.

.
.

Wednesday, July 31, 2013

ஒரு ஜீன்சு உடையும் உடையாத நட்பும்...!

சில காலங்களுக்கு முன்...!

கட்டுப்பாடுகள் நிறைந்த கட்டுப்பெட்டி குடும்பம். அந்த வீட்டு பெண்பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் பெற்றோரால் விதிக்கப்பட்டிருந்தன. இருந்தும் அவை யாவும் அந்தப் பெண்பிள்ளைகளின் நன்மைக்கே என்பதை அந்தக் குழந்தைகள் உணர்ந்திருந்ததால் பெரிதாய் ஏதும் பிரச்சனைகள் எழவில்லை அந்த குடும்பத்தில்!

அவள் அந்த வீட்டுப் பெண், அப்போது தான் எஸ்.பி.எம் பரீட்சை முடிந்திருந்தாள். அவளுக்கு ஓர் உயிர்த்தோழி, இருவரும் ஆரம்பப்பள்ளியிலிருந்து உடன் படித்தவர்கள், எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்பவ‌ர்கள், இதிலே தோழி ஓரளவு சுத்ந்திரமான குடும்பத்திலிருந்து வந்தவள், அப்பா தமிழ்ப்பள்ளி ஆசிரியர், வீட்டில் கடைக்குட்டி பெண் வேறு, சந்தர்ப்ப‌ம் கிடைக்கும்போதெல்லாம் அரட்டை அடிக்க தோழி அவள் விட்டுக்கு வந்து விடுவாள்.  அவர்களில் ஒருத்திக்கு ஒரு பிரச்சனை என்றால் இன்னொருத்தி அழையாமலே அவளுக்குத் துணையாக‌ அங்கே ஆஜராகிவிடுவாள்...! தீபாவளியென்றால் இவள் அவளுக்கும், அவள் இவளுக்கும் உடை வாங்கி பரிசளித்துக்கொள்வார்கள், இப்படியாக வெள்ளிவிழா கொன்டாடி இன்றும் தொடரும் நட்பு அவர்களுடையது, அவர்கள் வாழ்விலே ஒரு நாள்...

அவர்கள் பள்ளியின் இந்திய மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி அந்த ஊரிலிருக்கும் மலைப்பாங்கான பகுதி ஒன்றிற்கு மலையேறுதல் (hiking) செல்ல முடிவு செய்தனர், பரீட்சை முடிந்தது, இனி இடைநிலைப்பள்ளி வாழ்க்கையும் ஒரு நிறைவை நாடிவிடும், அதைக்கொன்டாட வேண்டுமல்லவா ? ஒருவகையில் இது ஒரு பிரியாவிடை கொன்டாட்டமும் கூட, 10,12 இந்திய மாண‌விகள் ஒன்றுகூடி கலந்து பேசி பிரயாணத்தையும் அவரவர் பொறுப்புகளையும்  திட்டமிட்டனர்.

அவளை உடன் வருமாறு அவள் தோழி வற்புறுத்தினாள், அவள் தாயோ "என்னது மலையேறுவதா ? முடியாது ! " என  மறுத்துவிட்டார், அவளுக்கு கவலையாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது ? தான் வர முடியாது என்பதை தோழியிடம் தெரிவித்தாள், தோழி  விடாப்பிடியாக அவள் வந்தே ஆகவேன்டும் என வற்புறுத்தி, அவள் தாயிடம் தானே வந்து பேசி சம்மதம் வாங்குவதாக வாக்களித்து அவள் வீட்டிற்கு வந்தாள், அவளுக்காக அவள் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி கோரினாள், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா ?

இறுதியில் அவள் அம்மா அனுமதி தந்தார் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு... மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடவேண்டும், வேறு எங்கும் செல்லக்கூடாது, அந்நியர் யாரிடமும் பேசக்கூடாது, அவர்களிருவரின்  உண‌வைத் தவிர அடுத்தவர் உணவை உண்ண‌க்கூடாது, கவுச்சி(மாமிச) உணவை அங்கே சாப்பிடக்கூடாது என பல கட்டுப்பாடுகள், அவள் தாய் அவர்களிடத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்காத ஒரு குறைதான்...!

கொஞ்சூண்டு அழகான தனது மகளுக்காக நிறையவே பாதுகாப்பு வளையங்கள் வரைந்தார் அவள் தாய்...!(எல்லா அன்பான தாய்க்கும் அவர் பெண் பொக்கிக்ஷ‌ம் தானே?) அனுமதி கிடைத்ததே பெரிய விடயம், எனவே எல்லாவற்றிற்கும் இருவரும் தலையாட்டி மகிழ்வோடு சம்மதம் தெரிவித்தனர். "நாளை காலை வருகிறேன், தயாராய் இரு" என அவளிடத்தில் கூறிவிட்டு, பேச்சு வார்த்தை வெற்றிகரமாய் முடிந்த திருப்தியில் வீட்டிற்கு புறப்பட்டாள் தோழி.

இவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை, அதற்குமுன் இப்படி மலையேறும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததில்லை, மறு நாளை எதிர்பார்த்து மகிழ்வோடு
உற‌ங்கினாள், காலையில் கருக்கலிலேயே எழுந்து கடமைகள் முடித்து, தனக்குப்பிடித்த இள‌ஞ்சிவப்பு சுடிதாரில் தோழிக்காக காத்திருந்தாள்.

தோழியும் வந்தாள், இருவரும் புற‌ப்பட்டனர். புற‌ப்படும் முன் தோழி முதலில் இவளை அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள், தன்னுடைய கருநீல நிற‌ ஜீன்ஸ் காற்சட்டையும், கத்தரிப்பூ நிறத்தில் மேல்சட்டை ஒன்றையும் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னாள், "அய்யோ வேண்டாம் அம்மாவிற்கு தெரிந்தால், கதை கந்தல்தான்" அவள் தடுத்தாள், தோழியோ "அடக்கடவுளே, பஞ்சாபி சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு மலையேற‌முடியாது, பாதி வழியில் சட்டை கிழிஞ்சி போகும், உன்னைப்பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள், நீ இப்போ இதை போடு, அப்புறமா வீட்டிற்கு வந்து மாற்றிக்கலாம்!" என்று வற்புறுத்தினாள், "என்னே ஒரு வில்லத்தனம்" மனம் குமைந்துகொன்டே அவள் உடை மாற்றிக்கொண்டாள், இருவரும் புறப்பட்டனர்.

அனைத்து தோழிகளும் மலையடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அதன்படி அனைவரும் வந்து காத்திருந்தனர், அதிசயமாக அவளை ஜீன்ஸ் உடையில் கண்டதும் கண்கள் அகல அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துச் சிரித்தனர், அவளை பகடி செய்து ரசித்தனர். அதில் ஒரு சில தேவதைகள் அவள் கையை பற்றிக்கொன்டு 'இந்த உடுப்பு உனக்கு நல்லாயிருக்கு ' என பாராட்டுப்பத்திரம் வாசித்தனர்.அவளுக்கு மகிழ்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது, சட்டையை இழுத்து விட்டுக்கொன்டாள்.

நடைப்பயணம் தொடங்கியது, மலையேறுதல் ஆனந்தமாய் ஆரம்பமானது, மேலேறும் செங்குத்தான செம்மண் பாதை, அதன் இருமருங்கிலும் மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்தன, கையகல மஞ்சள் நிறப்பூக்கள் வரவேற்றுச் சிரித்தன. கொத்துக் கொத்தாய் சிவப்பு மலர்கள் மரக்கிளைகளில் அங்கும் இங்குமாய் கண்சிமிட்டின, மரத்தண்டுகளில் வெள்ளை நிற வாச‌மிகுந்த பூக்கள் (pokok langsuir ) நிறைந்திருந்தன‌! அபார வாசம் கொன்ட மலர்கள் அவை, மேலும் பல வடிவங்களில், பல நிற‌ங்களில்  இலைகளும், கொடிகளும், மரங்களும், வித்தியாசமான சப்தங்களும், மண்ணின் வாசனை கிள‌ப்பும் ஈரக்காற்றோடு, கோடு கிழித்ததைப்போல் ஒரு சிறு நீர்வீழ்ச்சியுமாய் இயற்கை வெகு எழிலாய் அங்கே நர்த்தன‌மிட்டுக்கொண்டிருந்தது, அவர்களின் பயண‌ம் நல்லபடியாய் தொடர்ந்து கொன்டிருந்தது.

சில மணித்துளிகளும், சில மைல்களும் கடந்த பின்னர் களைப்பு ஏற்பட ஆரம்பித்தது, கால் முட்டிகள் கதகளி ஆடத்துவங்கின, வியர்வை மேனியை நனைக்கத்தொடங்கியது, மூச்சு வாங்கியது....!

தொடரும்...!   

Tuesday, July 23, 2013

42ம் நம்பர் வீடு...! - இறுதிப்பாகம்

 தொடரும் கல்பனாவின் சோகக்கதை.....



பட்டணத்தின் ஒதுக்குப் புறமொன்றில் ஆட்களின் புழக்கம் அதிகமில்லாத, அமைதியும், தனிமையும் நிறைந்த ஓரிடத்தில், களையும் கம்பீரமுமாக அமைந்திருந்தது அந்த 42ம் நம்பர் வீடு!

தரைவீடு என்றாலும், மிகவும் பெரிதாக,  நீலமும் பச்சையும் கலந்த கடல் நீல நிறத்தில் சுவர் வண்ணம், செங்கல் நிறத்தில் பளிங்குத் தரை என கண்ணைக் கவர்ந்தது அவ்வீடு..! செல்வந்தர்களுக்கேயுரிய செல்வ பூரிப்புடன், சகல‌ வசதிகளுடனான சமையலறை, இன்ன பிற வசதிகளுடன் அமைந்த அந்த வீடு அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத வெகு குறைவான வாடகையில் அமைந்தது தங்களின் பெரும் பாக்கியம் என அகமகிழ்ந்து போயினர் என் பெற்றோர். முதலில் எனக்கும் ஓடி விளையாட வசதியாக பரந்து விரிந்திருந்த அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது , ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு விரைவிலேயே மறைந்து, பெரும் பீதி என்னை ஆட்கொள்ளப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை அப்போது..!   


அந்த வீட்டில் குடியேறிய சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலையில்  வழக்கம் போல அம்மா பால் புட்டியில் பாலை நிரப்பி முன்னறையில் என்னை படுக்கச் செய்து விட்டு ஏதோ வேலையாக சமையலறைக்குள் சென்று விட்டார். பாலை அருந்திக்கொன்டே உற‌க்கம் வராமல் தத்தளித்துக்கொன்டிருந்த நான் தரையில் இப்படியும் அப்படியுமாக உருண்டு புரண்டு கொன்டிருந்தேன். அமைதியான அந்த வேளையில் ஏதோ ஒரு சன்னமான ஒலி என் கவனத்தை ஈர்த்தது, ஒலிவரும் திசையை நோக்கி நெருங்கினேன், அந்த ஓசை அந்த வீட்டின் முன்னறையின் ஒரு ஓரத்தில் அமைந்திருந்த தரையினடியில் இருந்து வெளிப்பட்டுக் கொன்டிருந்தது,காதை அந்த ஒலிவரும் பளிங்குத்தரையின் மேல் வைத்து கேட்கிறேன், இப்போது இன்னும் தெளிவாக கேட்கிற‌து அந்த சத்தம் "லப் டப், லப் டப் " என !!!

அது இதயத் துடிப்பின் ஓசை என்பது எனக்குப் புரியவில்லை, இருந்தும் விநோதமான ஒலியாக இருந்ததால் ஓடிச்சென்று அம்மாவை அழைத்தேன். சமயலறையில் இரவு உண‌வு தயாரிப்பதில் மும்முரமாக இருந்த அம்மா, முதலில் வர மறுத்தாலும், பின்னர் என் நச்சரிப்புத் தாங்காமல் சலித்துக் கொன்டே வந்து நான் குறிப்பிட்ட அந்த இடத்தில் காதை பொருத்திக் கேட்டார், அவருக்கு எதுவுமே கேட்கவில்லை! கடுப்புடன் எழுந்து என்னைத் திட்டிக்கொன்டே திரும்பவும் சமையலறைக்குள் சென்றுவிட்டார். நான் ஆச்சரியத்துடன் மீண்டும் அங்கே காதை வைத்துக் கேட்கிறேன், தெளிவாக கேட்கிறது சப்தம் "லப் டப், லப் டப்" என...! மெல்ல அவ்விடத்திலிருந்து அகன்று தூரத்தில் படுத்து கண்களை இறுக மூடிக்கொன்டேன், வார்த்தைகளால் விவரிக்க முடியாத  ஒரு பய‌ உணர்வு இதயத்தை இறுக்க‌ ஆரம்பித்தது...!

அந்த சம்பவத்திற்குப் பின்னர், மேலும் மேலும் விநோதமான பல சம்பவங்கள் அரங்கேறின, எங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சீன மாதுவை அந்த வீட்டின் பல இடங்களில் பல சமயங்களில் நான் பார்த்தேன், அமைதியாகவும், கருமை நிற‌த்திலும் சோகமாகவும் காட்சியளித்தாள் அப்பெண், அவள் பார்வை பெரும்பாலான சமயங்களில் சூனிய‌த்தை வெறித்து நோக்கிய வண்னமும் ஒரு சில சமயங்களில் என்னை நோக்கிய வண்ண‌மும் அமைந்திருந்தது, அவளைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருந்தது எனக்கு! அப்பொழுதெல்லாம் அம்மாவை வற்புறுத்தி அழைத்து வந்து காட்டினாலும் அம்மா பார்க்கும் பொழுது அங்கே எதுவும் இருப்பதில்லை, எனவே அம்மா என்னை திட்டி கோபம் கொள்வார், இது பலமுறை தொடர, சில முறை என‌க்கு அடியும் விழுந்தது, இதனால் வேதனையுற்ற நான் நாளடைவில் அம்மாவிடம் எதையும் சொல்வதை நிறுத்திக்கொன்டேன். நான் மிகவும் மெலிந்து அடிக்கடி நோயில் விழ ஆரம்பித்தேன். என் அம்மா நான் பயந்திருக்கிறேன் என கயிறு மந்திரித்து கட்டினார், ஆனால் நான் காணும் விநோத காட்சிகளும், அந்த சோகமான பெண்ணும் என் பார்வையில் அவ்வப்போது வந்து போய்க் கொன்டுதான் இருந்தன. குறிப்பாக   தரையிலிருந்து வரும் அந்த லப் டப் ஓசையும்..  ஆச்சரியம் என்னவென்றால் இவை எதுவுமே அம்மா, அப்பா என யாருக்குமே தென்படவில்லை என்பதுதான் ! அதனால் அவர்கள் நான் பயப்படுவதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொன்டு, சிறு குழந்தை உளருகிறாள் என தங்களுக்குள் பேசிக்கொன்டனர்.

இந்த நிலையில் என் அம்மா குடும்ப நன்மைக்காக மேலும் ஒரு முடிவை எடுத்தார், அது அவர் பகுதி நேர வேலைக்குச் செல்வது! ஆரம்பத்தில் நாங்கள் குடியிருந்த வீடு, தற்பொழுது குடியிருக்கும் வீட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான வாடகையை கொன்டிருந்தது, இருப்பினும் அந்த வீட்டில் எல்லா செலவுகளும் போக ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் பணத்தை மிச்சம் பிடித்து சேமித்து வைத்திருந்தார் அம்மா, ஆனால் தற்பொழுது வாழும் வீட்டில் எப்படித்தான் சிக்கனம் பிடித்து சேமித்து வைத்தாலும் கையில் பண‌ம் தங்காமல் ஒவ்வொரு மாதமும் வீணான செலவுகளால் கரைந்து போகிறது என அம்மா புலம்ப ஆரம்பித்தார். இப்படியே போனால் நாளும் விடமென ஏறிவரும் விலைவாசியில் எப்படி சொந்த வீடு வாங்கி குடியேறுவது ? அம்மா மீண்டும் கலங்க ஆரம்பித்தார், அதுசமயம் அப்பாவும் தனது பகுதி நேர வேலையை இழந்திருந்தார், அவரின் வாகனம் பழுது பார்க்கும் செலவு, எனது நோய்க்கான செலவு என மாத மாதம் செலவுகள் அதிகரித்து வந்தன.

நாட்கள் உருண்டோடின, எங்களின் வாழ்விடத்திற்கு மிதிவண்டியில் சென்று வரும் தூரத்தில் ஒரு முதியோர் காப்பகம், அதில் பகுதி நேரமாக சமையலாள் வேலை காலியிருப்பதாகவும், நல்ல சம்பளம் தரப்படுவதாகவும் அறிந்து கொன்ட அம்மா, அந்த வேலைக்குச் செல்ல விரும்பினார். அது குறித்து அப்பாவிடம் கலந்தாலோசித்தார், அம்மா வேலைக்குச் சென்றுவிட்டால் என் நிலை என்ன, யார் கவனித்துக்கொள்வது என்பதைப்பற்றி இருவரும் கலந்தாலோசித்தனர்.  
  
அந்த காப்பகத்தில் வாழும் முதியோர்கள் பலர் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதால் என்னை அம்மா பணியிடத்திற்கு உடனழைத்துச் செல்லும் கோரிக்கை காப்பகத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது, மேலும் சமையலறையிலும் என்னை உடன் வைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கவில்லை, அதுவும் ஆபத்தானது என்பதால், எனவே அறியாமலேயே அதற்கும் மேலான ஒரு ஆபத்தான நிலையில் எனை விட முடிவு செய்தனர் என் பெற்றோர். அதாவது, அந்த வீட்டில் என்னைத் தனியாக சில மணி நேரங்கள் தூங்க வைத்து விட்டுவிட்டு என் தாய் சில மணி நேரங்களில் வேலைக்குச் சென்றுவிட்டு வந்து விடுவது எனும் ஏற்பாடுதான் அது. எனினும் மேலாளர் பதவி சலுகையை உபயோகித்து அந்த சில மணி நேரத்தை தமது ஓய்வு நேரமாக்கிக் கொன்டு எனது அப்பா வீட்டிற்கு வந்து என்னைக் கவனித்துக் கொள்வது எனவும் ஏற்பாடானது. போதுமான பண‌ம் சேர்ந்தவுடன் அம்மா வேலையை விட்டு விடுவது எனவும் முடிவெடுத்துக் கொன்டனர் என் பெற்றோர்.

அதற்கு பின் வந்த நாட்களில், அம்மா வேலைகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக முடித்து, எனக்கும் வயிறு நிரம்ப உண‌வளித்து, புட்டி நிறைய பாலும் புகட்டி படுக்கை அறையில் உற‌ங்கச்செய்து விட்டு மிதிவண்டியில் வேலைக்குச் சென்று விடுவார். இயல்பாகவே நன்கு சமைக்கக் கூடியவர் அம்மா, அங்கே முதியோர்களுக்கு, அட்டவணைப்படி கஞ்சி, சூப் என உப்பு, உறைப்பு, எண்ணெய் குறைத்து பத்தியமாக சமைத்து வைத்துவிட்டு, ஒரு சில மணி நேரங்களில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி விடுவார், அதற்குள் அப்பாவும் வீடு வந்து உற‌ங்கும் என்னை கவனித்துக்கொன்டு வீட்டிலிருப்பது வழக்கம். ஆனால் கூடுதல் வேலை அல்லது வேலைகளில் பிரச்சனை என ஏதும் நேர்ந்துவிட்டால் அன்று அப்பா வீட்டிற்கு வர இயலாமல் ஆகிவிடும். இப்படியாக பல சமயங்களில் நானறியாமலேயே அவ்வீட்டில் தனித்து விடப்பட்டிருந்திருக்கிறேன் நான்.

அன்றும் அதுபோலவே என் தாய் வேலைக்குச் சென்றுவிட, என் தந்தை வேலையில் ஏதோ பிரச்சனையால் வீட்டிற்கு வரவில்லை, உற‌ங்கிக்கொன்டிருந்த நான் திடீரென உற‌க்கத்திலிருந்து விழித்துக்கொன்டேன், மிக மிக அமைதியாக இருந்தது வீடு. பயத்துடன் விழித்து எழுந்தேன், அறை மங்கலாக காட்சியளித்தது, படுக்கையறைக் கதவின் அடியிலிருந்து வெண்புகை கசிந்து உள் வந்து கொன்டிருந்தது..., எனக்கு பயமாக இருந்தது, அழுகை வந்தது, அழுது கொன்டே அறைக்கதவை திற‌ந்து கொன்டு வெளியில் வந்து நின்றேன், வீடு முழுதும் அடர்த்தியான புகை, எனது தொண்டை கசந்தது, கண்கள் எரிந்தன, மூச்சுத்திண‌றியது, அப்போது எனக்கு எதிரேயிருந்து, முன்னறையில், எனக்கு இதய ஓசை கேட்டதே அவ்விடத்தில் என்னைப் பார்த்துக் கொன்டே நின்றிருந்த அந்த கருமையான சீனப்பெண் என்னை நோக்கி நெருங்கி வந்து கொன்டிருந்தாள், அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் சுயமிழந்து வீழ்கிறேன் நான்...!

கல்பனா தனது இளம் பிராயத்திற்கே சென்று, ஒரு சிறுமியாக மாறி த‌ன்னிடம் அவள் அநுபவத்தை சொல்வது போலிருந்தது திவ்யாவிற்கு, மெய்மற‌ந்து கல்பனாவின் சுயசரிதத்தில் ஆழ்ந்திருந்த அந்த நேரத்தில் திவ்யாவின் கைப்பேசி அமைதியைக் கிழித்துக்கொன்டு ஒலிக்கத் துவங்கியது, கவனத்தை திருப்பி கைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்க ஆரம்பித்த மறுகணம், திகைத்துப்போய், கைப்பேசியை பற்றிய கைகள் நடுங்க, வீசும் குளிர் காற்று நெற்றி பொட்டில் அறைந்தது போல், சூடான வியர்வைத்துளிகளால் உடல் நனைய,திரும்பிப்பார்க்கவும் திராணியற்று அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் திவ்யா....

எங்கே இருக்கே திவ்யா ? இன்று மாலை நாம் வெளியே செல்ல முடிவெடுத்திருந்தோமே மறந்து விட்டதா ? உனக்காக‌ ரொம்ப‌ நேரமா காத்திட்டிருக்கேன், சீக்கிரம் வா!  மறுமுனையில் தெளிவாக கேட்டது கல்பனாவின் குரல்... !

பரந்த அந்த மைதானத்தில்,பரவிய‌ இருளில் திவ்யா ஒற்றைப்புள்ளியாக.....!      












பி.கு : பெற்றவர்கள் அல்லது பொறுப்பான பாதுகாவலர்கள் இன்றி குழந்தைகள் வீடுகளில் தனித்து விடப்படுவது மனிதாபிமானமற்ற, மிக மிக கொடிய செயலாகும், சட்டப்படி குற‌றமும் கூட, அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாகும் குழந்தை மனோரீதியிலும், உடல்ரீதியிலும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகக்கூடும்.


இன்னுமொரு விடயம், குழந்தைகள் கூறுவதை பெரியவர்கள் அக்கறையுடன்  செவிமடுக்க வேண்டும். சிறு குழந்தை தானே என அவர்கள் கூறுவதை அலட்சியமாக புறந்தள்ளலாகாது. அது அவர்களின் த்ன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகமாக பாதிக்கும். சில சமயங்களில் பெரியவர்களை விடவும் சிறுவர்களுக்கு அதிகம் செய்திகள் எட்டக்கூடும் என்பது வாழ்வியல் உண்மை.  

இந்த இரு செய்திகளை முன்வைத்தே, உண்மையும் கற்பனையும் கலந்த இந்த 42ம் நம்பர் வீடு கதை உருப்பெற்றுள்ளது...!

Friday, July 19, 2013

42ம் நம்பர் வீடு...! - இரண்டாம் பாகம்


 கல்பனா தனது வாழ்வில் நேர்ந்த சம்பவத்தை விவரிக்கிறாள்....


அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும்,குழந்தைப்பருவம் கடந்து துறுதுறுவென இயங்கும் சின்னஞ்சிறு சிறுமியாக வலம் வந்து கொன்டிருந்த சமயம். பெற்றொருக்கு ஒரே பெண் வாரிசு என்பதால் செல்லம் வேறு சற்று அதிகம், அந்த வயதிலும் பால் புட்டியில் பால் கலக்கி மடியில் படுக்கவைத்து புகட்டுவார் அம்மா.

என் குடும்பம் நடுத்தரமான குடும்பம், அப்பாவும் அம்மாவும் தங்களின் குடும்பத்தை எதிர்த்து மணம் புரிந்து கொன்டவர்கள், அதனால் உற‌வுகளின் நெருக்கமும் குறைவு, என்னை கவனித்துக்கொள்ள சரியான ஆளில்லாததால், திருமணத்திற்கு முன் தான் மேலாளராக பணிபுரிந்த தொழிற்சாலையிலேயே தன்னுடன் பணிபுரிந்த அம்மாவை வேலையை விட்டு நிறுத்தினார் அப்பா. என்னையும் வீட்டையும் படு நேர்த்தியாக கவனித்துக்கொன்டு அப்பா கொன்டு வரும் சொற்ப சம்பளத்தில் நிறைவாக குடும்பம் நடத்தி, அதிலேயே கொஞ்சம் சேமிக்கவும் தலைப்பட்டார் அம்மா!

ஒரு சமயத்தில், என் பெற்றோருக்கு புதிய ஆசை ஒன்று மனதில் முளைவிடத்துவங்கியது...! அப்போது வாடகை வீட்டில் குடியிருந்த அவர்களுக்கு சொந்த வீட்டில் குடியேற வேண்டும் எனும்
ஆசையாக அது மனதுள் பிரவாகமெடுத்திருந்தது, எவ்வளவுதான் சிக்கனம் பிடித்து மிச்சப்படுத்தினாலும் அதிகமாக சேமிக்க முடிவில்லை அம்மாவால், அவர் வேதனைப்பட்டு, தமது ஆதங்கத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்த ஆரம்பித்தார், அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை, விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண பகுதி நேர வேலை ஒன்றையும் அவர் நாடியிருந்தார்.

நாட்கள் ந‌கர்ந்தன‌, ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய அப்பா, அம்மாவுக்கு இனிப்பான செய்தி ஒன்றை கொன்டு வந்திருந்தார். தமது வேலையிடத்திற்கு சற்று அருகாமையிலேயே சீனரின் வீடு ஒன்று வாடகைக்கு உள்ள‌தாகவும், மிகவும் சொற்ப வாடகை எனவும் குறிப்பிட்டார், அந்த வீட்டில் குடியேறினால், கூடுதல் பணத்தை மிச்சப்படுத்தி, கொஞ்ச நாட்களில் புதிய மலிவு விலை வீடு ஒன்றிற்கு முன்பணம் செலுத்தி விரைவில் குடியேறி விடலாம், பின்னர் வாடகை செலுத்தும் பணத்தை வீட்டுக்கட்டணமாக செலுத்தி சில வருடங்களில் சொந்த வீட்டு உடமையாள‌ராகி விடலாம் என அம்மாவிடம் கணக்குப் போட்டுக் காட்டினார் அப்பா. அம்மாவிற்கு ஆனந்தம் தாள‌வில்லை, கண்கள் பணிக்க அப்பாவின் கைகளைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொன்டார். அருகில் அமர்ந்திருந்த என்னை அள்ளி அணைத்துக்கொன்டு முத்த மழை பொழிந்தார். வெகு விரைவில் சொந்த வீட்டில் குடியேறப்போகும் மகிழ்ச்சிகரமான குடும்பத்தலைவியாக காட்சியளித்தார் அம்மா...!  

அப்பா விரைந்து செயல்பட்டார், அந்த வீட்டை பேசி முடித்து, அம்மாவின் சேமிப்பிலிருந்து முன்பணம் செலுத்தி, ஒரு நல்ல‌ நாளில் பால் காய்ச்சி, சிறு பூசை செய்து முன் சரித்திரம் அறிந்திடாமல் அவசர அவசர‌மாய் அந்த வீட்டில் குடியேறினோம்... அது 42ம் நம்பர் வீடு !!!!







தொடரும்...

42ம் நம்பர் வீடு...!



அருமையான பணிமனை, அவள் அவ்விடத்தில் பணியாற்றத்துவங்கி சிலமாதங்களே ஆகியிருந்தன, பிரம்மாண்டமான கட்டிடங்களையொட்டிய பின்ன‌னியில் மிகப்பெரிய மைதானம், அதையும் தாண்டி வேலிக்கு அப்பால் அடர் பச்சைக் காடுகளும் தூரத்தில் கருநீலமும் பல நீலங்களுமாய் மலைத்தொடர்களமைந்த  ரம்மியமான இயற்கைக்காட்சி. அந்தி மாலைப்பொழுது, அந்த மைதானத்தின் ஓர் ஓரத்தில் தன்னந்தனியாக திவ்யா !

திவ்யா, அவள் கண்களும், சிரிப்பும் யாவரையும் வசீகரிக்கக் கூடியவை, அடர்த்தியான முழங்காலைத் தொடும் நீண்ட கூந்தல் அவள் அழகுக்கு அழகு சேர்த்தது ஆனாள் அவள் ஒரு  பிடிவாதக்கார பெண், எத்தனை அளவு அன்புக்குக்கும் நட்புக்கும் கரைவாளோ அதே அளவு முன்கோபமும் முரட்டுத்தனமும் அவளில் மலிந்திருந்தன, மனதுள் ஆயிரமாயிரம் வருத்தங்கள் கூடுகட்டி குடைந்தாலும் வெளியில் எதுவுமே நடக்காத மாதிரி நடிக்கும் சக மனித இரகம்தான், இருந்தாலும் இயற்கையிடம் மட்டுமே  குழந்தையாக மாறி குழைவதும், அத‌ன் அழகையும் அற்புதங்களையும் கண்டு நெகிழ்வதும் அவள் வழக்கம்,  அவளளவில் அவளுக்குத் தாயாக மாறி அவளை தாலாட்டி அணைப்பது அவளுக்குப் பிடித்த அந்த இயற்கையே. இயற்கையின்பால் என்றுமே தீராத ஈர்ப்பு அவளுக்கு. அவள் மனதின் அத்தனை ஆழ அகலங்களையும், இரகசியங்கள், ஏக்கங்கள் என எல்லாவற்றையும் அவள் பகிர்வது இயற்கையிடம் மட்டுமே...!

அன்றும் அப்படியே, கீழ்வானம் அந்தி மஞ்சள் கலந்து சிவந்திருக்க, குழந்தையின் கிறுக்கல்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேகங்கள்

இரைந்திருக்க, தென்ற‌லின் குளிர்காற்று தேடிவந்து தேகம் தழுவ, காலைத்துவங்கி மாலைவரை பணியாற்றிவிட்டு இரவுக்கு வழிவிட்டு தனது ஆயிரமாயிரம் ஒளிக்கரங்களையும் உள்வாங்கிக்கொன்டு போய்வரட்டுமா என பிரியாவிடை நாடிக்கொன்டிருந்தான் சூரியன். சந்தியும், அந்தியும் சந்தித்துப் பிரியும் மோன நிலை...! மெய்மற‌ந்த பரவச நிலை, தன்னை மற‌ந்து இயற்கையோடு ஒன்றியிருந்தாள் திவ்யா,

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் 
மனிதரின் மொழிகள் தேவையில்லை, 
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் 
மனிதர்க்கு மொழியே தேவையில்லை" 

அப்போதைய சூழ்நிலை அந்த நவீன புலவனின் அருமையான வரிகளுக்கொப்ப அமைந்திருந்தது..! அந்த சமயத்தில் அவளின் த‌வநிலையைக் கலைக்கும் விதமாக‌ அருகிலே ஏதோ சலனம்...

யாரோ அருகில் நெருங்கி வந்ததைப்போல் ஓர் உண‌ர்வு ஏற்பட திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள் திவ்யா, அருகே உடன் பணியாற்றும் தோழி கல்பனா குறும்புப் புன்னகையுடன் அவள் எதிரில் நின்றிருந்தாள்...!     

கல்பனா, திவ்யாவுக்கு முன்பே சில வருடங்களாக அங்கே பணியாற்றிக்கொன்டிருந்தாள். நல்ல அழ‌கும், நிற‌மும் கூடவே நற்பண்புகளும் நிறைந்த திவ்யாவின் சம வயதையொத்த பெண், மானின் விழிகளும், கூர்மையான நாசியும், பெரிய இதழ்களும், இதய வடிவ முகமுமாக பார்ப்போரை வசிகரிக்கும் தேவதை கல்பனா. ஒரு பெண்னிடம் அழகோடு அன்பும் குடிகொன்டுவிட்டால் அவள் உலகில் தேவதை என ஆகிவிடுகிறாள். உடன் பணிபுரியும் அத்தனை பேருக்கும் பிடித்தமானவள் இந்த கல்பனா. திவ்யாவிற்கும் நெருக்கமானவளே.

அவள் அருகில் வந்தமர்ந்த கல்பனா, தன்னையே நோக்கிக்கொன்டிருந்த திவ்யாவின் கவனத்தை திசைதிருப்பி, வேலை முடிந்து நெடுநேரம் ஆகிவிட்டதே ! இருட்டவும் போகிறது, இன்னும் இங்கே தனியே அமர்ந்து காற்றிடம் என்ன கதை பேசிக்கொன்டிருக்கிறாய் ? என சிரித்தவாரே உரிமையுடன் வினவினாள். பதிலுக்கு சிநேக பாவத்துடன் அவளைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தவாரே அமர்ந்திருந்தாள் திவ்யா, பேசுவதைவிட அமைதியாகவே இருந்துவிடலாம் போலிருந்தது திவ்யாவிற்கு அப்போது.

கல்பனா மீண்டும் அமைதியைக் கலைத்து பேசத்துவங்கினாள், திவ்யா, நீ பேய்க் கதையெல்லாம் எழுற‌போலிருக்கு ? திவ்யாவிற்கு  மகிழ்ச்சியாகவும் அதேவேளை கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது, போச்சுடா பேய்க்கதை எழுதுவதை கிண்டலடித்து கலாய்க்கப்போகிறாளோ இந்த கல்பனா என கலக்கமும் பிறந்த‌து, உள்ள‌த்தில் எழுந்த உண‌ர்வுகளை லாவகமாக மறைத்துக்கொன்டு, படிச்சியா? புடிச்சிருந்ததா? என சம்பிரதாயத்திற்கு இரண்டு கேள்விகளை கேட்டு வைத்தாள் திவ்யா. நேற்று சங்கீதாவும் , ஜோஸபீனும் நீ எழுதிய ஒரு பேய்க்கதையைப்பற்றி  பேசிக்கொன்டிருந்ததைக் கேட்டேன் என்றாள். ஆமாம் நீ ஆவி பேய்களையெல்லாம் நம்புறியா திவ்யா? தன் சந்தேகத்தை கேள்விக்கணையாகத் தொடுத்தாள் கல்பனா!

ஆமாம் கல்பனா, நிச்சயமா நம்புறேன், இயற்கை பல முகங்கள் கொன்டது, தெளிவாக அறிந்து, முழுவதுமாக புரிந்து கொள்ள சற்று சிரமமான இயற்கையின் மறுபக்கம், இன்னொரு முகம் அது என நினைக்கிறேன்,

நமது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகப்பெருமான் கூட தாம் இயற்றிய சிவபுராண‌த்தில் "புல்லாகிப், பூண்டாய், புழுவாய், மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப், பாம்பாகிக், கல்லாய், மனிதராய்ப், பேயாய்க், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய்த் தேவராய் ... எனப் பிறவிகளில் பேய்க்கும் இடமளித்திருக்கிறாரே என்றாள் திவ்யா, ஏன் நீ நம்பவில்லையா கல்பனா? என கேட்டாள் திவ்யா.

அதுவரை திவ்யாவின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொன்டிருந்த கல்பனா, சிரிப்பதை நிறுத்திவிட்டு, எப்படி திவ்யா நம்பாம இருக்க முடியும் ? இளமையின் அநுபவங்கள் சிலைமேல் எழுத்துப்போல‌ என்றும் நிலைத்திருப்பவை அல்லவா ?, என் வாழ்விலேயே நானும் அநுபவப்பட்டிருக்கிறேனே என்றாள் அமைதியாக‌.  திடுக்கிட்டு திவ்யா அவளை எதிர்நோக்க‌, கல்பனாவோ, திவ்யாவின் முகம் பாராது, தனது பிரகாசமான முகம் இருள அமைதியாகி இருந்தாள், தொலை தூரத்தில் தொடுவானத்தை அவள் பார்வை தொட்டுக்கொன்டிருந்தது...           

தொடரும்...