந்தரமாகிவிட்ட  சூழலில், இம்மண்ணில் எத்தனை பேருக்கு சுயநலம் களைந்து பொதுநலம்  பேணும் தெய்வீககுணம்  வாய்த்திருக்கிறது ?

ஒரு மனிதன் கண்முன்னே துடிதுடித்து  உயிருக்குப் போராடும்போதும், இரத்தம் சிந்தி நோகும்போதும் அவனைக் காப்பாற்றுவதை விட அவன் அனுஅனுவாய் சித்திரவதைப்பட்டு வாடுவதை காணொலி தொலைபேசியில் படமெடுத்து அதை யுடியூப்பிலும் பகிர்ந்து ரசித்து மகிழும் அரக்க மனங்களல்லவா இப்போது பூமியில் மலிந்துள்ளன !!

இவர்களுக்கு மத்தியில் தேவதைகளாய் சில அன்பு மனங்கள் மனிதவடிவில் நம்மிடையே வலம்வருவதுமுண்டு , நம் வாழ்வில் ஒளியேற்றிச் செல்வதுமுண்டு, பிரதிபலன் பாராது பிறர் வாழ்வில் நன்மை செய்து மகிழ்வதுமுண்டு ,அவர்கள் நம்மை பிரிந்து சென்றாலும், காலச்சுழற்சியில் கரைந்து போனாலும்,  அவர்கள் ஏற்றிவைத்த தீபமும், பதித்துச் சென்ற தடங்களும் மனவானில் என்றென்றும் சுடர்விட்டுப் பிரகாசித்து  நாம் வாழும் காலம்வரை அவர்களை நம் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொன்டுதானிருக்கிறது, அப்படி இந்த வாழ்வில் தீபமேற்றிய ஒரு தேவதையின் கதை இது....!

நடுத்தர குடும்பம், கல்விதான் எதிர்காலம் எனும் நிலை, இடைநிலைப்பள்ளிப் படிப்பு முடிந்தது, மேற்படிப்புக்கு பெரிய அளவில் செலவு செய்யும் வசதியில்லை..! கன‌வு கண்ட உயர்நிலைக்கல்வி தடைப்பட்டுவிட்டது !! தோல்வி மனதைக் குடைந்தது, இரவில் கண்ணீரால் தலையணை நனைந்தது, ஆறுதல் சொல்லவோ, வழிகாட்டவோ, பொருளாதாரத்தை விரட்டியே பொழுதுபோக உழைக்கும் பெற்றோரால் இயலவில்லை..!

பதின்ம வயது ஆகிவிட்டது, இன்னும் எத்தனை காலம் தான் நம் உயர்வுக்காக பெற்றோர் உழைப்பை சுரண்டுவது.. ? ந‌ம் வசதிக்காக அவர்கள் பண‌த்தை பிடுங்கித்தின்பது !  இறுதி முடிவு, படிப்பை உதறிவிட்டு வேலைக்கு செல்வது.

 "எட்டாத பழம் எப்பொழுதுமே புளிக்குமல்லவா ! அப்படித்தான், கரும்பாய் இனித்த கல்வி, வேம்பாய் கசந்து வாழ்க்கையை வேறு பக்கம் திசைதிருப்பிவிட்டது. இடைவேளையில் பயின்ற கணிணி சான்றிதழ்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தன‌ . வீடு , பள்ளி என்ற வாழ்க்கை மாறி வீடு, தொழிற்சாலை   என்ற நிலை ஏற்பட்டது..!

கல்வியின்பால் இருந்த ஈர்ப்பு மங்கி மறையலாயிற்று. நாம் மிகவும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் ஈடுபாடு காட்டும் எந்த ஒன்றும் அது உயிரோ, பொருளோ நம்மை விட்டு விலகிவிட்டால் அதன் பிரிவின் தாக்கம் நிச்சயம் நம்மனதைக் காயப்படுத்தும். ஆனால் நாள‌டைவில் அது பெரிய முக்கியத்துவம் இல்லாத ஒன்றாய் மாறிவிடும். தோல்வி, ஏமாற்றம், ஏக்கம், சோகம், பிரிவு எல்லாமே இவ்வகைதான். காலம் ஒரு மிகச்சிறந்த மருந்து. அதற்கு மனதின் காயங்களையும் ஆற்றும் வல்லமையுண்டு..!

இரப்பர் கையுறை தொழிற்சாலையில் அலுவலகத்தில் வேலை. அலுவலகத்தில் பெரும்பான்மை சீனர்களும், அவர்களுக்குச் சற்றுக் குறைவாய் ம‌லாய்க்காரர்களும், ஓரிரு இந்தியப் பணியாளர்களும் பணியாற்றினர். ஆனால் தொழிற்சாலை ஊழியர்களில் பெருமளவு இந்தியர்களே..! பெரிய தலைகளில் (அதிகாரிகளில் ) ஒருவர்கூட இந்தியரில்லை..!

நாட்கள் நகர்ந்து கொன்டிருந்தன, அப்போது ஒரு செய்தி வந்தது ஏற்றுமதி இறக்குமதிப் பிரிவுக்கு (Logistic Department)  ஒரு இந்தியர் மானேஜராக (உயர் அதிகாரியாக‌) வரப்போகிறார் என்ற செய்திதான் அது..!

குறிப்பிட்ட நாளும் வந்தது, அவர் வந்தார், ஆறடி உயரத்தில், செம்மை நிற‌த்தில், நடுத்தரமான உடல்வாகோடு, ஆனால் அவர் ஆண‌ல்ல..! ஒரு பெண்..! அதுவும் அழகான நடுத்தர வயதுடைய ஓர் இந்தியப் பெண்..! அவர் பெயர் ஜஸ்டினா..!

ஜஸ்டினா மிகவும் அழகாக இருந்தார். அலைஅலையாய் தோள்வரை புரளும் கூந்தல், மேல் நாட்டு பெண்களை நினைவுறுத்தும் நடையுடை பாவனை, அலங்காரங்கள், நுனி நாக்கு ஆங்கிலம். ஆழ்ந்த சாக்லேட் நிற ஆல்மென்ட் கண்கள், மெலிந்த உதடுகள், கூரான நாசி. ஒட்டு மொத்த தொழிற்சாலையும் அவரைத்திரும்பிப்பார்த்து ரசித்தது. அவர் அதிகாரியாய் பணியிலமர்ந்தார்.  அலுவலகமே அவரிடம் நட்பு பாராட்டி மகிழ்ந்தது.

ஏற்றுமதி இற‌க்குமதிப் பிரிவு என்பது சாதாரணமல்ல, தொழிற்சாலையிலேயே மிகவும் பிரச்சனையான பகுதி அதுவே, தொழிற்சாலைகளுக்கு வரவேண்டிய பொருட்களையும், அனுப்ப வேண்டிய பொருட்களையும் திறம்பட நிர்வகித்து அவரவரிடம் சேர வேண்டிய பொருளை உரிய நேரத்தில் சேர்ப்பிக்கத்தவறினால் அலுவல் பிரிவு அதிகாரிகளிலிருந்து தொழிற்சாலை நிறுவனர் வரை அனைவருக்கும் பதில் சொல்லி ஆகவேண்டும், திட்டு வாங்கவேண்டும்.

பிரச்சனை மிகுந்த அந்த வேலையில் யாரும் நிலைப்பதில்லை, ஓரிரு மாதங்களிலேயே ஓடிவிடுவார்கள்..! ஆனால் ஜஸ்டினா திறம்பட பணியாற்றினார், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை சரியான முறையில் செயல்பட வைத்தார், எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்தார், யாரும் அவரை குற்றம் சாட்டவோ, பழி சொல்லவோ அவர் வாய்ப்பை வழங்கவேயில்லை, அதையும் மீறி தம் மேலாதிக்கத்தை காட்ட முனைந்து அவரிடம் வீண்சண்டைக்கு வந்து அலுவலகத்தில் அனைவரின் முன்பாக அவரிடம் சத்தமிட்ட ஒரு சீன அதிகாரியை "இங்கே வந்து குரைக்காதே, நீ பேச வேண்டியதை  எம்டியிடம் பேசு" என்று திட்டி தலைகுனியவைத்து திருப்பி அனுப்பினார்..! நல்ல தைரியசாலி..!          

அவரிடம் பேசியது கிடையாது, சந்திக்கும் தருணங்களில் ஒரு புன்ன‌கை நலம் விசாரித்துப் போகும். ஓரிரு மாதங்கள் கடந்த பின் ஒருநாள் அவர் தன் உதவியாள‌ரிடம் வேலைமுடிந்ததும் என்னை அவர் அறைக்கு அழைத்து வரச் சொன்னதாக தகவல் வந்தது. என்ன விடயம் என்று சொல்லவில்லை, பயம் மனதைக் கவ்வியது, எங்களின் தொழிற்பிரிவுகள் வெவ்வேறு, இருந்தும் ஏன் அழைக்கிறார் ? திட்டப் போகிறாரோ என்று பயமாக இருந்தது.

வேலை முடிந்து அலுவலக‌ம் காலியாகிக்கொன்டிருந்தது. கைப்பையை எடுத்துக்கொன்டு அவர் அறைக்கு தயங்கித்தயங்கிச் சென்றேன். அவர் குளிர்சாதன அறையில் அமர்ந்திருந்தார், பூச்சாடியில்  வெளீர் மஞ்சள் நிறப்பூங்கொத்துக்கள்  மேசை ஓரத்தில் அவரைப்போலவே அழகாக..!
   
"வா சிவனேஸ்" நான் தயங்கி நிற்பதைப் பார்த்து கனிவான பார்வையும் மென்மையான புன்னகையோடும் வரவேற்றார். அவர் எல்லோரிடமும் ஆங்கிலம் தான் பேசுவார். இன்று அழகான தமிழில் ..!!

தான் கவனித்துக்கொன்டிருந்த கோப்புகளை ஓரமாய் எடுத்து வைத்துவிட்டு "உட்கார்" என்றார், 'ஆமாம் எவ்வளவு நாளா இங்கே வேலை செய்யுற" ? எனக்கேட்டார், பதிலை அறிந்து கொன்டதும் "நீ விஞ்ஞானப் பிரிவுல (science stream) படிச்சியாமே ? அப்புறம் ஏன் மேற்படிப்புக்கு போகல ? அக்கறையுடன் கேட்டார். "இல்லை வாய்ப்புக்கிடைக்கலை அதான்" என்றதும், தலையை மெல்ல ஆட்டியவாறு வாய்ப்பு எப்படித்தானா கிடைக்கும் ? நீதான் முயற்சி செய்யனும், மேற்படிப்பு படிக்கனும், நல்ல நிலைக்கு உன்னை உயர்த்திக்கனும், இப்படியே சில நூறு வெள்ளிகளுக்காக வாழ்க்கையை அடகு வைத்துவிடக் கூடாது என அவர் சின்ன சின்ன வாக்கியங்களில் தன் கருத்தை தெரிவித்துப் பேசிக் கொன்டிருந்தார். எனக்கோ அவர் என்பால் கொன்ட அக்கறை மனம் நெகிழச்செய்தது. தலையில் ஒளிவளையத்தோடும் இற‌க்கைகள் இரண்டோடும் ஒரு தேவதை என் முன் பேசிக்கொன்டிருப்பது போல் தோன்றியது. வாய்மூடி அவர் பரிவுடன் கூறுவதை மனதால் உள்வாங்கிக் கொன்டிருந்தேன்.

அவர் அதிகம் பேசவில்லை ஒரு பத்து வாக்கியம் அவ்வளவுதான். கடைசியாக புறப்படுமுன் "அந்த வானத்தைப்பார் இன்றிருக்கும் மேகங்கள் நாளை அங்கே நிலைப்பதில்லை, மனித வாழ்வும் அப்படியே, மாறாத எதுவும் நிலைப்பதுவுமில்லை, முன்னேறுவதுமில்லை..! உடனே உனக்குத்தகுந்த மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாளில் உன்னை இங்கே நான் பார்க்கக்கூடாது" என அன்பாகக் கூறி வ‌ழிய‌னுப்பினார்.

வீடு திரும்பினேன், அவர் கூறியவை மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக்கொன்டேயிருந்தது. கைம்மாறு கருதா அவர் பரிவு மனதை மிகவும் பாதித்தது பலர் சொல்வதை புற‌க்கணித்துவிடும் மனதானது. ஏனோ யாரோ ஒரு சிலர் சொல்வதை மட்டும் உள்வாங்கிக்கொன்டு மீள்பார்வை செய்து மகிழ்கிறது.அதன்படி நடக்கவும் விழைகிறது.

அதன் பின்பும் ஜஸ்டினா, பார்க்கும்போதெல்லாம் எப்பொழுதும் போல்  ஒரு புன்னகைதான் செய்வார், ஆனால் என்மனமோ " நான் சொன்னதை நீ மதிக்கவேயில்லையே" எனத் திட்டுவதைப்போல் கற்பனை செய்து பயம் கொள்ளும்.

கல்வி வேண்டாம்..!  என்று புறக்கனித்த நிலை போய், ஜஸ்டினா இத்தனை பரிவுடன் சொன்னாரே என்பதற்காகவே ஏதாவது பகுதி நேரமாகப் படிக்க வேண்டும் எனும் முயற்சியில் பகுதி நேர‌ கணிணி டிப்ளோமா படிப்புக்கு விண்ணப்பித்து, அதை ஜஸ்டினாவிடம் தேடிப் போய் சொன்னதும் சிரித்தபடி தலையசைத்தார்.

வீட்டில் பெற்றோர் உன் சம்பள‌த்தை  உன் படிப்புக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள் என்ற‌னர் . பகுதி நேரக் கல்வி என்பது அத்தனை சுலபமல்ல..! வேலை முடிந்து மாலை ஏழு மணிக்குமேல் பொதுப் பேருந்தில் பயணித்து, பசி, தூக்கம் இரண்டும் கலந்த மயக்கத்தோடு படித்து, அயர்வோடு வீடு திரும்பி..! :(

காலம் தன் கடமையை மிகச் சரியாகவே செய்கிறது. சில காலம் கழிந்து வீட்டைப்பிரிந்து, உணவு, உடை, உறைவிடம் தந்து தாய்க்கோழி தம் இறக்கைக்குள் பிள்ளையைக் காப்பதுபோல் தங்கள் கவனத்தில் வைத்துக் காப்பாற்றிய பெற்றோரைப் பிரிந்து சிங்கைக்கு பயணம். ஒரு நாள் இரு நாள் அல்ல! ஒரு சில வருடங்களுக்கு, கல்வியும், பணியும் அங்கே கரைசேர. தனிமையான, த‌ன்னம்பிக்கை நிறைந்த யாத்திரை போன்ற வாழ்வு அது.! 

மீண்டும் திரும்பிய பின் இன்றுவரை ஜஸ்டினாவை சந்திக்க இயலவில்லை. ஆனால், ஒவ்வொரு முறை வானத்தை நோக்கும்போதும், நகரும் மேகங்களூடே அவர் முகம் ஆசிர்வதித்து புன்னகைப்பதை இன்றும்
தரிசிக்கமுடிகிறது...!


ஒரு தீபம் தன் ஒளியை இழக்காமலேயே பல தீபங்களை ஏற்றும் வல்லமை கொன்டது, சில மனிதர்களும் அவ்வாறே, பழகினாலும், பார்வையாள‌ர்களாகவே நிலைப்பவர்களும் உண்டு, பிறர் வாழ்வில் நுழைந்து மாற்றங்கள் நிகழ்த்துபவர்களுமுண்டு...!

சில தெய்வீக உள்ளங்களும் அப்படித்தான். இந்த கணிணி வாழ்க்கை எவ்வளவோ நல்ல உள்ளங்களை இதயத்தில் நட்பாகப் பதிவு செய்தாலும் "ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை" எனக் கண்டித்தும் "எழுத்துலகில் உன் ஆளுமையை ஆழ‌மாகப் பதிவு செய்" எனவும் "உன் பதிவுகள் முண்ணனி இதழ்களை அலங்கரிக்க வேண்டும்" என்றும் வாழ்த்தும் தேவதைகளையும் இது பெற்றிருக்கிறதே எனும் வியப்போடும் நன்றியோடும் விடைபெறுவோம்...! :)
        

Friday, May 2, 2014

மந்திரத்து மாங்கனி..!






இந்நவீன கணிணி யுகத்தில் பலர் அமானுக்ஷ்யங்களை நம்புவதில்லை, ஆவி, பேய், பிசாசு, பூதம், மந்திரம் மாயம், இறை நம்பிக்கை யாவற்றையும் எள்ளி நகையாடும் காலமும் கூட. உண்மையில் இவ்விடயங்கள் அளவுக்கு மீறி மிகைப்படுத்தப்பட்டு போலி என வகைப்படுத்தப்பட்டுவிட்டது. இவ்வுலகில் நம் ஐம்புலன்களால் தரிசிக்க‌ இய‌லாத மர்மங்களும் உள்ளன‌ என்பதை ஆராய்ந்து பார்த்தால் நம்மால் உணர இயலும். இயற்கையின் ஒருபுறம் அழகும் ஆற்றலும் என்றால் அதன் மறுபுறம் மர்மங்களும் அமானுக்ஷ்யங்களும் என்பது உண்மை. நாம் நம்ப மறுப்பதால் அவை உண்மையல்ல என்றாகிவிடுவதுமில்லை, அப்படியானதொரு சம்பவமே இது.

மோகனும் நளினியும் ஆதர்ச‌ தம்பதிகள். காதலித்து மணம் புரிந்துகொன்டவர்கள். மோகன் மேலதிகாரியாக பணியாற்றிய தொழிற்சாலையில் நளினி அலுவலகப்பிரிவில் அதிகாரியாய் பணியாற்றினாள், மோகனின் வசீகரமான தோற்றமும், தொழில் நேர்த்தியும் நளினியை ஈர்க்க, நளினியின் நளினமும் அடக்கமும் மோகனைக் கவர்ந்தது. நளினி வசதியான குடும்பத்துப் பெண். மோகன் இளம்வயதிலேயே தந்தையை இழந்த நடுத்தர குடும்பத்து வாலிபன், வசதி குறைவு. எனவே நளினியின் குடும்பம் மோகனுக்கு பெண்கொடுக்க மறுக்க, நளினி இரவோடிரவாக வீட்டைவிட்டு வெளியேறி மோகனிடம் தஞ்சமடைந்தாள். இருவீட்டார் மனக்கசப்புடன் நளினி மோகன் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் அதே தொழிற்சாலையில் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

அவர்களின் இல்லறஓடம் வாழ்க்கை சமுத்திரத்தில் நிதான‌மாக பயணித்துக்கொன்டிருந்தது. முதல் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பராமரிக்க அவர்களின் இருவீட்டிலிருந்தும் யாரும் முன்வரவில்லை, வெளியாரிடம் பிள்ளையை விடுவது அவர்களின் மனதிற்கு உகந்ததாகப் படாததால் நளினி தன் வேலையை கைவிட்டு முழு நேர இல்லத்தரசியானாள்.
ஒன்றன் பின் ஒன்றாய் நான்கு குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தனர். செலவுகள் அதிகரிக்க‌ வருமான பற்றாக்குறை ஏற்படத்துவங்கியது. நளினிக்கும் மோகனுக்கும் பொருளாதாரக் குறைவால் நிறைய சன்டை சச்சரவுகள் ஏற்படத்துவங்கின.

சில காலங்களில் நளினி சூழ்நிலைக்கேற்ப தனனை தயார்படுத்திக்கொன்டு சிக்கனமாக வாழ்க்கையை செயல்படுத்தத்துவங்கினாள், ஆனால் மோகன் மனதிலோ, வளமாக வாழ வேண்டும், முடிந்தால் ஒரே நாளில் பணக்காரனாகிவிடவேண்டும் எனும் பேராசை உள்ளத்தை அரித்தெடுத்தது..!

எல்லோரும்  நாடும் எளிய வழியாக நான்கு நம்பர் துணையை மோகனும் நாடிட வ‌ருமானத்தில் ஒரு பகுதி நான்கு இலக்க எண் கடைக்காரருக்கு போக ஆரம்பித்தது. அது போதாதென்று எங்கெல்லாம் சாமியாடிகளும், பூசாரிகளும், குறிசொல்பவர்களும் நான்கு இலக்க எண் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டாலும் உடனே அங்கே ஆஜராகி பணத்தை செலவழிக்க ஆரம்பித்து விடுவான் மோகன்.

ஒருநாள் மோகனுடன் பணியாற்றும் ஒருவர், தாம் அறிந்த சாமியார் ஒருவர் வீட்டில் வந்து பூஜை செய்தால் உடனே சகல வறுமைகளும் நீங்கி நம்பர் அடித்து பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என ஐடியா வழங்கினார்.

மோகன் உடனே நளினியிடம் கலந்து பேசி அந்த‌ சாமியாரை வரவழைத்து வீட்டில் பூசை போட முடிவு செய்தான். நளினிக்கு இதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லை. கணவனையும் தடுத்துப்பார்த்தாள். ஆனால் மோகன் காதுகளில் எதுவும் ஏறவில்லை.

மோகன் மிகவும் ஆர்வத்துடன் சாமியாரை சந்தித்தான் . அவர் நடுத்தர வயதினராக தாடி மீசையுடன் காட்சியளித்தார். மோகனின் குறையைக் கேட்டு, கண்கள் மூடி சில நிமிடம் கழித்து மோகன் வீட்டில் தீய சக்தியொன்று  இருப்பதாகவும் அதை விரட்டினால் நில‌மை சரியாகிவிடும் என்றார். பின்னர் அவர் மோகனுடைய‌ வீட்டில் பூசை செய்வதற்கு நாள் குறித்துத்தந்தார். ஒரு நீண்ட பட்டியலைத்தந்து அதிலுள்ள பொருட்களை வாங்கி வைக்கும்படி பணித்தார்.

குறிப்பிட்ட நாளும் வ‌ந்தது. பூசை அன்றிரவு நடந்தது, ஆரம்ப முதலே இதெல்லாம் பிடிக்காத நளினி குழந்தைகளை அழைத்து வைத்துக்கொன்டு ஒரு ஓரமாய் அமர்ந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தாள்.

சாமியார் பூசையை ஆரம்பித்தார், அதற்கு முன் அவர்கள் வீட்டு சாமி மேடையைக் கண்டு அதிலிருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் படத்தை எடுத்துவிடுமாறு மோகனை பணித்தார். தன் பூசை சம்பந்தப்பட்ட எதையும் சாமி மேடையில் வைக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு கட்டளையிட்டார்.

 பூசைக்கு பயன்படுத்தும் சிவப்புத்துணிகளை எட்டாக எடுத்து அதில் உரித்த வாழைப்பழம், அரிசி, இன்னும் சில பொருட்கள் சேர்த்து எட்டு பொட்டலங்கள் செய்து வைத்தார். சந்தண‌ம், மஞ்சள், அரிசி, மிளகு யாவற்றையும் குழம்பாய்க் கரைத்து வீடு முழுதும் தெளித்தார்.

நடுவீட்டில் ஹோமம் வளர்த்து வீட்டிலுள்ள அனைவரையும் வெளியேற்றிவிட்டு, நெருப்பில் ஏதோ ஒன்றைத்தூவ அடர்த்தியான வெண்புகை எதிரே இருப்பவர் முகமும் தெரியா வண்ணம் மறைத்தது. நல்லவேளை அதற்கு முன்பே நளினி வீட்டிற்கு வெளியே குழந்தைகளுடன் வந்து நின்று கொன்டாள். பூசாரி மோகனின் துணையோடு வீட்டின் விள‌க்குகள் அனைத்தையும் அடைத்தார். வீடு இருண்டு புகை மண்டலமாகிப் போனது. எல்லோரையும் வெளியேற்றிவிட்டு பூசாரி மட்டும் ஒரு மண்பானையுடன் வீட்டினுள் சென்றார். சற்று நேரத்தில் வெளியேறியவர், மூடிக்கட்டிய அப்பானையினுள் ஏதோ ஒன்று பிராண்டுவதை அனைவருக்கும் காண்பித்தார் (பானையைத் திறக்காமலேயே) அந்தப் பானையும் மிகவும் பாரமாக இருந்தது.

எல்லாம் முடிந்தது. வீட்டிலிருந்த தீய சக்தியை பானைக்குள் பிடித்து விட்டேன். இனி கட்டி வைத்துள்ள பொட்டலங்களை எட்டுத்திசையிலும் கட்டிவைத்து பூசை செய்தால் எல்லாம் நல்லபடியாகும் எனக்கூறி தட்சிணையைப் பெற்றுக்கொன்டு புறப்பட்டார் சாமியார்.

மோகனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது, சாமியார் கூறியபடியே வீட்டின் எட்டுத்திக்கிலும் ஆணியடித்து சாமியார் தந்த பொட்டலங்களை மாட்டி வைத்து தூப தீபம் காட்டி வழிபடத்துவங்கினான்.      
  
குறிப்பிட்டபடியே சில நாட்களில் மோகனுக்கு நான்கு இலக்க எண்ணில் 5000 வெள்ளிக்கு நம்பர் அடித்தது. மிகவும் அகமகிழ்ந்துபோனான் மோகன். முன்னிலும் தீவிரமாக மாட்டிவைத்த பொட்டலங்களுக்கு வழிபாடு செய்யத்துவங்கினான்.

மோகனின் நாட்கள் மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்த சில நாட்களில் நளினியின் நிலமை மாறத்தொடங்கியது. வீட்டில் யாரோ தன்னைப் பின்தொடர்வது போலவும் தான் கவனிக்கப்படுவது போலவும் உணரத்தொடங்கினாள்.பயமும், பதற்றமும் அவளை ஆட்கொள்ளத் துவங்கியது.

ஒருநாள் மதியம் வீட்டு வேலைகள் முடிந்து நளினி முன்னறையில் குழந்தைகளுடன் ஓய்வாக படுத்திருந்தாள் அவளின் 5 வயது மகன்  அவளுக்கு அருகாமையில்  அமர்ந்து பிஸ்கோத்துகளை உண்டுகொண்டிருந்தான்.

அரைகுறை உறக்கத்தில் இருந்த நளினிக்கு தன் கால்மாட்டில் யாரோ ஒரு பத்து பண்ணிரன்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது. கழுத்து முதல் முழங்கால் வரை  சிவப்பு நிறத்துணியை அவன் அணிந்திருந்தான். லேசான விழிப்பு நிலையில் தன் மகனை நோக்கி  "தம்பி அண்ணனுக்கு கொஞ்சம் பிஸ்கோத்து கொடுப்பா " என்றாள் நளினி. அவள் குரல் கேட்டு அவள் கால‌டியில் பின்புறமாக அமர்ந்திருந்த அந்த உருவம் அப்படியே முகத்தை கழுத்துப்பக்கம் திரும்பி அவளைப் பார்க்க அதிர்ந்துபோனாள் நளினி. மலாய் சிறுவனைப்போல் காட்சியளித்த அந்த உருவத்தின் முகத்தில் கண்கள் இரண்டும் இரு கருந்திராட்சைகள் போன்று முழு கருப்பாக விழிவெண்படலமின்றி காட்சியளித்தது. அந்த உருவம் அவளை நோக்கி விகாரமானதொரு சிரிப்பை சிந்த, பதறியடித்து எழுந்தாள் நளினி. பக்கத்தில் மகன் மட்டும் சாப்பிடுக்கொன்டிருக்க இப்போது அந்த சிறுவனை அங்கே காணவில்லை...!

நளினிக்கு வியர்த்துக்கொட்டியது. ஏதோவொன்று சரியில்லை என ஆரம்பம் முதலே அவள் சங்கடப்பட்டது உண்மைதான் என அவளுக்கு தோன்றியது. அந்த சிறுவனின் ஆடை, வீட்டில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பொட்டலங்களின் துணியைப் போலவே இருந்ததையும் அவள் நினைத்துப்பார்த்தாள். அதன் பின்னர் அவளின் உடல் நிலை மிகவும் மோசமாகிப் போனது, உடல் பலகீனமாகி, இரத்தசோகை பீடித்து, முகமும், நகமும் வெளுத்து, நடக்கவும் இயலாமல் படுத்தபடுக்கையானாள். 

குழந்தைகளும் நோய்வாய்ப்படலாயினர். மருத்துவச்செலவு ஏகத்துக்கும் எகிறிய்து. மருத்துவர்கள் நளினியை பரிசோதித்துவிட்டு அவளுக்கு ஒரு குறையும் இல்லை, ஆனால் இரத்த அளவு மட்டும் வெகுவாகக் குறைந்திருக்கிறது எனத்தெரிவித்தனர். வறுமையும். பிணியும் அக்குடும்பத்தை அளவுக்கு மீறி ஆட்டிவைக்க ஆரம்பித்தது.

நளினியின் பேச்சை அதுவரை கேட்காத மோகனுக்கு இதயம் துனுக்குற ஆரம்பித்தது. அதற்கு முன் இல்லாது இப்போது அவன் கண்களிலும் அவ்வீட்டின் அரவமற்ற பகுதிகளில் நிழலுருவங்கள் தென்பட, அவன் சந்தேகம் அதிகரிக்கத்துவங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூசைக்கு முன்னர் அப்படி எதுவும் அந்த வீட்டில் அவ்ர்களுக்கு தென்படவில்லை.

நளினி மிகவும் ஆரோக்கியமான பெண்மணி, திடசிந்தை கொன்டவளும் கூட. காய்ச்சல் சளி என்றுகூட நொந்தவள் கிடையாது.  இன்று இப்படியாகிவிட்டாளே என்று வருந்திய மோகன் ஒரு முடிவுக்கு வந்தான்.

குறிப்பிட்ட அந்த நாளன்று வீடு முழுதும் மஞ்சள் நீரைத்தெளித்து வீட்டின் எட்டுத்திசையிலும் கட்டிவைத்த பொட்டலங்களை

 எடுத்து ஒரு பையில் கட்டி தூர வீசினான். தனியாக எடுத்து வைத்திருந்த லக்ஷ்மி ந‌ரசிம்மர் படத்தை பூசையறையில் மீண்டும் எடுத்து வைத்து வழிபட்டான். ஆச்சரியப்படும் விதமாக இரண்டொரு நாளில் நளினி பழையபடி நலமாக நடமாடத் துவங்கினாள். குழந்தைகளும் தேறிட குடும்பம் ஒரு வழியாக சகஜ‌ நிலைக்குத் திரும்பியது...!

அதன் பின்னர் மோகனுக்கோ நளினிக்கோ நிழலுருவங்கள் எதுவும் கண்ணில் தென்படவேயில்லை...!

மே 2016 "மன்னன்" மாத இதழில் வெளிவந்த படைப்பு

Tuesday, April 29, 2014


சிவகாமியின் சபதம் -தேன் சாகரத்தில் சிறு தேனீயின் அநுபவம் 



கல்கி எனும் எழுத்துலகமேதை அடியேனுக்கு அறிமுகம் ஆக முக்கிய‌காரணியாய் விள‌ங்கிய அந்த நல்லுள்ளத்திற்கு நன்றி பல. இந்த பதிவு அந்த நட்புக்கு சமர்ப்பணம்...!

தமிழ்கூறு நல்லுலகு க(கொ)ண்ட அற்புத எழுத்துச்செல்வர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்கி எனும் பரிணாமம் கொன்ட இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் சாகித்திய அகாதமியின் விருது பெற்ற எழுத்தாள‌ருமாவார். சிற‌ந்த வரலாற்றுப்புதினங்களின் படைப்பாளியான‌ இவரின் வாழ்க்கை வரலாற்றை https://en.wikipedia.org/wiki/Kalki_Krishnamurthy வழி நாம் அறியலாம்.

"சிவகாமியின் சபதம்"  பேனா மன்னர் கல்கியின் கைவண்ணத்தில் மலர்ந்து 12 வருடங்கள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வலம் வந்து எண்ணற்ற வாசகர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற புகழ்பெற்ற காவியமாகும்.
 
தமிழ் வாசகர்களின் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற இப்புதினம் "பேனா மன்னரின்" எழுத்து ஆளுமைக்கும், அவரின் ஒப்புவமையற்ற கதை சொல்லும் பேராற்றலுக்கும் தக்க சான்றாக விள‌ங்குகிறது என்றால் அது மிகையல்ல !


பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என இக்கதையில் நான்கு பிரிவுகள் உள்ளன. முக்கியக் கதாமாந்தர்களாக பேரழகியும், பரதத்தில் கைதேர்ந்த ஆடலரசியுமாகிய சிவகாமியும் அவள் மனங்கவர்ந்த காதலனாக காஞ்சி இள‌வரசன் முதலாம் நரசிம்ம பல்லவனும் விளங்குகின்றனர். இருப்பினும் கலையும், வீரமும் நமது பெருமைக்குரிய பாரம்பரியம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென பறைசாற்றும் இவ்வ‌ரலாற்றுப் புதினத்தில் இன்னார் மட்டுமே முக்கிய கதாமாந்தர் என அறுதியிட்டுக் கூற இயலா வண்ணம் பரஞ்சோதியாரின் வரலாறு மற்றும் மகேந்திர பல்லவன் வரலாறு, நாகநந்தி வரலாறு என பல்வேறு கோணங்களாக‌ கதை வடிக்கப்பட்டு வெகு நேர்த்தியாக‌ ஒன்றுசேர்த்துப் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.


சிவகாமி, நரசிம்ம பல்லவனை முதன்மை கதாமாந்தர்களாகவும் மேலும் இவர்களைச்சுற்றி பல துணைக் கதாபாத்திரங்கள், சிவகாமியின் தந்தை தலைமைச் சிற்பி ஆயனார், நரசிம்ம பல்லவனின் தந்தையார் காஞ்சி மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்ம பல்லவனின் ஆப்த நண்பன் பரஞ்சோதி (பின்னாளில் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டு 64 நாயன்மார்களில் ஒருவராக புகழ்பெற்றவர்) மேலும் வில்லத்தனம் புரியும் கள்ள மனமும் வஞ்சக குணமும் படைத்த புத்தபிட்சு நாகநந்தி மற்றும் அவர் ச‌கோதரனும் சாளுக்கிய மன்னனுமாகிய புலிகேசி ஆகியோர் இக்கதையில் பெரும்பங்கு வ‌கிக்கின்றனர்.

பரஞ்சோதி யாத்திரை - விளையாட்டுத்தனம் நிறைந்த வாலிபன் பரஞ்சோதி கல்வி கற்று கல்விமான் எனும் அந்தஸ்தை அடைந்து தன் மாமன் மகளை மணக்க வேண்டி திருநாவுக்கரச பெருமானை நாடி சீட‌ராக இணைந்திட‌ காஞ்சி மாநகருக்கு வருகிறார், காஞ்சிவாசம் அவர் வாழ்வில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. விதிவசத்தால் அவர் புத்தபிட்சு நாகந‌ந்தியால் தனைத் தீண்டவந்த நாகத்திடமிருந்து காப்பாற்றப்பட்டு அவர் சிநேகத்தை பெறுகிறார். தொடர்ந்து சிவாகாமியை மத யானையிடமிருந்து காப்பாற்றி, அரண்மனைக் கைதியாகி, சிறைதப்பி, மீண்டும் காஞ்சி மன்னருக்கே தளபதியாகி, இளவரசன் நரசிம்மனின் உயிர்த்தோழனாகி, இறுதியில் போரின் மூர்க்கங்கள் தந்த தாக்கத்தில் சிவனடியாராகிவிடுகிறார்.
இன்று (29/4/2014) சிறுத்தொன்டநாயனார் அவர்களின் குரு பூசை தினமுமாகும்.

முதலாம் பகுதியில் பரஞ்சோதியைப் பற்றி விஸ்தரிக்கும் கதாசிரியர் கூடவே கலையும், வீர‌மும் காதல் கொள்ளும் அழகை சிவகாமி , இள‌வரசன் நரசிம்ம பல்லவன் வழியும்,  காஞ்சி மன்னனின் பராக்கிரமம், ஆளுமை, சாணக்கியம், கலையுள்ளம் ஆகியவற்றையும் அழகுறப் படைத்துச் செல்கிறார்.

காஞ்சி முற்றுகை - கலைகளின் பிறப்பிடமாக சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து கலையம்சத்தோடு காண்போர் கவனத்தை ஈர்க்கிறது காஞ்சி மாநகர்.காஞ்சி மாநகரின் ம‌கோன்னதம் உண‌ர்ந்து அதை அடைய தன் சகோதரன் நாகநந்தியின் உதவியுடன் போருக்குப் புறப்படுகிறான் சாளுக்கிய மன்னன் புலிகேசி, ஆனால் சாணக்கியத்தில் சிறந்த மகேந்திரபல்லவ மன்னனை வெல்ல அவனால் முடியாது போய்விடுகிறது. பின்னர் காஞ்சி மன்னரிடம் சமாதானத் தூது விடுக்கிறான். "யானைக்கும் அடி சறுக்கும்" அல்லவா ? கள்ளத்தனம் நிறைந்த மன்னன் புலிகேசியின் நட்பை ஏற்கக்கூடாது என இளவரசன் நரசிம்மனும் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியும், யாவரின் கருத்தையும் புற‌ந்தள்ளி புலிகேசியுடன் நட்பு பாராட்டி தனக்கும் நாட்டுக்கும் தீமை விளைவித்துக்கொள்கிறார் மன்னர் மகேந்திரபல்லவன். சாளுக்கிய ம‌ன்னனின் சாயம் வெளுக்கிறது, போர் மூள்கிறது. காஞ்சியின் வளங்கள் அழிக்கப்பட்டு, ஊர்கள் சூரையாடப்படுகின்றன. காஞ்சி மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்படுகின்றனர். அவர்களோடு நம் கதாநாயகி சிவகாமியும் அவர்களிடம் அகப்பட்டுக்கொள்கிறார்.

பிட்சுவின் காதல் ‍ - சிறைபிடிக்கப்பட்ட ஆடலரசி சிவகாமி
சாளுக்கிய மன்னனின் சூழ்ச்சியால் தெருத்தெருவாக அந்நாட்டின் நாற்சந்திகளில் ஆடவைக்கப்படுகிறாள். எனினும் சாளுக்கிய மன்னனின் சகோதரனும் ஏற்கனவே சிவகாமிக்கு அறிமுகமானவருமாகிய புத்தபிட்சு
நாகநந்தி அவளை அந்த அவலத்திலிருந்து மீட்டு அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து தன் ச‌கோதரனால் மேலும் இடர் ஏற்படா வண்ணம் பாதுகாக்கிறார். கூடவே தன் வரலாறைத் தெரிவித்து  இள‌வயது முதலே தமது இதயத்தில் பதிந்த அழகோவியம் சிவ‌காமியின் வடிவத்தைப் போன்றதுவேயாகும் எனவே தானும் அவளைக் காதலிப்பதாகக் கூறி அவள் காதலை யாசிக்கிறார். அவர் காதலை மறுத்து தான் நரசிம்மனுக்கு மட்டுமே உரியவள் என்பதில் உறுதியாய் நின்று  நாகநந்தியை நண்பராக மட்டுமே ஏற்றுக்கொள்கிறாள் சிவகாமி.

இதற்கிடையில் இள‌வரசன் நரசிம்ம பல்லவனும், தளபதி பரஞ்சோதியாரும் மாறுவேடத்தில் வந்து சிவகாமியைக் காப்பாற்ற விழைகின்ற‌னர். எனினும் அவர்களோடு ஊர் திரும்ப மறுத்து, சாளுக்கிய அரசை போரிட்டு வென்று தன்னை மீட்டால்தான் மீண்டும் காஞ்சி திரும்புவேன் என வீர சபதம் செய்கிறாள் சிவகாமி. இதைச் சற்றும் எதிர்பாராத நரசிம்மபல்லவனும் , பரஞ்சோதியும் வருத்தமும் ஏமாற்றமும் சூழ‌ நாடு திரும்புகின்றனர்.

சிவகாமியின் இச்செய்கையினால் இள‌வரசன் நரசிம்மபல்லவனுக்கு சிவகாமியின் மேல் கோபமும், வெறுப்பும் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியில் அவர் தமது தந்தை மன்னர் மகேந்திரபல்லவனின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு நாட்டு நலனைக் கருத்தில் கொன்டு பாண்டிய‌ நாட்டு இள‌வரசியை கரம்பிடித்து இரு குழந்தைகளுக்கும் தந்தையாகிறார். மன்னர் மகேந்திரபல்லவனின் மறைவைத்தொடர்ந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும் நரசிம்ம பல்லவன் முழுமூச்சாய் படைதிரட்டி ஏழு வ‌ருடங்கள் கடந்த நிலையில் சாளுக்கிய நாட்டின் தலைநகரான‌ வாதாபியின்(இன்றைய கர்நாடகா) மேல் போர் தொடுத்து சாளுக்கிய அரசை தோற்கடித்து சிவகாமியை மீட்கிறார்.              

சிதைந்த கனவு - ஊர் திரும்பிய சிவகாமி உண்மை நிலையை அறிகிறாள். நரசிம்மனை மணக்கும் தன் ஆசையில் மண்விழுந்ததை உணர்ந்து வருந்தி வாடிப்போகிறாள். தன்னை ம‌றந்து மன்னன் நரசிம்மன் வேறொருத்திக்கு சொந்தமாகிவிட்ட நிலையில் தன் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் தேடும் முயற்சியில் தன்னையும் தன்னில் குடிகொன்டிருந்த ஒப்பற்ற ஆடல் கலைத் திற‌னையும் முழுமையாய் இறைவனுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்கிறாள்  சிவகாமி. ஒரு சிற்பியின் மகளான சிவகாமி எனும் கலைப்பொக்கிக்ஷம் எந்த மனிதனுக்கும் சொந்தமாகாமல் தான் கைக்கொன்ட நாட்டியத்திறமையாலும் தன் மன உறுதியாலும் இறை அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டாள் என்பதோடு கதை நிறைவை நாடுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டது மட்டுமே முழுமையான கதை அல்ல, இதில் அட‌ங்காத பல அருமையான‌ கிளைக் கதாபாத்திரங்களும், முடிச்சுகள், திரும்பங்கள் என எண்ணிலடங்கா சுவார‌சியங்களும் இப்புதினம் முழுதும் விரவிக்கிடக்கின்றன, அவற்றை முழுமையாய் உணர இயன்றோர் இப்புதினத்தை நிச்சயம் வாசித்திட வேண்டும்.

அள்ளி அள்ளி உண்ண உண்ணத் தெவிட்டாத தேன‌முதம் போல் இன்னமுதாய் படிக்க படிக்கச் சுவையூட்டுகிறது இப்புதினம். காட்சிகள், கதாமாந்தர்களைப் பற்றிய வர்ணனைகள் யாவும் இக்கதை நம் கண்முன்னேயே நடப்பதைப் போலவே உணரச்செய்கிற‌து. கலை, வீரம், காதல், அன்பு, நகைச்சுவை, ஆன்மீகம்,  நட்பு, மாந்த்ரீகம், விவேகம் என எல்லா எல்லைகளையும் தொட்டு வாசகனின் சிந்தனையோடு பயணிக்கிறது இக்கதை...!

இக்கதையை ஆழ்ந்து வாசிப்போருக்கு நம் புராதனம் குறித்து அள‌ப்பறிய பெருமையோடு சிவகாமியை நினைக்கையில் சோகமும் நெஞ்சில் நிழலாடுவதை தவிர்க்க இயலாது.

காதல் கைகூடினால் அது வாழ்க்கையாகிவிடுகிறது, அதுவே தோல்வியடைந்தால் காவியமாகிவிடுகின்றது, சிவகாமிக்காக இதயம் கனக்க நம் கண்களும் குளமாகிவிடுகின்றன.

பி.கு : இதுவரை தமிழ்ப்பூங்காவில் அழகோவியமாக நடனமிட்டுக்கொன்டிருந்த ஆடலரசி சிவகாமி இன்றுடன் இங்கிருந்து விடைபெறுகிறார்.  :(


Thursday, April 10, 2014

தமிழ்மொழிக்கல்வியின் அவசியம்

"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன் 
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..! 

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?    
  
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். 
"இரை தேடு இறையும் தேடு" என்பது பழமொழி. எங்கும் பணம் எதிலும் பணம் என பண‌மயமாக விள‌ங்கிடும் இக்காலக்கட்டத்தில் நேர்மையான வழியில் இரைதேட‌ பணம் ஈட்டி  நலமாகவும் வளமாகவும் வாழ்வது வாழ்வின் மிகப் பெரிய சவாலாகும். எதுவுமே சுலபமாக கிடைப்பதில்லை, பாடுபட்டால் மட்டுமே பலன் காண‌முடியும். அதை நிறைவேற்றிக்கொள்ளவேயாவரும் படாத பாடுகின்றனர் . அதிலும் அரசியல் பலமிழந்த, பொருளாதார அனுகூலங்களும் குறைந்த இந்தியர்களின் நிலை சொல்லில் அடங்காதது..!  

ஆரம்ப காலங்களில் உயர் உத்தியோகங்களில் பெருமளவில் இந்தியர்கள் பணியாற்றி சிறப்பாய் வாழ்ந்தனர். இன்று அந்நிலை மிகவும் சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே, ஏன் இந்நிலை ?  நம்மிடையே சிலர் உடலுழைப்புத்தொழிலாளியாக பல மணி நேரங்கள் உழைத்து சொற்ப வருமானமே பெறுகின்றனர். ஆனால் சிலரோ நன்கு படித்து, கல்வியில் மேல் நிலை அடைந்து மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில்
 பதவி வகிப்பவர்கள் என இவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் மனம் விரும்பியபடி வாழ போதுமான பணவசதி பெற்றிருப்பர், ஆனால் உடலுழைப்புத் தொழிலாளிகளின் நிலை அதுவல்ல. அதனாலேயே பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் உயர்பதவிகள் வகிக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பில் கல்வியில் சிறந்த நிலை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புகளோடு குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற‌னர். 

Cross Cultural Issues: Academic Integrity
தற்காலத்தில் பல தமிழ்ப் பெற்றோர்களும் ஏனைய இந்திய பெற்றோர்களும் தமிழ் தவிர்த்து ஆங்கிலம், மலாய் மற்றும் சீனப்பள்ளிகளை தங்கள் குழந்தைகளுக்கான கல்வி பயிலும் களமாக தேர்ந்தெடுக்கின்ற‌னர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை விட பிற‌மொழிப் பள்ளிகளே சிற‌ந்தவை எனும் எண்ணத்தோடு செயல்படுகின்ற‌னர்.

ஆரம்ப காலங்களிலும் சரி, இன்றும் சரி பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து, பட்டதாரிகளாக தங்களை உயர்த்திக் கொன்டு உயர் பதவிகள் வகித்து வருவது கண்கூடு. தமிழ்க்கல்வி இவர்களின் உயர்வுக்கு படிக்கல் ஆனதே தவிர தடைக்கல் ஆகவில்லை.

சில காலங்களுக்கு முன் ஒரு சம்பவம், ஒரு மலாய் பள்ளியில் இந்திய மாண‌வர்களும், சீன மாண‌வர்களும் கழிவறைக்கு அருகாமையில் (உடை மாற்றும் இடமாம்!) உணவருந்த வைக்கப்பட்டனர். இது நாடள‌வில் பெரிய விடயமாகப் பேசப்பட்டு பின்னர் புஸ்வானமாய் மறைந்துபோனது, ஆனால் நாம் அதை மறந்து போகலாமா ? தமிழ்ப்பள்ளியில் இத்தகைய அவலம் எங்காவது நிகழ்ந்துள்ளதா ? பிற‌கேன் நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னுரிமை தர மறுக்கிறோம் ?

மேலும் ஒரு சம்பவம், ஒரு நாளிகைச் செய்தியாக வெளிவந்தது, வேற்று மொழிப் பள்ளியொன்றில் பயின்ற இந்திய மாணவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து விழுந்து விட்டான், படுகாயமுற்ற அவனை சீன மாண‌வன்
ஒருவன் ஆசிரியர் அறைக்கு அள்ளிச் சென்று கிடத்தியபோது அங்கிருந்த ஒரு வேற்றுமொழி ஆசிரியை "இங்கே ஏன் இவனைக்கொன்டு வந்தாய் ? எனக் கேட்டாளாம். அதற்கு அந்த சீன மாண‌வன் "அப்புறம் என்ன உன் வீட்டுக்கா கொன்டு போகனும் ? எனக் கேட்டதும், வாய் மூடி அமைதியானாளாம் அந்த ஆசிரியை. தாமத‌மாக மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அந்த மாணவன் உயிர் பிழைக்கவில்லை, வீட்டில் அவன் ஒரே பிள்ளையாம், இவையனைத்தும் நாளிகையில் வந்த செய்தி..! தமிழ்ப்பள்ளியில் இவ்வாறு நடக்குமா ? ஏன் நம் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருப்பதில்லை ?

இன்னொரு சம்பவம், சீனப்பள்ளிக்கு அனுப்பப்ப‌ட்ட ஒரு வலு குறைந்த மாணவன் அங்கிருந்த மற்ற மாணவர்களால் தாக்கப்பட்டு  சாக்கடைக்கால்வாயில் தள்ளிவிடப்பட்டான். அவனை அப்பள்ளியின் தோட்டக்காரர் காப்பாற்றினார். இது குறித்த பதிவு  http://tamilpoongga.blogspot.com/2013/08/blog-post_2.html வெளிவந்துள்ளது. அம்மாணவன் விடயத்தில் அம்மாண‌வனின் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் அத்தனை மெத்தனமாக நடந்து கொன்டிருக்கின்ற‌னர் . தமிழ்ப்பள்ளிகளில் அந்த அளவு அக்கறையின்றி இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள் என உறுதியாகக் கூறலாம், ஏன் நமக்கு இன்னும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் நல்லெண்ணம் மலரவில்லை ?

இக்கரையிலிருந்து பார்த்தால் அக்கரை பச்சையாகத்தான் தெரியும் ! அங்கே சென்று பார்த்தால் மட்டுமே அதன் உண்மை நிலை விள‌ங்கும். தன்னிடமுள்ள சிற‌ப்பை உண‌ராத கவரிமான் புற்களிலே அதை தேடுமாம்..! அதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியப் பெற்றோர்களின் மனோநிலை..!

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், இன்னும் நமது சான்றோர்கள் நமக்கென ஆக்கிவைத்துச் சென்ற இதிகாசங்கள், புராண‌ங்கள், காவியங்கள் மற்றும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இள‌வயது முதற்கொன்டே கற்றுத் தேற முடிகிறது. எந்த வேற்று மொழிப்பள்ளிகளில் ஐயா உங்களுக்கு இவையனைத்தும் கற்றுத்தரப்படுகிற‌து ? நமக்கென வழங்கப்பட்ட நல் பொக்கிக்ஷ‌ங்களை நாமே எடுத்தாளத் தவறுவதால்தானே இன்று ஆங்கிலேயன் அவற்றை புதுப்பித்து காப்புரிமை வைத்து சொந்தம் கொன்டாடுகிறான், அடையாள‌ம் இழந்த சமூகமாக நாம் ஆக வேண்டுமா ? அதற்கு நீங்கள் காரண‌கர்த்தா ஆகலாமா ?  
   
இன்னுமொரு விடயம், பள்ளிகளில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டு, அறிவுத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் என. வேற்றுமொழிப்பள்ளிகளில் பயிலும் ந‌ம்மின மாணவர்களுக்கு திற‌மை வாய்த்திருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளைப்போல் இவற்றில் நேரடியாக களமிரங்க முடியாது, மலாய், சீன மாண‌வர்களோடு போட்டியிட்டு அதையும் தாண்டி திறமையும் அதிர்க்ஷ்டமும் வாய்த்தால் ஒழிய..! போட்டிகள் அங்கே அதிகம், வாய்ப்புகளோ குறைவு, நமக்கென யார் அங்கே வாய்ப்புகளை வாழையிலையில் வைத்துப் பறிமாறப் போகிறார் நம் பிள்ளைகளுக்கு ? நமக்கேன் இந்த நிதர்சனம் புரிய மறுக்கிறது ?

இறுதியாக,சிரமப்பட்டு உழைத்து படிக்கவைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் தெய்வமெனப் போற்றப்படுபவர்கள், அவர்களுக்கு நல்லதை மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு தரமேண்டும் எனும் ஆர்வம் அதிகம். எனவே இந்தியப் பெற்றோர்கள் கல்வியோடு கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை மிகுந்த நமது பாரம்பரியம் ஆகியவற்றை முறையே கற்றுத்தேற வழிவகுக்கும் தமிழ்க்கல்வியை அவசியம் தங்களது குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.

200 ஆம் ஆண்டு தமிழ்க்கல்வியினை வெற்றிகரமாய் வரவேற்கும் நாம் , இம்மண்ணில் தமிழ்மொழிக்கல்வி மேன்மேலும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, வாழையடி வாழையாய் தழைக்க நமது இளவல்களை தமிழ்ப்பள்ளிகளில் இணைப்போம், தமிழ்மொழிக்கல்வியின் வாயிலாய் அவர்களை சிறந்த மாந்தர்களாய் வார்த்தெடுப்போம், வாழ்க தமிழ், வள‌ர்க தமிழ்க்கல்வி

ஆக்கம்

சிவ.ஈஸ்வரி
பினாங்கு

   
      

Wednesday, April 9, 2014

இருள் சிநேகிதி ‍‍-  நான்காம் பாகம்

 

முன்கதை : ஒரு பணக்கார முரடனுக்கு மனைவியாகி, அவன் சிறை சென்றதும், வேறு நாதியின்றி தன் மாமன் மகன் நாதன் வீட்டில் தஞ்சம் புகுந்தாள் சரசு. இதனால் அவள்  ச‌ந்தேகிக்கப்பட்டு சிறைமீண்ட‌ அவள் கணவனால் வெட்டிக்கொலை செய்யப்படுகிறாள் . இனி...!

ந‌டசத்திரங்களற்ற அடர் கருமை படர்ந்த வானம், ஊரே உற‌க்கத்தின் பிடியில் இரவின் நிசப்தம் மேலும் பயத்தைக்கூட்ட , இருள் மட்டுமே சாட்சியாக‌, ஒரு கோரம் கொடூரமாய் அங்கே அரங்கேறி முடிந்தது.

நாதனை வெட்டிச் சாய்த்துவிட்டு, சரசுவின் தலையைத் துண்டித்து துடிதுடிக்க கொலை செய்த இராஜன், சரசுவின் உடலில் பீறிட்டுப் பெருகிய இரத்த வெள்ளத்தை ஒரு மன நோயாளியின் மன நிலையோடு பார்த்து இரசித்துக் கொன்டு நின்றான், பின்னர் தான் வந்த வேலை முடிந்ததென்று தன் மேல் படிந்த இரத்தக் கறைகளோடும் கையில் வைத்திருந்த பாராங்கத்தியுடனும் அருகாமையிலிருந்த காவல் நிலையத்தில் சரண‌டைந்தான்.

ஏதோ பெரிதாய் சாதித்து விட்டதைப்போல் மிகவும் சாந்தமாய் மன நிறைவோடு காணப்பட்டான் இராஜன். தனக்கு உரிமையானதை அழித்தாவது பிற‌ர் அடையாமல் தடுக்கும் அவன் குணம் ஈடேறியதில் அவனுக்குப் பரம  திருப்தி.

அரைகுறை விழிப்பும் களைப்புமாய் இருந்த காவல்துறை அவனைக் கண்டு அதிர்ந்து விழித்துக் கொன்டது! விடயமறிந்து அவனை சிறையில் தள்ளிவிட்டு அவனிடமிருந்து கற‌ந்த தகவல்களோடு நாதனின் வீட்டிற்கு விரைந்தது.

உறக்கத்தின் பிடியில் மெய்மறந்திருந்த அந்த வசிப்பிடமும், அங்கே நிகழ்ந்து முடிந்த சம்பவம் அறிந்து அவசர அவசரமாய் உற‌க்கம் உதறி நாதனின் வீட்டின் முன் குவியலானது. நடந்த சம்பவம் அறிந்து அனைவர் முகத்திலும் பயமும் அதிர்ச்சியும் பிரசன்னமானது..!

காவல்துறை இரத்த வாடை வீசிய அந்த வீட்டினுள் ஐயத்துடன் அடியெடுத்து வைத்தது. முன்னறையிலேயே அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.  படுக்கை போர்வை யாவும் இரத்தம் தோய்ந்து வழிய, இரத்தவெள்ளத்தில் தன்னிலையிழ‌ந்து கிடந்தான் நாதன், சற்றே தள்ளி அது நாள் வரை அவன் உடலோடு ஒன்றியிருந்து இன்று அந்நியமாகிப்போன  அவன் கரம் துடிப்பையிழந்து சவ‌மாகியிருந்தது.

அவன் சுருண்ட கேசம் நனைந்து, அழகான முகம் வாடி , உடல் முழுதும் இரத்தகளறியால் ஈரமாகி, கண்கள் மூடி, சன்னமாய் இழையோடியது மூச்சு மட்டும்..!, காவல் துறை விரைந்து செயல்பட, அவனை அவசரஊர்தி(ஆம்புலன்சு) அள்ளிக்கொன்டு மருத்துவமனைக்கு விரைந்தது.   

அடுத்து அந்த வீட்டின் பின்னறையில் அறை முழுதும் சிவப்பு சாயத்தை கொட்டிக் கவிழ்த்ததைப்போல் ஒரே இரத்த வெள்ளம், சிவந்த நிற‌மொன்றே அங்கே பிரதானமாய் பிரவகிக்க, சிவப்புச் சமுத்திரம்போல் விளங்கியது அவ்விடம், அதில் சிதைந்த தாமரையாய் புதைந்து கிடந்தாள் சரசு ! இரவின் குளிரோடு அங்கே அலைபாய்ந்த சிறு காற்றும் இரத்த வாடையை அள்ளித் தெளித்துக்கொன்டிருந்தது.


அந்த இரத்தக் குவியலுக்கு நடுவே கைதேர்ந்த சிற்பி வடித்த அழகான சிலையொன்று சிதைந்து சின்னாபின்ன‌மானதைப்போல் அதுவரையில் பேச்சோடு செயலும், உடலும் உயிருமென‌ ந‌டமாடி இன்று பிணமாகிப்போன சரசுவின் உடல் அதுவும் தலைவேறு உடல் வேறாக..!

கண்டோர் கண்கள் கலங்கின, இரத்தவாடை முகத்தில் அறைய குடல் பெயர்ந்து வாய் வழி வந்து விடுவதைப்போல் குமட்டிக்கொன்டு வந்தது அவர்களுக்கு. காண‌முடியாதோர் கைக்குட்டையால் முகம் மூடி வெளியேறினர். கடமை ஆற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளானவர்கள் வேறு வழியின்றி தங்கள் இதயத்தை இரும்பாக்கிக்கொன்டு இரத்தத்தில் ஊறிய அவள் சிரசையும் உடலையும் அங்கிருந்து அப்புற‌ப்படுத்தி மருத்துவமனைக்கு அள்ளிச்சென்றனர்.

அதற்குப் பிற‌கு அந்தக் கொலைக்களம் சாட்சிபீடமாக மாற்றப்பட்டு, கோடுகள் கிழித்து, யாரும் பிரவேசிக்க‌ இயலாமல் தடுப்புகள் சுற்றி, புகைப்படங்கள் எடுத்து. காரியங்கள் முடிந்ததும் அந்த வீடு யாரும் உட்புகாமல் சீல் வைக்கப்பட்டது.

எல்லாம் ஓய்ந்தது. ஆளுக்கொன்றைப் பேசிக்கொன்டு, சூள்கொட்டியவாரே ஊர் களைந்து போனது. விடிய இன்னும் சில பொழுதே எஞ்சியிருக்க, தனித்து விடப்பட்ட அந்த வீட்டின் ஓர் மூலையில் புகையால் செதுக்கிய சிற்பம் போன்று சூனியத்தை வெறித்த பார்வையோடு, ஓர் உருவம் அசைவற்று அமர்ந்திருந்தது. வாழ்க்கையைத் தொலைத்து உடலிலிருந்து உயிரும் தொலைந்து விட்ட அப்பாவி சரசுவின் ஆன்மாதான் அது...!
தொடரும்...            

  

Monday, April 7, 2014

 கடுப்படிக்கும் விளம்பரங்களும், கவலைப்படும் தமிழ் நெஞ்சங்களும்...!



நம் நாட்டில் மிகப்பெரிய மூவினங்களாக அங்கீகரிக்கப்பட்டவை மலாயர், சீனர் மற்றும் இந்தியர்கள், (வெளி நாட்டுக்குடியேறிகள் தற்சமயம் அதிகரித்து வருவது வேறு ஒரு தலைவலி..!) இந்நாட்டில் திராவிட இனங்களான‌ தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்களோடு சீக்கியர்களும் வாழ்ந்து வருகின்றனர், எனினும் தமிழ் மொழி பேசும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் தமிழ் மொழி இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மூன்றாவது மொழியாக ஆங்கிலம், மலாய்க்கு அடுத்து இந்தியர்களுக்கு தமிழும், சீனர்களுக்கு மான்டரீன் மொழியும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒற்றுமையில் சிறந்தவர்கள் சீனர்கள் என்பது வெள்ளிடைமலை, தங்கள் பெயர்களிலேயே தங்களை பிரிவுபடுத்தும் சாதிப்பிரிவுகள் பல இருந்தாலும், த‌ங்கள் இனத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் மான்டரீன் மொழியை தங்கள் பிரதிநிதித்துவ மொழியாக உள‌மாற ஏற்று இந்நாட்டில் உருப்படியாய் வாழ்ந்து வருகிறார்கள், தங்களை பிரதிநிதிக்கும் மொழிக்கும் அதிக முக்கியத்துவம் ஏற்படுத்திக்கொன்டு !  இன்று சீன மொழியை யாராவது சிறுமைபடுத்திப் பார்க்க முடியுமா ? அப்படிச் செய்ய முனைந்த அரசியல்வாதிகளின் மூக்கை அவர்கள் எப்படி உடைப்பார்கள் என்பதை அரசியல் அறிந்தோர் நிச்சயம் அறிந்திருப்பர், ஆனால் இந்தியர்கள் ? 

தற்கால சூழலில் ம்லேசிய இந்தியரிடையே பல பிரிவுகள், ஆயிரத்தெட்டு அரசியல் கட்சிகள், சாதிச்சங்கங்கள் இவை தனிமனிதனுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆற்றிடும் நன்மைகள் என்ன என்பதை எல்லோரும் சிந்தித்துச் சீர்தூக்கிப்பார்க்க‌ வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு ! எனும் உண்மை தற்காலத்தில் மறக்கப்பட்டு வருவது கண்கூடு. சுயநலம், சுயலாபம் மட்டுமே பிரதானம் என இயங்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம். பொருளாதாரத்தில் உயர்ந்தோர் மேல்நாட்டு ஆங்கிலேயர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முயல்வது மறுபுறம்..!

நேற்று வடக்கு நெடுஞ்சாலையில் (பினாங்கிலிருந்து தைப்பிங் செல்லும் வழியில்) பயணித்துக் கொன்டிருக்கையில் ஒரு காட்சி, அது ஒரு ரொட்டி(பிஸ்கோத்து) விளம்பரம், பெரிய காட்சிப்பேழையாக‌ (பேனராக) வைக்கப்பட்டிருதது, அதிலே நம் நாட்டின் மூவினப் பெண்களும் அந்த பிஸ்கோத்தை உண்டுவிட்டு தங்கள் கருத்தை ஒரு வார்த்தையில் சொல்கிறார்களாம், மலாய் பெண்மணி மலாயில் ஒரு வார்த்தை, சீனப்பெண்மணி மாண்டரீன் மொழியில் ஒரு வார்த்தை, அடுத்து சேலையணிந்த ஒரு பெண்மணி ஒரு வார்த்தை சொல்கிறார் அது என்னவென்றே புரியவில்லை, காரணம் அந்த எழுத்து இந்திமொழியில் இருக்கிறது !!!.

பார்த்தீர்களா தமிழுக்கு நேர்ந்த தலைகுனிவை ?, இது மட்டுமல்ல, இப்போது பல தொலைக்காட்சி விள‌ம்பரங்களிலும் பல வகைகளில் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி இந்தியர்களில் ஒரு பிரிவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், பொருளாதரத்திலும், கல்வி நிலையிலும் மேம்பட்டு உள்ள சீக்கியர்களை மட்டுமே இந்தியர்களாக அடையாளம் காட்டும் முயற்சி தற்பொழுது பரவலாக இங்கே சிலரால்  மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் காணக்கிடைக்கும் காட்சிகளே.ஏனென்று கேட்க பாவம் இந்த அநாதைச் சமுதாயத்திற்கு ஆளில்லை...! 

ஏன் இந்த நிலை ? என்ன செய்து கொன்டிருக்கின்றார்கள் நம் பிரதிநிதிகள் ? இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு வேறென்ன வேலை ? ஓட்டுப்போட மட்டும்தான் நாமா ? நமக்கென ஒரு பிரச்சனையென்றால் இவர்கள் யாரும் கேட்க மாட்டார்களா ?

தமிழுக்கு முக்கியத்துவம் கோரப்பட‌ வேண்டும், சிங்கையில் அமைந்துள்ளதைப்போல அரசியல்ரீதியில் தமிழ் இங்கே இந்தியர்களுக்கு கட்டாய மொழியாக்கப்பட வேண்டும், மேற்கல்விகளுக்கும் தமிழ் அவசியமாக்கப்படவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் தமிழ் சார்ந்த மேன்மைகளையும், அதனால் விளையும் நன்மைகளையும் இந்தியர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசியல்வாதிகள் தமிழறிந்தவர்களாக, தமிழை வாழவைப்பவர்களாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும் ! இனிவரும் காலங்களில் இவற்றை செய்வோமா நாம் ?

Wednesday, April 2, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்....! 

பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட நோபல் பரிசாளர் (2004) வாங்கரி மாத்தாய் அவ‌ர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம் (ஏப்ரல் 1 அவர் பிறந்த தினம்) 


இவரின் நினைவாக‌ (மறைந்த தினம் : 25/9/2011) இவருக்காக வரையப்பட்ட பதிவு http://tamilpoongga.blogspot.com/2012/09/blog-post.html

நீர்வளமும் நிலவளமும் நிறைந்த நம் நாட்டில் பசுமைக்கு பஞ்சமேயில்லை, இங்கே காணும் இடமெங்கும் மரங்களும் செடி கொடிகளும், பச்சை போர்வை போர்த்திய மலை வளங்களும் நீக்கமற‌ நிறைந்து அழகாக காட்சியளிக்கும். நாட்டின் வளர்ச்சியின் பேரால் ஆங்காங்கே இயற்கைவளங்கள் சுரண்டப்படுவதும், சூரையாடப்படுவதும் உண்மைதான், எனினும் அவையனைத்தையும் தாண்டி இன்னும் மண்ணின் மகத்துவத்தை காப்பாற்ற பசுமை வளங்கள் பயன்பட்டுக்கொன்டுதானிருக்கின்றன.

இதுபோன்ற‌ இயற்கையான பசுமை அழகோடு சில சமயங்களில் மனிதர்களின் கைவண்ணங்களிலும் பூங்காக்கள், பூந்தோட்டங்கள், காய்கறித்தோட்டங்கள், செயற்கைக் காடுகள் என பசுமை பூத்து குலுங்குவதுண்டு. அவ்வகையில், அண்மையில் நம் பிரதமரும் மக்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் உபயோகிக்கப்படாத நிலங்களில் தங்கள் தேவைகளுக்கான காய்கறிகளை பயிரிட்டுக்கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டிருந்தது சிறப்பு..! எல்லோரையும் விட சீனர்களே இவ்வாய்ப்பையும் அதிகம் பயன்படுத்திக்கொள்வதை பரவலாகக் காணமுடிகிறது.

பொதுவாகவே ம‌லாய்க்காரர்கள் "கெபூன்", "டூசூன்" என நிலங்களை வகைப்படுத்தி தங்கள் தேவைகளுக்கும், வியாபாரத்திற்கும் பழவகைகளும், காய்கறிகளும் பயிரிடுவது பல காலமாகவே இங்கு நடைபெற்று வருகிறது. சீனர்கள் சொல்லவே வேண்டாம், வீட்டிற்கு முன் கொஞ்சம் நிலமிருந்தாலும் அல்லது அக்கம் பக்கத்தில் இருக்கும் யாரும் உபயோகிக்காத நிலங்களை பண்படுத்தி பலவிதமான கீரைகள், காய்கறி வகைகளை நட்டு அசத்திவிடுவார்கள்.

நம்மவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன ? ஆர்வமும் வசதியும் கொன்ட பலர் தங்களுக்கு தேவையானவற்றை பயிரிட்டு பாங்கோடு வளர்த்துவரும் அழகையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் கைவண்ணத்தில் கத்தரி, வெண்டை, மிளகாய், கீரைவகைகள், கிழங்குவகைகள், வாழை, தென்னை, முருங்கை இவற்றோடு வெற்றிலை, மல்லிகை போன்றவையும் விளைவதுண்டு.

ஆனால் இவையனைத்தும் மண்ணோடு அதிகம் உறவாடும் வாய்ப்புப் பெற்ற கம்பம், தோட்டம் மற்றும் தரை குடியிருப்புப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே, அடுக்குமாடி ,அப்பார்ட்மென்ட் மற்றும் குடியிருப்பைச் சுற்றிலும் சாலையும் சிமெண்டுத்தரைகளும் சூழ அமைந்த வீடுகளில் வாழும் மக்களுக்கு இது போன்ற வசதிகள் வாய்ப்பது குறைவே.  

நாமும் சிலகாலம்வரை அப்படித்தான் வாழ நேர்ந்தது, இறையருளால் மிகவும் அழகான வீடு, அனைத்து வசதிகளுடனும் அமைந்திருந்தது இருப்பினும்  அங்கே நிலவசதி மட்டும் கிடையாது..! சுற்றிலும் சாலைகளும் சிமென்டுத்தரைகளுமாகவே அமைக்கப்பட்டிருந்தன. என்ன செய்வது ? கொஞ்சம் பூந்தொட்டிகளை வாங்கி வைத்து அதில் பூச்செடிகளை நட்டு வைத்து மகிழவேண்டியிருந்தது. அதிர்க்ஷ்டவசமாக‌ அண்மையில் குடியேறிருக்கும் வீடோ சுற்றிலும் நிறைய நிலவசதிகளோடு அமைந்தது, மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பிறகென்ன நம்ம தோட்டக் கலைத் திறமையை காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது...! :)

புற்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்து எதையும் சேர்க்காமல், கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் நிலங்களைக் கொத்தி நீர்பாய்ச்சி மண்ணை பண்படுத்தி பாத்திகள் அமைத்து நான்கு வரிசை மரவள்ளிச் செடிகள் ந‌ட்டாகிவிட்டது. அவை நட்ட இருமாதங்களில் கையகள இலைகளை செடிமுழுதும் நிறைத்துக்கொன்டு தற்போது ஓரடி உயரத்தில் எட்டிப்பார்த்து சிரித்துக்கொன்டிருக்கின்றன.

மிளகாய்ச்செடிகளில் முத்து முத்தாய் முகிழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சின்னச் சின்ன வெண்நட்சத்திரப் பூக்கள் .
ஓர் ஓரத்தில் முருங்கை மரம் துளிர்த்து வருகிறது, செங்கரும்பும், கறிவாழையும் மற்றொரு புறத்தில், மேலும் நிழலான பகுதியில் சிறு சிறு கன்றுகளாய் தக்காளி, கத்தரி, வெண்டைச்செடிகள் வளர்ந்து வருகின்றன. பாத்திகளின் இடைவெளிகளில் நிலக்கடலைச்செடிகள் நட்ட சில காலத்திலேயே அபரிமிதமான வளர்ச்சியுடன், இப்போது அதன் சின்னஞ்சிறு கிளைகளில் மஞ்சள் பூக்கள் மொட்டவிழ்ந்துகொன்டிருக்கின்றன.  

பொறுப்புடனும் பொறுமையுடன் நாம் செய்யும் இதுபோன்ற சிறு சிறு காரியங்களும் நமக்கு பெருமகிழ்வை அளிக்கவல்லவை. தோட்டம் அமைத்து அதில் வியர்வை சிந்தி உழைக்கும்போது அது நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. நம் கையால் நட்ட செடிகொடிகளின் பலன்கள் நமக்கு முழு மகிழ்ச்சியையும் ஆத்மதிருப்தியைத் தரும்.வாய்ப்புக்கிடைக்கும் நண்பர்கள் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

நீல வானம் மேலே படர்ந்திருக்க, காற்றின் அசைவுகள் நம்மைச் சூழ்ந்திருக்க, ஓர் ஓரத்தில் குப்பைகூளங்களை(எரிந்தபின் அவை எருவாகும்) கூட்டி சின்னதாய் ஒரு மூட்டமிட்டு சின்னத்தீ அதில் நடனமிட, மண்ணில் கால்பதித்து, நம் கையால் நாம் நட்ட செடிகளுக்கு நீர்பாய்ச்சும்போது , ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று என  பஞ்சபூதங்களும் நம்முடன் உறவாட‌, இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக நாம் மாறிவிடும் நிதர்சனத்தை நேரடியாக உண‌ரச்செய்யும் அந்தத‌ தருணங்கள் அனுபவத்தால் மட்டுமே அடையக்கூடிய வாழ்வின் உன்னதங்கள்...!