.

.
.

Monday, June 22, 2009

இளைய சமுதாய முன்னேற்றத்தில் பெற்றோர்!


இன்றைய இளைய சமுதாயத்தில் மலிந்து வரும் சமூகச்சீர்கேடுகளுக்கு பெற்றோர்களும் பெரும் காரணம்! ஆமாம், தங்கள் பிள்ளைகளின் தவறுகளுக்கு அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் உடந்தையாக இருக்கும் பெற்றோர்களை வேறெப்படி வகைப்படுத்துவது?

த‌ற்கால‌ச்சூழ‌லில் சில‌ர் திருமண‌‌மே வேண்டாம் என்கின்ற‌ன‌ர், சில‌ரோ திருமணம் முடித்தும் தங்கள் சுய வளர்ச்சிக்காக‌ குழந்தை வேண்டாம் எனும் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்ற‌ன‌ர், ஏனைய‌ பிற‌ர்தான் வாழ்வில் இணைந்து குடும்பத்தை உருவாக்கி குழந்தைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். பெற்றோர்களாகும் இவர்களுக்கு முதலில் நமது பாராட்டுக்கள்!

எனினும் பத்து மாதம் சுமந்து பாலூட்டி, சீராட்டும் தாயாகட்டும், இரவு பகல் பாராது உழைத்து ஒடாய் தேய்ந்து குடும்பத்தை வழிநடத்தும் தந்தையாகட்டும், குழந்தைக‌ளை வ‌ள‌ர்ப்ப‌தில் முத‌ல் தெய்வ‌ங்க‌ளாகிய இந்த பெற்றோர்க்கு உள்ள‌ ப‌ங்கு அள‌விட‌ற்க‌ரியது. குழந்தைக‌ளை பெற்று, வ‌ள‌ர்த்து, கல்வியைத் தந்துவிடுவதோடு முடிந்து விடுவதில்லை இவர்களின் கடமை. தமது பிள்ளைகளை நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்புடைய‌ ந‌ல்ல‌ மாந்த‌ர்க‌ளாக‌ வ‌டிவ‌மைப்பதும் பெற்றோர்க‌ளாகிய‌ இந்த‌ சிற்பிகளே!

ஏன் இப்போதைய இளையோர்கள் புகை, ம‌து, போதை, தவறான உறவு, கொலை மற்றும் கொள்ளை போன்ற‌ தீய‌ப்ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு வெகு விரைவில் அடிமையாகி விடுகின்ற‌ன‌ர்? ஆங்கிலேயன் கற்றுத்தந்த நற்பன்புகளைவிட அவன் விட்டுச்சென்ற "ம‌ஞ்ச‌ள் க‌லாச்சாரம்" ஏன் ந‌ம‌து இளையோரை பேயாய் பிடித்து ஆட்டி வைத்துக்கொன்டிருக்கிற‌து?

இன்றைய‌ இளையோர் ப‌ல‌ர் பிஞ்சிலே ப‌ழுத்து, பழமாகும் முன்பே வெம்பிப்போய்விடுகின்ற‌ன‌ர். பல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளைப் புரிகின்ற‌ன‌ர், அத‌ற்குப் ப‌ல‌னாய் ப‌ல‌ த‌ண்ட‌னைகளாக சிறை‌வாச‌ம், நோய்க‌ள், ம‌ர‌ண‌ம் போன்ற‌‌வற்றை‌ப்ப‌ரிசாக‌ பெற்றுக்கொள்கின்ற‌ன‌ர்! பெற்ற‌வ‌ர்க‌ளைப்ப‌ரித‌விக்க‌ விட்டு பாதியிலேயே வாழ்வை பாழாக்கிக்கொள்கின்ற‌ன‌ர்!

இதற்கெல்லாம் வழிவகுப்பது கூடா ந‌ட்பு, சினிமா மற்றும் சுற்றுச்சூழல் என காரணம் காட்டி பெற்றோர் தப்பித்துவிட முடியாது! குழந்தைகளை சிறு வயது முதலே சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க பெற்றோர் அவ‌சியம் பாடுபடவேண்டும்.

தாங்கள் பெற்ற பிள்ளைகளின்பால் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும் காட்டும் சில பெற்றோர்களின் செயல்பாடுகளை கவனிக்கும் பொழுது, அதைவிட அவர்கள் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது, உலகில் 15% தம்பதியர் பிள்ளைகள் இன்றி வாடுகின்றனர், ஆனால் இவர்களோ தமக்குக் கிடைத்த விலையில்லா வைரங்களை வீதிகளில் வீசியெறியும் பாவிகள். அக்கறையில்லாமல் பரிதவிக்கவிடப்படும் பிள்ளைகளில் சிலர் சமூக நல இல்லங்களையும் ஏனைய பிறர் பல சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளையும் நிரப்பிக்கொன்டிருக்கின்றனர். இப்படி குழந்தைகளை உதாசீனப்படுத்தும் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனையை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்!

இவர்கள் இப்படியென்றால் இதற்கு முற்றிலும் மாறானவர்கள் சில பெற்றோர்கள். இவர்கள் "நான் இளமையில் ரொம்ப கக்ஷ்டப்பட்டேன், அதே நிலை என் பிளைகளுக்கு வரக்கூடாது, அவர்களுக்கு வருத்தம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாது" என்பார்கள். அதீத அன்பால் தமது பிளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவர்கள் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும் இத்தகைய‌ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மையைவிட தீமையையே அதிகம் செய்கின்ற‌‌னர். வருத்தம் தெரியாது வளரும் பிள்ளைகள் வாழ்க்கையை புரிந்துகொள்வது சிரமம். பிற‌ர் வ‌ருத்த‌ங்க‌ளை உண‌ர்வ‌தும் க‌டின‌ம். அதற்காக அவர்களது எல்லா தேவைகளையும் நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. எது அவர்களுக்கு தேவை என்பதை உணர்ந்து நிறைவேற்ற் வேண்டும்

தமது பிள்ளைகளின் நியாமான உணர்வுகளுக்கு பெற்றோர் பூரண மதிப்பளிக்கவேண்டும் அதேவேளை, அவர்கள் பெற்றோரின் அன்புக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் எனும் எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைக்க வேண்டும், நல்ல பண்புகள், பழக்க வழக்கங்கள் மற்றும் இறை சிந்தனை எனும் பாதையில் அவர்களை சீராக வழிநடத்த பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளை பெற்றவர்களெல்லாம் சிறந்த பெற்றோர் அகிவிடுவதில்லை, தமது வாரிசை முன்னேற்றப்பாதையில் வழிந‌டத்துவதில் வெற்றிகண்டவரே சிறந்த பெற்றோர்!

வேலை செய்யும் தந்தை அல்லது பெற்றோர் முடிந்தவரை ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் சிறிது நேரத்தை செலவிட பழக வேண்டும், நான் உனக்காகத்தான் உழைக்கிறேன் என்று தியாகி சீனெல்லாம் போட்டு அவர்களிடமிருந்து விலகி நின்றால், தயவு செய்து இப்பொழுதே உங்களுக்கு ஒரு முதியோர் இல்லத்தில் இடம் தேடி வைத்துக்கொள்ளுங்கள்! உங்கள் பணம் ஏற்படுத்தும் பாசப்பிணைப்பை விட உங்கள் அருகாமை பல மடங்கு அன்பை விதைத்து குழந்தைகள் உங்களை உயிராகவும், உயர்வாகவும் மதிப்பிடத்தூண்டும்.

ஒரு கைதேர்ந்த சமையல்காரன் தன் சமையல் ருசிக்க உப்பு, உறைப்பு, புளிப்பு எனும் அனைத்தையும் அளவோடு சேர்த்து பதப்படுத்தும் போதுதான் ஒரு நல்ல பதார்த்தத்தை அவனால் படைக்கமுடிகிறது, அதைப்போல‌வே அன்பு, அக்கறை, கண்டிப்பு என்பனவற்றை அளவோடு கலந்து பக்குவமாக வளர்க்கப்படும் பிள்ளைதான் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாகத் திகழ்வான்!

குழந்தைகள் கற்றுக்கொடுப்பதைக்காட்டிலும் கற்றுக்கொள்வது அதிகம், அவர்களின் முதல் வழிகாட்டி, வாழும் உதாரணங்கள் அவன் பெற்றோர்களே! பொய் சொல்லாதே எனச்சொல்லிக்கொடுக்கும் பெற்றோர் பொய் சொல்வதும், அவ்ர்கள் முன் புகைப்பிடிப்பதும், சண்டை போடுவதும், தரங்கெட்ட படங்களை அவர்களை வைத்துக்கொண்டு ரசிப்பதும் எந்த வகையில் பிள்ளைகளை மேம்படுத்தும்? ஆகவே நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டிய பெற்றோர் முதலில் தாங்கள் முன்னுதாரணமாக‌ விளங்கவேண்டும்.

அதிகம் செல்லம் கொடுப்பது தவறு, அதைவிட தவறு அதிகம் கெடுபிடி காட்டி அவர்களை நோகச்செய்வது!, சீர்படுத்துகிறேன் பேர்வழி என்று பிள்ளைகளை அடித்து, துன்புறுத்தி படாதபாடு படுத்தினால் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து விலகி வேறு துணை தேடவும் சேராத இடம்சேரவும் வழிவகுத்துவிடும்., பிள்ளைகளுக்கு பெற்றோரே முதல் தேவை எனும்படி நடந்து கொள்ள வேண்டும். தோழர்களாய் அவர்களை வழிநடத்தி தேவைப்படும் பொழுது அன்பையும் கண்டிப்பையும் காட்டி அவர்களை வளர்க்க‌ வேண்டும், கண்காணிக்கப்படுகிறோம் என்பதை உணர்த்தாமலேயே அவர்களை தேவையான காலம் வரை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தடம் மாறுவதை அறிய நேரிட்டால் முளையிலேயே கிள்ளி விட வேண்டும். பிறகென்ன நீங்கள்தான் உலகிலேயே சிறந்த பெற்றோர் என நான் மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளே ஒரு நாள் உங்களை பாராட்டுவார்கள்!

No comments: