.

.
.

Friday, July 19, 2013

42ம் நம்பர் வீடு...!



அருமையான பணிமனை, அவள் அவ்விடத்தில் பணியாற்றத்துவங்கி சிலமாதங்களே ஆகியிருந்தன, பிரம்மாண்டமான கட்டிடங்களையொட்டிய பின்ன‌னியில் மிகப்பெரிய மைதானம், அதையும் தாண்டி வேலிக்கு அப்பால் அடர் பச்சைக் காடுகளும் தூரத்தில் கருநீலமும் பல நீலங்களுமாய் மலைத்தொடர்களமைந்த  ரம்மியமான இயற்கைக்காட்சி. அந்தி மாலைப்பொழுது, அந்த மைதானத்தின் ஓர் ஓரத்தில் தன்னந்தனியாக திவ்யா !

திவ்யா, அவள் கண்களும், சிரிப்பும் யாவரையும் வசீகரிக்கக் கூடியவை, அடர்த்தியான முழங்காலைத் தொடும் நீண்ட கூந்தல் அவள் அழகுக்கு அழகு சேர்த்தது ஆனாள் அவள் ஒரு  பிடிவாதக்கார பெண், எத்தனை அளவு அன்புக்குக்கும் நட்புக்கும் கரைவாளோ அதே அளவு முன்கோபமும் முரட்டுத்தனமும் அவளில் மலிந்திருந்தன, மனதுள் ஆயிரமாயிரம் வருத்தங்கள் கூடுகட்டி குடைந்தாலும் வெளியில் எதுவுமே நடக்காத மாதிரி நடிக்கும் சக மனித இரகம்தான், இருந்தாலும் இயற்கையிடம் மட்டுமே  குழந்தையாக மாறி குழைவதும், அத‌ன் அழகையும் அற்புதங்களையும் கண்டு நெகிழ்வதும் அவள் வழக்கம்,  அவளளவில் அவளுக்குத் தாயாக மாறி அவளை தாலாட்டி அணைப்பது அவளுக்குப் பிடித்த அந்த இயற்கையே. இயற்கையின்பால் என்றுமே தீராத ஈர்ப்பு அவளுக்கு. அவள் மனதின் அத்தனை ஆழ அகலங்களையும், இரகசியங்கள், ஏக்கங்கள் என எல்லாவற்றையும் அவள் பகிர்வது இயற்கையிடம் மட்டுமே...!

அன்றும் அப்படியே, கீழ்வானம் அந்தி மஞ்சள் கலந்து சிவந்திருக்க, குழந்தையின் கிறுக்கல்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேகங்கள்

இரைந்திருக்க, தென்ற‌லின் குளிர்காற்று தேடிவந்து தேகம் தழுவ, காலைத்துவங்கி மாலைவரை பணியாற்றிவிட்டு இரவுக்கு வழிவிட்டு தனது ஆயிரமாயிரம் ஒளிக்கரங்களையும் உள்வாங்கிக்கொன்டு போய்வரட்டுமா என பிரியாவிடை நாடிக்கொன்டிருந்தான் சூரியன். சந்தியும், அந்தியும் சந்தித்துப் பிரியும் மோன நிலை...! மெய்மற‌ந்த பரவச நிலை, தன்னை மற‌ந்து இயற்கையோடு ஒன்றியிருந்தாள் திவ்யா,

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் 
மனிதரின் மொழிகள் தேவையில்லை, 
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் 
மனிதர்க்கு மொழியே தேவையில்லை" 

அப்போதைய சூழ்நிலை அந்த நவீன புலவனின் அருமையான வரிகளுக்கொப்ப அமைந்திருந்தது..! அந்த சமயத்தில் அவளின் த‌வநிலையைக் கலைக்கும் விதமாக‌ அருகிலே ஏதோ சலனம்...

யாரோ அருகில் நெருங்கி வந்ததைப்போல் ஓர் உண‌ர்வு ஏற்பட திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள் திவ்யா, அருகே உடன் பணியாற்றும் தோழி கல்பனா குறும்புப் புன்னகையுடன் அவள் எதிரில் நின்றிருந்தாள்...!     

கல்பனா, திவ்யாவுக்கு முன்பே சில வருடங்களாக அங்கே பணியாற்றிக்கொன்டிருந்தாள். நல்ல அழ‌கும், நிற‌மும் கூடவே நற்பண்புகளும் நிறைந்த திவ்யாவின் சம வயதையொத்த பெண், மானின் விழிகளும், கூர்மையான நாசியும், பெரிய இதழ்களும், இதய வடிவ முகமுமாக பார்ப்போரை வசிகரிக்கும் தேவதை கல்பனா. ஒரு பெண்னிடம் அழகோடு அன்பும் குடிகொன்டுவிட்டால் அவள் உலகில் தேவதை என ஆகிவிடுகிறாள். உடன் பணிபுரியும் அத்தனை பேருக்கும் பிடித்தமானவள் இந்த கல்பனா. திவ்யாவிற்கும் நெருக்கமானவளே.

அவள் அருகில் வந்தமர்ந்த கல்பனா, தன்னையே நோக்கிக்கொன்டிருந்த திவ்யாவின் கவனத்தை திசைதிருப்பி, வேலை முடிந்து நெடுநேரம் ஆகிவிட்டதே ! இருட்டவும் போகிறது, இன்னும் இங்கே தனியே அமர்ந்து காற்றிடம் என்ன கதை பேசிக்கொன்டிருக்கிறாய் ? என சிரித்தவாரே உரிமையுடன் வினவினாள். பதிலுக்கு சிநேக பாவத்துடன் அவளைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தவாரே அமர்ந்திருந்தாள் திவ்யா, பேசுவதைவிட அமைதியாகவே இருந்துவிடலாம் போலிருந்தது திவ்யாவிற்கு அப்போது.

கல்பனா மீண்டும் அமைதியைக் கலைத்து பேசத்துவங்கினாள், திவ்யா, நீ பேய்க் கதையெல்லாம் எழுற‌போலிருக்கு ? திவ்யாவிற்கு  மகிழ்ச்சியாகவும் அதேவேளை கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது, போச்சுடா பேய்க்கதை எழுதுவதை கிண்டலடித்து கலாய்க்கப்போகிறாளோ இந்த கல்பனா என கலக்கமும் பிறந்த‌து, உள்ள‌த்தில் எழுந்த உண‌ர்வுகளை லாவகமாக மறைத்துக்கொன்டு, படிச்சியா? புடிச்சிருந்ததா? என சம்பிரதாயத்திற்கு இரண்டு கேள்விகளை கேட்டு வைத்தாள் திவ்யா. நேற்று சங்கீதாவும் , ஜோஸபீனும் நீ எழுதிய ஒரு பேய்க்கதையைப்பற்றி  பேசிக்கொன்டிருந்ததைக் கேட்டேன் என்றாள். ஆமாம் நீ ஆவி பேய்களையெல்லாம் நம்புறியா திவ்யா? தன் சந்தேகத்தை கேள்விக்கணையாகத் தொடுத்தாள் கல்பனா!

ஆமாம் கல்பனா, நிச்சயமா நம்புறேன், இயற்கை பல முகங்கள் கொன்டது, தெளிவாக அறிந்து, முழுவதுமாக புரிந்து கொள்ள சற்று சிரமமான இயற்கையின் மறுபக்கம், இன்னொரு முகம் அது என நினைக்கிறேன்,

நமது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகப்பெருமான் கூட தாம் இயற்றிய சிவபுராண‌த்தில் "புல்லாகிப், பூண்டாய், புழுவாய், மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப், பாம்பாகிக், கல்லாய், மனிதராய்ப், பேயாய்க், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய்த் தேவராய் ... எனப் பிறவிகளில் பேய்க்கும் இடமளித்திருக்கிறாரே என்றாள் திவ்யா, ஏன் நீ நம்பவில்லையா கல்பனா? என கேட்டாள் திவ்யா.

அதுவரை திவ்யாவின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொன்டிருந்த கல்பனா, சிரிப்பதை நிறுத்திவிட்டு, எப்படி திவ்யா நம்பாம இருக்க முடியும் ? இளமையின் அநுபவங்கள் சிலைமேல் எழுத்துப்போல‌ என்றும் நிலைத்திருப்பவை அல்லவா ?, என் வாழ்விலேயே நானும் அநுபவப்பட்டிருக்கிறேனே என்றாள் அமைதியாக‌.  திடுக்கிட்டு திவ்யா அவளை எதிர்நோக்க‌, கல்பனாவோ, திவ்யாவின் முகம் பாராது, தனது பிரகாசமான முகம் இருள அமைதியாகி இருந்தாள், தொலை தூரத்தில் தொடுவானத்தை அவள் பார்வை தொட்டுக்கொன்டிருந்தது...           

தொடரும்... 

No comments: