.

.
.

Sunday, February 24, 2013

மனைவிக்காக கிணறு வெட்டிய மாமேதை...


மன்னன் க்ஷாஜகான் தனது அன்பு மனைவிக்காக தாஜ்மகாலை கட்டினான், ஆனால் அறிஞரொருவர் தமது அன்பு மனைவிக்காக சொந்தமாகக் கிணறு வெட்டியிருக்கிறார்...!

அப்போது அவருக்கு வயது 21, அவர் மனைவிக்கோ 18! அவர்கள் வசித்த வீட்டில் தண்ணீர் வசதி கிடையாது, அனைத்து உபயோகங்களுக்கும் வெளியிலிருந்து நீர் கொன்டு வரவேண்டும். அவருக்கு அவ‌ர் மனைவி வீதியில் நடந்து நீரெடுத்து வருவது பிடிக்கவில்லை. யோசித்தார், சொந்தமாக தமது வீட்டின் கொல்லையில்(களிமண் பூமி) மனைவியின் துணையுடன் மண்வெட்டி பிடித்து கிணறு வெட்ட ஆரம்பித்தார். கைகள் காய்த்துப் போயின, பத்து நாட்களில் இடுப்பளவு ஆழம், சில நாட்களில் பன்னிரண்டு அடி வெட்டிய பின்னர், தண்ணீர் சுரந்தது, மட்டற்ற மகிழ்ச்சியுடன் மேலும் இரண்டடி தோண்ட, மறு நாள் காலை அந்தத் கிணற்றில் நான்கடி ஆழத்திற்கு தண்ணீர் நிறைந்திருந்தது, அத்தம்பதியரின் அகமும், முகமும் மலர்ந்தது, அவர்களின் நீர்ப்பிரச்சனையும் தீர்ந்தது.

மனைவிக்காக கிணறு வெட்டிய அந்த பேரறிஞர் வேறு யாருமல்ல! அவர்தான் 'மனோவியல் தந்தை' டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள்!  அவர் பெருவாழ்விலிருந்து சிறு துளிகள் இங்கே...

தத்துவ மேதை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஒரு ச‌காப்தம்

தமிழ்க்கூறு நல்லுலக வ‌ரலாற்றில், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெருமைக்குரியவர் தத்துவமேதை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்றால் அது மிகையல்ல‌!

கல்வியிலும், பொருளாதாரத்திலும் தான் அடைந்த‌ உயர் நிலையை ஏனையோரும் எட்டி வாழ்வில் உயர்வடைய‌ த‌னது எழுத்தாலும், பேச்சாலும், சமூக சேவைகளாலும் மிளிர்ந்து மக்கள் மனதில் மாமேதையாக ஒளிர்ந்தவ‌ர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.

எழுத்தாள‌ராக, விரிவுரையாளராக, பேராசிரியராக‌பேச்சாளராக, தொழிலதிபராக, மனோவியல் மேதையாக, சமூக ஆர்வலராக பல்துறைகளில் முத்திரை பதித்தவர்.

ஆரம்ப காலம்

தஞ்சையில், மயிலாடுதுறை தாலுக்காவைச் சார்ந்த விளநகர் எனும் கிராமத்தில் 1929 ஆம் ஆண்டு திரு மு.சிங்காரம், கமலம் இணைய‌ருக்கு மகனாகப் பிறந்தார் டாக்டர் எம்.எஸ்.உத‌யமூர்த்தி. ஞாயிற்றுக்கிழமை, சூரிய உதய வேளையிலே பிறந்ததினால் இவர் பெற்றோர் இவருக்கு உதயமூர்த்தி எனப்பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர். இவருக்கு ஒரு மூத்த ச‌கோதரியும், சகோதரும் உண்டு. 

இவர் தந்தையார் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அறிவுக்கூர்மையாலும், விடா முயற்சியாலும் வாழ்வில் உன்னத நிலைக்கு உயர்ந்தவர் டாக்டர் உதயா!
  
இவர் தனது 21 ஆம் வயதில், தனது மாமன் மகளாகிய சீதாலக்ஷ்மி அம்மையாரை மணம் புரிந்து கொன்டார். இத்தம்பதியற்கு சித்தார்த்தன், அசோகன் மற்றும் கமலா என மூன்று பிள்ளைகள்

 

 கல்வியும் தொழிலும்

இவர் ஊரில் ஜில்லா போர்டு நடத்தி வந்த ஆரம்பப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கி, உயர் நிலைக்கல்வியை மாயவரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியிலும் தொடர்ந்து இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்  முடித்த பின்னர் மேற்கொன்டு சென்னை பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு முதுநிலை பட்டம் பெற்றார். ஆசிரியர்பணிக்கு ஏதுவான‌ ஆசிரியர் பயிற்சி படிப்பு, விஞ்ஞானிகளின் சிந்தனாமுறை(Thought process to discovery) ஆராய்ச்சி ஆகியவற்றையும் கற்றுத்தேறிய‌வர்.

1962 ஆம் ஆண்டு புல்பிரைட் அறிஞர்(Full Bright) எனும் திட்டத்தில் அமெரிக்க அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுஅமெரிக்காவிற்குச் சென்று அங்குள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ரசாயனத்தில் பட்டம் பெற்றார், அப்பொழுது அவருக்கு வயது 34!

பெரிய கல்விமானாக வேண்டும் எனும் லட்சியத்தால் உந்தப்பட்ட டாக்டர். உதயா தமது விடாமுயற்சியாலும், அறிவுக்கூர்மையாலும் ஐந்து பட்டங்களை பெற்றார்.

கல்வியை முடித்த பின்னர் குடந்தை அரசினர் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்திலும் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து அமெரிக்காவில் மவுண்ட் சினாரியோ கல்லூரியிலும், மின்னசோட்டா, ஐடகோ பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மாற்றங்களை விரும்பும் ஆர்வத்தாலும் தமக்குள் இருந்த பாரம்பரிய வணிக குணத்தாலும் தொழில்துறையில் நாட்டம் கொன்டு தமது ஆசிரியர் பணியை விட்டு விலகி ஒரு பெரிய ரசாயன நிறுவனத்தில் விற்பனையாளாகவும் ஆலோசகராகவும்  பொறுப்பேற்றார். அந்நிறுவன வள‌ர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதால் மிகவும் குறுகிய காலக்கட்டத்திலேயே அந்நிறுவன‌த்தின் தேசிய தலைமை நிர்வாகிக்கு உதவியான உயர் பத‌வி டாக்டர் உதயாவிற்கு வழங்கப்பட்டது.

தொழில்துறையின் நெழிவு சுழிவுகளும், அநுபவங்களும், அறிமுகங்களும் போதுமான அளவு (க)பெற்ற பின் தொழில் துறையில் கால் பதிக்கும் விருப்பத்தில் 1982 ஆம் ஆண்டு பார்க்கிலே கெமிக்கல்ஸ்(Barklay Chemicals) எனும் இரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தொழில் துறையில் போதுமான அளவு பொருளையும், புகழையும் ஈட்டினார்.

எழுத்துப்பணி

இவர் முறை சாராக் கல்வி முறையில் த‌மது சொந்த முயற்சியாலும், பல்வேறு தத்துவ மேதைகளின் நூல்களின் வழியாகவும் மனோதத்துவம் கற்றுத் தேறினார். தமது மனோவியல் கட்டுரைகளாலும், தாம் இயற்றிய சுய முன்னேற்ற‌ நூல்களாலும் சிற‌ந்த‌ தத்துவமேதையாக அங்கீகரிக்கப்பட்டார்.

நல்ல தன்முனைப்பு பேச்சாளராகவும் விள‌ங்கிய இவர் "மாறட்டும் மனோபாவம்" எனும் தலைப்பில் இந்திய வானொலியில் பதின்மூன்று வாரம் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார், ம‌லேசியாவிலும் "உயர்வோம்" பத்திரிகாசிரியர் திரு இர.கோ. ராஜு அவர்கள் மூலம் வருகை புரிந்து உரை நிகழ்த்தியிருக்கிறார். 

டாக்டர் உதயா  40 ஆண்டுகட்கும் மேலாக,  எழுத்துப்பணியில் ஈடுபாடு கொன்டிருந்தவர். மனோவியல், ஆன்மீகம், தொழில் ஆகிய துறைகளில் 50 க்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் இவரது கைவண்ணத்தில் உருப்பெற்றன, வாசகர்களுக்கு வழிகாட்டின! இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் இவரின் "எண்ணங்கள்" நூலை வாசித்து பயனடந்ததை இவரிடமே நேரில் குறிப்பிட்டிருக்கிறார்! இதைவிடவும் இவர் எழுத்தின் சிறப்பை கணிக்க அளவு கோல் ஏது ?    

பள்ளிப் பருவத்திலிருந்தே  இவர் பத்திரிகைகளில் எழுதத் துவங்கிவிட்டார்.  தமது எழுத்துலக ஞானாசிரியராக பேனா மன்னர் பேராசிரியர் கல்கி அவர்களை மனதில் வரித்துக் கொன்டார். தினமணி கதிரில் அதிக கதை, கட்டுரைகள் எழுதியுள்ள்ளார். இவரது முதல் மனோவியல் புத்தகம் "எண்ணங்கள்" மற்றும்  இரண்டாவது நூல் "மனம், பிரார்த்தனை, மந்திரம்" என்பதாகும். மேலும் "தட்டுங்கள் திறக்கப்படும், மனித உறவுகள், ஆத்ம தரிசனம் போன்ற இவரது நூல்கள் வாழ்க்கைக்குப் பெரிதும் பயனளிக்க வல்ல படைப்புகளாகும். 

இலக்கியம், ஆன்மீகம் ஆகிய துறைகளிலும் இவர் நூல்கள் எழுதியுள்ளார். தன்முனைப்புக் கட்டுரைகளோடு நிறைய விஞ்ஞானக் கட்டுரைகளும் எழுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர்.

ஒரு சிற‌ந்த எழுத்தாளனின் ஆளுமை, அவர்தம் எழுத்துக்களின் வழி வாசகனின் சிந்தனையை மாற்றியமைக்கும் வல்லமையிலிருந்து புலப்படும்! அவ்வகையில் டாக்டர் உதயாவின் எழுத்துக்கள் வாசகர்களிடை ஏற்படுத்திய தாக்கங்கள் மிக மிக ஆழமானவை. எளிமையான அதேவேளை சக்தி வாய்ந்தவை அவர் எண்ணத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்ட எழுத்துக்கள்! அவற்றை ஆராயப் புகுந்தால் அதுவே ஒரு நீள் பதிவாகிவிடும்! அதை முழுமையாக உணர்ந்து அனுபவிக்க அவர் நூல்களை நிச்சயம் வாசித்துப் பார்க்க வேண்டும். அன்னாரின் ஆசியோடு பிரிதொரு நாள் இவர் படைப்புகளின் சிறப்புகளை பதிவாக்கும் நோக்கம் ஒன்று உண்டு...!

இவர் பெற்ற அங்கிகாரங்கள்

*சிறந்த ஆசிரியர் விருது

*"புல் பிரைட்" அறிஞர் எனும் அங்கீகாரம்

 *அமெரிக்காவின் "தொழில் துறையில் உள்ளவர்கள் யார் யார்" எனும் நூலில் பெயர் இடம் பெற்ற கெளரவம். (Directory of Who is Who in Industry & Finance in USA)

 *இந்திய மன மருத்துவச் சங்கமும், சென்னை மனவியல் சங்கமும் சேர்ந்து வழங்கிய "மாமனிதர்" விருது

 * சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் இவரின் 
"எண்ண‌ங்கள்" எனும் நூல் பாடமாக வைக்கப்பட்டது

* ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் அறக்கட்டளை சார்பில் அண்ணாமலைச் செட்டியார் விருது"

*திருக்கோயிலூரில் "கபிலர்" விருது

*இவரின் வாழ்க்கைச் சித்திரமாகிய "என்னைச் செதுக்கிய எண்ணங்கள்" நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டிற்கான‌ சிறந்த நூல்களில் தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசை வென்றது.

*இவரது கல்லூரி தோழராகிய‌ இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், இவரை மையமாக வைத்து இவரின் புகழ்பெற்ற கட்டுரைத் தலைப்பான "உன்னால் முடியும் தம்பி" எனும் பெயரிலேயே ஒரு திரைப்படத்தினை வடித்து முற்போக்கு சிந்தனைகள் நிறைந்த இலட்சியவாதியாக‌ உதயமூர்த்தி எனும் பெயரில் நடிகர் கமலஹாசன் அவர்களை நடிக்க வைத்து ஒரு சிற‌ந்த திரைப்படத்தினை தந்து இவரைப் பெருமைப்படுத்தினார்.

*அமெரிக்க ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் வேதியல் (Chemistry) துறைபேராசிரியராக இருந்த பொழுது அமெரிக்கப் பண்பாட்டையும் இந்தியப் பண்பாட்டையும் ஒப்பிட்டு இவர் தீட்டிய சமுதாய இயல் (Sociology) கல்வித்திட்டம் (Cross Cultural Studies), அமெரிக்க கல்வி இலாகாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மானியமும் வழங்கப்பட்டது.

இத்தகு மேதை வாழ்ந்த‌ காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்று வாழும் காலத்திலேயே ஒவ்வொரு அறிஞரையும் உயரிய கெளரவிப்புகளால் அலங்கரிப்பது எனபதானது விருதுக்கு விருதளிப்பதைப்போல..! சமுதாயத்திற்கே கிடைக்கும் பெருமையாகும், ஏனென்றால் அறிஞர்கள் எனப்படுபவர்கள் சாமானிய‌ர்கள் கிடையாது..! அவர்கள் நமது சமூதாயத்தின் அடையாளங்கள்...!   

அரசியல் ஈடுபாடு

தன் மனதின் விருப்பப்படி கல்விமானாகவும், தொழிலதிபராகவும் முத்திரை பதித்த பின் டாக்டர் உதயாவின் உள்ளம் அரசியலில் நாட்டம் கொன்டது. மக்களின் வாழ்வு நிலையை உயர்த்த சமூகசேவையில் ஈடுபடவேண்டும், நாட்டில் தூய்மையான அரசியலை உருவாக்க‌ வேண்டும் எனும் உயரிய நோக்கம் உருவானது, தனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நாளை எதிர்பாத்துக் காத்திருந்தார்.

அந்த நாளூம் வந்தது, 1982 ஆம் ஆண்டு, தமது அமெரிக்க வாழ்க்கையைத் துற‌ந்து இந்தியாவிற்குத் திரும்பி அங்குள்ள மக்களூக்காக சேவையாற்றத் தயாரானார்

தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் இவருக்கு அறிமுகமானவர்கள் என்பதால், இவருக்கு அரசியலில் பதவிகள் அளிக்க முன்வந்த போதிலும் அவற்றை நிராகரித்து விட்டு 1988 மே 29 ஆம் தேதி மக்கள் சக்தி இயக்கம் எனும் பெயரில் சுயமாக ஒரு இயக்கத்தினை நிறுவி மக்களுக்கு சேவையாற்றலானார்.
சுயவளர்ச்சி, சுய பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய ஈடுபாடு ஆகியவைகளை மையமாக வைத்து ஆக்க சிந்தனைகள் நிறைந்த இளைஞர்களை வழி நடத்தி சுய முன்னேற்றம், மற்றும் இளைஞர்கள் முன்னேற்றம் குறித்து நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

இத்தனை பெருமை மிகு டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் உடல் நலிவுற்று கடந்த 21/1/2013 அன்று தமது 85 ஆம் அகவையில் இறைவனின் அழைப்பை ஏற்று இவ்வுலகைவிட்டு அமரரானார். அவர்த‌ம் உருவம் மறைந்தாலும் எண்ணற்ற தமிழ் வாசகர்களின் இதயத்தில் தமது சிந்தனைகளின்வழி அவர் இன்றும் வாழ்ந்து கொன்டு தான் இருக்கிறார்!
 
அவர் நூல்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் ஒவ்வொரு வாசகனின் சிந்தனையையும் புரட்டிப் போடும் வல்லமை படைத்தவை அவர் எழுத்துக்கள்!  அவர் இப்புவிக்கு சீதனமாய் விட்டுச் சென்ற சீரிய சிந்தனைகளும், சிற‌ப்பான அறிவுரைகளூம் வாழ்வியலிலும், கல்வித்துறையிலும், பொருளாதாரத்திலும் மேலும் பல நூறு உதயமூர்த்திகளை உருவாக்கித்தரும் எனும் நம்பிக்கையோடு…...

ஆக்கம் : சிவனேஸ்வரி @ சிவனேசு
                  மலேசியா  

 


  


 


‌‌‌‌