.

.
.

Friday, September 13, 2013

ஒரு காரும் சில ரகசியங்களும்...



ஜனனி, நகைச்சுவை குண‌ம் நிறைந்த வாயாடிப் பெண், நெடு நெடு உயரம், அதற்கேற்ற உடல்வாகு. உருண்டையான முகம், மலர்ந்த விழிகளும், மருதானியாய் சிவந்த கன்ன‌ங்களுமாய், குட்டியாய் மூக்கு, குவிந்த அதரங்களோடு, தோள்பட்டை வரை கிராப்பு கூந்தல் நெளிய, அவளொரு அழகிய தேவதை...!






அவள் வீட்டில் அவள்தான் செல்லப்பெண். ஓரளவு வசதியான குடும்பம்.அவளுடன் பிற‌ந்தது ஒரே ஓர் அண்ணன் மட்டுமே, அவன் பெயர் கோபி . அடடா..! பாசமலர்கள் என எண்ணிவிடாதீர்கள், இருவரும் எந்நேரமும் ஒருவருக்கொருவர் வம்பு பிடித்துக்கொன்டு திரியும் துவேக்ஷமலர்கள் !

இத்தனைக்கும் இருவருக்கும் வயது இருபதுக்கு மேல். அப்பா உண‌வுக்கடை முதலாளி, அம்மா இல்லத்தரசி, கோபி நல்லபடி படிப்பை முடித்து வேலைக்குப் போய்க்கொன்டிருந்தான், ஜனனியும் SPM முடித்து ஒரு தொழிற்சாலையில் குமாஸ்தாவாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஜனனிக்கு பொன்னாபரண‌ங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவள் வருமானம் அவள் வீட்டிற்கு தேவைப்படவில்லை. ஆத‌லால், ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பளத்தில் விதவிதமான தங்க நகைகளை வாங்கி மாட்டிக்கொள்வாள்.

அவள் காதின் ஓரங்களில் வரிசையாய் ஒரு பத்து பண்ணிரன்டு குட்டி வளையங்கள் அணிவகுக்க நடு நாயகமாய் வளையத்தோடு ஜொலித்திருக்கும். கழுத்திலே சின்னதாய் இதய சின்னம் பொறித்த சங்கிலி, அப்புறம் கொஞ்சம் பெரிய V வடிவ பட்டை நெக்லஸ், நீள‌மாய் ஒரு வெந்தய சங்கிலி கூடவே ஒரு கையில் ஒற்றைப்பட்டை கைச்சங்கிலியும் மறுகையில் வரிக்காப்புகள் நான்கும் அணிந்து, கைவிரல்கள் அனைத்திலும் வித‌விதமான மோதிரங்கள், சில விரல்களில் அவை இரண்டாகவும் இருந்தன, இப்படியாக எப்போதும் நகைகடை விளம்பர மாடல்போல பளபளவென ஜொலிப்பாள் ஜனனி.

தன்னையும் தான் அணிந்திருக்கும் நகைகளையும் பிறர் பிரமிப்புடன் பார்ப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அது தன் மரியாதையை உய‌ர்த்துவதாய் ஒரு நினைப்பு. சிலர் அவள் காதுபடவே, "அம்மனுக்குத்தான் நகைகளை அள்ளிப்பூட்டி அலங்காரமாய் ஊர்வலம் விடுவார்கள், இதுகளும் நகைகளை வாரி இறைத்துக்கொன்டு இப்படி அலையுதுகளே" என பொறாமையுடன் புற‌ம்பேசுவதை கேட்கையில் அவளுக்கு புள‌ங்காகிதமாக இருக்கும். பின்னே அம்மனைப்போல அப்டின்னு சொல்லிட்டாய்ங்களே, இருக்காதா மகிழ்ச்சி !!!

அவள் அம்மாவுக்கும், கோபிக்கும் இவள் இவ்வாறு நகைக்கடையாக நடமாடுவது அறவே பிடிக்கவில்லை. எல்லாம் பாதுகாப்பு பயம்தான்...! கோபி "நகைக்கடை" என்றே அவளை எப்போதும் எள்ள‌ல் செய்து வம்பிழுப்பான்.

அவள் தாயோ " நீ வெளியில் நடமாடும் பெண், இப்போது வெளியில் அத்தனை பாதுகாப்பு இல்லை, இத்தனை நகைபோட்டுக்கொன்டு திரியாதே !, ஆபத்து, பெண்னாய் இலட்சண‌மாய் காதில் ஒரு சிறிய தோடு, கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி, கைகளில் ஒரு சின்ன கைச்சங்கிலி, இன்னொரு கையில் ஒரு சிறிய கைகடிகாரம், ஒவ்வொரு கையிலும் ஒரு விரலில் மட்டும் ஒரு சிறிய மோதிரம் அணிந்தால் பார்ப்பதற்கு எத்தனை அழகாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் ? இப்படி நகைகளை வாரிக்கொட்டிக் கொன்டா அலைவது ?  என நல்ல முறையில் அன்பாகவும் , சில சமயங்களில் கடுமையாகவும் அறிவுரை கூறுவார்.  ஆனால் அதையெல்லாம் ஜனனி கேட்டாள்தானே ? அம்மாவின் புலம்பல்களை செவிடன் காதில் ஊதிய சங்கு போல அப்படியே புற‌க்கணித்து விட்டு சென்றுவிடுவாள். அவள் தந்தையின் செல்லப் பிள்ளை என்பதால் அவள் தந்தை அவளுக்கு சாதகமாகப் பேசி, அவள் தாயை வாயடைப்பார்.    

என்னதான் ஜனனிக்கும் அவள் அண்ணனுக்கும் ஆயிரம் வம்பு சண்டைகள் இருந்தாலும், அவன் தன் தங்கையை கண்ணை இமைபோல பாதுகாத்து வந்தான். அவள் வெளியே எங்கேயும் தனியே சென்றுவர அனுமதிக்க மாட்டான்,  திட்டிக்கொன்டேயாவது அவள் வேலைக்குச் செல்லும் போது அழைத்துச் சென்று, அவள் வேலைமுடிந்து வீடு திரும்பும் போது அவளுக்காக‌ பேருந்து நிலையத்தில் தனது பெரிய RXZ மோட்டாருடன் காத்திருந்து வீட்டிற்கு அழைத்து வருவான். அவள் தனியாக  வெளியில் செல்ல நேரிட்டால் பாதுகாப்பாக அவளை அழைத்து சென்று விட்டு அழைத்து வருவான்.  அவன் ஒரு பொறுப்பான அண்ணன். அவளும் தனது சம்பளப் பணத்தில் கணக்குப் பாராது அவள் அண்ணனுக்கு செலவழிப்பாள், எல்லாம் கொஞ்ச நேரம்தான், அப்புறம் மீள‌வும் போர்தான், இப்படியாக காலம் சென்றுகொன்டிருந்தது...

கோபி சிற‌ப்பாக பணியாற்றியதால் அவன் வேலை செய்த நிறுவன‌ம் அவனுக்கு பதவி உயர்வளித்து ஒரு மாத பயிற்சிக்காக அவனை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது, அண்ணன், புற‌ப்பட்ட பின்தான் அவன் அருமையை உண‌ர்ந்தாள் ஜனனி, தந்தையால் அவளுக்கு உதவ முடியவில்லை, தனியாக வேலைக்குப் போய் சொந்தமாக வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அவளுக்கு.    

அண்னனின் மோட்டாரில் ராணிபோல பேருந்து நிலையத்துக்கு வரும் அவள் இப்பொழுதெல்லாம் தனது வீட்டிலிருந்து பொது பேருந்து எடுத்து தொழிற்சாலை பேருந்து பயணிக்கும் பிரதான சாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்து வேலைக்குச் செல்வாள், மீள‌வும் வீடு திரும்புகையிலும் அதே கதைதான். அவள் அண்னன் ஜப்பானுக்கு புறப்படும் முன்பே " ஏய் ந‌கைகடை மரியாதையா நகையெல்லாம் களட்டி வச்சிட்டு வேலைக்கி போ, இல்லே வீட்டுக்கு வந்தவுடன உனக்கு பேயறைச்சதான்" என பெரியண்னன் தோரனையில் மிரட்டி விட்டு சென்றான், "சரி சரி பார்க்கலாம் "என்றாளே தவிர நகைகளை களைய அவளுக்கு மனமே வரவில்லை ! இப்படியாக இவள் நகைவண்டியாக நகர்வ‌லம் வருவதை உன்னிப்பாக சில கண்கள் அவதானித்து வந்தன
.    
அன்றும் அதுபோலவே வேலைமுடிந்து அயர்வுடன் தொழிற்சாலை பேருந்திலிருந்து இறங்கி பொது பேருந்துக்காக காத்திருந்தாள்,அப்போது.....

தொடரும்....