.

.
.

Thursday, October 15, 2009

ஆகா வந்துருச்சு தீபாவளி...!

வணக்கம் நண்பர்களே, இதோ வருது! அதோ வருது! என ஆசையோடு எதிர்பார்த்த தீபாவளி, என்ன ஆச்சரியம்! இதோ இன்னும் இரண்டொரு நாளில், வாசல் தேடி வந்தே விட்டது பாருங்கள்...

உன்னைக்கண்டு நானாட, என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உற‌வாடும் நேரமடா... உறவாடும் நேரமடா...!

பழம்பெரும் சினிமா பாடல் பட்டி தொட்டி எங்கும் முழங்க, புத்தாடைகள் புன்னகைகள், பலகாரங்கள், மத்தாப்பு, உறவினர்கள், ஆஸ்ட்ரோவில் பல சிறப்பு நிகழ்ச்சிகளோடு ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு ஓராயிரம் நினைவுகளை இதயத்தில் இழைத்திருக்கும், ஹாஸ்யங்களுக்கும் அதிலே பஞ்சமிருக்காது...! அடியேன் வீட்டு தீபாவளி ஒன்றும் அதுபோல நினைக்கும் போதெல்லாம் சிரித்து சிரித்து மகிழ வைக்கும், அதை உங்களுக்கும் சொல்லட்டுமா...? வாருங்கள் கொசுவத்திச்சுருள் உத்தியை உபயோகித்து கடந்தகாலத்திற்குள் நுழைவோம்...

என்றோ பெய்த மழைதான் ஆனால் இன்றும் நினைந்து பார்க்கும் போதெல்லாம் நனைந்து பார்க்க முடிகிறதே என கவிதை வரிகளோடு துவங்குகிறது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம்... :-)

எனது ஆரம்பப் பள்ளிப்பருவம், என் தாய் தீபாவளிக்காக சளைக்காது பலகாரங்களை செய்து குவித்துக்கொண்டிக்க‌, அவருக்கு அஸிஸ்டென்ட் + எடுபிடி + மானேஜர் + ஓடும்பிள்ள + கைப்புள்ள எல்லாமே நாங்கள் தான் :-)

எல்லா வேலைகளையும் விழுந்தடித்துக்கொன்டு செய்யும் எங்களுக்கு தீபாவளிக்கு முன் பலகாரங்களை ருசிபார்க்கும் பாக்கியம் மட்டும் வாய்க்காது (என்னக் கொடும சார்! :( சாமி கண்ணைக்குத்தும், கையைக்கடிக்கும் என்றெல்லாம் பல பொய்கள் எங்களை பலகாரங்களை தொடவிடாமல் தடுக்க...அதையும் மீறி பல சம‌யங்களில் நாங்கள்(சரி சரி விடுங்க! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :)))

அந்த வருடம், தீபாவளிக்கு முதல் நாள், நாங்கள் குடியிருந்த அந்த வாழ்விடம் தமிழர் நிறைந்த குடியிருப்பு பகுதியாதலால் தீபாவளி பெரு விழாவாய் களைகட்டியிருந்தது... மத்தாப்புக்களாய் மகிழ்ச்சிப் பிரவாகங்கள்...

எங்கள் வீட்டிலும் நரகாசுரனுக்கு ஒரு பெரு விழா, சமையல் அல்லோல கல்லோலப் பட்டுக்கொன்டிருந்தது... என் தாய் மறுநாள் தீபாவளிக்காக தோசைக்கு அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊறவைத்துவிட்டார், பிற‌கு அதேபோல் வேறொரு பாத்திரத்தில் பூலூட் அரிசி(பலகாரம் செய்ய உதவும் ஒருவகை அரிசி) ஊறவைத்துவிட்டார், அம்மா சொல்ல ஊறவைத்த புண்ணியவதி என் சகோதரி...!

மாலையானது, ஒரு பாத்திரத்திலிருந்த அரிசியை சுத்தம் செய்து, ஆட்டுரலில் இட்டு எனது ச்கோதரியையும் என்னையும் தோசைக்கு மாவாட்ட வைத்துவிட்டார் என் தாய்... :‍)

மீதமிருந்த இன்னொரு பாத்திரத்திலிருந்த அரிசியை பலகாரம் செய்ய சீனி தேங்காய்ப்பால், அழகான சிவப்பு வர்ணம் எல்லாம் சேர்த்து வானலியில் வேகவைக்க ஆரம்பித்தார்...

காலக்கொடுமையை பாருங்கள் சார்...! நாங்கள் மாவாட்டத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த அரிசி பிசு பிசுவென கல்லோடு ஒட்டிக்கொன்டு பசை ஒட்டியதைப்போல் கல்லை நக‌ர்த்த முடியாமல் திண்டாட வைத்தது... நாங்களும் நாமதான் ஏதோ தவறு செய்து விட்டோம் என பயந்து கொன்டு, அம்மாவிடம் சொன்னால் முதுகுத்தோல் உரிந்து விடுமே, யார் செய்த பாவமோ, இது யார் விட்ட சாபமோ என் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொன்டு மாவாட்டுவதாய் பாவ்லா காட்டிக் கொன்டிருந்தோம்... :(

அதேவேளை அங்கே அடுப்படியில் என்னைப் பெற்ற் தெய்வம்! கண்ணாடி போல் வெந்து மலர வேண்டிய அந்த அரிசிப் பலகாரம், நச நசவென சாதம்போல் குழைந்து கொப்பளித்து... வானலியில் ஒட்டிக்கொன்டு கரண்டியில் வரமாட்டேன் என அடம்பிடித்துக்கொன்டு என் தாயை திண்டாட வைக்க‌...

என் தாய்க்கு விக்ஷ‌யம் புரிந்துவிட்டது, ஆஹா அரிசியை மாற்றி சமைத்து விட்டோம் எனும் அந்த மகாப் பெரிய உண்மை புலப்பட, அய்ய்யோ மாட்டிக்கிட்டோமே, சாமி என்ன செய்வது... என் தந்தைக்குத் தெரிந்தால் மனுசன், அந்த மூன்று கண்ணனாய் மாறி ருத்ரதண்டவம் ஆடிவிடுவாரோ எனும் பயத்தோடு...

என்னதான் செய்வது, ஆனது ஆச்சு போனது போச்சு, நடந்ததையெல்லாம் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்துப் பார்த்து என் தாய் வேகமாக ஒரு விவேகமான முடிவை எடுத்தார், ஆம் தோசைக்கு அரைத்த அந்த மாவையும், பலகாரமாய் !!!! சமைத்த அந்த அயிட்டத்தையும் யாருக்கும் தெரியாமல் வெகு சாமர்த்தியமாய் வீட்டுக்குப்பின்னால் அள்ளிப்போய் கொட்டிவிட வேண்டியது, பிற‌கு வேறு ஏதாவது சமைத்து சமாளித்து விட வேண்டியது. அம்மா தீட்டிய திட்டத்தை அவருடைய செல்வங்கள் நாங்கள் கனக்கச்சிதமாய் நிறைவேற்றிட்டோம்ல...! :‍)

என்னதான் உண்மையை மறைத்தாலும் மனச்சாட்சி என்று ஒன்று உள்ளதே அய்யா, அதை ஏமாற்ற முடியுமா ? அரிசியை மாற்றி விட்ட அந்த உண்மை எங்களுக்கு நினைக்க நினைக்க கெக்கே பெக்கே வென வற்றாத சிரிப்பை வாரி வழங்கிக் கொன்டிருந்தது...

ஒரு வழியாக பின்னர் என் தந்தைக்கும் விக்ஷ‌யம் எட்டியது, நல்லவேளை நல்ல மூட் போல, அவரும் தமது மனைவி மக்களின் "தெற‌மையை" மெச்சி சிரித்துக்கொன்டார்...! நம்புங்கள் நண்பர்களே, கர்ஜித்து மட்டுமே பார்த்திருக்கிறேன், ஒரு சிங்கம் சிரித்ததை அன்றுதான‌ய்யா என் கண்களால் கண்டேன்...! :))

அதன் பின்னர் ஒவ்வொரு தீபாவளியும் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து சிரிக்க அடியேன் குடும்பம் தவறியதே இல்லை, என் அம்மா தீபாவளி காலங்களில், மிகவும் பெருமையோடு, "ஏன்மா அந்த அரிசியை மாற்றிச் சமைத்து அவஸ்த்தை பட்டோமே அந்தக் கதையை பத்திரிகைக்கு எழுதேன்மா", என அவ‌ரின் அந்த வீரதீர சாகசத்தை என்னை எழுதச்சொல்லிக் குறும்பாகச் சிரிப்பார், (இப்போல்ல தெரியுது நம்ம சேட்டையெல்லாம் எங்கிருந்து வந்ததுச்சுன்னு...! :)

அன்புள்ளங்களே..! புத்தாடை அணிந்து புதுப்பொலிவோடு இந்த தீபாவளியை நாம் எதிர்கொள்ளும் இவ்வேளை நம்மிடையே நம்மோடு வாழும் பேறுகுறைந்த அன்பர்களையும் மறந்துவிடல் ஆகாது என்பது எமது தாழ்மையான வேண்டுகோள், அவர்களுக்கும் நம்மாலான உதவிகளையும், ஆதரவையும் நல்கி அவர்களும் துன்பம் மறந்து சற்றேனும் இன்புற்றிருக்க நமது உதவிகளை வழங்கிடுவோமாக...

நல்லது நண்பர்களே இந்த தீபாவளியும், இனி உங்கள் அனைவரின் வாழ்விலும் வரும் ஒவ்வொரு தீபாவளியும் இனிமையையும், மகிழ்ச்சியையும் வற்றாது பெருக்கெடுக்க வைக்கும் ஜீவ நதியாய் ஊற்றெடுக்க‌ பிரார்த்திக்கின்றேன், வாழ்க‌ வளர்க, மீண்டும் சந்திப்போம், என்றும் அன்போடு...@நவம்பர் 2015 "மன்னன்" மாத இதழில் வெளிவந்த படைப்பு

Wednesday, October 7, 2009

ஆத்மா-8
என் இனிய நண்பர்களே...! ஆயிரம் வண‌க்கங்களோடு பதிவுக்குள் அழைத்துச்செல்கிறேன் வாருங்கள்!(பாரதிராசா ஸ்டைலிலே சொந்தமாக படித்து மகிழ்ந்துக்கங்கப்பா...! :)

அதற்கு முன்பதாக இன்று நம்மோடு இணைந்திருக்கும் நண்பர்கள் சிலருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன், மலர்விழி, தேவகி அம்மா, தயாஜி வெள்ளை ரோஜா, நினைவலைகள், உலவு மற்றும் அற்புதமான சமையல் குறிப்புகள் தரும் சசிகா வலைப்பதிவின் உரிமையாளர் திருமதி. மேனகா சத்தியா அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிங்கோ...! உங்கள் வரவு நல்வரவாகுக நண்பர்களே...! (ந‌ம்மை மதிச்சு, நம்ம பதிவுல இணைஞ்சவங்களுக்கு ஏதோ நம்மால‌ முடிஞ்சதுபா...! :‍)


***************************************************


'பேய்' விரட்டும் நூதன திருவிழா: 2 ஆயிரம் பேருக்கு சாட்டையடி


நாமக்கல், செப். 28: நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வெள்ளாலப்பட்டி அச்சப்பன் கோயிலில் "பேய் விரட்டுதல்' எனும் நூதன திருவிழா திங்கள்கிழமை நடந்தது.
நாமக்கல் மாவட்ட எல்லை முடிவான பவித்திரத்துக்கு அருகே அமைந்துள்ளது வெள்ளாலப்பட்டி கிராமம். திருச்சி மாவட்ட எல்லைக்குள் வரும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் சமூகத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருந்தனர்.
அவர்களில் ஒருவருக்கு ஆடு மேய்க்கச் சென்றபோது பேய் பிடித்ததாகவும், அதனை அச்சப்பன் என்ற சாமி சாட்டையால் அடித்து பேய் ஓட்டியதாகவும் புராணக் கதை கூறப்படுகிறது. அச்சப்பன் நினைவாக இங்கு கோயிலும் உள்ளது.
மேலும், ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இங்கு பேய் விரட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதது, திருமண தோஷம், தொழில் நஷ்டம், குடும்ப பிரச்னை, கல்வியின்மை, வேலையின்மை, தீராத பிணி மற்றும் பேய் பிடித்திருந்த நபர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாட்டையடி பெற்றால் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் தகவல்களுக்கு இங்கே...

***************************************************

வணக்கம் நண்பர்களே, நீங்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்களோடு காத்திருந்த
:( ஆத்மா 8ம் பாகம் உங்களை ஒட்டுமொத்த பீதியில் உறைய வைக்க இதோ உங்களுக்கே உங்களூக்காக...

குறிப்பு : அன்பார்ந்த நண்பர்களே, இக்கதை பல திடுக்கிடும் சம்பவங்களையும் !????, அதிர்ச்சியில் உறைய வைக்கும் அமானுக்ஷ்யங்களையும் ????! ஒருங்கே கொன்டிருப்பதால், இரவில் தனிமையில் படிக்காமல், கூட்டத்தோடு படித்து கும்மியடிக்க வேண்டும் என முன்மொழியப்படுகிறது, மீறிப்படித்து அதனால் தாங்கள் பயந்து போனீர்கள், தனியே நடக்க தயங்குகிறீர்கள், என வரும் புகார்களும், மேற்கொன்டு பயத்தில் காய்ச்ச‌லோ, அதிர்ச்சியோ ஏற்பட்டு குணப்படுத்த ஆகும் வேப்பிலை செலவு, போமோ செலவு போன்றவற்றிற்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் ஸ்டிரிக்காகத் தெரிவித்துக் கொள்கிறோம் :-))

முன்க‌தைச்சுருக்க‌ம் : சிவாவின் துர் ஆத்மாவால் பீடிக்க‌ப்ப‌ட்ட‌ சுசியின் இர‌ண்டாவ‌து ம‌க‌ள் ம‌ணிமொழியின் உட‌லில் பல் கொன்டு கடித்தது போன்ற பல காய‌ங்க‌ளைக்க‌ண்டு ம‌ன‌ம் மிக‌ நோகிறார் சுசி, மேற்கொன்டு அந்த‌ வீட்டில் த‌னியே த‌ன‌து ப‌ச்சிள‌ம் குழ‌ந்தைக‌ளுட‌ன் த‌ங்குவ‌து உசித‌மாக‌ப் ப‌ட‌வில்லை அவ‌ருக்கு, இதுவ‌ரை ம‌ன‌தில் க‌ரையானாய் அரித்துக் கொன்டிருந்த‌ ப‌ய‌ம‌னைத்தும் ராட்ச‌ச வ‌டிவெடுத்து த‌மை தாக‌குவதாய் உயிருக்குள் வ‌லித்து அவ‌ருக்கு...! இனிமேலும் த‌ன் ப‌ய‌த்துக்கு தான் அணைக‌ட்டி வைத்த‌ தைரிய‌மும் த‌கர்ந்துவிட‌ அருவியாய் விழிக‌ள் நீரைச் சொரிகின்ற‌ன‌..., அக்க‌ண‌மே வீட்டை விட்டு வெளியேற‌ முடிவெடுத்து முடிக்கு முன் சொல்லிவைத்தாற்போல் மாலை மறைந்து இருள் க‌விய‌, குளிர் காற்று, முதுகெழும்பில் ஊசியாய் தைக்க‌ இங்கொன்றும் அங்கொன்றுமாய் மழைத்துளிகள்...

சுசி கலங்கினாலும், வழக்கமான தனது தைரியத்தை பகீரதப் பிரயத்தனத்துடன் வ‌ர‌வ‌ழைக்க‌ப் பார்க்கிறார், மழையில் பச்சிளம் குழந்தைகளை அதிலும் வாடிப்போயிருக்கும் இரண்டாவது குழந்தை, இவர்களை இந்த மழையில் திக்கற்று திசையற்று, துணையும் இன்றி எங்கே, எப்படி கொன்டு செல்ல முடியும் தனித்திருக்கும் அவரால் ? வருவது வரட்டும், கணவர் வரும் வரை அவரால் அந்த வீட்டை வீட்டு வெளியேற‌ முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.

கவலையோடு அமைதியான சுசிக்கு அந்த வீட்டில் எங்கு நோக்கினாலும் உருவமில்லா ஏதோ ஒன்று தமை உற்று நோக்குவதாய் ஒரு உணர்வு, தனக்குப் பின்னால் தொடும் தூரத்தில் பின்தொடரும் ஏதோ ஒன்று, என பயம் விஸ்வரூபமெடுத்து விழுங்கத் துவங்கியது....

சிறிது நிதானித்து பின் ஏதோ நினைவால் உந்த‌ப்ப‌ட்ட‌து போல், சுவாமி மேடைக்கு கீழே ம‌ணிமொழியைக்கிட‌த்தி, திருநீரை அவள் நெற்றியிலிட்டு, உட‌லிலும் மெல்லத்தடவுகிறார். அயர்ந்து உறங்கும் குழந்தைக்கு அருகிலேயே மற்றக்குழந்தைகளையும் கிடத்திவிட்டு அவரும் சுவரோடு சுவராக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார், அவர் கையில் முன் அட்டை கிழிந்த ஒரு பழைய கந்த சக்ஷ்டி கவசம்... மெல்ல வாய் முனுமுனுக்க மெல்லிய அவர் குரல் கந்த சக்ஷ்டி வரிகளினூடே அங்கே நில‌விய‌ ருத்ர பூமியின் மயான அமைதியை கிழித்துக்கொன்டு காற்றோடு நர்த்த்னமிட்டபடி வியாபிக்கின்றது...

வெளியே, கருமேகங்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க, பொழுது இருண்டு, அந்தி மழை ஒரு பெருமழைக்கு அச்சாரமாய் மழைத்தூரல்களால் பூமியை நனைத்து சட சட சத்தத்தோடு மண் வாச‌னையை மேலெழுப்புகிறது...!

தூரத்தில் சன்னமாய் தன் பெயர் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது சுசிக்கு...! காற்றில் கலந்து ஓல‌மிட்ட அந்த குரல் சில நேரம் ஒலித்து தானே ஓய்கிறது மெதுவாய்...

சுசியோ, அந்த சுவாமிமேடையை விட்டு இம்மியும் அசையாமல், "காஸ் லைட் " என்று மின்சார‌ விளக்குகள் அற்ற அந்தக் காலத்தில் ஒருவித விளக்குகளை உபபோகிப்பார்களே, அந்த விளக்கை ஏற்றி வைத்து கந்தர் சக்ஷ்டி கவசத்தை மனதுள் முனுமுனுத்தவாரே, வீடு திரும்பும் கணவனுக்காக விசனத்தோடு காத்துகொன்டிருக்கிறார்...!

சுசி அறியாத ஒரு உண்மை சில வருடங்களுக்கு முன் லாரியால் தலை நசுங்கி துர்மரணம் எய்திய சிவாவின் நினைவு நாள் அன்றுதான்...! விக்ஷ‌ம் தலைக்கேறியதைப்போல விக்ஷ‌மம் புரியும் சிவா, துன்பத்தில் துடிக்கும் சுசியைப்பார்த்து வக்ரமாக மகிழ்கிறான், தன் தாயையே துன்புறுத்துவதாய் ஒரு ச‌ந்தோக்ஷம் அவனுள் பிரவாகமெடுக்கிறது..., மணிமொழியையும் மற்றக் குழந்தைகளையும் ஒரேயடியாய் மரணத்தை பரிசளித்து தன்னோடு இணைத்துக்கொள்ள துடிக்கிறது அவன் பேராசை, ஆனால் மணிமொழியைப் போல் மற்றக்குழந்தைகள் தன் பிடிக்குள் சிக்க விடாது காக்கும் சுசியின் மேல் மேலும் மேலும் கோபம் கனன்றது அவனுள்...!

சுசியையும், அவர் குழந்தைகளையும் வாட்டிய சிவா, தனது அடுத்த பலியாக வேலை முடிந்து வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கணவரிடம் தனது கைவரிசையைக் காட்ட ஆயத்தமாகின்றான்....!மீண்டும் ஆத்மா 9ல் சந்திக்கும் வ‌ரை, என்றும் அன்போடு...