.

.
.

Saturday, December 28, 2013

இருள் சிநேகிதி...!




 அழகான குடியிருப்பு. நிறைய தமிழ் மக்கள் பழமை மாறாமல் அன்னியோன்யமாய் வாழும் பகுதி, அங்கே இயற்கையும் வஞ்சனையின்றி தமது செல்வங்களை வாரி இரைத்திருந்தது , அழகான பச்சைப் பசுமையான மலைகள் (அழகிய மலைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை எனும் உண்மை மறந்த மனித இனம் இப்போது முன்னேற்றம், நாகரீகம், வளர்ச்சி எனும் பெயரில் மலைகளை துகிலுரித்து, கரையானை விடவும் கேவல‌மாக அவற்றை அரித்தெடுத்து புவியை மாசுபடுத்தும் கோரம் நிகழாத காலம் அது...!) படகு பயணிக்கக் கூடிய பெரிய நதி, அதில் மீன்பிடித்து உணவாக்கிக் கொள்ளவும், வாழ்க்கைத்தேவைகளுக்கு நீரெடுத்துக் கொள்ளவும் வசதி, ஆங்காங்கே சுறுசுறுப்பான மாந்தர்களின் கைவண்ணத்தில் பூத்தும், காய்த்தும் குலுங்கும் குட்டி குட்டி காய்கறித்தோட்டங்கள்.

அங்கே வாழ்ந்த வேலய்யன் குடும்பத்தில் தாய் தந்தையர் அற்ற நிலையில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் அடைக்கலம் புகுந்திருந்தாள்  சரசு. அவளைப் பார்த்தாள் 20 வயதுப் பெண் என்று யாருக்குமே தோன்றாது! மிகவும்  இளமையான தோற்றம். அடர்த்தியான சுருள் கேசமும்,  சந்தண நிறமும் இலட்சண‌மான முகமும் வாய்த்தவள், கனிவான பார்வை, அமைதியான புன்னகை என ஊரிலுள்ள ஏனைய பெண்களில் தனித்துத் தெரிந்தாள். இருந்தும், அவள் சாயம் போன பழைய ஆடை உடுத்தி மிகவும் எளிமையான தோற்றத்துடன் வேலைக்காரியாக, அந்த வீட்டில் வலம் வந்து கொன்டிருந்தாள்.

வேலைய்யன் நல்ல மனிதர், ஆனால் அவர் மனைவியோ அவருக்கு நேரெதிர் குணம் படைத்த பெண்மணி.தமது தங்கையும் அவள் கணவனும் ஒரு கோர விபத்தில் பலியானதும் ஆதரவற்ற‌ நிலையில் வாடிய அவர்களின் ஒரே பெண்  சரசுவை மனித நேயத்துடன் கூட்டி வந்து தமது வீட்டில் வைத்து வள‌ர்த்தார் கனவண்டி ஓட்டுனரான வேலைய்யன். அவருக்கே ஐந்து குழந்தைகள் இருந்தும் அவர் சரசுவை ஏனைய உறவினர்கள் போல் கைவிட்டு விடவில்லை, மாறாக தன்னோடு அழைத்துவந்து தன் குடும்பத்தில் வாழ வழிசெய்தார். ஆனால் அவர் மனைவி  வீட்டு வேலைகள் அனைத்தையும் அவள் தலையில் சுமத்தினார். வேலைய்யன் கண்டித்தாலும் தமது சுபாவம் மாறாது சரசுவை காலையிலிருந்து இரவு வரை வேலை வாங்கி துன்புறுத்தினாள்.

வேலைய்யனின் ஐந்து குழந்தைகளில் மூத்தவன் நாதன், ஓரளவு படித்து முடித்து விட்டு, தமது தந்தைக்கு உதவியாக வேலைக்குச் சென்று கொன்டிருந்தான். தாயின் பிடியில் சிக்கித் தவிக்கும் சரசுவின்பால் இள‌வயது முதலே ஏற்பட்ட கரிசனம் நாள‌டைவில் காதலாக உருமாறி அவனுள் பிரவகித்துக் கொன்டிருந்தது, அவளைத் தமது தாயின் கோரப் பிடியிலிருந்து  காப்பாற்றி மணமுடித்து மகாராணிபோல் வாழவைக்க வேண்டுமென்று ஆயிரம் ஆசைகளை மனதில் சுமந்து தமது அன்பை சரசுவிடமும் , குடும்பத்திடமும் வெளியிட தக்க சமயத்தை எதிர்நோக்கி அவன் காத்திருந்த அந்த சமயத்தில் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

 அந்த ஊரில் வசதி படைத்த சண்டியராக வலம் வந்து கொன்டிருந்த ராஜனின் பார்வையில்  சிக்கிவிட்டாள் சரசு, கண்ட மாத்திரத்தில் அவளிடம் மனதைப் பறிகொடுத்தான் ராஜன். மணந்தால் அவளைத்தான் மணக்க வேண்டுமென மனதில் நிச்சயித்து  தனது குடும்பத்தாரிடம் மணம் பேச தூது அனுப்பினான். அவள் வேலைக்காரப் பெண், வேண்டாம் என அவள் குடும்பத்தினர் வலியுறுத்தி மறுத்தும் பிடிவாதமாக அவள் தான் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றான் ராஜன். சரசு எனும் அழகோவியம் அவனை முழுமையாய் ஆக்ரமித்து ஆட்டிப்படைத்தது...!

வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக திருமணம் பேசி மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தனர் ராஜனின் குடும்பத்தினர்.

சரசுவிற்கு தம்மை சுற்றி நடப்பது யாவும் அதிசயமாக இருந்தது, வெலைக்காரியாய் உழன்று கொன்டிருந்த அவளை திடீரென ஒரு பணக்காரன் மண‌முடிக்க முன்வந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது...! ராஜன், அஜானுபாகுவாய் பெரிய சிவந்த கண்களோடு பார்க்க

அச்சமூட்டும் உருவ அமைப்பை பெற்றவன். அவனிடம் அன்பு தோன்றியதோ இல்லையோ, அத்தையிடமிருந்து விடுதலை பெற‌வாவது இந்த திருமணம் அவசியம் என்பதை உணர்ந்து திருமணத்திற்கு சம்மதித்தாள் சரசு.

வேலைய்யனுக்கு ராஜனை அறவே பிடிக்காது, ஊரிலுள்ள வம்பு சண்டைகளுக்கெல்லாம் அவனே தலையாய் நிற்பவன் என்பதால். இருந்தாலும் தன்னிடம் பெண்கேட்டு வந்த அவனின் பணிவு, அவன் கண்களில் தெரிந்த மரியாதை அவர் மனதையும் கவரவே செய்த்து எவ்ளோ பெரிய பணக்காரன்! கொஞ்சமும் பந்தா இல்லாமல் எத்தனை பணிவு..! வேலைய்யன் திருமணத்திற்கு தமது முழு சம்மதத்தையும் தந்தார். திருமண செலவுகளுக்கு என ராஜன் கொடுத்த பத்தாயிரம் வெள்ளி வேலைய்யன் மனைவியை மனங்குளிர வைத்தது. ஒருவேளை உணவுக்கும் வாடியிருந்த சரசுவிற்கு ஊரே வியக்க திருமணம் நடந்தது.மொத்ததில் அனைவரும் மகிழ்ந்திருந்தனர், ஒரே ஒரு ஜீவனைத் தவிர..!


அது இளவயது முதலே அவள் பால் அன்பு கொன்டு அவளை மணமுடிக்கக் காத்திருந்த நாதன் !  என்ன செய்வது விதி வலியது அல்லவா ?, இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...! அதை யாராலும் மாற்ற‌ இயலாது...! இதயத்தில் யாரென்பதை மனிதன் முடிவு செய்தாலும், வாழ்க்கையில் யாரென்பதை காலம் தான் முடிவு செய்கிறது. அன்பு கொன்ட நாதன் பண்பும் நிறைய கொன்டவன், சரசுவிற்கு கிடைக்கப்போகும் நல்வாழ்க்கைக்கு அவன் குறுக்கே நிற்க விரும்பவில்லை  மன‌ம் வருந்தினாலும் வெளியே சிரித்து அவனும் மண வேலைகளில் பங்கெடுத்துக் கொன்டான். அதுதான் அவன் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு. அவனும் ஏன் யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை ஒரு கோரம் மிக விரைவில் அர‌ங்கேற‌ப் போகிறது என்பதை....!

No comments: