.

.
.

Friday, August 2, 2013

வேற்றுமொழிப்பள்ளிகளும், இந்தியப் பெற்றோர்களின் மனோநிலையும்...!




அண்மையில் நாட்டில் நடைபெற்ற‌ ஒரு சம்பவம் இந்நாட்டின் ஒட்டுமொத்த இந்தியர்களையும் புண்படுத்தியதோடு ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது. எஸ்கே  ஸ்ரீபிரிஸ்தானா  எனும்  தேசிய மொழிப்பள்ளியில்  இந்திய மற்றும் சீன மாணவர்களை கழிவறை அருகே (உடை மாற்றும் இடமாம்!?) உணவருந்தச் செய்த கொடுமை சம்பந்தப்பட்ட ப‌ள்ளி ஆசிரியர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது! இக்குற்றச்செயலை புரிந்தவர்களுக்கு சரியான தண்டனை கோரி போராட்டத்தில் பொதுமக்கள்! வழக்கம்போல் பேசாமடந்தைகளாய் அரசியல்வாதிகள்!.

 அது ஒரு தேசிய மொழி ஆரம்பப்பள்ளி, அதில் பயிலும் மாணவர்கள் 7 லிருந்து 12 வய‌துக்குட்பட்ட சிறுவர்கள். சொந்தமாக முடிவெடுக்கும் வாய்ப்பற்றவர்கள் சிறுவர்கள், அவர்கள் தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொற்படி நடக்கவேண்டியவர்கள். அவர்களை சரியான முறையில் பெற்றோரும், ஆசிரியர்களும் வழிந‌டத்துவதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல! . நாம் அனைவரும் அடங்கிய இந்த சமுதாயம், நம்மை ஆளும் இந்நாட்டின் அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. ஏனெனில் இன்றைய சிறுவர்களே நாளைய இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ண‌யிப்பவர்கள். வருங்காலத்தில் அவர்கள் நல்ல முறையில் முன்னேறி இந்நாட்டை வளமான பாதையில் வழி நடத்தவும் முடியும், குற்றவாளிகளாகவும், வன்முறையாளர்களாகவும் மாறி இதே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவும் முடியும்...! இந்தச் சிறுவர்களுக்கு தக்க நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். அதற்கு அவர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இச்சம்பவம் பற்றி யோசிக்கையில் சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வேற்றுமொழிப் பள்ளி ஒன்றில் பயின்ற ஓர் இந்திய மாணவனுக்கு நிகழ்ந்த கொடுமை நினைவுக்கு வந்தது. வெளியில் வராத செய்தி இது.

அது ஒரு இந்தியர்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதி அங்கே பல குடும்பங்களோடு காவேரி அக்காவும் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரின் கணவர் ஒரு ராணுவ அதிகாரி, சரவாக்கில் பணியாற்றிக்கொன்டிருந்தார். வருடத்தில் ஓரிரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள், மூத்தவனுக்கு 8 வயது, இளையவனுக்கு 7 வயது.

காவேரி அக்கா, குள்ளமாக, சற்று தடித்த தோற்றத்துடன் முன்பற்கள் இரண்டும் சற்று தூக்கியவாறு இருப்பார், பழகுவதற்கு இனியவர். அவரின் மூத்த மகன் நல்ல கொழு கொழுவென்று தாட்டிகமாக வீரனைப்போல் இருப்பான், ஆனால் இளையவனோ மிகவும் சிறிய உருவத்துடனும், பரிதாப முகத்துடனும் காட்சியளிப்பான். அவனுக்கு சரியாக பேசக்கூட வராது. திக்கி திக்கித்தான் ஓரிரு வார்த்தைகள் பேசுவான், பயந்த‌ கண்கள், இதழ் ஓரங்களில் எப்போழுதும் எச்சில் வழிந்து கொன்டிருக்கும்.. அந்த இரு குழந்தைகளையும் காவேரி அக்கா அவர் கணவர் விருப்பப்படி சற்று தொலைவிலிருந்த சீனப்பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டிருந்தார். மூத்தவன் அப்போது இரண்டாம் ஆண்டில் பயில, இளையவன் முதலாம் வகுப்பில்.

ஒரு நாள் அப்பள்ளியில் பயிலும் சில துக்ஷ்ட சீன‌மாணவர்கள் மூத்தவனுக்குத் தெரியாமல் அவன் தம்பியை அப்பள்ளியின் ஒதுக்குப்புற‌மான இடத்துக்கு அழைத்துச் சென்று அவனிடமிருந்த பண‌த்தைப் பிடுங்கிக்கொண்டு அவனை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.  மறைவான‌ பகுதியாதலால் அச்சிறுவனின் அவலக்குரல் யாருக்கும் எட்டவில்லை, அவனை சரமாரியாக  தாக்கிய பின் அந்த தீயவர்கள் அந்த அப்பாவி சிறுவனை அருகிலிருந்த பள்ளியின் சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு விட்டு ஒன்றும் நடவாதது போல் அவரவர் வகுப்புக்கு சென்றுவிட்டனர்.

அந்த கால்வாய் அகலமானது, ஒரு வளர்ந்த மனிதரின் இடுப்பள‌வு ஆழம் கொன்டது, எப்போதும் அதில் கொஞ்சம் கருமையான அழுக்கு நீர் தேங்கி இருக்கும், அந்த கால்வாயில் விழுந்த அந்த சிறுவனின் இடது கை முறிந்து போனது, தலையின் முன்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கால்வாயில் சுருண்டு விழுந்து கிடந்தான் அச்சிறுவன், அவன் நல்ல‌ நேரம், அப்போது அவ்வழியாக அந்த கால்வாயை சுத்தம் செய்ய வந்த அப்பள்ளியின் தோட்டக்காரர் (இந்தியர்) கால்வாயில் அழுதவாறே கிடந்த சிறுவனைக் கண்டு பதறிப்போய், உடனே கால்வாயில் இறங்கி அவனை தூக்கிக்கொன்டு வெளியே வந்தார்.

உடல் முழுக்க காயங்களோடு, முகம் வீங்கி, உதடு கிழிந்து கிடந்த அச்சிறுவனை அழுக்கு, நாற்றம் எதையும் பாராது, நெஞ்சோடு அள்ளி அணைத்துக்கொன்டு தலைமை ஆசிரியர் அறைக்கு கொன்டு சென்றார், அங்கே அப்பள்ளியின் தலைமை ஆசிரியன், அக்குழந்தை உயிரோடு இருப்பதை உறுதி செய்து விட்டு, "இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளி முடிந்துவிடும் பெற்றோர் வந்து கவனித்துக்கொள்வார்கள் எனவே அதுவரை அவனை அவனுடைய வகுப்பறையில் விட்டுவிடு எனப் பணித்திருக்கிறான்..! (ஒரு வேளை தன் சொந்த இனமான சீனக்குழந்தையாயிருந்தால் அவன் அப்படியொரு முடிவை எடுத்திருப்பானா என்பது தெரியவில்லை ! ) தோட்டக்காரர்  திகைத்துப்போனார், மீண்டும் குழந்தையை தூக்கிக்கொன்டு அவனுடைய முதலாம் வகுப்பறையை தேடிக்கொன்டு ஓடினார், அவனின் வகுப்பாசிரியை எலலோருக்கும் மேல்! அவள் அச்சிறுவனின் மேலுள்ள சாக்கடை அழுக்கால் வகுப்பறை நாறிவிடும் எனக்கூறி அவனை பள்ளி விடும்வரை பள்ளி உணவுச்சாலை (காண்டீனில்) விட்டுவிடும்படி கூறியிருக்கிறாள், யாருக்கும் அவனுக்கு உதவவேண்டும் , முதலுதவிச்சிகிச்சை வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை, என்ன காருண்ய மனமோ புரியவில்லை! சே என்றாகிப்போனது தோட்டக்காரருக்கு, இருந்தும் அச்சிறுவனை தூக்கிக்கொன்டு உண‌வுச்சாலைக்கு கொன்டு சென்றார், அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தி தனது துவாலையால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை துடைத்துவிட்டார். அவன் காயங்களிலிருந்து நிற்காமல் வழிந்து கொன்டிருந்த இரத்தத்தை சுத்தம் செய்தார். பள்ளி விடும் வரை பொறுமையோடு அவன் அருகில் அமர்ந்து அவனை பாதுகாத்தார் அந்த நல்லவர்..!

பள்ளி விட்டதும், அவன் அண்ணன் வெளியில் வந்து தன் சகோதரனின் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய்  நின்றான். அவர்களை அழைத்துச்செல்ல வந்த காவேரி அக்கா தனது மகனின் நிலையைக் கண்டு பதறிப்போனார். உடனடியாக அவன் வகுப்பாசிரியரை சென்று கண்டார், அவர் படிப்பறிவற்றவர், தமக்குத் தெரிந்த ஓரிரு மலாய் வார்த்தைகளைக்கொன்டு "அப்பா பசாய்"? (என்ன நடந்தது) ? என்று வினவ, கொஞ்சமும் அக்கறையில்லாமல் "தத்தாவ்" (தெரியாது) எனக்கூறி கதையை முடித்துவிட்டாள் அந்த பொறுப்பற்ற வகுப்பாசிரியை...! காவேரி அக்காவுக்கு என்ன நடந்ததென்று புரியவில்லை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், கீழே விழுந்து விட்டான் எனக்கூறி உடைந்திருந்த மண்டை காயத்திற்கு தையலும், முறிந்த‌ கைக்கு கட்டும் போடப்பட்டு சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டான் அச்சிறுவன். சட்டம் தெரியாத, உலக நிலவரங்கள் புரியாத காவேரி அக்கா அமைதி காத்து விட்டார், அதே இன்று போலிருந்தால், முகநூல், ஊடகங்கள், நாழிதழ்கள், காவல்துறை புகார் என சரியான பதிலடி அந்தப் பள்ளிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்த காவேரி அக்கா நடந்த சம்பவத்தை பற்றி கூறினார், அதை கேட்க மிகவும் வேதனையாக இருந்தது, அதோடு அப்பிரச்சனையை விட்டு விட்டீர்களா அக்கா ? என  பொறுமையிழந்து நான் கேட்க, காவேரி அக்கா , இல்லை உடனே சின்னவனை( தனது இளைய மகனை அவர் அப்படித்தான் செல்லமாக அழைப்பார்) அந்த சீன பள்ளியிலிருந்து நிப்பாட்டி தமிழ்ப்பள்ளியிலே சேர்த்துட்டேன் என்றார், " ஓ அப்ப  ரெண்டு பேரும் இப்ப தமிழ்ப்பள்ளியில படிக்கிறாங்களா அக்கா ?  என ஆர்வத்துடன் கேட்க அவர் கொடுத்தார் பாருங்கள் ஒரு பதில்! என்னை திக்கு முக்காடச் செய்து விட்டது அவர் சிந்தனை !

"இல்லை, இல்லை பெரியவன் அதே சீன ஸ்கூல்லயே தான் படிக்கிறான்...! என்ன இருந்தாலும் சீனப்பள்ளியில் படிச்சா சீனங்களோடு கலந்து சீக்கிரமா முன்னுக்கு வரலாம் இல்லையா ?"
நான் வாயடைத்துப்போனேன், என்னே ஒரு தன்மானம்! சுயகெளரவம்!
வீரம்! விவேகம்! நமக்கு...!!!!
  

             
   
சிவனேசு,
பினாங்கு