.

.
.

Saturday, November 24, 2012

ஆத்மா - இறுதிப்பாகம்‍
முன்கதை : வறுமையின் பிடியில் சிக்கி இரப்பர் காடுகளுக்கு மத்தியில் அமைந்த குடிசை ஒன்றில்  குடியேறி அங்கே ஏற்கனவே தனது தாயால் உதாசீனப்படுத்தப்பட்டு அகால மரணமடைந்த ஒரு சிறுவனின் துர் ஆத்மாவினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறது ஒரு குடும்பம், அதன் உச்சக்கட்டமாக ஓர் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய அக்குடும்பத்தின் தலைவர்  ம‌ரக்கிளையால் தாக்கப்பட்டு, அவரின் அலரலைத் தொடர்ந்து, குழந்தைகளை விட்டுவிட்டு தன் கணவரைத்தேடி இருளில் விரைகிறார் அவ‌ர் மனைவி, இனி....  
  
அன்பு மகாசக்தி வாய்ந்த ஆயுதம், தன் மீது அன்பு கொன்டவர்களுக்காக, தான் அன்பு கொன்டவர்களுக்காக தமது உயிரையும் துச்சமென மதிக்கும் உறுதியான, தைரியமான மனநிலையை அது த‌ந்துவிடுகிறது, அவ்வாரே இரவும் இருளும் மர்ம ஒலிகளுடன் களி நடம் புரியும் அந்த இரப்பர் காட்டு ஒற்றையடிப்பாதையில்‌ அசைக்க முடியா‌ மன உறுதியுடன்  கண‌வரைத்தேடி கால்கள் சேற்றில் புதைய நடந்துகொன்டிருந்தார் சுசி, அவரின் அந்த மன நிலையில் மரண‌மே எதிரில் வந்தாலும் எதிர்கொள்ளும் வைராக்கியம் பிரவாகமெடுத்திருந்தது...

பயணம் தொடர்ந்து சில மணித்துளிகள் கடந்த பின், சற்று தூரம் நடந்தவருக்கு கண் முன்னே பாதையில் மயங்கிக்கிடக்கும் அவரது கணவரின் உருவம் தென்பட அவர் அருகில் விரைந்தார், வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொன்டு அவரைப் பற்றித்தூக்கி தனது சால்வையால் அவர் முகம் துடைத்தார்.கணவரின் துயர்கண்டு அழுகை, அவரைக்கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி என உண‌ர்ச்சிக்குவியலாய் அப்போது உருமாறியிருந்தார் சுசி, தலையில் பட்ட அடியில் அவர் கணவரின் முகம் இரத்ததில் தோய்ந்திருந்தது, மழைச்சாரலில் ஈரமாகிப்போயிருந்த தனது சால்வையால் அவர் முகத்தை துடைத்து அவரை எழுப்பினார் சுசி, சற்றே முனகலுடன் நினைவு திரும்பியவுடன் அவரை ஆசுவாசப்படுத்தி கைத்தாங்கலாக தூக்கிக்கொன்டு நடக்கலானார்,

அதுகாறும் சுசியின் கணவரின்  இர‌த்தத்தை தனது வேட்கைக்கு பலியாக்கிக்கொன்டிருந்த சிவாவின் ஆத்மா இப்போது அருகிலிருந்த மரக்கிளையின் உச்சியில் அவர்களை நெருப்பென சுழழும் விழிகளுடன் உக்கிரமாக உற்று நோக்கிக்கொன்டிருந்தது...இன்னும் சற்று தாமதித்திருந்தால் அவர் ஆன்மாவும் அவனுக்கு நிவேதனமாகியிருக்கும், அவரின் ஆயுள் பலமும் சுசியின் தைரியமும் அன்று அவரை காப்பாற்றி கரை சேர்த்தது
  
கால் புதையும் சேற்றில், இருளில், மழையில் நடப்பது எத்துனை அசெளகரியம்! அதிலும் தன்னிலும் இரண்டு மடங்கு பெரிய உருவத்தை சுமந்து நடப்பது எத்துனை சிரமம், பாவம் சுசி, தனது வலு அத்தனையும் இணைத்து நடந்தார் என்பதைவிட நகர்ந்தார் என்பதே பொருந்தும். சில மணித்துளிகள் கடந்து தூரத்தில் வீடு கண்களுக்கு புலப்பட்டது, உள்ளே மங்கலான மண்ணெண்ண‌ெய் விளக்கின் ஒளி கதவிடுக்கில் கசிந்து வெளியே சன்னமாய்... ஒளிர்ந்தது 
வீடு நெருங்கிய தெம்பில் சற்று நிம்மதியுடன் மிகவும் சிரமப்பட்டு கணவரை வீட்டிற்கு கொன்டுவந்து சேர்த்தார் சுசி, தலையில் மரக்கிள‌ை விழுந்ததில் ஏற்பட்ட காயத்திற்கு காப்பித்தூளை வைத்து கட்டுப்போட்டார். அரை மயக்கத்திலிருந்த அவரை உறங்க வைத்து, தானும் குழந்தைளின் பக்கத்தில் ஒருக்களித்தவாறே சாய்ந்திருந்தார்.

சற்று நேரத்தில் வாசல் கதவு வெளியே வீசிய பெருங்காற்றில் தானாய் திறந்துகொன்டது... கலவரமாகிப்போனவர், எழுந்து சென்று கதவைச்சாத்திவிட்டு வந்து படுத்தார். கொஞ்ச நேரத்தில் அடுப்படியில் எதேதோ விநோத சத்தங்கள் கேட்கத்துவங்கின,  சுசி மெல்ல எழுந்து  சமையலறைக்கு சென்றார்...

அங்கே அடுப்பிலிருந்த மண்சட்டி கீழே விழுந்து நொருங்கி அதிலிருந்த சாதம்  கீழே சிதறியிருந்தது..‌, பாத்திரங்கள் தாறுமாறாக  தரையில் வீழ்ந்து அலங்கோலமாக சிதறிக் கிடந்தன.... அதற்கு நடுவில் நீலக்காற்சட்டை மட்டுமே அணிந்து தரையில் அமர்ந்திருந்தான் சிவா...! கீழே கொட்டி இரைந்திருந்த சாதத்தின் சில பருக்கைகள் இரத்தைக்கறை படிந்த அவன் இதழ்களில்...!!!   

சற்றும் எதிர்பாரா வண்ணம் அவர் மீது பாய்ந்தான் சிவா, தனது கூரிய நகங்களால் அவரை பிராண்டத் துவங்கினான், வாயைப்பிளந்து அவரைக் கடித்துக் குதற எத்தனித்தான், இதை சற்றும் எதிர்பாராத சுசி தடுமாறிப்போனார், அவன் அவர் குரல்வலையை பதம் பார்க்க முயல, தனது முழுபலத்தையும் ஒன்று திரட்டி அவனை எட்டித்தள்ளினார், கீழே சிதறிக்கிடந்த பொருட்களில் கையில் அகப்பட்டது ஓர் இரும்பு ஊதாங்குழல் (விறகு அடுப்பை எரியவைக்க பயன்படுத்தப்படுவது) கையில் கிடைத்த ஊதங்குழலால் சிவாவின் தலையில் ஓங்கி அடித்தார் சுசி, விநோதமான அலறலுடன் இருளில் காற்றாய் கரைந்தான் சிவா,

திடுக்கிட்டு விழித்தார் சுசி, அடடா, கண்டது வெறும் கனவே என எண்ணியவாரே தனது கையை நோக்க அவரது வலது கரத்தில் ஆழமான நகக்கீறலொன்று இரத்தம் பூத்து உறைந்திருந்தது...!  அதற்கு மேல் சுசியால் தூங்க முடியவில்லை ! மேலும் மேலும் பிரச்சனைகள் ! அந்த வீட்டில் அத்ற்குமேலும் தாக்குப்பிடிப்பது கடினம் எனத் தெளிவாக புரிந்தது அவருக்கு, பல்லைக் கடித்துக்கொன்டு மேலும் சில நாட்களைக் நகர்த்தினார், அதற்குள் அவர் கணவரும் குணமடைந்தார்.

குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது, இளங்குளிரோடு அன்றைய
பொழுது
ம்  புலர்ந்தது, பொறுத்தது போதும் என்று அந்த குடிசை வாழ்க்கைக்கு ஒரு கும்பிடு வைத்துவிட்டு சுசி தனது கணவரையும், குழந்தைகளையும் அழைத்துக்கொன்டு அந்த வீட்டை விட்டு விரைந்து வெளியேறினார். புறப்படும் முன்னர் தமக்கு பின்னர் வேறு யாரேனும் அங்கு வந்து தங்கி அவஸ்த்தைப்படக்கூடாது என அவருக்குத் தோன்றியது எனவே புறப்படும் போது ஏதோ நம்மால் முடிந்தது என ஒரு தீக்குச்சியை கிழித்து அந்த வீட்டுக் கூரையில் எரிந்துவிட்டே அவர் புறப்பட்டார்.


 காலை பொழுதின் மெல்லிய இருளை விலக்கிக்கொன்டு அக்கினி ஜுவாலைகள் அந்த வீட்டை கபளீகரம் செய்யத்துவங்கிட‌. சுசி தனது குடும்பத்தோடு அந்த தோட்டத்தைத்தாண்டி நடந்துகொன்டிருந்தார்..., ஊடுருவி இருந்த‌ குடிசையோடு சிவாவும் அந்தத் தீயில் மெல்ல மெல்ல கரைந்து கொன்டிருந்தான்.... 
      
பல வருடங்களுக்கு முன்னர் மலாயாக்காடுகள் இரப்பர் தோட்டங்களாக உருமாறிக்கொன்டிருந்த சூழலில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவமே இது, சுசி, அவ‌ர் கணவர், அவர்களின் குழந்தைகள் யாவரும் சில காலங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களே…. செவிவழிச்செய்தியாக அறிந்  சம்பவம் பதிவுகளாக இங்கே உருமாற்றம் கண்ட து

இதைப்பகிர்ந்ததற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இச்சமபவத்தின் நாயகியாக வரும் "சுசி" எனும் பெண்ணின் அசாத்திய துணிச்சலும், மனதிடமும், இந்த சம்பவத்தை செவியுற்றது முதலே அவர்மீதும் அவரது தைரியம், தன்னம்பிக்கை மீதும் மிகுந்த பற்றுதல் உண்டானது, பெண் என்பவள் பூவினும் மெல்லியவள் எனினும் சமயம் நேர்கையில் அவள் புயலாக மாறிடும் தன்மையும் கொன்டவள் என்பதை இவர் மூலம் அறிய முடிந்தது.

இயற்கை அற்புதமான ஒரு விடயம், அதன் மறுபக்கம் அளவிட முடியாத பலப்பல‌ மர்மங்களையும் தன்னகத்தே கொன்டுள்ளது,  அமானுஷ்யம் அதில் முக்கிய பங்கு வகிக்கும் அங்கமாகும், நம்பிக்கை உள்ளவர்களுக்கு உண்மை எனவும் நம்பாதவர்களுக்கு வெறும் வேடிக்கையாகவும் அமைந்துவிடும் ஒரு விடயமாகும். 

ஆத்மா தொடர் இத்துடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது, அடுத்து "மல்லிகைக் கிணறு மர்மம்" ஒன்று உள்ளது  , இனிவரும் பதிவுகளில்…….

Friday, November 23, 2012

ஆத்மா 10


முன்கதை : வாழ்வுதேடி தோட்டம் ஒன்றிற்கு குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று இரப்பர்  காடுகளுக்கு மத்தியில் அமைந்த வீடு ஒன்றில் வாடகைக்கு குடியேறுகிறது, கண‌வன், மனைவி மற்றும் சிறு குழந்தைகளுடன் பஞ்சம் பிழைக்க வந்த அவர்கள் அங்கே ஏற்கனவே தனது தாயால் அலைக்கழிக்கப்பட்டு மரணமடைந்த சிவா எனும் சிறுவனின் துர் ஆத்மா அலைபாய்வதை அறியவில்லை, சிவாவினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறது அக்குடும்பம், இறுதியில்………..  

மழைதூவும் வானம், இருள் சூழ்ந்த நேரம், தனக்குத் தானே தைரியமூட்டிய வண்ணம் தன் பழைய ஜாகுவார் மிதிவண்டியில், தன்னந்தனியாய் சகதி தோய்ந்த மண்சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தார் சுசியின் கணவர்...!

அவருக்கு தெய்வ நம்பிக்கை, ஆவி, பேய், போன்ற சமாச்சாரங்கள் எதிலுமே நம்பிக்கை கிடையாது, அது குறித்து தன்னிடம் பேசுபவர்களையும் சரமாரியாக திட்டி, ஏன் தான் இவரிடம் பேசினோமோ என் நொந்து கொள்ளும் வண்ணம் செய்து விடுவார். அவரின் இந்த குணத்திற்கு எப்போதுமே பலியாவது அவர் மனைவி சுசியே.அப்படிப்பட்டவர் இன்று தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மனதுள் அசை போட்ட வண்ணமே நகர்ந்து கொன்டிருந்தார். தன் மனைவி சொன்னதையெல்லாம் உதாசீனம் செய்து, அவரை நோகடித்தது, இன்று அவருள் நெருடலை ஏற்படுத்தியது. இடையிடையே, இரப்பர் மரங்களின் கிளைகள் முறியும் சப்தம், இரப்பர் விதைகள் வெடித்துச் சிதறும் ஓசைகள், இரவுப்பிராணிகளின் ஒலிகள் என பல்வேறு சப்தங்களும் என்றுமில்லாது இன்று புதிதாய் ஒலிப்பது போல் அவருக்கு கவனச்சிதறல்களை ஏற்படுத்திக் கொன்டிருந்தன.  ஏதோ ஓர் அசட்டுத் துணிச்சலுடன் அவர் பயணித்துக் கொன்டிருந்தார், இன்னும் சற்றே தூரத்தில் வீட்டை அடையக்கூடிய தருண‌த்தில்தான் அந்த அசம்பாவிதம் அவருக்கு நேர்ந்தது..!

பேரிடி ஒன்று தன்தலையில் இறங்கியதாய் உணர்ந்தவர் பெருவலியுடன்  சுதாரித்துக்கொள்ளவும் வழியற்று மிதிவண்டியிலிருந்து கீழே சரிந்தார், வலியில் அலறிய அவர் குரல் அந்த இருளில் மோதி எதிரொளித்தது, அவரை வெற்றிகரமாக வீழ்த்திய அந்த மரக்கிளை பெருமிதத்துடன் அவர் மீதே விழுந்தது. சேற்றில் விழுந்த சுசியின் கணவருக்கு தனது பெரிய சரீரத்தை தூக்கி எழவும் திரானியற்று போனது. இருளில் நடுவழியில் கண்களுக்குள் பூச்சி பறந்தது, உதடுகளுக்குள் உப்பு சுவை, மனம் மனைவி குழந்தைகளை எண்ணி மருகியவாரே, மங்கலான அவர் பார்வையில் ஏற்கனவே கண்ட அதே சிறுவன் கண்கள் பளிச்சிட அவரை நோக்கி முன்னேறிக்கொன்டிருந்தான். சுசியின் கண‌வர் சுயமிழந்து மயக்கத்தில் ஆழ்ந்தார்...! 

இரவு  இருள் போர்வை விரித்து வானை வசப்படுத்திய பின்னரும், தன் கணவர் இன்னமும் வீடு திரும்பாதது சுசியின் மனதை மிகவும் வருத்தியது, குழந்தைகளை மங்கலான வெளிச்சத்தில் உறங்கவைத்தார். மனதுள் இறைவனை இடைவிடாது பிரார்த்தித்துக்கொன்டேயிருந்தார். "அகதிக்கு ஆண்டவன் தானே துணை".

கடந்து போகும் நாட்களில், மறந்து போகும் சம்பவங்களல்லவே தற்போது அவர் எதிர்கொள்ளும் இக்கட்டான இந்நிலை. கருத்துக்கு  எட்டாத, ஐம்புலன்களுக்கு ஆட்படாத, வார்தைகளால் விவரிக்க முடியாத, பலரும் நம்ப மறுக்கும் (உள்ளுக்குள் பயமிருந்தாலும் வெளியே வீரமாய் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகமல்லவா இது...!), பிறர் நம்புவதும் நம்பாததும் இரண்டாம் பட்சமே, முதலில் அவர் கணவர் அவரை நம்ப வேண்டுமல்லவா, அவர் அறவே நம்ப மறுக்கும் விடயத்தை எப்படி அவரை நம்ப வைப்பது...! வருத்தம் வாட்டியெடுத்தது சுசியை, வேதனையோடு வழிமேல் விழிவைத்து வீட்டினுள் காத்திருந்தார். பூட்டிய கதவுக்கு பின்னிருந்து விரைவில் கண‌வர் வீடுதிரும்பி கூப்பிடுவார் எனும் நம்பிக்கையோடு….  நேரம் நகர்ந்து கொன்டிருந்தது,

அந்த சமயத்தில்தான் சற்று தூரத்திலிருந்து வெளியே யாரோ பெருங்குரலெடுத்து அலறும் ஓசை அவர் காதில் பாய்ந்தது, பயமும், நடுக்கமுமாய் அந்த குரலை செவிமடுத்தவருக்கு பகீரென்றது, அது,  அவர் கணவரின் குரல் என்பது மனதுள் உரைத்தது..!!!!  

அவரால் ஏனோ அந்தக் குரலை உதாசீனம் செய்யமுடியவில்லை, உயிருள் ஊடுருவும் பயங்கர ஓசையாக அது அவர் செவிப்பறை கிழித்து இதயத்துள் இற‌ங்கியது, பகீரென்றது சுசிக்கு, நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், பரிதாபமாக ஏறக்குறைய மயங்கும் நிலைக்கு ஆளாகிப்போனார் சுசி.  பகீரதப்பிரயண‌த்துடன் சுயநிலைக்கு தன்னை மீட்டுக்கொன்டு வந்து சுற்றும் முற்றும் பார்த்தார்.
சற்று முன் தான் கேட்டது தனது கணவரின் குரல்தான் என தனக்குள் உறுதிப்படுத்திக்கொன்டார். அசம்பாவிதங்களின் கோர்வையாகிப்போன அவ்ர் வாழ்வில் அந்த கட்டத்தில் எதையும் ஏற்கும் ஓர் மரத்துப்போன மன நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். எனினும் தனது வாழ்வின் கலங்கரை விளக்காக அவர் நம்பியிருந்தது, இருப்பது, இனி இருக்கப்போவது அனைத்தும் அவர் கண‌வரே, அவருக்கு ஒரு தீங்கென்றால் அது தனது வாழ்வின் முடிவுக்கு ஒப்பாகும் எனும் நிலையில் தன்னந்தனியாக குழந்தைகளை விட்டுவிட்டு அவரைத்தேடி புறப்பட ஆயத்தமானார்,  

அன்று மலர்ந்த மலர்களைப்போல் அழகான அவர் குழந்தைகள் தரையில் கிழிந்த பாயொன்றில் அயர்ந்து உறங்கிக்கொன்டிருந்தனர்...! (இப்படி ஒரு பெண்ணால் நடுஇரவில் தனது குழந்தைகளை பாதுகாப்பற்ற நிலையில் நிராதரவாக விட்டுவிட்டு வெளியே செல்லமுடியுமா என்பது இன்றளவிலும் விடைகாண முடியா புதிராகவே மனதுள் பிரவகிக்கின்றது !) அன்று நளமகாராஜனுடன் புற‌ப்பட்ட தமயந்தி கூட அம்போ என தனது குழந்தைகளை விட்டுவிடவில்லையே, அவர் பாதுகாப்பாக தனது குழந்தைகளை தனது தந்தையிடம் சேர்ப்பிக்கும்படி ஒருவரிடம் கொடுத்தனுப்பியதாக பள்ளி நாட்களில் படித்த நினைவு...!

அருகில் கிடந்த சால்வையை எடுத்து த‌ன் மீது போர்த்திக்கொன்டார், கைவிள‌க்கை கையில் எடுத்துக்கொண்டார். வாசலுக்கு விரைந்தவர், மீண்டும் ஒருகணம் தடுமாறி குழந்தைகளிடம் வந்தார், அயர்ந்து உறங்கும் தனது அழகான குழந்தைகளை கண்டார், வேதனையில் மனம் கனக்க விழிகளில் கண்ணீர் பொங்கியது, அவர்களை விட்டுப் பிரிய அவருக்கு மனமே வரவில்லை, இருந்தும் வெளியே கணவருக்கு ஏதோ ஒரு பேராபத்து என்பதை அவர் உள்மனம் உணர்த்த அவருக்கு வேறு வழியும் தோன்றவில்லை, விடியும் வரை காத்திருந்து விபரீதம் ஏதும் வாசல் வந்தால் என்ன செய்வது?

"எனது குழந்தைகளை தெய்வம் கைவிடாது என தனக்குத்தானே சொல்லிக்கொன்டார், அந்த வீட்டின் பழைய பலகைக்கதவைத் திறந்து கொன்டு வெளியே வந்தார். வெளியே இருள் யாவற்றையும் தனக்குள் விழுங்கியிருந்தது, கதவைச் சாத்திக்கொன்டு மழையில் அடியெடுத்து வைத்தார், மழைத்துளிகள் உடல் நனைக்க இருளைக்கிழித்துக்கொன்டு அவர் கைவிளக்கு ஒளிகாட்ட அவர் சத்தமாக கணவரை அழைத்தபடி இருளில் நடந்தார்...!  

ஆத்மாவைத் தொடர்ந்த நட்புக்களுக்கு ஒரு நற்செய்தி!! அடுத்த பதிவில் ஆத்மா தொடர் தனது நிறைவை நாடிவிடும், ‍ நட்பும் நன்றியும் நல்வாழ்த்துகளும்...!