.

.
.

Friday, July 19, 2013

42ம் நம்பர் வீடு...! - இரண்டாம் பாகம்


 கல்பனா தனது வாழ்வில் நேர்ந்த சம்பவத்தை விவரிக்கிறாள்....


அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும்,குழந்தைப்பருவம் கடந்து துறுதுறுவென இயங்கும் சின்னஞ்சிறு சிறுமியாக வலம் வந்து கொன்டிருந்த சமயம். பெற்றொருக்கு ஒரே பெண் வாரிசு என்பதால் செல்லம் வேறு சற்று அதிகம், அந்த வயதிலும் பால் புட்டியில் பால் கலக்கி மடியில் படுக்கவைத்து புகட்டுவார் அம்மா.

என் குடும்பம் நடுத்தரமான குடும்பம், அப்பாவும் அம்மாவும் தங்களின் குடும்பத்தை எதிர்த்து மணம் புரிந்து கொன்டவர்கள், அதனால் உற‌வுகளின் நெருக்கமும் குறைவு, என்னை கவனித்துக்கொள்ள சரியான ஆளில்லாததால், திருமணத்திற்கு முன் தான் மேலாளராக பணிபுரிந்த தொழிற்சாலையிலேயே தன்னுடன் பணிபுரிந்த அம்மாவை வேலையை விட்டு நிறுத்தினார் அப்பா. என்னையும் வீட்டையும் படு நேர்த்தியாக கவனித்துக்கொன்டு அப்பா கொன்டு வரும் சொற்ப சம்பளத்தில் நிறைவாக குடும்பம் நடத்தி, அதிலேயே கொஞ்சம் சேமிக்கவும் தலைப்பட்டார் அம்மா!

ஒரு சமயத்தில், என் பெற்றோருக்கு புதிய ஆசை ஒன்று மனதில் முளைவிடத்துவங்கியது...! அப்போது வாடகை வீட்டில் குடியிருந்த அவர்களுக்கு சொந்த வீட்டில் குடியேற வேண்டும் எனும்
ஆசையாக அது மனதுள் பிரவாகமெடுத்திருந்தது, எவ்வளவுதான் சிக்கனம் பிடித்து மிச்சப்படுத்தினாலும் அதிகமாக சேமிக்க முடிவில்லை அம்மாவால், அவர் வேதனைப்பட்டு, தமது ஆதங்கத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்த ஆரம்பித்தார், அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை, விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண பகுதி நேர வேலை ஒன்றையும் அவர் நாடியிருந்தார்.

நாட்கள் ந‌கர்ந்தன‌, ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய அப்பா, அம்மாவுக்கு இனிப்பான செய்தி ஒன்றை கொன்டு வந்திருந்தார். தமது வேலையிடத்திற்கு சற்று அருகாமையிலேயே சீனரின் வீடு ஒன்று வாடகைக்கு உள்ள‌தாகவும், மிகவும் சொற்ப வாடகை எனவும் குறிப்பிட்டார், அந்த வீட்டில் குடியேறினால், கூடுதல் பணத்தை மிச்சப்படுத்தி, கொஞ்ச நாட்களில் புதிய மலிவு விலை வீடு ஒன்றிற்கு முன்பணம் செலுத்தி விரைவில் குடியேறி விடலாம், பின்னர் வாடகை செலுத்தும் பணத்தை வீட்டுக்கட்டணமாக செலுத்தி சில வருடங்களில் சொந்த வீட்டு உடமையாள‌ராகி விடலாம் என அம்மாவிடம் கணக்குப் போட்டுக் காட்டினார் அப்பா. அம்மாவிற்கு ஆனந்தம் தாள‌வில்லை, கண்கள் பணிக்க அப்பாவின் கைகளைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொன்டார். அருகில் அமர்ந்திருந்த என்னை அள்ளி அணைத்துக்கொன்டு முத்த மழை பொழிந்தார். வெகு விரைவில் சொந்த வீட்டில் குடியேறப்போகும் மகிழ்ச்சிகரமான குடும்பத்தலைவியாக காட்சியளித்தார் அம்மா...!  

அப்பா விரைந்து செயல்பட்டார், அந்த வீட்டை பேசி முடித்து, அம்மாவின் சேமிப்பிலிருந்து முன்பணம் செலுத்தி, ஒரு நல்ல‌ நாளில் பால் காய்ச்சி, சிறு பூசை செய்து முன் சரித்திரம் அறிந்திடாமல் அவசர அவசர‌மாய் அந்த வீட்டில் குடியேறினோம்... அது 42ம் நம்பர் வீடு !!!!







தொடரும்...

No comments: