.

.
.

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்தும், புன்னகையோடு ஒரு விருதும்...

இன்னல் தீர்ந்தே இன்பம் மலர்ந்திட இனிய புத்தாண்டு 2010 இன்று புலர்ந்தது‌ நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...


அடியேனின் இந்த 51 பதிவை எட்டிப்பார்த்திருக்கும் நண்பர்களுக்கும், நாம் பதிவிடத்துவங்கிய காலந்தொட்டு இன்றுவரை (ஏதோ ஆயிரமாயிரம் பதிவுகள் தந்து விட்டதைப்போல, என்னே ஒரு தற்புகழ்ச்சி! தாங்களைடா சாமி...!)எமது அறுவையையும் கிறுக்கல்களையும் பெரிய மனதோடு பொறுத்துக்கொன்டும், ஏற்றுக்கொன்டும் நமக்கும் ஒரு பதிவர் எனும் பெருமையை வழங்கி நம்மோடு பதிவுலகில் கைகோர்த்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளை எமது உளமார்ந்த நன்றி மலர்களை சமர்ப்பிப்பதில் நாம் பெருமையும் பேருவகையும் அடைகிறோம்...!


சுவையான ச‌மையலைப்போல் சுவாரஸ்யமான விடயம் இன்று தங்களோடு பகிர்ந்து கொள்ள...(ஆத்மா மெகாத் தொடரை முடிக்கப்போகிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே...! :)


கண்டீர்களா நண்பர்களே, அழகான விருது, அதை அளித்தவரும் ஒரு சிறப்பான பதிவுக்கு சொந்தக்காரர், அவர் திருமதி மேனகா சத்தியா அவர்கள்...! சசிகா பதிவின் சொந்தக்காரர், இவர் ஒரு அற்புதமான சமையல் நிபுண‌ர் என்பது இவர் பதிவில் நாளொரு சுவையும், பொழுதொரு வண்ணமுமாக மண‌‌க்கும் சமையல் குறிப்புக்கள் வழி நம்மால் அறிய முடிகிறது, இவர் சமையல் குறிப்புக்களால் அசத்துவதைப்போலவே, நம்மை அங்கீகரித்து அளித்த இந்த விருதும் நம்மை அச‌த்தி, ஆனந்த‌த்தில் எம்மை ஆழ்த்திவிட்டது... விருதுக்கு நன்றி சகோதரி...!

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html


இப்பதிவுலகில் நமது நட்பை ஏற்று நமக்கு தமது வற்றாத அன்பையும் ஆதரவையும் நட்பு வடிவிலும், நயமான பின்னூட்டங்களின் வடிவிலும் வழங்கி ஆதரவளித்த அன்புள்ளங்கள் அத்தனைபேருக்கும் இந்த விருதை அன்போடு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், பெறுபவர்களும் அன்போடு ஏற்று அகமகிழ்வார்கள் என நம்புகிறோம்...


இந்த இனிய புத்தாண்டு நன்னாளில் இவ்விருதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்! இதோ அடியேனின் பார்வையில் அந்த அற்புத பதிவர்கள்...


1.முத்தான பதிவர். எமது பதிவுலகப்பாதையின் வழிகாட்டி, அய்யா மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்கள்...!


2.துணிச்சலான கருத்துக்களுக்கு சொந்தக்காரர். அரசியல் நிகழ்வுகள் குறித்த அவர் படைப்புகள் வேகம் + விவேகம், பதிவர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள்.


3.ந‌வீனத்துவம் + சுவாரஸ்யங்கள் இழையோடும் பதிவுக்கு சொந்தக்காரர், அநங்கம் இதழாசிரியர் கே.பாலகுமாரன் அவர்கள்.


4.கவிதைகளாகட்டும், கருத்துக்களாகட்டும் தன்னலமின்றி பொதுந‌லம் சார்ந்து பதிவுகள் வழங்கும் மனோவியம் மனோகரன் அவர்கள்


4.யதார்த்தம் கல‌ந்த படைப்புகளால் வாசகர்களைக் கவரும் வாழ்க்கைப்பயண‌ம் விக்கினேசு அவர்கள்


5.கவின்மிகு கவிதாயினி தோழி புனிதா அவர்கள்!


6.இனிய கவிதைகளூக்கு சொந்தக்காரர், நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்னா அவர்கள்


7.பின்னூட்டங்களுக்காகவே இந்த விருது பெறுபவர் நமது தல தமிழ்வாணன் அவர்கள்.
இவ்வேளை நம்ம பின்னூட்ட செம்மல் தல தமிழ்வானன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம், கூடிய விரைவில் தாங்களும் தமிழ்ப்பதிவராக பதவி உயர்வு பெற்று, தங்களின் படைப்புகளின் வழி தமிழ்ப்பதிவுல‌க்கு ஒளிசேர்க்குமாறு எட்டுப்பட்டி பதிவர்கள் சார்பாக காரசாரமாக கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ! (ம்ம்ம், எத்தனை நாளைக்குத்தான் பின்னூட்டங்கள் வழி எங்கள் தலையையே உருட்டுவீர்கள், பின்னூட்டங்கள் வழி நாங்களும் உங்களை கலாய்க்க வேண்டாமா ? )


விருதுகளை வாரி வழங்குவதில் நாம் பாரி வள்ளல் என்பது அனைவரும் அறிந்த விடயமே...(இதெல்லாம் ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப ஓவர்)
மேலும் பலரோடும் இவ்விருதை பகிர்ந்து கொள்ள நமக்கு பெரிதும் ஆவல்தான், என்ன செய்வது அறிமுகமின்மை நமது ஆசைக்கு த‌டைபோடுகிறதே, என்ன செய்ய‌...!


நல்லது நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் அதுவரை அன்புடன்....

Saturday, December 26, 2009

உள்ளேன் ஐயா...!

வணக்கம் தெய்வங்களே, நலமும் சுகமும் நமதாகுக...!

மனித வாழ்க்கை மிகமிக மகத்தானது, இந்த உலகின் அதியற்புத, புதிர் மிகுந்த ஓர் அம்சம் என்று அடியேன் சொன்னால் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்களா நண்பர்களே? பின்னே, ஏற்றுக்கொன்டுதான் ஆகவேண்டும், ஏனென்றால் அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியாது அல்லவா?

வாழ்க்கைப்பாதையானது மிகமிக நேர்த்தியானது! அதிசயமானது! வித்தியாசமானது! காலத்தின் கை பிடித்து பயணிக்கும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள்! மாற்றங்கள்! ஏற்றத்தாழ்வுகள்! சுகதுக்கங்கள்! வெற்றி தோல்விகள்! உறவுகள் பிரிவுகள்! உண்மைகள் பொய்கள்! நிஜங்கள் நிழல்கள்!

வானவேடிக்கை இந்த வாழ்க்கை! அதில் மாற்றங்கள் எனும் வர்ணஜாலங்கள்! (எதற்கு இத்தனை பில்டப்புகள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது)

என்ன செய்வது, நம்ம வாழ்விலேயும் ஆண்டவன் அப்பப்போ அன்போட வந்து பாண்டி விளையாடிட்டு போறாரே, அதனால்தான் இந்த பிதற்றல், வேறென்ன சொல்ல! :-)

சில காலங்களுக்கு முன் வெளியீடு கண்ட உலகநாயகனின் "ந‌ம்மவர்" திரைபடத்தில் ஒரு காட்சி, அதில் முதிர்ந்த ஆசிரியர் திரு. நாகேக்ஷ் அவர்கள் அந்தப் பள்ளிக்கு புதிய ஆசிரியராக வரும் தனது முன்னால் மாணவன் @ நம்ம உலகநாயகன் அவர்களைப்பார்த்து ஒரு கமெண்டு அடிப்பார் பாருங்கள்! ஆசிரியர்களை அதிர வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஆசிரியராகும்போது தான் அந்த "பரவச" நிலையை உணர்வர் :-( அந்தக்காட்சியின் அர்த்தம் இப்பொழுதுதான் நமக்கும் புரிகிறது!

இந்தச் சந்தர்ப்பத்தில் ‌அடியேனுக்கு எழுத்தறிவித்த அத்தனை மூன்றாவது தெய்வங்களுக்கும் நமது முதற்கண் வணக்கம் உரித்தாகுக...! பாவம்யா அவங்க, நம்மையும் சமாளிச்சு கற்று கொடுத்திருக்காங்கன்னா, அவங்க கிரேட் தான். ஏன்னா இப்போ நாம குதிச்சிருப்பது அவங்க கோதாவிலேதான் :-)இப்போ மேற்காணப்பட்ட பிதற்றல்களுக்கான காரணம் :-(

இப்பதிவுலகிலும் சிறந்த பதிவர்கள் சிலர் ஆசிரியராக‌ விளங்குவது அறிகிறோம், அவர்களுக்குக்கும் இவ்வேளை நல்வாழ்த்துக்கள், (தெய்வம்பா நீங்கள்லாம்! :-)

சரி சரி நம்ம சுயபுராணம் போதும் விக்ஷயத்துக்கு வருவோம். பணியில் ப‌டுபிசியாக இருந்த காரணத்தினால் பதிவுப்பக்கம் தலை வைத்தே நாம் படுப்பதில்லை என்ற உண்மை அறிந்த ஒரு தமிழ்நெஞ்சம் தமது பதிவில், "ஏன் பதிவு எழுதுவதில்லை ?" என நண்பர்களோடு சேர்த்து நம்மையும் லெப்டு ரைட்டு வாங்க....

நமக்கு வெட்கம்! வேதனை! அவமானம் ஆகிப்போச்சு நண்பர்களே! இருந்தாலும் நாம யாரு? "கண்ட்ரோல் மாச்சோ"வாக அதையெல்லாம் அப்படியே மறைச்சு வச்சிட்டு, ஒரு பின்னூட்டம் வைத்து "உள்ளேன் ஐயா" அப்டின்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா அங்கிருந்து ஓடியாந்திட்டோம்ல! :-)(
தங்களின் பதிவுப் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கும் நமது நண்பர்களுக்காகவே விக்ஷேசமாக அந்தப் பதிவுக்கு இங்கேயும் தரவிறக்கம் வசதி செய்யப்பட்டுள்ளது, பதிவ நண்பர்கள் கண்டிப்பாக படித்து பாட்டு வாங்கிக் கொள்ளுங்கள்! சரியா? இதோ உங்களுக்கே உங்களுக்காக..., http://manilvv.blogspot.com/2009/12/blog-post_14.html


சிவனேசு : "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
மனசாட்சி : "ம்ம்ம் எனக்கு மட்டும்தானா திட்டு ? நண்பர்களும் வாங்கிக்கொள்ளுங்கள் :-))


அடடா நாம் சொல்ல வந்த விக்ஷயமே வேறு, அதை விட்டுட்டு என்னென்னமோ பேசியாச்சு...


நல்லது நண்பர்களே, தற்பொழுது அநியாயத்துக்கு லேட் ஆகி, விடிகாலை மூன்று மணி என்று அலாரம் சுட்டுவதால், இப்போ நான் நித்திராதேவியை சந்திக்கப் போறேன்(தூங்கப்போகிறேன்), மீண்டும் கூடிய விரைவில் (நண்பர்கள் திட்டுவத‌ற்கு முன்பதாகவே) சிலபல சுவாரசியமான விடயங்களோடு மறவாது தங்களனைவரையும் சந்திக்கிறேன்...!

பின்குறிப்பு : நாமளும் ஒரு பதிவு போட்டாச்சு சாமியோவ்!

Tuesday, November 24, 2009

ஆத்மா 9வண‌க்கம் தெய்வங்களே ! அனைவரும் நலம் தானே...? :-) எங்கே சில காலம் நம்மைக் காண‌வில்லை என்பதால், அநியாயத்துக்கு உயிரோட இருக்கியானுலாம் கேள்வி கேட்டு மெயில் அனுப்புறாய்ங்கப்பா !!!!?
:( இருந்தாலும் அந்த அக்கரைக்கு நன்றி சொல்லித்தான் ஆகோனும் இல்லையா...! நன்றி நன்றி நன்றி. இதோ உங்கள் நிம்மதியைக் களைத்து தூக்கத்தைக் கெடுக்க மர்மங்களின் சங்கமங்களாக ம‌லர்ந்துவிட்டது ஆத்மா 9'ம் பாகம்...! மர்மங்களை சந்திக்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்...!
*******************************************************
பேய்கள் பலவகை !!!

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப்பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது,கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப்பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச்செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவைபுத்திசாலிப் பேய்கள்.சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டேஇருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில்கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே”கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாடமட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கிவிடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவேஇருக்குமாம்....! மேலும் த‌கவல்களுக்கு இங்கே படித்து பயப்படவும்.
**********************************************************
முன்கதைச் சுருக்கம்
சிவாவின் ஆத்மாவினால் அலைக்க‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ சுசி, பலவேறு துன்பங்களுக்கு ஆளாகி மனம் நைந்து நொந்து நூலாகிப்போகிறார், தன் சின்னஞ்சிறு குழந்தைகளைக்கட்டிக்கொன்டு, இறை நம்பிக்கையைப் பற்றிக்கொன்டு, கண்ணுக்கு தெரியாத, மானிடர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் நம்பிக்கைக்கும் சவால்விடும் அமானுக்ஷ்ய யுத்தத்க் களத்தில் அவர்... சிவாவின் அடுத்த ஆட்டம் வேலை முடிந்து, இருண்டு அடர்ந்த அந்த காட்டு வழியே தனது "ஜாகுவார்" மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கண்வரை நோக்கி வெறியோடு திரும்புகிறது, இனி...

பார்வைக்கு அஜானுபாகுவாக அமைந்திருந்த சுசியின் கணவர், அவரது வாட்ட சாட்டமான பெரிய உருவமும், அகன்ற பெரிய விழிகளும், மைக்கை விழுங்கிவிட்ட குரலும் அவரை ஒரு பெரிய மாவீரர் ரேஞ்சில் மற்றவர்கள் கனிப்புக்கு கொன்டுபோய் நிறுத்தியிருந்தது.

குடும்பத்திற்காக உழைத்துப் பொருளீட்ட வேண்டிய அந்த குடும்பத்தலைவர் தனது தகுதிகேற்ப அருகாமையில் அமைந்திருந்த நெல் ஆலையில் உடலுழைப்புத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தமது மனைவியை வேலைக்கு அனுப்பக்கூடாது எனும் தீவிரமான பிற்போக்கு சிந்தனையும் படைத்தவராயிருந்தார். எப்பொழுதும் அதிகாலையில் வேலைக்கு புற‌ப்படும் அவர் வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகிவிடுவது வழக்கம், எப்பொழுதாவது சில சமயங்களில் மதிய உண‌வுக்கு வீடு திரும்புவதும் உண்டு. சபிக்கப்பட்ட அந்த மாலை வேலை முடிந்து மிதி வண்டியை மிதித்துக்கொன்டு அந்த வனாந்தரப் பாதையில் தன்னந்தனியாக வீடுதிரும்பிக்கொன்டிருக்க...

மழைத்தூரல்களோடு வெளிச்சம் தொலைத்த வானம், கருமேகங்களை ஆடையாய் சுற்றிக்கொன்டு பூமியை இருள் கவியச் செய்திருந்தது, சுசியின் கணவர், அஜானுபாகுவான தனது இரட்டை நாடி சரீரத்திற்கேற்ப தனது பெரிய ஜாக்குவார் மிதிவண்டியை மிதித்த வண்ணம் வீடு திரும்பிக்கொன்டிருக்கிறார், எப்போதும் நன்கு இருட்டிய பின்னரே வீடு திரும்பும் அவர் இன்று வேலை முடிந்து சற்று இருட்டுமுன்னரே வீடு திரும்பிக்கொன்டிருந்தார், மழைச்சாரல்கள் அவர் மேல் தெரித்து உடை நனைத்து உருண்டோடிக்கொன்டிருந்தன புவி நோக்கி..., அவரோ அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அவ்வப்போது முகத்தில் படியும் நீர்த்திவலைகளை மட்டும் ஒரு கையால் வழித்தெறிந்தவண்ணம் அந்த சேற்றுக்குழம்பாகிப் போயிருந்த ஒற்றையடிக் காட்டுப் பாதையில் தனது மிதிவண்டியை மிதித்த‌ வண்ணம் ( சேறுதான் சந்தணக்குழம்பாய் பாதை முழுக்க ஜமுக்காளம் விரித்து வைத்திருக்கிறதே, பிறகெப்படி வேகமாய்...? இருண்டிருந்த பொழுதை பிளந்து பாதை காட்டிக்கொன்டு வந்தது அவர் மிதிவண்டி விளக்கின் வெளிச்சம், இருளும் மழையும் சூழ்ந்த அந்த நேரத்தில் பாதையின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு சிறு உருவம் மழையில் நனைந்தபடி, பாதைக்கு குறுக்கே கூனிக்குறுகி அமர்ந்திருப்பதைக் காண்கிறார். ஆச்சரியத்தால் உந்தப்பட்டு அவ்வுருவத்தை நெருங்கி, அது தலை குனிந்த நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் என்பதையறிந்து மேலும் வியப்போடு, 'டேய் தம்பி, ஏன்டா இந்த மழையில் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் எனக் கேட்க, அந்த உருவம் அதை சற்றும் சட்டை செய்யாது அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் சுபாவத்திற்கேற்ற கோப‌ம் தலைக்கேற ஏன்டாடேய், அறிவுகெட்டவனே, எத்தனை வாட்டி கூப்பிடுறேன் காதில விழலையா என திட்டி முடிக்குமுன்னே, அருகாமையில் ஒரு பெரிய காட்டு மரம் பெரும் சப்தத்தோடு கிளைகள் முறிந்து மண்ணில் சட சடத்து சரியும் ஓசை அமைதியைக் கிழித்து ஆரவாரம் கிள‌ப்ப...அந்த சப்தம் ஒலித்த திசை நோக்கி திரும்பிய அவர் பளீரென மின்னல் வெட்டு ஒன்று ஒளீர, சற்று முன் தனக்கு முன் அமர்ந்திருந்த அந்த உருவம் தனக்கு முன்னே இல்லாமல் போய்விட்டதைககண்டு அதிர்கிறார். மனம் துனுக்குற, சிந்தனை அலைபாய, சட்டென எதையும் சிந்திக்காது, காறி உமிழ்ந்து, பெருங்குரலில் தனக்கு தோன்றிய அத்தனை தெய்வங்களையும் மனதுள் மண்டியிட்ட வண்ணம், திரும்பிப்பாராமல் தனது மிதிவண்டியை மிதிக்கிறார்..., இருளின் கருமை, திடுக்கிடும் பல வினோத ஓசைகள், மழைத்தூரல்களின் வெறித்தாக்குதல், அலைபாய முயலும் சிந்தனை, சிதையப் பார்க்கும் கவனம், இவை அனைத்தையும் ஒருங்கே சமாளித்த வண்ணம் அந்த சேற்றுப் பாதையில் ஏதோ ஒரு சக்தியின் துணையோடு அவரது பயணம் தொடர்கிறது, தனை சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்தும் உணராத நிலையில்...!

Thursday, October 15, 2009

ஆகா வந்துருச்சு தீபாவளி...!

வணக்கம் நண்பர்களே, இதோ வருது! அதோ வருது! என ஆசையோடு எதிர்பார்த்த தீபாவளி, என்ன ஆச்சரியம்! இதோ இன்னும் இரண்டொரு நாளில், வாசல் தேடி வந்தே விட்டது பாருங்கள்...

உன்னைக்கண்டு நானாட, என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உற‌வாடும் நேரமடா... உறவாடும் நேரமடா...!

பழம்பெரும் சினிமா பாடல் பட்டி தொட்டி எங்கும் முழங்க, புத்தாடைகள் புன்னகைகள், பலகாரங்கள், மத்தாப்பு, உறவினர்கள், ஆஸ்ட்ரோவில் பல சிறப்பு நிகழ்ச்சிகளோடு ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு ஓராயிரம் நினைவுகளை இதயத்தில் இழைத்திருக்கும், ஹாஸ்யங்களுக்கும் அதிலே பஞ்சமிருக்காது...! அடியேன் வீட்டு தீபாவளி ஒன்றும் அதுபோல நினைக்கும் போதெல்லாம் சிரித்து சிரித்து மகிழ வைக்கும், அதை உங்களுக்கும் சொல்லட்டுமா...? வாருங்கள் கொசுவத்திச்சுருள் உத்தியை உபயோகித்து கடந்தகாலத்திற்குள் நுழைவோம்...

என்றோ பெய்த மழைதான் ஆனால் இன்றும் நினைந்து பார்க்கும் போதெல்லாம் நனைந்து பார்க்க முடிகிறதே என கவிதை வரிகளோடு துவங்குகிறது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம்... :-)

எனது ஆரம்பப் பள்ளிப்பருவம், என் தாய் தீபாவளிக்காக சளைக்காது பலகாரங்களை செய்து குவித்துக்கொண்டிக்க‌, அவருக்கு அஸிஸ்டென்ட் + எடுபிடி + மானேஜர் + ஓடும்பிள்ள + கைப்புள்ள எல்லாமே நாங்கள் தான் :-)

எல்லா வேலைகளையும் விழுந்தடித்துக்கொன்டு செய்யும் எங்களுக்கு தீபாவளிக்கு முன் பலகாரங்களை ருசிபார்க்கும் பாக்கியம் மட்டும் வாய்க்காது (என்னக் கொடும சார்! :( சாமி கண்ணைக்குத்தும், கையைக்கடிக்கும் என்றெல்லாம் பல பொய்கள் எங்களை பலகாரங்களை தொடவிடாமல் தடுக்க...அதையும் மீறி பல சம‌யங்களில் நாங்கள்(சரி சரி விடுங்க! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :)))

அந்த வருடம், தீபாவளிக்கு முதல் நாள், நாங்கள் குடியிருந்த அந்த வாழ்விடம் தமிழர் நிறைந்த குடியிருப்பு பகுதியாதலால் தீபாவளி பெரு விழாவாய் களைகட்டியிருந்தது... மத்தாப்புக்களாய் மகிழ்ச்சிப் பிரவாகங்கள்...

எங்கள் வீட்டிலும் நரகாசுரனுக்கு ஒரு பெரு விழா, சமையல் அல்லோல கல்லோலப் பட்டுக்கொன்டிருந்தது... என் தாய் மறுநாள் தீபாவளிக்காக தோசைக்கு அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊறவைத்துவிட்டார், பிற‌கு அதேபோல் வேறொரு பாத்திரத்தில் பூலூட் அரிசி(பலகாரம் செய்ய உதவும் ஒருவகை அரிசி) ஊறவைத்துவிட்டார், அம்மா சொல்ல ஊறவைத்த புண்ணியவதி என் சகோதரி...!

மாலையானது, ஒரு பாத்திரத்திலிருந்த அரிசியை சுத்தம் செய்து, ஆட்டுரலில் இட்டு எனது ச்கோதரியையும் என்னையும் தோசைக்கு மாவாட்ட வைத்துவிட்டார் என் தாய்... :‍)

மீதமிருந்த இன்னொரு பாத்திரத்திலிருந்த அரிசியை பலகாரம் செய்ய சீனி தேங்காய்ப்பால், அழகான சிவப்பு வர்ணம் எல்லாம் சேர்த்து வானலியில் வேகவைக்க ஆரம்பித்தார்...

காலக்கொடுமையை பாருங்கள் சார்...! நாங்கள் மாவாட்டத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த அரிசி பிசு பிசுவென கல்லோடு ஒட்டிக்கொன்டு பசை ஒட்டியதைப்போல் கல்லை நக‌ர்த்த முடியாமல் திண்டாட வைத்தது... நாங்களும் நாமதான் ஏதோ தவறு செய்து விட்டோம் என பயந்து கொன்டு, அம்மாவிடம் சொன்னால் முதுகுத்தோல் உரிந்து விடுமே, யார் செய்த பாவமோ, இது யார் விட்ட சாபமோ என் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொன்டு மாவாட்டுவதாய் பாவ்லா காட்டிக் கொன்டிருந்தோம்... :(

அதேவேளை அங்கே அடுப்படியில் என்னைப் பெற்ற் தெய்வம்! கண்ணாடி போல் வெந்து மலர வேண்டிய அந்த அரிசிப் பலகாரம், நச நசவென சாதம்போல் குழைந்து கொப்பளித்து... வானலியில் ஒட்டிக்கொன்டு கரண்டியில் வரமாட்டேன் என அடம்பிடித்துக்கொன்டு என் தாயை திண்டாட வைக்க‌...

என் தாய்க்கு விக்ஷ‌யம் புரிந்துவிட்டது, ஆஹா அரிசியை மாற்றி சமைத்து விட்டோம் எனும் அந்த மகாப் பெரிய உண்மை புலப்பட, அய்ய்யோ மாட்டிக்கிட்டோமே, சாமி என்ன செய்வது... என் தந்தைக்குத் தெரிந்தால் மனுசன், அந்த மூன்று கண்ணனாய் மாறி ருத்ரதண்டவம் ஆடிவிடுவாரோ எனும் பயத்தோடு...

என்னதான் செய்வது, ஆனது ஆச்சு போனது போச்சு, நடந்ததையெல்லாம் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்துப் பார்த்து என் தாய் வேகமாக ஒரு விவேகமான முடிவை எடுத்தார், ஆம் தோசைக்கு அரைத்த அந்த மாவையும், பலகாரமாய் !!!! சமைத்த அந்த அயிட்டத்தையும் யாருக்கும் தெரியாமல் வெகு சாமர்த்தியமாய் வீட்டுக்குப்பின்னால் அள்ளிப்போய் கொட்டிவிட வேண்டியது, பிற‌கு வேறு ஏதாவது சமைத்து சமாளித்து விட வேண்டியது. அம்மா தீட்டிய திட்டத்தை அவருடைய செல்வங்கள் நாங்கள் கனக்கச்சிதமாய் நிறைவேற்றிட்டோம்ல...! :‍)

என்னதான் உண்மையை மறைத்தாலும் மனச்சாட்சி என்று ஒன்று உள்ளதே அய்யா, அதை ஏமாற்ற முடியுமா ? அரிசியை மாற்றி விட்ட அந்த உண்மை எங்களுக்கு நினைக்க நினைக்க கெக்கே பெக்கே வென வற்றாத சிரிப்பை வாரி வழங்கிக் கொன்டிருந்தது...

ஒரு வழியாக பின்னர் என் தந்தைக்கும் விக்ஷ‌யம் எட்டியது, நல்லவேளை நல்ல மூட் போல, அவரும் தமது மனைவி மக்களின் "தெற‌மையை" மெச்சி சிரித்துக்கொன்டார்...! நம்புங்கள் நண்பர்களே, கர்ஜித்து மட்டுமே பார்த்திருக்கிறேன், ஒரு சிங்கம் சிரித்ததை அன்றுதான‌ய்யா என் கண்களால் கண்டேன்...! :))

அதன் பின்னர் ஒவ்வொரு தீபாவளியும் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து சிரிக்க அடியேன் குடும்பம் தவறியதே இல்லை, என் அம்மா தீபாவளி காலங்களில், மிகவும் பெருமையோடு, "ஏன்மா அந்த அரிசியை மாற்றிச் சமைத்து அவஸ்த்தை பட்டோமே அந்தக் கதையை பத்திரிகைக்கு எழுதேன்மா", என அவ‌ரின் அந்த வீரதீர சாகசத்தை என்னை எழுதச்சொல்லிக் குறும்பாகச் சிரிப்பார், (இப்போல்ல தெரியுது நம்ம சேட்டையெல்லாம் எங்கிருந்து வந்ததுச்சுன்னு...! :)

அன்புள்ளங்களே..! புத்தாடை அணிந்து புதுப்பொலிவோடு இந்த தீபாவளியை நாம் எதிர்கொள்ளும் இவ்வேளை நம்மிடையே நம்மோடு வாழும் பேறுகுறைந்த அன்பர்களையும் மறந்துவிடல் ஆகாது என்பது எமது தாழ்மையான வேண்டுகோள், அவர்களுக்கும் நம்மாலான உதவிகளையும், ஆதரவையும் நல்கி அவர்களும் துன்பம் மறந்து சற்றேனும் இன்புற்றிருக்க நமது உதவிகளை வழங்கிடுவோமாக...

நல்லது நண்பர்களே இந்த தீபாவளியும், இனி உங்கள் அனைவரின் வாழ்விலும் வரும் ஒவ்வொரு தீபாவளியும் இனிமையையும், மகிழ்ச்சியையும் வற்றாது பெருக்கெடுக்க வைக்கும் ஜீவ நதியாய் ஊற்றெடுக்க‌ பிரார்த்திக்கின்றேன், வாழ்க‌ வளர்க, மீண்டும் சந்திப்போம், என்றும் அன்போடு...@நவம்பர் 2015 "மன்னன்" மாத இதழில் வெளிவந்த படைப்பு

Wednesday, October 7, 2009

ஆத்மா-8
என் இனிய நண்பர்களே...! ஆயிரம் வண‌க்கங்களோடு பதிவுக்குள் அழைத்துச்செல்கிறேன் வாருங்கள்!(பாரதிராசா ஸ்டைலிலே சொந்தமாக படித்து மகிழ்ந்துக்கங்கப்பா...! :)

அதற்கு முன்பதாக இன்று நம்மோடு இணைந்திருக்கும் நண்பர்கள் சிலருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன், மலர்விழி, தேவகி அம்மா, தயாஜி வெள்ளை ரோஜா, நினைவலைகள், உலவு மற்றும் அற்புதமான சமையல் குறிப்புகள் தரும் சசிகா வலைப்பதிவின் உரிமையாளர் திருமதி. மேனகா சத்தியா அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிங்கோ...! உங்கள் வரவு நல்வரவாகுக நண்பர்களே...! (ந‌ம்மை மதிச்சு, நம்ம பதிவுல இணைஞ்சவங்களுக்கு ஏதோ நம்மால‌ முடிஞ்சதுபா...! :‍)


***************************************************


'பேய்' விரட்டும் நூதன திருவிழா: 2 ஆயிரம் பேருக்கு சாட்டையடி


நாமக்கல், செப். 28: நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வெள்ளாலப்பட்டி அச்சப்பன் கோயிலில் "பேய் விரட்டுதல்' எனும் நூதன திருவிழா திங்கள்கிழமை நடந்தது.
நாமக்கல் மாவட்ட எல்லை முடிவான பவித்திரத்துக்கு அருகே அமைந்துள்ளது வெள்ளாலப்பட்டி கிராமம். திருச்சி மாவட்ட எல்லைக்குள் வரும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் சமூகத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருந்தனர்.
அவர்களில் ஒருவருக்கு ஆடு மேய்க்கச் சென்றபோது பேய் பிடித்ததாகவும், அதனை அச்சப்பன் என்ற சாமி சாட்டையால் அடித்து பேய் ஓட்டியதாகவும் புராணக் கதை கூறப்படுகிறது. அச்சப்பன் நினைவாக இங்கு கோயிலும் உள்ளது.
மேலும், ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இங்கு பேய் விரட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதது, திருமண தோஷம், தொழில் நஷ்டம், குடும்ப பிரச்னை, கல்வியின்மை, வேலையின்மை, தீராத பிணி மற்றும் பேய் பிடித்திருந்த நபர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாட்டையடி பெற்றால் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் தகவல்களுக்கு இங்கே...

***************************************************

வணக்கம் நண்பர்களே, நீங்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்களோடு காத்திருந்த
:( ஆத்மா 8ம் பாகம் உங்களை ஒட்டுமொத்த பீதியில் உறைய வைக்க இதோ உங்களுக்கே உங்களூக்காக...

குறிப்பு : அன்பார்ந்த நண்பர்களே, இக்கதை பல திடுக்கிடும் சம்பவங்களையும் !????, அதிர்ச்சியில் உறைய வைக்கும் அமானுக்ஷ்யங்களையும் ????! ஒருங்கே கொன்டிருப்பதால், இரவில் தனிமையில் படிக்காமல், கூட்டத்தோடு படித்து கும்மியடிக்க வேண்டும் என முன்மொழியப்படுகிறது, மீறிப்படித்து அதனால் தாங்கள் பயந்து போனீர்கள், தனியே நடக்க தயங்குகிறீர்கள், என வரும் புகார்களும், மேற்கொன்டு பயத்தில் காய்ச்ச‌லோ, அதிர்ச்சியோ ஏற்பட்டு குணப்படுத்த ஆகும் வேப்பிலை செலவு, போமோ செலவு போன்றவற்றிற்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் ஸ்டிரிக்காகத் தெரிவித்துக் கொள்கிறோம் :-))

முன்க‌தைச்சுருக்க‌ம் : சிவாவின் துர் ஆத்மாவால் பீடிக்க‌ப்ப‌ட்ட‌ சுசியின் இர‌ண்டாவ‌து ம‌க‌ள் ம‌ணிமொழியின் உட‌லில் பல் கொன்டு கடித்தது போன்ற பல காய‌ங்க‌ளைக்க‌ண்டு ம‌ன‌ம் மிக‌ நோகிறார் சுசி, மேற்கொன்டு அந்த‌ வீட்டில் த‌னியே த‌ன‌து ப‌ச்சிள‌ம் குழ‌ந்தைக‌ளுட‌ன் த‌ங்குவ‌து உசித‌மாக‌ப் ப‌ட‌வில்லை அவ‌ருக்கு, இதுவ‌ரை ம‌ன‌தில் க‌ரையானாய் அரித்துக் கொன்டிருந்த‌ ப‌ய‌ம‌னைத்தும் ராட்ச‌ச வ‌டிவெடுத்து த‌மை தாக‌குவதாய் உயிருக்குள் வ‌லித்து அவ‌ருக்கு...! இனிமேலும் த‌ன் ப‌ய‌த்துக்கு தான் அணைக‌ட்டி வைத்த‌ தைரிய‌மும் த‌கர்ந்துவிட‌ அருவியாய் விழிக‌ள் நீரைச் சொரிகின்ற‌ன‌..., அக்க‌ண‌மே வீட்டை விட்டு வெளியேற‌ முடிவெடுத்து முடிக்கு முன் சொல்லிவைத்தாற்போல் மாலை மறைந்து இருள் க‌விய‌, குளிர் காற்று, முதுகெழும்பில் ஊசியாய் தைக்க‌ இங்கொன்றும் அங்கொன்றுமாய் மழைத்துளிகள்...

சுசி கலங்கினாலும், வழக்கமான தனது தைரியத்தை பகீரதப் பிரயத்தனத்துடன் வ‌ர‌வ‌ழைக்க‌ப் பார்க்கிறார், மழையில் பச்சிளம் குழந்தைகளை அதிலும் வாடிப்போயிருக்கும் இரண்டாவது குழந்தை, இவர்களை இந்த மழையில் திக்கற்று திசையற்று, துணையும் இன்றி எங்கே, எப்படி கொன்டு செல்ல முடியும் தனித்திருக்கும் அவரால் ? வருவது வரட்டும், கணவர் வரும் வரை அவரால் அந்த வீட்டை வீட்டு வெளியேற‌ முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.

கவலையோடு அமைதியான சுசிக்கு அந்த வீட்டில் எங்கு நோக்கினாலும் உருவமில்லா ஏதோ ஒன்று தமை உற்று நோக்குவதாய் ஒரு உணர்வு, தனக்குப் பின்னால் தொடும் தூரத்தில் பின்தொடரும் ஏதோ ஒன்று, என பயம் விஸ்வரூபமெடுத்து விழுங்கத் துவங்கியது....

சிறிது நிதானித்து பின் ஏதோ நினைவால் உந்த‌ப்ப‌ட்ட‌து போல், சுவாமி மேடைக்கு கீழே ம‌ணிமொழியைக்கிட‌த்தி, திருநீரை அவள் நெற்றியிலிட்டு, உட‌லிலும் மெல்லத்தடவுகிறார். அயர்ந்து உறங்கும் குழந்தைக்கு அருகிலேயே மற்றக்குழந்தைகளையும் கிடத்திவிட்டு அவரும் சுவரோடு சுவராக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார், அவர் கையில் முன் அட்டை கிழிந்த ஒரு பழைய கந்த சக்ஷ்டி கவசம்... மெல்ல வாய் முனுமுனுக்க மெல்லிய அவர் குரல் கந்த சக்ஷ்டி வரிகளினூடே அங்கே நில‌விய‌ ருத்ர பூமியின் மயான அமைதியை கிழித்துக்கொன்டு காற்றோடு நர்த்த்னமிட்டபடி வியாபிக்கின்றது...

வெளியே, கருமேகங்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க, பொழுது இருண்டு, அந்தி மழை ஒரு பெருமழைக்கு அச்சாரமாய் மழைத்தூரல்களால் பூமியை நனைத்து சட சட சத்தத்தோடு மண் வாச‌னையை மேலெழுப்புகிறது...!

தூரத்தில் சன்னமாய் தன் பெயர் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது சுசிக்கு...! காற்றில் கலந்து ஓல‌மிட்ட அந்த குரல் சில நேரம் ஒலித்து தானே ஓய்கிறது மெதுவாய்...

சுசியோ, அந்த சுவாமிமேடையை விட்டு இம்மியும் அசையாமல், "காஸ் லைட் " என்று மின்சார‌ விளக்குகள் அற்ற அந்தக் காலத்தில் ஒருவித விளக்குகளை உபபோகிப்பார்களே, அந்த விளக்கை ஏற்றி வைத்து கந்தர் சக்ஷ்டி கவசத்தை மனதுள் முனுமுனுத்தவாரே, வீடு திரும்பும் கணவனுக்காக விசனத்தோடு காத்துகொன்டிருக்கிறார்...!

சுசி அறியாத ஒரு உண்மை சில வருடங்களுக்கு முன் லாரியால் தலை நசுங்கி துர்மரணம் எய்திய சிவாவின் நினைவு நாள் அன்றுதான்...! விக்ஷ‌ம் தலைக்கேறியதைப்போல விக்ஷ‌மம் புரியும் சிவா, துன்பத்தில் துடிக்கும் சுசியைப்பார்த்து வக்ரமாக மகிழ்கிறான், தன் தாயையே துன்புறுத்துவதாய் ஒரு ச‌ந்தோக்ஷம் அவனுள் பிரவாகமெடுக்கிறது..., மணிமொழியையும் மற்றக் குழந்தைகளையும் ஒரேயடியாய் மரணத்தை பரிசளித்து தன்னோடு இணைத்துக்கொள்ள துடிக்கிறது அவன் பேராசை, ஆனால் மணிமொழியைப் போல் மற்றக்குழந்தைகள் தன் பிடிக்குள் சிக்க விடாது காக்கும் சுசியின் மேல் மேலும் மேலும் கோபம் கனன்றது அவனுள்...!

சுசியையும், அவர் குழந்தைகளையும் வாட்டிய சிவா, தனது அடுத்த பலியாக வேலை முடிந்து வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கணவரிடம் தனது கைவரிசையைக் காட்ட ஆயத்தமாகின்றான்....!மீண்டும் ஆத்மா 9ல் சந்திக்கும் வ‌ரை, என்றும் அன்போடு...


Tuesday, September 29, 2009

தேடிவந்த தேவதைஒரு தேவதை வந்துவிட்டார் தமிழ்ப்பூங்காவைத்தேடி...

உண்மைதான் நண்பர்களே... கேட்கும் 10 வரங்களை நிறைவேற்றும் அந்த அற்புதமான தேவதையை அனுப்பியது இயற்கை எனும் ஒரு இனிய‌ தேவதை...(ரொம்ம்ப்ப்ப‌ ந‌ன்றி இய‌ற்கை, நீங்க ரொம்ப்ப ரொம்ப்ப நல்லவிங்கபா..., நமக்கும் ஒரு தேவதையை ந்ல்ல மனசோட அனுப்பிச்சிருக்கிங்களே... :-)

சரி தேவதைக்கு நிறைய கடமைகள் இருப்பதாலும், பல பேரை சந்தித்து வரமளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதாலும் காலந்தாழ்த்தாமல் நமது பல்லாயிரக்கணக்கான கோரிக்கைகளில் சிறந்த , பத்து, இதோ தேடிவந்த‌ தேவ‌தையின் கடைக்கண் பார்வைக்காக...

1.கடவுள் கடவுள்னு ஒருத்தரை நம்புறோமே, அவரை கண்ணில் காட்டச் சொல்லணும்! (எமது இரத்தங்கள் ஈழத்தில் இரத்தம் சிந்திக்கொன்டிருக்க உமக்கு அவர்களைக் காப்பாற்றாமல் வேறென்ன தலை போகிற‌ வேலைன்னு சண்டை போடணும்! )
தேவ‌தை : அட, எங்கேப்பா அந்த‌ இய‌ற்கை ? எப்பேர்ப‌ட்ட‌ ஆள்கிட்ட‌ என்ன‌ மாட்டி விட்டிருக்கு ம‌க‌ராசி! :-(


2.நினைத்த பொழுது நினைத்த இடத்திற்கு சென்று வரும் சூப்பர் பவர் வேணு‌ம்! (ஹோல்லோவ் மேன் போல!) ந‌ம்ம பதிவை யார் யாரெல்லாம் திட்றாங்கன்னு அவ்ங்களுக்கே தெரியாம கண்டுபிடிச்சிடுவோம்ல...! :-))
தேவதை : நீ இப்டியே கேள்வி கேளு! நான் இப்போ காணாமப் போகப் போறேன் பாரு!

3.அடுத்த பிறவி வேணாம்! வேற வழி இல்லாமல் மீண்டும் அவதரிக்க நேர்ந்தால் ஒரு தமிழச்சியாகவே பிறக்கும் பாக்கிய‌ம் வேணும்!
தேவதை : "தமிழ்ப் பற்றாம்! தாங்கலடா சாமி!"

4.ந‌மக்குப் பிடித்த அத்தனை உறவுகளுக்கும் முன்பதாக வாழ்வை முடித்து வானுலகம் ஏகிடனும்! பிடித்தவர்களுக்கு பிரியாவிடை சொல்வது நமக்குப்பிடிக்காது! :-(
தேவதை : கன்பார்ம் நரகம்தேன்!

5.பணம் காய்க்கும் மரம் ஒன்று பணப்பெட்டிக்கு பக்கத்தில் வேண்டும். (எனக்காக‌ இல்லப்பா, சொன்னால் நம்புங்க! பெரிய பங்களா கட்டி , பக்கத்திலே பெரிய பூங்தோட்டம்லாம் கட்டி, அப்புறம் ஏழ்மையை துடைத்தொழிக்கப்போறோம்!!!? :-))
தேவதை : ஏழ்மையை ஒழிப்பாங்களாம்! கதை விடுற்த பாரு! இது மாதிரி வரம் கேட்ட எத்தனை பேர என் சர்வீஸ்ல பார்த்திருப்பேன்!

6.அப்பாவி மக்களை ஏமாற்றும் அடப்பாவி அரசியல்வியாதிகளெல்லாம் நல்லவர்களாய் மாறி நாட்டுக்கு தொன்டாற்ற வேணும்!
தேவதை : இருந்தாலும் உனக்கு ஓவர் பேராசை சிவனேசு! :-)

7.ந‌மக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரும் இன்றும் இறுதி வரை என்றும் நமக்கு நண்பர்களாகவே இருக்கும் அதிர்க்ஷ்ட‌ம் வேணும்.
தேவதை : பாவம்பா அவங்க!

8. இந்தப் பதிவைப் படிக்கும் அத்தனை வாசக நண்பர்களின் ஏதாவதொரு ந‌ல்ல ஆசையை நிறைவேற்ற வேணும் (சிவனேசு, சீக்கிரம் மர்மத்தொடரை முடிக்கனும் எனும் வேண்டுதலை மட்டும் தவிர்த்து! :-))
தேவ‌தை : ம்ம்ம் ந‌ட‌க்க‌ட்டும்! ந‌ட‌க்க‌ட்டும்!

9. உல‌க‌த்தின் வெப்ப‌ம‌ய‌ம் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது! எல்லா பூமி வ‌ள‌ங்க‌ளும் தீய்ந்து அழியும் முன் உலகத்தை சுற்றி ஒரு பெரிய‌ குடை வேணும்!
தேவ‌தை : ஆமாம்! முன்னேறுறேன் பேர்வ‌ழி என்று க‌ண்ட கண்ட‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளால் ஓசோனில் ஓட்டை போட‌வேண்டிய‌து, அப்புற‌ம் பேக் ஃபையர் ஆனப்புறம் ந‌ல்ல‌ பிள்ள‌ங்க‌ மாதிரி இப்படி ஞாய‌ம் வேற‌ பேசுற‌து!

10.அடியேனின் ந‌ண்ப‌ர் ஒருவரின் அன்புத்தாயார், 63 அகவை கொன்ட அவர் பெயர் தி‌ரும‌தி.மீனாம்பிகை, அந்த‌த் தாய் த‌ற்ச‌ம‌ய‌ம் புற்றுநோயால் பாதிப்புற்று வாடுகிறார். அவ‌ர் ந‌ல்லபடி ந‌ல‌ம் பெற்று ச‌க‌ஜ‌ வாழ்க்கைக்கு கூடிய விரைவில் திரும்ப வேண்டும்.
தேவ‌தை: "ந‌ல்ல‌வ‌ர்க‌ளை இறைவ‌ன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்"

வரமளித்த தேவதைக்கு நன்றி, வழிகாட்டி அனுப்பி வைத்த இயற்கை தேவதைக்கும் நன்றி, பதிவை படித்து விட்டு கமென்டு போடும் தேவதைகளுக்கும் நன்றி.அடுத்து இந்த தேவதையை நான் சிலருக்கு அனுப்புகிறேன் :-

* குறை ஒன்றும் இல்லாத குறை ஒன்றும் இல்லை அவர்கள்,
* சுவீட் பிரண்டு சுபாசினி,
* புன்னகைப்பூ புனிதா,
* தல தமிழ்வானன் அவர்கள்,
* நல்ல நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு,
*மனோவியம் மனோகரன் அவர்கள்

இறுதியாக இந்த‌ப் பதிவை வாசிக்கும் தேவதை‌‌களே! உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள், அன்பு கூர்ந்து நோயால் பாதிப்புற்றிருக்கும் அந்தத் தாய்க்காக‌ பிரார்த்த‌னை செய்யுங்க‌ள்! உங்க‌ள் பிரார்த்த‌னை ம‌க‌த்தானது, ஒரு குடும்ப‌ தீப‌த்தின் சுட‌ர் பிர‌காசிக்க‌ அது நிச்ச‌ய‌ம் உத‌வும்! எந்த மனித மனம் பிற‌ உயிர்க்கு இர‌ங்குகிற‌தோ அந்த இதயமே இறைவன் வாழும் இருப்பிடம், த‌ய‌வு செய்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்க‌ள்! கூடிய‌ விரைவில் அந்த‌த்தாய் ப‌ரிபூர‌ண‌ ந‌ல‌மடைந்து விட்ட‌ ந‌ல்ல‌ செய்தியோடு அடுத்த‌டுத்த‌ ப‌திவுக‌ளில் உங்க‌ளைச் சந்திக்கிறேன், என்றும் அன்போடு...

Thursday, September 17, 2009

புறாவுக்கு பிறந்த நாளு! வாழ்த்துவோமே நாமும் இன்று!நண்பர்களே, உங்களுக்கு சேதி தெரியுமா! நமது தமிழ் பதிவுலகில் சிறகு விரித்துப் பறக்கும் ஒரு அழகான, அமைதியான, அன்பான, அறிவான, அற்புதமான‌, அந்நியோன்யமான ("அ" வில ஆரம்பிக்கிற வேற நல்ல வார்த்தைகள் பிளீஸ்...!) புறாவுக்கு இன்று பிறந்த நாள்! :-)

ஆமாம், இன்று பிறந்த நாள் காணும் நம்ம ச‌மாதன‌ப் புறா சுபா அவர்களுக்கு, நமது மனம் நிறைந்த அன்பும், வாழ்த்துக்களும் உரித்தாகுக! தோழி வாழ்விலும், தாம் கைக்கொன்ட எல்லாத் துறைகளிலும் மேன்மேலும் "தல" சிறந்து விளங்கி, சாதனைப்பெண்ணாய் பூமியில் "பல ரவுண்டுகள்" வரவேண்டுமென்று ந‌ம்ம குல தெய்வம் மவுண்ட் ரோடு முனீஸ்வரனை வற்புறுத்தி வேண்டிக்கொள்கிறோம்! ‍

கலையாத கல்வியும்,
குறையாத வயதும் ,
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும் ,
குன்றாத இளமையும்
கழுபிணி இல்லாத உடலும்
சலியாத மனமும்,
அன்பகலாத மனைவியும்/(கணவரும்)
தவறாத சந்தானமும்
தாளாத கீர்த்தியும் ,
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் ,
கோணாத கோலும்-
ஒரு துன்பம் வாராத வாழ்வும் ,
துய்யனின் பாதத்தில் அன்பும்
உதவி பெரிய தொண்டரோடு கூட்டுகண்டாய்
இப்பதினாறு பேறுகளும் என்றும் பெற்று வளமாய்


அன்பான கண‌வரோடும், பிள்ளை குட்டிகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன் பேர்த்திகள், கொள்ளுப்பேரன் பேர்த்திகள், எள்ளுப் பேரன் பேர்த்திகள் கூடவே புனிதாவைப்போல், குறை ஒன்றும் இல்லை அவர்களைப்போல்! இயற்கையைப்போல்! அடியேனைப்போல் சிறந்த நண்பர்கள் (அப்பாடா! சப்பான் சாடையிலே நம்மையும் சிறந்த நண்பர்னு சொந்தமா சொல்லி பாராட்டியாச்சு :-))) புடைசூழ சிரிப்பும் சந்தோக்ஷமும், களிப்பும், கலகலப்புமாக, கும்மாளமும் குதூகலமுமாக வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மகிழ வாழத்துறோம்!

சரி சரி வெறும் பாராட்டுத்தானா! எனக்கேட்கும் சுபா அவர்களுக்கு வந்து குவிந்துள்ள பரிசுகளைப் பார்க்கலாம் வாருங்கள்!

முதலாவதாக சுபாவின் அம்மா அவர்கள்! சென்னை போத்திஸிலிருந்து சுபாவுக்காக ஒரு மிக மிக அழகான சந்தண நிறப்பட்டுப்புடவையோடு , அறவே விலை மதிக்க முடியாத அவரது அன்பு முத்தம் ஒன்று ஆசிர்வாதங்களின் கலவையோடு அன்பு மகளுக்காக!

அடுத்தாக சுபாவின், மறுபாதி! அவர் ஒரு அழகான பொட்டலம் ஒன்றை பரிசாக அனுப்பியிருக்கிறார், அதை யார் கண்ணிலும் படாமல் சுபா மறைக்க நாம் சிஐடி சங்கரியாக மாறி ஆராய்ந்ததில் கசிந்த உண்மை யாதெனில் அது அவரது ஆசைக்கணவரின் "அன்பு இதயமாம்"! ம்ம்ம் நல்லது நல்லது! :‍) சரியான நேரத்தில் சரியான பரிசு!

பிறகு, ஆ! அங்கே அழகாய் சிரித்துக்கொன்டு வருவது, அட நம்ம கவியரசி புனிதாதான்! தோழி என்ன பரிசு தருவார்? ஆவலோடு நாம் காத்திருக்க, தோழி விரைந்து வந்து சுபாவின் கையைப்பற்றிக்கொன்டு உருக்கமாக ஒரு கவிஜ பாட ஆரம்பித்துவிட்டார்!!!!!? என்னனு கேட்டா, அதுதான் அவர் பிறந்த நாள் பரிசாம்! பாவம் சுபா! :-( கோபத்தை அடக்கிக்கொன்டு, இரு இரு வச்சிக்கிரேன்! உன் பிறந்த நாள் வரட்டும்! என மனதிற்குள் கருவிக்கொன்டார் :-))

அடுத்ததாக நம் குறை ஒன்றும் இல்லை அவர்கள்! அமைதியாக வந்தவர் தமது சார்பாக சுபாவின் பதிவில் இட்டுக்கொள்ள "மலேசியா பாப்பம்மா" எனும் மிக உயரிய பட்டத்தை பெருமையோடு வழங்க, சுபா அதை ம‌கிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ள! பிறந்த நாள் கூட்டம் நெகிழ்ச்சியோடு "மலேசியா பாப்பம்மா வாழ்க ! வாழ்க!" என ஆர்ப்பரிக்க, அட்டா சிறப்போ சிறப்பு !

அடுத்ததாக நம்ம இயற்கை அன்னையின் இ(னி)ளைய மகள், அழகான அவர் பெயர் இயற்கை மகள்!, நீலவான துகிலணிந்து, தென்றல்போல நடைபயின்று, புவி நோகாமல், அக்கினிச்சுடராய் ஒளிவீசும் வதனம் கொன்டு‌, தெளிந்த நீரோடைபோல் கனிந்த பார்வை கொன்டு சுபாவிடம் வருகிறார், வந்தவர் சுபாவுக்கு ஒரு அழகிய "ஏஞ்சல்" ஒன்றை கையில் கொடுத்து வாழ்த்தி வரமளிக்கிறார்! அடடா! ஒரு தேவதை தேவதையைப் பரிசளிக்கிற‌தே அதுவும் ஒரு தேவதைக்கு! (இயற்கை எப்போதுமே நமக்கு மிகவும் பிடித்த விக்ஷயம்!!!)

சரி சரி, அப்புறம் நீங்க என்ன பரிசு கொடுத்தீங்கன்னு தானே கேட்கறீங்க! ஒரு அழ‌கிய வைர அட்டியல், கூடவே செட்டாய் நாலு தங்கக்காப்புகள் , ஒரு சோடி நீலக்கல் பதித்த தேன்கூடு தோடு! அப்புறம் கையில் வச்சுக்கப்பா செலவுக்குன்னு ஒரு பத்தாயிரம்! வாவ்!
.
..
...
:-)
எல்லாம் கொடுக்க‌னும்னு ஆசைதான்! (அப்ப கொடுக்கலியா? வெறும் லுல்லுல்லாயியா!!!!?) ஆனால் பாருங்க‌! ம‌ன‌சுக்கு இருக்கிற‌ பெருந்த‌ன்மை மணிப‌ர்சுக்கு இருக்கமாட்டேங்குதே‌ என்ன‌ செய்ய!!!? அத‌னால‌, என‌து சார்பாக‌, என‌து அன்பு, அக்க‌ரை, பாச‌ம், நேச‌ம், அத்த‌னையும் ஒரு பெரிய‌ பொட்ட‌ல‌மாக‌க் க‌ட்டி தோழிக்கு ப‌ரிசாக ஏற்கனவே ஈமெயிலில் அனுப்பிவிட்டேன்! :-)

ச‌ரி ந‌ண்ப‌ர்க‌ளே, இந்த‌ குதூக‌ல‌மான‌ நிக‌ழ்ச்சியில் கூட‌வே ஒரு ம‌கிழ்ச்சியான‌ செய்தி, (நாம் சொல்லும் முன்பே, அப்பாடா இன்னைக்கு ம‌ர்ம‌ப் ப‌திவு இல்லை என்ப‌து தானே அது என்ப‌வ‌ர்க‌ளுக்கு) இதோ, இதோ வ‌ந்துகொன்டே இருக்கிற‌து, ஆத்மா எட்டாம் பாக‌ம், பாக‌ம் தான் எட்டு! முடிவோ இன்னும் எட்டாம‌ல் தான் இருக்கிற‌‌து! என்ன‌ செய்வ‌து நண்ப‌ர்க‌ளே, விதி வ‌லிய‌து அல்ல‌வா? :-)

நல்லது நண்பர்களே! புறப்படும் முன்பாக நம்ம சுபாவுக்காக பிரத்தியேகமாக ஒரு இனிமையான பாடல்! உலகிலேயே மிகவும் அதிகம் பேரால் தினம் தினம் விரும்பி பாடப்படும் இனிய பாடலான " ஹேப்பி பேர்த் டே" பாடல் இதோ சுபாவுக்காகவே விசேக்ஷமாக!

நண்பர்களே இன்று நமது தோழிக்கு பிறந்த நாள், எனவே எல்லோரும் ஓடிவந்து உங்கள் நட்பான வாழ்த்தை தோழிக்கு சமர்ப்பிக்கும்படி விண்ணப்பித்துக்கொன்டு விடைபெறுகிறேன்!

மீண்டும் ச‌ந்திப்போம்! என்றும் அன்போடு....!


Friday, August 28, 2009

ஆத்மா (7)

வ‌ணக்கம் நண்பர்களே, இந்த நயமான வேளையிலே நியாயமாக‌ பார்த்தால் இப்படிப் பதிவெல்லாம் வெளியிட்டு பயமுறுத்தக்கூடாதுதான்! என்ன செய்வது? "எங்கே மர்மக்கதை?", "எங்கே மர்மக்கதையின் தொடர்ச்சி?" என தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கும் நண்பர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு இது போன்ற கொடுமைகளை புரிய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம்:)))). ஆகவே மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்,(வேற வழி:( ,நல்லது நீங்கள் ஆவ‌லோடு எதிர்பார்க்கும் :( ஆத்மாவின் 7 ம் பாகம் இதோ உங்களுக்காகவே பிரத்தியேகமாக பயமுறுத்தும் பதிவுகளாக தொடரும் மர்மம்...

அதற்கு முன்பதாக கவிதை மனங்களுக்கு சில வரிகள் ...

இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்
இந்த உலகத்தில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும்
இங்கு ஒவ்வொரு வளைவிலும்
அபத்தமான மோதல்களின்
திடீர்த் தாக்குதல்கள் காத்திருக்கும்...
தெருக்களின் பகைமைக் கண்கள்
அவளை நிலைகுத்தி நிற்கச் செய்யும்..
சாலையில் தனியாக இந்தப் பெண்

அவளது ஒரே பாதுகாப்பு
அவளது பாதுகாப்பற்ற நிலைதான்..
எந்தவொரு மனிதனையும்
ஒரு ஊன்றுகோலாகவோ அல்லது
பாதையோரத் தங்குமிடமாகவோ
அவள் பயன்படுத்திக் கொன்டதில்லை

எந்த ஒரு மனிதனையும்
அவள் பாலமாக பாவித்து
அவன்மீது நடந்து சென்றதில்லை...
அவள் தனியாகவே சென்றாள்...
அவனை அவளுக்கு சமதையாச் சந்திக்க
அவனை உண்மையாக நேசிக்க ...
அவள் வெகுதூரம் செல்வாளோ
அல்லது மண்ணில் தள்ளாடிச் சரிவாளோ
அல்லது தனக்குத் தெரியாத தொடுவானங்களால்
தடுமாறிப் போவாளோ அவளுக்குத் தெரியாது....
அவள் பிடிவாதக்காரி வழியில்
அவளை யாரேனும் கண்டித்தாலும்கூட
அவள் புறப்பட்டுச் சென்றதே ஒரு சாதனைதான்...

"சாலையில் தனியாக ஒரு பெண்‍"
ப்ளாகா டிமிட்ரோவோ

ஓய்ந்துவிட்ட‌ வேளைக‌ளிலும் ஓயாத‌ நினைவுக‌ளோடும் வாழ்க்கை ச‌ம‌ர்க‌ளோடும் ச‌மாதான‌ம் தேடித் தொடரும் ஒரு சராசரிப்பெண்ணின் சோகம் சூழ்ந்த‌ ப‌ய‌ண‌ம், ந‌ம‌க்கு மிக‌வும் பிடித்த‌ இந்த‌ க‌விதை/கவுஜ‌ யாருடைய‌ உப‌ய‌ம் தெரியுமா ந‌ண்ப‌ர்க‌ளே ? ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையில் லேட்டா‌க‌ வ‌ந்தாலும், லேட்ட‌ஸ்டாக "வெட்‌க‌ம்! வெட்க‌ம் க‌மீங்!" என‌ ஒரு முழும‌தி முக‌ம் ம‌றை‌த்து நாணுகிற‌தே அந்தக் கவிதாயினியின் அன்பளிப்புத்தான்! த‌‌ம‌து ஈர‌மான‌ நினைவுக‌ளால் ந‌ம‌து இத‌ய‌த்தில் இட‌ம்பிடித்த‌ கவிக்குயில் புனிதா! ந‌ம‌து அன்பையும், வ‌ர‌வேற்பையும் தோழிக்கு புல‌ப்ப‌டுத்திக் கொன்டு இன்றைய‌ ப‌திவுக்குள் இணைய‌லாம் வாருங்க‌ள்...
**************************************************

முகலாய மன்னர் ஷாஜஹான் மற்றும் பேகம் மும்தாஜின் காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் பற்றி எல்லோரும் அறிவார்கள்.மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் தான் இருந்தது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.மேலும், இந்த புலாரா மஹாலில் தான் மும்தாஜின் ஆவி உலவுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டதும், மும்தாஜின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டது. மும்தாஜின் உடல் மட்டுமே புலாரா மஹாலில் இருந்து தாஜ்மஹாலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மும்தாஜின் ஆவி இன்னமும் புலாரா மஹாலில் தான் உலாவிக் கொண்டிருக்கிறது என்று அங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர்.

புலாரா மாளிகையில் இருந்து அவ்வப்போது சத்தங்களும், கத்துவது போன்றும், அலறுவது போன்றும் சத்தங்கள் வருவதாகவும், ஆனால் அந்த ஆவி இதுவரை யாரையும் துன்புறுத்தியது இல்லை என்றும் அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.
http://tamil.webdunia.com/religion/believeitornot/article/0811/10/1081110072_1.htm

*************************************************

இந்த பூவுலகின் நீண்ட நெடிய வாழ்க்கைப்பயணத்தில், நாம் கடந்து செல்லும் காலம் அத்தனையும் இனிமை சுமந்த வசந்த காலங்களாகவே வாய்த்து விடுவதில்லையே! அதிலும் விளிம்பு நிலை மனித வாழ்க்கை என்பது வறுமை, சோகம், ஏமாற்றம், ஏக்கம் ஆகியன சூழ்ந்ததோர் பாலைவனப் பிரயாணத்திற்கு ஈடான துயரையே தாங்கிவந்து, வாழ்க்கை எனும் பேரில் மனித உயிர்களை வாட்டி வதைக்கிறது!

சுசியின் வாழ்க்கையும் ஏற‌க்குறைய அந்த‌ நிலையை ஒத்தவாறே அமைந்திருந்தது, எனினும் அவர் தனது மனதை திடப்படுத்திக்கொன்டு, வாழப் பழகியிருந்தார், ஆரம்பக் காலங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகி அவரது கணவரிடம் அந்த வீட்டில் நிகழும் அமானுக்ஷ்யத்தின் ஆர்ப்பாட்டங்களை அவர் விவரித்த போது அவர் கணவர் அவர் சொல்வதை ஏற்காததோடு, பதிலுக்கு அவரை திட்டித்தீர்த்தார். ஏனென்றால் அவருக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது! "நாமே பெரிய பேய், நம்மை மிரட்ட வேறு பேயா?" எனும் வீரமான சிந்தனை அவருக்கு!

இந்த சுசியின் கணவர் இருக்கிறாரே, அவருக்கு தன் மனதில் தான் பெரிய வீரர் எனும் நினைப்பு! அஜானுபாகுவான முரட்டுத் தோற்றமும் ,அவர் வாய்திறந்து பேசினாலே, "என்ன சண்டையா? என அருகிலுள்ளோர் விசாரிக்கும் வண்ணம் அமைந்த அவரது இடியோசை குரலும் அவருள் அப்படியான ஒரு மமதையை ஏற்படுத்தியிருந்தது நிஜமே!, ஆள் பார்ப்பதற்கு வீர‌மானவராகக் காட்சியளிப்பது என்னவோ உண்மைதான், ஆனால்... (இவர் வீரத்தின் லட்சணத்தை நாம் அடுத்துவரும் பதிவுகளில் காண்போம்)
சுசியை பொறுத்தமட்டில் அவர் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடக்கூடாதே எனும் அச்சம் ஒன்றே அவரை மிகவும் கவலையில் ஆழ்த்திகொன்டிருந்தது, அவர் நினைத்ததைப்போலவே வெகு விரைவில் ஒரு துயரம் அவரை தேடிவந்தது...

சுசியின் இரண்டாவது பெண்குழந்தை மூன்று வயது மணிமொழி, மிகவும் சுட்டியான பெண், குட்டையாய், குண்டாய், கதுப்பான கன்னங்களும், சிமிழ் உதடும், பெரிய கண்களோடு, சின்ன மூக்குமாக ஒரு அழகிய குட்டி தேவதையாய் அந்த வீட்டில் அவள் வளைய வந்து கொன்டிருந்தாள்!

அவளது போறாத காலம்! சிவாவின் கொலை வெறிப்பார்வை அவளை நோக்கிப் பாய்ந்தது! ஏற்கனவே அவள் அவனது சகோதரிகளை ஒத்த வயதுடைய பெண் என்பதாலும் அவனுக்கு அவளை விரைந்து பலிகொள்ளும் எண்ணம் தீவிரமடைந்தது! சரியான சமயம் நோக்கிக் காத்திருந்தவனுக்கு, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதற்குரிய வாய்ப்பு சித்திக்க, சிறிதும் தாமதியாது அவளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்தான்!
மணிமொழியின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றம்! சுறு சுறுப்பை இழந்து சோர்ந்து காணப்பட்ட அவ‌ள் சூன்யத்தை வெறித்த பார்வையோடு, சுயத்தை இழந்து யாரிடமும் பேசாது, முன்பு சிவாவின் படுக்கை அமைந்திருந்த அந்த மூலை இடுக்குக்குச் சென்று சுருண்டு படுத்துக்கொள்ளலானாள்! சொந்தமாக மழலை மொழியில் யாருடனோ பேசி, அழுது, சிரித்து, அடம்பிடித்து, வீட்டிலுள்ளவர்களுக்கு கிலி பிடிக்கச் செய்தாள்!

சுசிக்கு வேதனை தாளவில்லை! வீட்டு வேலையெல்லாம் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு குழந்தைக்கு பக்கத்தில் அமர்ந்தவாரே கண்களில் நீர்வழிய வீடுதிரும்பும் கணவனுக்காக வேதனையோடு வாசல் நோக்கிக் காத்திருக்கலானார்.வேதனை! வேதனை! வேதனை என வாழ்க்கையே வேம்பாய் வெறுத்துக் கசந்தது அவருக்கு! தன‌க்கென வரும் துயர்களை தாங்கும் தாய் மனது, தனது மக்களுக்கு ஒரு துன்பம் என்றால் எப்படி நில‌லகுலைந்து போய்விடுகிறது? பாவம் சுசி! எண்ணச்சுழலில் சிக்கி சற்றே தனை மறந்தார்! திடீரென தனது பிரமையிலிருந்து மீண்ட அவர் அருகில் அவர் குழ‌ந்தையைக் காண‌வில்லை! அடித்து பிடித்து எழுந்து மணி‌மொழி! மணிமொழி என உரக்க அழைத்தவாரே வீடு முழுக்க குழந்தையைத்தேடினார் சுசி, மங்கலான இருளில் அதே ஒதுக்குப்புறமான அந்த‌ இட‌த்தில் மீண்டும் ஏதொ முன‌கிய‌வாறு கிட‌க்கிறாள் ம‌ணிமொழி! அய்யோ என‌ அல‌றிய‌வாரே அவ‌ளை அள்ளித் தூக்கிக்கொன்டு முன் அறை‌க்கு விரை‌ந்தார் சுசி, அன‌ல் க‌க்கும் இரு கோப‌ விழிக‌ள் த‌னை வெறியோடு முறைப்ப‌தை உண‌‌ராது!
அயர்ந்த குழந்தையை படுக்கையிலிட்டு தனது தோளிலிருந்து சரிந்து விழுந்த அவள் தளிர்க்கரத்தை கையைலெடுத்து இதழ்பதிக்கிறார், அப்போது அந்தக்கையின் மனிக்கட்டுக்கு சற்று மேலே ஏதோ ஒரு காயத்தின் வடு சிவந்து தெரிய அதைக்கூர்ந்து கவனிக்கிறார், ஏறக்குரைய 50 சென் அகலத்தில் சமசீரற்ற வட்ட வடிவமாய், ஆழ சிவந்து சிறு சிரு துளையிட்டதைப்போல அந்த வட்ட வடு, கையினைத் தவிர்த்து கழுத்து, முதுகு, தோள்பட்டை, கை கால்கள் என அவள் உடலின் பல பாகங்களிலும் அதே வடுக்கள், அந்த வடுக்களை தீர்க்கமாய் உற்று நோக்குகிறார் சுசி, அவை ஒரு சிறு வாய் கடித்து ஏற்படுத்திய கடித்தடங்கள் என்பதை உண‌ர்ந்த‌ அதிர்ச்சியில்...

Wednesday, August 26, 2009

மழலை மனங்களுக்கு மத்தாப்பூ

வணக்கம் நண்பர்களே! அடியேனின் பதிவைக் காணாமல் ஆன‌ந்ததில் அனைவரும் மூழ்கிருந்தது அறிய வந்ததால்!(விட்டுடுவோமா நாம! வந்துட்டோம்ல!), இதோ அமானுக்ஷ்யங்கள் ஆர்ப்பரிக்கும் நமது மர்மமான மர்மத்தொடரின்(மர்மமான தொடர்தான் ஏன்னா இந்தத் தொடர் எப்போ எப்டி முடியும்னு எனக்கே தெரியாது! :)

நல்லது நண்பர்களே! இரண்டு முக்கியமான நற்செய்திகளை தாங்கி மலர்ந்துள்ளது இன்றைய தமிழ்ப்பூங்கா! முன்பதாக ஒரு இனிமையான நற்செய்தி, அதோ அந்தப் பதிவு ஓரத்திலே இந்தப் பதிவர் எனது சிறந்த நண்பர் பதிவுக்கு கீழே ஒரு குட்டி தேவதை மலர்களுக்கு மத்தியில் அன்பை சுமந்து அழகாக மலர்ந்திருப்பது அறிய முடிகிறதா ?

இந்த விருதை குறையே சொல்ல முடியாது நண்பர்களே , காரணம் தெரியுமா ? இது குறை ஒன்றும் இல்லை எனும் குறை ஒன்றும் இல்லை பதிவர் அவர்களால் நமக்கு குறை ஒன்றும் இல்லாமல் அளிக்கப்பட்ட குறை ஒன்றும் இல்லாத விருது (ரொம்ப குழப்பிட்டமோ!) நன்றி நண்பரே!

சுடர் விளக்காயினும் (நினைப்புத்தான் நமக்கு! ) தூண்டுகோல் ஒன்று அவசியமல்லவா ? அவ்வகையில் இப்பதிவுலக பாதையில் நம்மையும் ஒரு பொருட்டாய் ஏற்று நமது நட்பையும் மதித்து நட்பு வடிவிலும் , பின்னூட்டங்களின் வடிவிலும் ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு இந்த விருதை அன்போடு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், பெறுபவர்களும் மழலை மனதோடு மகிழ்ந்து ஏற்றுகொள்வார்கள் எனும் பெரும் நம்பிக்கையோடு...

பதிவுலகில் எமக்கு ஆசிகள் தந்து, ஆதரவுகள் ஈந்து , வாழ்த்துக்கள் அளித்து, நட்பைப் புலப்படுத்தி, பின்னூட்டங்கள் வாயிலாக தமது ஆதரவுகளை வாரி வழங்கிய எனது வழிகாட்டி அய்யா அவர்களுக்கும் எனது பல நல்ல நண்பர்களில் மிகச்சிறந்த சில நண்பர்களுக்கும் நான் அளிக்கும் எனது நன்றி சமர்ப்பண விருது...

இந்த விருதை யார் சிபாரிசையும் ஏற்காமலும்( கேக்ஷ் கொடுக்காததால்

:( ! விருது பெற்ற அன்பர்களின் அனுமதியும் கோர இயலவில்லை (ஆட்சேபிக்க மாட்டார்கள் எனும் மகா நம்பிக்கையோடு! ) அன்போடு சமர்ப்பிகின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள்....

1.அடியேனின் பதிவுலக வாழ்க்கைக்கு பாதை அமைத்துத்தந்த அய்யா மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்கள், ஒரு விருதுக்கு விருது வழங்குவதில் தமிழ்ப்பூங்கா பெரிதும் பெருமையடைகிறது !

2.பதிவுகளின் ஆரம்பம் முதல் இன்றுவரை தனது வற்றாத ஆதரவை பின்னூட்டக்கருத்துகளாக தந்து ஊக்கமளிக்கும் சிறந்த பதிவர்/நண்பர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள். நண்பரின் வலைப்பூங்கா குடும்பத்தில் நமக்கும் ஒரு வாய்ப்பளித்து நம்மை ஊக்கப்படுத்திய நண்பருக்கு இவ்வேளையில் நமது நன்றிகள் உரித்தாகுக!

3.ந‌ட்புக்கு மதிப்பளித்து இந்த விருதை நமக்குத்தந்து நமது ஆதரவுக்கு ஆதரவு தந்த விருது வள்ளல் குறை ஒன்றும் இல்லை அவர்கள் (அப்புறம் போஸ், அமெளன்ட்ட கேக்ஷா இல்லே செக்கா ன்னு சொல்லவேயில்ல? :)

4. அடுத்ததாக வருவது நம்ம பின்னூட்டப் புயல் தல தமிழ்வானன் அவர்கள்!, இவர் பின்னூட்டங்களே பதிவைப்போல‌(அதிகமான எழுத்துக்கள் மட்டுல்ல, அதிலுள்ள அர்த்தம் பொதிந்த கருத்துக்களும் சேர்த்து!) அமைந்துவிடுவது அனைவரும் அறிந்ததே. இவர் பின்னூட்டம் பார்த்தாலே அடியேனுக்கு திருவிளையாடல் நக்கீரர் ஞாபத்துக்கு வருகிறார் :( ! சிவ‌னாக நாம் மாறலாம் என்று பார்த்தால் மனுக்ஷன் தருமியாக அல்லவா நம்மை மாற்றப்பார்க்கிறார் :( !!!!!

5. ரத்ன சுருக்க பின்னூட்ட நாயகி தோழி சுபா

6.கவியே உருவாய் , உருவே கவியாய் கவிபாடும் கவிக்குயில் தோழி புனிதா !

7. என் உயிரை வாங்கும் உயிருக்கு உயிரான ரஞ்சீதாஸ் கோர்ணர் ரஞ்சீதா! (ஹிஹிஹி)

8.தமது வலைப்பதிவில் தமிழ்ப்பூங்காவை இணைத்து பலருக்கும் எட்டச் செய்த நல்ல நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள்.

9.பதிவின் ஆரம்ப காலங்களில் மிகவும் ஊக்கமளித்துப் பாராட்டிய நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்னா அவர்கள்! இவ்வேளை தமது சகோதரியின் கணவரின் மறைவால் துயறுற்றிருக்கும் நண்பருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிகின்றோம், இறைவனடி எய்திய ஆத்மா சாந்தியடையவும், நண்பர் இந்த சோகத்திலிருந்து மீள‌வும் இறையருளை பிரார்த்திக்கின்றோம்

10.வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் பரந்த மனப்பான்மை தேவை! அவ்வகையில் அற்புதமான வார்த்தைகளால் நம்மை பாராட்டி ஊக்கமளிக்கும் பதிவர்/ந‌ண்பர் மனோவியம் மனோகரன் கிருக்ஷ்னன் அவர்கள்!

நல்லது நண்பர்களே, இந்த விருது விழாவையும் மிகப்பெரிய விழாவாக கொன்டாடும் பேராசைதான்! என்ன செய்வது! விக்ஷமெனப் பரவும் பன்றிக்காய்ச்சலோடு மக்கள் மன்றாடிக்கொன்டிருக்கும் இவ்வேளையில், விழாவுக்கு யார் வருவார்கள்? வந்தாலும் முகமூடி போட்டு வந்தால் யாரை எப்படி அடையாளம் காண்பது போன்ற மிகப்பெரிய விக்ஷயங்களை கூட்டிக்கழித்து, பெருக்கிவகுத்துப் பார்த்ததில், சிம்பளாக இப்படியே முடித்துவிடுவதுதான் சாலச்சிறந்தது எனும் சீரிய எண்ணத்தில் நமது இரண்டாவது விருது விழா இவ்வளவில் ஒரு நிறைவை எய்துகிறது!

அடுத்ததாக முக்கியமான சங்கதி ஒன்று உங்களுக்காக,

நண்பர்களே , நம்மில் சிலருக்கு இதுபோன்ற விருது விக்ஷயங்களில் அவ்வளவாக ஈடுபாடுகள் இருப்பதில்லை! "என்னாது சின்னப்புள்ளத் தனமாயில்லே இருக்கு"ன்னு நினைக்கிறோம், ஆனால் ஒவ்வொரு மனிதருள்ளும் ஒரு தேவதையும், ஒரு மிருகமும் வாசம் செய்வதைப்போல் ஒரு மழலையும் வாசம் செய்கிறது! அதற்கு ஏன் நாம் மதிப்பளிக்கக்கூடாது ?
பல சமயங்களில் நாம் நமது மழலைத்தன்மையை ந‌மது மனதுள்ளேயே மறைத்து விடுகின்றோம்! அன்புக்காகவும், ஆதரவுக்காகவும், அங்கீகாரத்துக்ககவும் பல சமயங்களில் ஒவ்வொருவருள்ளும் ஏங்கும் இந்த மழலை மனம்! வெளிப்படுத்தினால் ந‌மது மதிப்புக்கு பங்கம் விளையுமோ என அச்சமுறுவது நமது குணம்! எங்கே நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஊக்குவிப்பவ‌ர்கள் ( ஊக்கு விப்பவர்கள் என‌ பிரித்து அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது!) என நான் அங்கீகாரம் அளிக்கிறேன், "ஹையா ஜாலி, தேங்சு சிவனேசு" என மழலை மனதோடு அதை உங்கள் பதிவுகளில் பதிக்கும் தங்களின் மழலை மனதுக்கு தாங்கள் மதிப்பளிக்கின்றீர்களா ! பதிலை தங்கள் வலைப்பதிவுகள் சொல்லட்டுமே !

சரி ஒரு நற்செய்தி முடிந்துவிட்டது, அந்த இரண்டாவது நற்செய்தி ? என கேட்பவர்களுக்கு, இன்று நமது இந்த விருது விழாவை முன்னிட்டு, மர்மமேடைப்பதிவு கேன்சல் ஆகிவிட்டது என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன், மகிழ்ச்சி தானே :( ?

சரி மீண்டும் அடுத்த பதிவில் நமது மர்மமேடையின் ஏனைய பகுதியை படைக்க வருகிறேன், அப்ப நான் இப்போ உத்தரவு வாங்கிக்கிறேன் நண்பர்களே!


Monday, August 17, 2009

ஆத்மா (6)

வணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு இனிய பொழுதிலே இப்பதிவின்வழி உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, (ஏதோ! இந்த மொக்கை பதிவரையும் இவ்வளவு தூரம் மதித்து இங்கே எட்டிப் பார்த்திருக்கீங்களே! நீங்கள்ளாம் ரொம்ம்ம்ப்ப்ப ரொம்ம்ப்ப்ப்ப நல்லவய்ங்கைய்யா ! :)

சரி! இன்றைய நமது மர்ம தேசத்துள் பிரவேசிக்கும் முன்பதாக‌, ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையை ச‌ற்று க‌வ‌னியுங்க‌ள் ந‌ண்ப‌ர்களே! அங்கே அமைதியாக‌ சிரித்த‌ப‌டி காட்சி தரும் புதியவர் ஒருவர் உள்ளது அறியமுடிகிற‌தா? அவரை யாரென்று உங்க‌ளுக்கெல்லாம் தெரியும்தானே! ஆம் அவரேதான்! தமிழ்கூறு பதிவுலகம் நன்கறிந்த பதிவர் கே.பாலமுருகன் அவர்களேதான்! கே.பாலமுருகன் எனும் தனது வலைப்பதிவின்வழி மதிப்பீடுகள்-நவீனத்துவம்-படைப்பிலக்கியம் ஆகியன குறித்த‌ தனது எண்ணங்களை இயல்பான எழுத்து வடிவில் அழகியலோடும், ஆற்றல்மிகு புரிதல்களோடும் சிறப்பாக முன்வைக்கும் சிறந்த பதிவர்! அநங்கம், மலேசிய இலக்கிய சிற்றிதழின் சொந்தக்காரர். நம்மை மதித்து இங்கே வந்து அமர்ந்ததற்கு நமது நண்பருக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் தெரிவித்துக் கொன்டு, நமது மர்மபிரதேசத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்!
##################################

ஒரு சம்பவப் புலனாய்வு
ஆவி உலாவும் அலுவலகம் !

7எங்கள் அலுவலகக் கட்டடம் முன்பு எங்கள் நிறுவன உரிமையாளரின் வீடாக இருந்தபோது தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக ஒரு இளம்பெண்ணின் தற்கொலை.
அருகேயுள்ள வீடொன்றில் இளம் காதல் ஜோடி ஒன்றின் தற்கொலை.
அலுவலகக் கட்டடத்தில் ஏற்கெனவே உலவுவதாக சொல்லப்பட்ட 3 ஆவிகள் பேய்கள் அதில் ஒன்றை பௌத்த மதகுரு ஒருவர் விசேட பூஜை மூலமாக விரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆவிகள் பேய்களைக் கண்டதாகச் சொன்னவர்கள் கண்டநேரம் இரவு 10மணியிலிருந்து அதிகாலை 5மணிக்குள்.
(24மணிநேர ஒலிபரப்பு நிலையமொன்றாலும் இரவு நேரங்களில் மொத்தமாக அலுவலகத்தில் இருப்பவர்களே ஐந்தோ ஆறுபேர் தான்)
நான் அலுவலகம் செல்வது காலை 5.30 மணி அளவில்.
நானும் கண்டால் நல்லா இருக்குமே என்று யோசித்ததுண்டு கண்டாலும் பயப்படமாட்டேன் என்ற உறுதிதான.;
நேற்று முன்தினம் காலை அப்படியொரு வாய்ப்பு!
காலை செய்தியறிக்கையின் பின்னர் எனது கணினியைத் தட்டித் துருவிக் கொண்டிருந்தபோது சிங்கள வானொலி 'சியத' முகாமையாளர் ஜெயநித்தி என்னைக் கூப்பிட்டு ஆண்கள் கழிவறைப் பக்கம் காட்டிய காட்சி!
ஒரேயொரு கணம் திகைத்தாலும் என் கையிலிருந்த செல்பேசி கமெராவினால் உடனே படமெடுத்துவிட்டேன். இந்தப்படத்திலே கண்ணாடிக் கதவின் மேல் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் முன்பிருந்தே ஒட்டப்பட்டுள்ளது.. எனினும் உள்ளே கலங்கலாகத் தெரியும் உருவம் தான் மர்மமாக உள்ளது.
உடனே கழிவறைக் கதவைத் தள்ளித் திறந்த பின் எதுவுமே இல்லை!மேலும் தகவல்களுக்கு இங்கே படித்து பயப்படவும் !

#######################################

முன்க‌தை : சிவாவின் துர்ஆத்மா குடிகொன்டிருந்த அந்த‌க் செம்பனைக்காட்டு குடிசைக்குள் சுசியின் குடும்பம் வாசம் செய்ய துவங்குகிறது, முதல் பலியாக சுசியின் மூத்த மகள் அங்கையற்கன்னி பலிகொள்ளப்படுமுன் சுசி அவளைக் தடுத்துக் காப்பாற்றி விடுகிறார், இனி...

பல காலம் பசியோடும், ரத்த வெறியோடும், உயிர்ப்பலி நாடி நின்ற சிவாவுக்கு சுசியின் மூத்த பெண் அங்கையற்கன்னி இறையாகப்போகும் அந்த அகால தருண‌த்திலிருந்து சுசியால் விரைந்து அவள் காப்பாற்றப்பட, தொடர்ந்த வெறியும், கோபமும் சிவாவின் ஆத்மாவில் அனலாய் எரிய, அவன் கோப ஜூவாலைகள் சுசியை சுட்டுப் பொசுக்க சமயம் நோக்கிக் காத்திருக்கின்றன!

ஆனால் சுசியோ தெய்வ பக்தியை உறுதியாகப் பற்றிக்கொன்டு ஆழ்ந்த தனது இறை நம்பிக்கையோடு அவ்வீட்டில் வலம் வந்ததால் சுசியை சிவாவால் அதிகம் நெருங்கி ஆபத்தை விளைவிக்க முடியவில்லை! இருந்தாலும் சுசி அசந்த சில சமயங்களில் அத‌ற்கான வழிகள் அவனுக்கு வாசல் திறந்து வைக்க தனது ஆத்திரமெல்லாம் ஒன்று திரட்டி அவரை அவ‌ன் பழிவாங்கலானான், அப்ப‌டி வாய்த்த ஒரு நாள்...

அன்று விடிய‌லில் க‌ண்விழித்த‌ சுசி, உடனே ஆற்றங்கரைக்கு விரைகிறார், முதல்நாள் அந்தியிலே மூங்கில் கழிகளில் சிறு வெட்டுக்கிளிகளை தூண்டிலிட்டு ஆற்றங்கரை முகடுகளில் மீன்பிடிக்க ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார், முதல் நாள் ஆறு பெருக்கெடுத்ததில் 3 அயிரையும் 2 விரால்களும் தூண்டில்களில் சிக்கின! இந்த வகை ஆற்றுமீன்க‌‌ள் அந்த‌க் கால‌க்க‌ட்ட‌த்தின் அருமையானதோர் உணவு வகைகளாகும்.

இந்த அயிரை மீன் இருக்கிறதே! அது ஒரு பயங்கரமான பார்ட்டி! வழ வழவென கருப்பாய் மீசை(கொடுக்கு)யெல்லாம் வைத்துக்கொன்டு பார்ப்பதற்கே படு பயங்கரமாய்! ஆனால் அதை நன்கு கழுவி, பதப்படுத்தி சுயமாய் அரைத்த மசாலை சேர்த்து பொன்னிறத்தில் பொரித்தெடுத்தால்... கே.எப்.சி என்னங்க பெரிய பிரமாதம்! எண்ணெய் மினுமினுக்கும் அயிரை மீன் பொரியலின் ருசியே அலாதிதான்! அதிலும் வீட்டுக்கு பக்கத்தில் சுயமாய்த்தானே பாத்திகட்டி பயிரிட்ட மரவள்ளிக்கிழங்குகளும் , குட்டிக் குட்டிக் கத்தரிக‌ளும், விரல் விரலாய் வெண்டைகளும், சேர்த்து சுசி தயாரிக்கும் அந்த அயிரை மீன் குழம்பு வாசம் கமகமக்க ஒட்டு மொத்த ஊரையே அந்த ஒரு பானை குழம்புக்கு எழுதி வைத்து விட‌லாம் போங்கள்! ருசி என்றால் அப்படி ஒரு ருசி ! (உணவு என்றதும் ஓவராய் உளறிட்டோமோ! :-)

சுசி தான் தூண்டிலிட்டுப் பிடித்த மீன்கள் இரண்டை இரும்பு வாளியில் நீவார்த்து வைத்து விட்டு மீதத்தை கழுவி பதப்படுத்தி சமையல் வேலையில் பரபரப்பாகிறார், சோறாக்கி, சுயமாய் மசாலை அரைத்து (அப்போது பாபா'ஸ், அழகப்பா'ஸ் லாம் ஏத‌ப்பா?) எல்லாம் சொந்தக் கைவரிசைதானப்பா! இப்போதுள்ள நவீனயுக மங்கையரை இதுபோல‌ மசாலை எல்லாம் அரைக்கச் சொன்னால், சமையல் அரோகராதான்! எப்பவோ கிரைன்டருக்கு மாறிட்டோம்ல! ! :-)

ஆயிற்று, குழம்பு அடுப்பில் கொதிக்கிறது, சீக்கிரத்தில் வேலை முடிந்து விடும், அப்பாடா என்று இருந்தது சுசிக்கு, கொதித்த குழம்பை இற‌க்கும் முன்பாக ஏதோ ஒரு வேலையாக முன் அறைக்கு வந்தவர், படாரென ஏதோ விழுந்த சத்தம் பெரிதாய் கேட்க, வந்த வேகத்தில் திரும்பி பின்கட்டுக்கு விரைகிறார் அங்கே...அவர் மணக்க மணக்க தயாரித்த மீன் குழம்பு பானையோடு சுவரில் வீசியெறியப்பட்டு தரை முழுக்க குமிழ் குமிழாய் சிதறி அலங்கோலமாய் வழிந்து கொன்டிருக்கிற‌து! அடுப்பு மட்டும் துளியும் அணையாமல் அதே அனலோடு... ! சுசிக்கு நன்கு ஞாபகமிருக்கிறது! அங்கே பூனைகள் வர வாய்ப்பில்லையே! பின்கட்டு வாசல் கதவும் வேலை உறைந்தாலும் முடிந்து சாத்தியது சாத்தியபடியே... பின் எப்படி...? இப்படி... ?


விய‌ப்பில் ஆழ்ந்து, அதிர்ச்சியில் உறைந்தாலும், ச‌ட்டென‌ சுதாரித்துக்கொன்டு பல்லைக்கடித்தவாரே விரைந்து ச‌மைய‌ல‌றையை நீரால் அலம்பி, மீத‌மிருந்த‌ மீன்களை விரைந்து தூய்மை செய்து மீண்டும் ஒருமுறை குழம்பு தயாரிக்கிறார் சுசி!, இம்முறை சமையல் முடிந்ததும், ஒரு பெரிய கரித்துண்டு ஒன்றை எடுத்து அந்தப் பானை மூடியில் வைக்கிறார் ( முற்காலத்தில் கரித்துண்டுகள் உணவுக் கலங்களின் மேல் வைக்கப்பட்டால் அவை தீயசக்திகளை அவ்வுணவை தீண்டாது தடுத்துக் காக்கும் எனும் ஒரு பரவலான நம்பிக்கை வழக்கில் இருந்து வந்துள்ளது ). உண‌வெல்லாம் முடிந்து, குழந்தைக‌ளுக்கு, மாலை உண‌வுக்கு வீடு திரும்பிய‌ கண‌‌வ‌ருக்கு என‌ பரிமாரி மாறி மீண்டும் அவ‌ர் க‌ண‌வ‌ரை வேலைக்கு வ‌ழியனுப்பி, குழந்தைக‌ளை உள் அறையில் தூங்க‌வைத்துவிட்டு, ப‌க‌லில் தூங்காத‌ ப‌ழ‌க்க‌முடைய‌ அவ‌ரும் அசதியில் அய‌ர்ந்து போய் அந்த‌ ச‌மைய‌ல் அறைக்கும், முன் அறைக்குமான‌ ந‌டு வெளியில், ஒரு சன்னல் ஓரத்தில் ஓய்ந்து ப‌டுக்கிறார், விரை‌வில் உற‌க்கம் விழி அணைக்க, அவர் கனவில்...

அவர் படுத்திருந்த சன்னலில் மேலாடையின்றி, ஒரேயொரு அழுக்கு கருநீல காற்சட்டையோடும் கோபமாக அங்கே வந்து நிற்கிறான் சிவா... அவன் கையில் ஒரு நீண்ட கழி, சுசியை வெறித்தனமாக நோக்கியபடி அந்தக் கழியை ஓங்கிச் சுழற்றி சன்னல் வழியே ஒருக்களித்துப் படுத்திருந்த சுசியின் தலையில் பலங்கொன்ட மட்டும் ஓங்கி ப‌டாரென ஒரேஅடி... அய்யோ அம்மா! என‌ அல‌றிய‌ப‌டி த‌லையைக் கையால் பிடித்த‌வாரே அடித்து பிடித்து எழு‍கிறார் சுசி! த‌லை வலியால் விண் விண்ணென்று தெரிக்க, வழியின் உச்சம் கண்களில் கண்ணீராய், எழுந்து சுற்று முற்றும், உள்ளே வெளியே என சகல இடங்களையும் ஆராய்கிறார்! ஆழ்ந்த அமைதி, யாருமே அங்கில்லை! சன்னலுக்கு வேளியே சற்று தூரத்தில் அவர் தலையை பதம் பார்த்ததே அந்தக் கழி மட்டும் கீழே தனியாக‌... ‌அதைக் க‌ண்ணுற்ற‌வாரே, வ‌லிக்கும் த‌ன‌து தலையில் கைவைத்துத் தடவ, முட்டையாய் அவ‌ர் த‌லை அங்கே அடிபட்டு வீங்கியிருந்த‌து...மேலும் பல திகைக்க வைக்கும் டுவிஸ்டுகளோடு விரைவில் எதிர்பாருங்கள்
ஆத்மா (7)

Wednesday, August 5, 2009

ஆத்மா (5)

வணக்கம் நண்பர்களே ! பொழுது போகவில்லை, தமிழ்ப்பூங்காவிலே சிவனேசு சொல்வதை பார்ப்போம் என தமிழ்ப்பூங்காவில் எட்டிப்பார்த்திருக்கும் உங்களுக்கு தொடர்ச்சியாக அதிரடியான பல செய்திகளும் அடாவடியான பல சம்பவங்களும் கீழ்க்கண்ட பதிவுகளில் காத்திருக்கின்றன எனும் பயமுறுத்தலோடு, கடந்த காலத்தின் அமானுக்ஷ்யம் ஒன்றை நிகழ்காலத்தில் அசைபோடலாம் வாருங்கள்!‌

அதற்கும் முன்பதாக இன்று இங்கே ஒரு புதிய நண்பர் நம்மோடு தமிழ்ப்பூங்காவில் இணைந்துள்ளார், அவர் பெயர் "'zeorcc" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, வித்தியாசமான பெயர்கொன்ட நண்பருக்கு (எங்கே எனக்கு வரவேற்பு என்று கேட்டுகும் முன்பே, நாமே நல்ல பிள்ளையாக) வாழ்த்தும் வரவேற்பும் கூறிக்கொன்டு, நமது இன்றையப் பதிவு இதோ உங்களுக்கே உங்களுக்காக‌...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மர்மங்கள் நிறைந்த ப்ரோசல்யான்ந் காடு..!

பிரான்சில் ´இல் எ விலாய்ன்´ (ille- et- vilaine) என்னும் மாவட்டம். ரென் என்னும் இடத்தில் இருந்து 30- கிலோ மீட்டர் தூரத்தில் ´பேன்போ´ என்னும் சிறிய ஊர். 1400- குடும்பங்கள் இன்று வசிக்கின்றது. அந்த ஊரில் இருப்பவர்கள் ´செல்டிக்´ என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இனத்தவர்களுக்கென்று பாரம்பரிய வரலாறுகள் இருக்கின்றன. இவர்களின் முன்னோர்கள் அனைவரும் சூனியம் செய்பவர்கள். புகழ் பெற்ற மந்திரவாதிகள் இந்த வசம்சத்தில் உண்டு. இவ்வூரில் இந்த இனத்தினர் மட்டுமே வாழ்கிறார்கள். இன்றும் ´செல்டிக்´ இனத்தினர் தொடர்கின்றது. வெளி மனிதர்கள் அந்தப்பக்கமாக போவதோடு, வருவதோடு சரி. யாரும் அங்கு தங்குவதில்லை. அந்த இடமே ஒரு சூன்யம் நிறைந்த மர்மங்கள் பொதிந்த இடம் என்று சொல்லலாம். இவ்வூரில் இருந்து இருந்து தொடங்குகின்றது ப்ரோசல்யான்ந் காடு. 7000- ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கின்றது இக்காடு.

கிறிஸ்துவ மதம் உருவாக்கப்பட்ட காலத்திய வரலாறு Légende arthurienne ஆண்ட காலங்களில் ´பெருத்தாய்ங்´ உருவாகியது. 12- வது நூற்றாண்டில் ´மெர்லன்´ என்ற மந்திரவாதி அந்த இடங்களில் வசித்திருக்கிறான். அவனுடைய வரலாறுகள் நிறைய உண்டு. அவனுடைய சமாதியும் அந்த காட்டுக்குள் இன்றும் இருக்கிறது. அந்த காட்டுக்குள் நிறைய புரியாத புதிர் நிறைந்த மர்மங்கள் நிறைய உண்டு. அத்துடன் அக்காட்டுக்குள் இரண்டு கோட்டைகள் இருக்கின்றன. ஒரு கோட்டை அழகான ஒரு பெண்ணுக்காக மெர்லன் கட்டியது. மற்றொரு கோட்டையின் பெயர் ´த்ரேசோன்ங்´ (Le Chateau de trécesson) சிறுவயது பெண் ஒருத்தி. அவளுக்கு திருமணமான அன்றைய தினத்திலேயே எதிரிகளால் உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். அந்த இடத்தில் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டை கட்டிய பின் அதில் ஏதோ துர்ஆத்மா இருப்பதாக கருதப்பட்டு வந்தது. அதனால் அதற்கு ´பேய் கோட்டை´ என்ற பெயர் வந்தது. கோட்டை எழுப்புவதற்கு முன்பு அந்த இடத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்தான் அக்கோட்டையில் உலவுவதாக சொல்லப்பட்டது. இன்றும் அக்கோட்டையில் ஏதேதோ சத்தங்களும் ஒருவித திகிலும் வருவதுண்டு. மேலும் தகவல்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


முன் கதை : நீர் பெருக்கெடுத்தோடும் கால்வாயில் ஜல ச‌மாதியாகவிருந்த தன் மகளை தன் அதிரடியான நடவடிக்கையால் நூலிழையில் காப்பாற்றினார் சுசி, அதன் தொடர்ச்சியில் அவ்வீட்டின் மர்ம முடிச்சுகள் மெல்ல அவிழத்துவங்குகின்றன, இனி...

நண்பர்களே, சுசி மிகவும் சுவாரஸ்யமான கேரக்டர் என்று முன்பே உங்களுக்கு தெரியப்படுத்தி இருந்தேன் அல்லவா! அவரைப்பற்றி மேலும் சில விடயங்கள்.

அவர் வெள்ளி மாநிலத்தில் ஒரு பிரபலமான தோட்டத்தில், நமது நாடு சுதந்திரமடைந்ததே அந்த வருடம் பிறந்த சுதந்திர வருடக் குழந்தை! அவரது தந்தையை எட்டு வயதில் இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர், பள்ளிப்படிப்பு வேப்பங்காயாய் கசக்க, பள்ளி செல்ல வேண்டிய அவரின் காலைப்பொழுதுகள் வயிற்று வலி நடிப்பில் கரைந்துபோக, தாய் அடித்ததிலும், மிரட்டியதிலும் சில நாட்கள் பள்ளி வாசலை மிதித்ததில் ஓரளவு தமிழறிவு வாய்க்கப்பெற்று, பின்னாட்களில் தமிழ் நாளிதழ்கள், நாவல்கள் வாசிப்பது என தனது படிப்பறிவை சற்றே வளர்த்துக்கொன்டார்.


சிறுவயது முதற்கொன்டே அவருக்கு முருகக்கடவுள் மீது ஆழ்ந்த பற்று! தன் வீட்டை விட்டு உறவினர்கள் வீடு சென்றால் கூட‌ தான் மிகவும் நேசித்து வணங்கும் அந்த முருகக்கடவுளின் படத்தையும் கையோடு எடுத்துச் செல்லும் அளவு அவர் பக்தி முற்றியிருந்தது என்றால் பாருங்களேன்!

அவர் இளமைக்கால வாழ்க்கையை நோக்குகையில் ஏற‌க்குறைய நம்ம "தெய்வவாக்கு" ரேவதியைப்போலவே அமைந்தது அவர் கதை! சுசியும் அவருடைய இள‌வயதில் அருள்வாக்கு கூறும் ஒரு பெண்ணாக திகழ்ந்தவர் என்பதை அவரை அறிந்த பலரும் அறிந்த விடயம். இன்றும் பல திருவிழாக்களிலும் பலர் சாமியாடி அருள்வாக்கு சொல்வதை நம்மில் அநேகம் பேர் எதிர்கொன்டிருக்கக்கூடும். பக்திப் பரவச நிலையில் அனைத்தும் அறிந்த ஆழ்மனது சொல்லும் ரகசியங்களா அல்லது உண்மையிலேயே வேறேதும் சூட்சுமங்கள் உள்ளதா என அறிய முடியா அரிய நிலையில் சுசியும் பல நேர்த்திக்கடன்கள், அதன்வழி அருள்(மருள் என்றும் சொல்கிறார்களே !???) ஏற்பட்டு பக்தி பரவசத்தில் மூழ்கலானார்! அந்த காலக்கட்டத்தில் மக்கள் இன்றைய நிலைபோல் கல்வியறிவு கொன்டவர்கள் அல்லவே! ஆனால் இன்றும் பலர் தைப்பூசங்களில் அருள் வந்தவர்களிடம் ஆசியும் அருள்வாக்கும் வாங்குகிறார்கள் அல்லவா, அது அவரவர் நம்பிக்கை ! எனவே பாட்டாளிகளாக மலாயாக்காடுகளில் தஞ்சம் புகுந்த நமது முன்னோர்களின் அப்போதைய வாழ்க்கையினையும் இதுபோன்ற விடயங்கள் எளிதாக ஆட்கொள்ள ஏதுவான நிலை .வாய்த்திருந்தது சரி ந‌மது கதைக்கு வருவோம்


அவரும் ஒரு சாமியாடியாக தனது இளமைப்பருவத்தை அங்கே கழித்து வந்தார், பலருக்கு குறி சொல்வது, சாமியாடுவது என்றாகிப்போனது சுசியின் வாழ்வு, எனினும் அந்த சாமியாடி வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை! அவர் சகோதரனின் நண்பர் ஒருவருக்கு அவர்மேல் ஆசை பிறந்தது, பின்னே செதுக்கிய சிலையாட்டம், தங்க நிறத்தில், காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த காஞ்சனா அம்மாவை ஞாபகப்படுத்தும் அவர் அழகு யாரைத்தான் வசியம் செய்யாது! அந்த வாலிபர் கருமை நிறத்தோடும் களையான தோற்றத்தோடும், நல்ல சாரிரமும் வாய்க்கப் பெற்றவர் என்பதால், சந்தடி சாக்கில் கூட்டமாய் சுசி வீட்டு வராந்தாவில் அமர்ந்துகொன்டு பல இனிமையான டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் வாயிலாக தன் அன்பை அவர் தூது விடுக்க, "ஏன்டா இந்த ஆளை வீட்டுக்கு கூட்டியாந்தே? சீ, ஆளையும் மூஞ்சியும் பாரு, அடுப்பங்கரையிலே அரைகுறையாய் தீய்ந்த கொள்ளிக்கட்டையாட்டம்" என அவரை வீட்டுக்கு அழைத்துவரும் தனது தம்பியிடம் மல்லுக்கு நிற்பார் சுசி! எனினும் காலமாற்றத்தில் விதி தன் வேலையைச்செய்ய தனது குடும்பத்தினரை பகைத்துக்கொன்டு தனை விரும்பிய அவரையே கரம்பிடித்து மூன்று குழந்தைகளும் தாயானார் சுசி! ஓரளவிற்கு தலையெடுத்திருந்த அவரது குடும்பம் அவரை ஒதுக்கிவைத்தது, இனிமையாக பாட மட்டுமே அறிந்துவைத்திருந்த அவர் கணவர் பொருளீட்டிக் குடும்பம் நடத்தும் ஆற்றல் குறைந்தவராயிருக்க, அலையில் மிதக்கும் பந்தாக வாழ்க்கை அவர்களை அலைக்கழிக்க இறுதியில் அந்தக் குடிசை வீட்டில் குடியேரும் நிலையை அடைந்தனர்...


அவ்வழியாக தனது தெய்வ வழிபாட்டின் நம்பிக்கையாலும், இறைவன் எனும் ஒரு மாபெரும் சக்தி தனை சூழ்ந்து தற்காக்கிறது எனும் மன உறுதியோடும் சுசி எனும் ஒரு ச‌ராசரி பெண்மணி பலரும் சர்வ சாதார‌ணமாக‌ இல்லையென்று வாதிடும், ஒரு சிலரே, ஆமாம் அமானுக்ஷ்யங்கள் அவதரிப்பது உண்மைதான் என ஆராய்ச்சி மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ளும் ஒரு நிழல் யுத்தத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் தயாராகிறார், இனி அவர் எதிர்பாராமல் எதிர்கொன்ட பிரச்சனைகளோடு தொடரும் மர்மங்கள் அடுத்த பாகங்களாக...


Monday, August 3, 2009

ஆத்மா (4)

வணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு மர்மமேடை பதிவுக்குள் பயப்படாமல் கால் பதித்திருக்கும் உங்கள் துணிவையும் தைரியத்தையும் மனதாரப் பாராட்டிக்கொன்டு அன்றைய தொடர்ச்சியான இன்றைய பதிவுக்குள் செல்வோம் வாருங்கள், அத‌ற்கு முன்பதாக...

உலகிலேயே தாங்கள் தான் உயர்ந்தவர்கள்/சிறந்தவர்கள் (உண்மையில் இல்லையென்றாலும்) என மேலை நாட்டினர் இறுமாந்திருந்த காலக்கட்டம், 1893, செப்டம்பர் 11 அன்று, சிக்காகோ சர்வசமய மாநாட்டில "ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிகளே" என உலகையே ஒருசேர அழைத்து இந்து ச‌ம‌ய‌த்தின் அன்பு முக‌த்தை உல‌கிற்கு வெளிச்ச‌மிட்டுக்காட்டியதே ஒரு ஆன்மீக ஞாயிறு, அவரை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு?, மறக்கத்தான் முடியுமா, அந்த ம‌கோன்னத வீர‌த்துற‌வி விவேகாந‌ந்தரை!

சரி, இன்று, இங்கே அவர் சார்பாக ஒருவர்! வல்லவர், 1,2,3,4 என நான்கும் தெரிந்த நல்லவர். ஓலைச்சுவடியின் சொந்தக்காரர் நண்பர் சதீசு அவர்கள் நம்மையும், தமிழ்ப்பூங்காவையும் பெருமைப்படுத்த இங்கே வந்து அமர்ந்திருக்கிறார் பாருங்கள்! அவருக்கு நமது வாழ்த்துக்களும், வரவேற்பும் உரித்தாகுக!
(விவேகாந‌ந்த‌ரையெல்லாம் க‌லாய்க்க‌ முடியாதுப்பா!, அப்புற‌ம் க‌தை கந்த‌ல்தான், அத‌னாலேயே இந்த‌ ந‌ல‌லபிள்ளைப் ப‌திவு!, ச‌ரி வாருங்க‌ள், நாம் நமது மர்மப்பிரதேசத்துக்குள் நுழையலாம்...

***************************************************

தேவாலயத்தை சுற்றும் அன்னை மேரியின் ஆவி !


எகிப்தில் நடைபெற்றுவரும் உண்மைச் சம்பவம்...
கிறீஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தின் மீது இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் பல மணி நேரம் பிரகாசமான வெளிச்சம் தோன்றுகிறது. அந்த பனி போன்ற ஒளிர் வெளிச்சத்தில் ஓர் பெண்மணி தேவாலயத்தை சுற்றி வருவதை பலர் கண்டுள்ளனர். அந்தக் காட்சியை பலர் புகைப்படம் பிடித்துள்ளனர். இந்த அதிசயமான காட்சியை தொலைக் காட்சிகளின் பல அறிவியல் நிகழ்ச்சிகளும் ஒளி பரப்பியுள்ளன. கிறீஸ்தவ மக்கள் இந்தப் பெண்மணியின் உருவத்தை அன்னை மேரியினுடைய தென்றே இன்று வரை நம்பி வருகிறார்கள்.

தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல் முதலாக 1968 ம் ஆண்டுதான் கண்டிருக்கிறார்கள். 1968ம் ஆண்டில் ஒரு நாள் இரண்டு வாகனம் திருத்துபவர்கள் வேலை காரணமாக நள்ளிரவு தாண்டிய பின்னர் வீடு வரும்போது மேற்படி காட்சியைக் கண்டு கூச்சலிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் பொலீசாரை வரவழைத்தனர். அவர்கள் வந்தபோதும் தேவாலயத்தை சுற்றிய உருவமோ மறையவில்லை. ஒளிரும் பெண்மணியோ அந்தத் தேவாலயத்தின் மேற்புறத்தையே தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தது. அருகில் இருக்கும் மின் வெளிச்சத்தால்தான் இது ஏற்படுகிறதென பொலீசார் கூறினார்கள். சகல தெரு விளக்குகளையும் அணைத்துவிட்டு பார்த்தபோதும் அந்த வெளிச்சம் போகவில்லை அது மேலும் பிரகாசமடைந்தது. பொலீசார் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அறிவியல் விளக்கம் !

எப்போழுதும் போலவே...
அறிவியலாளர்கள் இதை முற்றாக நிராகரித்துள்ளனர். இஸ்ரேலியர்கள் 1967ல் எகிப்தை வெற்றி பெற்ற பின்னர்தான் இந்த ஒளி தோன்ற ஆரம்பித்திருகிறது. எனவே இது அவர்களுடைய வேலையாக இருக்கலாம் என்பவரும் உண்டு. உண்மையில் ஏரோது மன்னன் வாழ்ந்த நகர் இதுவல்லவென்று 1400 ம் ஆண்டிலேயே கூறப்பட்டது. ஆனால் இப்படியான காரியங்களால் உலகுக்கு எதுவும் நடந்துவிடப் போவதில்லை. சிறு பிள்ளைகளுக்கான ஓர் அற்புதக் கதை என்றளவிலேயே விஞ்ஞானம் இதை நோக்குகிறது. எனினும் விஞ்ஞான ரீதியாகவும் இது எப்படித் தோன்றுகிறது என்பதை தகுந்த காரணங்களோடு நிறுவ முடியாமலிருப்பதே அதிசயமாகும.

மேலும் த‌கவல்களுக்கு நீங்கள் நாடவேண்டியது...
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23981&mode=threaded&pid=306386

***************************************************

முன்கதை : சிவாவின் ஆவிக்குடிசையில் குடியிருக்கும் சுசி குடும்பத்தினரின் மூத்த பெண்குழந்தை சிவாவின் துராத்மாவால் ஆட்கொள்ளப்பட்டு தனை மறந்த நிலையில் கரைபுரண்டோடும் கால்வாய் நோக்கிச் சென்றுகொன்டிருக்கிறாள், அப்போது...

உள்ளே நீரெடுக்கச் சென்ற‌ சுசி வெளியே வர, சரியாக அந்த நிமிடங்களில் இன்னும் சில அடிகளோடு நீருக்குள் அமிழப்போகும் அபாயத்தில் அந்தக்குழந்தை...

"முருகா, என்று அலரலோடு குழந்தையை தடுக்க வெறித்தனமாக ஓடுகிறார் அந்தப்பாவப்பட்ட பெண்மணி...அந்தக்கணம் தனது மகளைக்காகப்பாற்ற வேண்டும் என்ற ஒன்றை தவிர வேறெதையும் யோசிக்கவில்லை, இரண்டேயெட்டில் குழந்தையை நோக்கி பாய்கிறார்...ஆனால் குழந்தையோ...

சுயநினைவற்ற சூனிய நிலையில்! அவள் ஐம்புலன்ளும், ஆழ்மனமும் தன் வசமிழந்து சிவாவின் பிடிக்குள் சிக்கி நீருக்குள் அவள் கால் படரப்போகும் அந்தக் கடைசி நொடியில், எங்கேயோ மிக மிக தொலைவிலிருந்து சன்னமானதோர் மெல்லிய குரல் தனை அழைப்பதாய்த்தோன்றுகிறது. சிலிர்த்துக் அவள் தன்னிலை உணர்த்துவங்கும் அந்த தருண‌ம்... இடியிறங்கியதைப்போல எதோ ஒரு மிகப்பெரிய வலி அவள் தலையைத் தாக்குகிறது!, நிலை குலைந்து, காலை விட்டு மொத்தமாய் பூமி நழுவி, கால்வாய்க்குள் அவள் புகப்போகும் அந்த அசம்பாவித நொடியில், அனலாய் பாய்ந்து வந்த சுசி எட்டி அவள் தலைமுடியைப்பற்றி தன் வசம் இழுத்து தனக்குள் அடக்கிக்கொள்கிறார்! அவர் ஈரக்கைலியின் சிலுசிலுப்பினூடே முகம் தோய்ந்து மயங்குகிறாள் சுசியின் மூத்தப்பெண் அங்கையற்கன்னி!

தாய்ப்ப‌றவையாய் த‌ன் அணைப்புக்குள் தன் மகளை வசப்படுத்திக்கொன்டு தலை நிமிர்ந்து பார்க்கிறார் எதிரே சிவா, காற்றாக அவன் உருவம் அவன் நின்றிருந்த அந்த‌ ப‌ருத்த‌ செம்ப‌னையின் த‌டித்த‌ பாக‌த்தில் ம‌றைவ‌தைக்க‌ண்டு திகைக்கிறாள், ந‌ல்ல‌ வேளை அவ‌ரும் ம‌ய‌ங்கி விழ‌வில்லை, ம‌னதில் ஒரு அசா‌த்திய‌ துணிவு கிளர்ந்தெழ வாய் திறந்து உரக்க ஏசுகிறார், அந்த வார்த்தைகளை நான் இங்கே பதிவிட இயாலாமைக்கு வருந்துகிறேன்! தோட்டத்தில் வாழ்ந்த அந்தப் பெண்மணியின் வசைபாடல்களை யார் கேட்டிருந்தாலும் பீதியில் உறைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள், இப்படியாக சிவாவின் ஆவியினை கண்டுவிட்ட அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாது, துணிவாக தன் குழந்தையை அள்ளிக்கொன்டு வீட்டிற்குள் வந்து, ஓரத்தில் கிடந்த துடைப்பத்தினை எடுத்து, வாசல் குறுக்கே, வழிமறித்து வைத்துவிட்டு, படாரென அந்தக் குடிசை வீட்டுக்கதவை அறைந்து சாத்தினார் சுசி, அந்தக் கடும் குளிர் காலத்திலும் வியர்வையால் முழுதாய் நனைந்து, அவரது இதயம் அதீதமாய் துடித்து படீரென வெடித்து விழப்போவதாய் அதிர்ந்தது!

முன்வாசல் ஜன்னல் ஓரத்தில் தன் திற‌மையெல்லாம் ஒன்று திரட்டி தான் அமைத்திருந்த அந்த ஆளுயர சுவாமி மேடையினடியில் குழந்தையை கிடத்தினார், அங்கிருந்த அந்தக் கையகள காமாட்சி விளக்கை முருகா, முருகாவென தனது இக்ஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்த வண்ணம் தீபமேற்றி கையெடுத்து வணங்கினார், ஏதேதோ மனதில் தோன்றிய பிரார்த்தனைகளை உதடு முனுமுனுத்து , நிவேதன நீரில் ஒரு வில்லை சூடமேற்றி அது சுற்றிச்சுழன்று அணைந்தபின் அந்த நீரை தன் குழந்தையின் முகத்தில் தெளித்து, வலிய அவள் சிறிய வாய் திற‌ந்து கொஞ்சம் அருந்தச்செய்கிறார், அவர் புகட்டிய நீரில் பெரும்பகுதி வாய்வழி சிதறி தரை நனைக்க, சுசியின் வேதனை விழிநீராய் அதில் கலந்துகொள்கிறது. அப்போதே ‌அந்தக் குழந்தையின் உடலில் காய்ச்சலுக்கான் அடையாளங்கள் ஆரம்பமாகின்றன‌. தான் சிறுவயது முதற்கொன்டு வணங்கிவரும் அந்த குன்றின் மேல் அமர்ந்த குகனை மனதார வேண்டிக்கொன்டார், இறைவனின் கருணை தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கிறது என அவராகவே மனதிற்குள் தீவிரமாக நம்பிக்கொன்டார்.அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை!

இந்த நிகழ்வுக்குப்பின் தொடர்ந்து சில காலம் சுசியின் மூத்தப் பெண் நோயிலாழ்ந்து சிரமப்படலானாள், பேயாவது, பூதமாவது சுத்தப்பேத்தல் என வீர வசனம் பேசினார் சுசியின் கணவர் பாலு (பின்னாட்களில் இவருக்கும் சிவாவின் பல திகைப்பூட்டும் காட்சிகளும், தீவிளையாடல்களும் கண்முன்னே கிடைக்கப்பெற தனது வீராவேச பேச்சை அவர் கொஞ்சம் மாற்றியமைத்துக்கொன்டார்)

சுசியைப் பொருத்தவரை இது நாள்வரை அவர் மனதில் முள்ளாய் நெருடிக்கொன்டிருந்த அந்த இனங்காணா மருட்சியின் ஆணிவேரை இப்போது தெள்ளத்தெளிவாக அவர் கண்டுகொன்டார். பொருள் படைத்த மனிதர்கள் விருப்பம் வண்ணம் இடம் மாறலாம், வீடு மாறலாம், ஆனால் ஏழ்மை மட்டுமே உடமையாகக் கொன்டவர்கள் என்ன செய்ய முடியும்! அவர்களுக்கு அந்த வீடு வாய்த்ததே பெரிய விச‌யம்! அதைவிட்டு போய்விடு என்றால் எங்கே போவது? பச்சைகுழந்தைகளை வைத்துக்கொன்டு வீதியிலா நிற்பது? வேறு வழியில்லை, ஒரு நல்ல வழி பிறக்கும் வரை அந்த வீட்டை விட்டு அவர்கள் அசையப்போவதில்லை. சிவாவை அவர் நேருக்கு நேர் எதிகொள்ளத் தயாரானார்...

இதுவரை : நண்பர்களே சுசி ஒரு மாறுபட்ட கேரக்டர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா? சிவாவின் ஆன்மாவை நேருக்கு நேர் க‌ண்ணுற்ற பின்னரும், அவனின் வெறிச்சோடிய பார்வையும், இரத்தக் கறை படிந்த சிரிப்பையும் நேரில் கண்ட பின்னரும் அவனை எதிர்கொள்ள அவருக்கு எங்கிருந்து வந்தது அந்த அசாத்திய துணிவு? சுசியின் கடந்த காலத்தையும், நிகழகாலத்தில் அவர் சந்தித்த பல போராட்டங்களையும் இனிவரும் பதிவுகளில் நாம் சந்திப்போம்...

Friday, July 31, 2009

ஆத்மா

நண்பர்களே, நான் ஏற்கன‌வே ஒரு பயங்கர பேய்க்கதை சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா!!? ஆத்மா! ஆம் அதே கதைதான்! இன்று அந்தக் கதையின் தொடர்ச்சி,(எப்போது கதை முடியும் என்றெல்லாம் உடனே கேட்கக்கூடாது அது அடியேனின் கற்பனை வளத்தைப் பொறுத்து சில மாதங்களோ சில வருடங்களோ என ஆகக்கூடும்!)

எப்படியிருந்தாலும் பல வருடங்கள் இந்தக் கதையை இழுத்தடிக்க வேண்டும் என்பதே நம் அவா! ஆனால் பாருங்கள் அவ்வப்போது "கருத்து வரட்சி" ஏற்பட்டு "எழுத்துப் புரட்சியைத்" தடை செய்து விடுகிறது! சீக்கிரத்தில் கதையை முடித்து விடும்படி பல மிரட்டல்கள் தொடர்ந்த‌போதும்! அதற்கெல்லாம் மனங் கலங்காது! துணிவு ஒன்றே துணையாக! அரசி,கோலங்கள் என சூப்பர் மெகா தொடர்கள் ‌அனைத்தையும் தாண்டி பல வருடங்கள் பதிவிடப்படப்போகும் ஒரு மெகா பேய்க்கதைத் தொடர் இதோ உங்களுக்கே உங்களுக்காக...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


மறைமலையடிகள்

மனிதர்கள் எல்லோரும் இந்தப் பிற‌ப்பையே பெரிதாக எண்ணி, இனி வரும் பிறப்புக்களையும், இறந்த பிறகு ஆத்மா அடையும் நிலைமையினையும் சிறிதாவது விசாரியாமல் காலங்கழிப்பது மிகவும் பொல்லாதது. இன்றைக்கு உயிரோடு இருப்பவன் ஒருவன் நேற்று நான் உயிரோடு இருந்ததில்லை என்றாவது, நாளைக்கு நான் உயிரோடிருக்க மாட்டேன், எல்லாம் இன்றோடு முடிந்து போயிற்று என்றாவது சொன்னால் அவனை மற்றவர்கள் எல்லோரும் பித்தம் பிடித்தவன் என்று சொல்வார்களன்றோ?

நேற்றிருந்தவன் இன்றைக்கும், இன்றிருக்கிறவன் நாளைக்கும் உயிர் வாழ்தலை நாம் பிரத்தியட்சமாய் அறிந்து கொளவதுபோல, முற்பிறப்பிலிருந்தவன் இப்பிறப்பிலும், இப்பிறப்பிலிருப்பவன் இனி வரும் பிறப்பிலும் இருப்பான் என்பது திண்ணம்.

ஆத்மாவானது என்றும் அழிவில்லாத பொருள்; அது மேலே போர்த்துக் கொன்டு வரும் இந்த உடம்புக்குத்தான் அழிவேயல்லாமல் அறிவு ரூபமாயிருக்கும் அந்த உயிருக்கு அழிவேயில்லை.

இந்த நில உலகமும், இதில் உலாவி வரும் உடம்பும் மாத்திரமே மெய்ப்பொருள்கள் என்று எண்ணுதல் கூடாது. அப்படி எண்ணுவதினால் மனிதர் பல வகையிலே பிழையான காரியங்களைச் செய்து இப்பிற‌வியில் துன்பமடைவத‌ல்லாமலும், இனி வரும் பிற‌விகளிலும் துன்பம் அடைகிறார்கள்.

ஆகையால், இந்நிலவுலகத்தினுள் சிறந்த வேறு உலகங்கள் உள்ளன என்றும், அவ்வுலகங்களில் சஞ்சரிப்பதற்கு இந்த உடம்பைக் காட்டிலும் இன்னும் வேறு உடம்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டுவது ஒவ்வொருவர்க்கும் முதன்மையான கடமையாகும். இந்த உடம்பு அழிந்து போனால் எல்லாம் அழிந்து போகும் என்று எண்ணுவதும், சொல்வதும் பெரும் பிழையாகும்...
மேலும் தகவல்களுக்கு
மறைமலையடிகளின் "மரணத்தின் பின் மனிதர் நிலை"

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முன்கதை : பஞ்சம் பிழைக்க வந்த ஒரு ஏழைக்குடும்பம் ஏற்கனவே அகால மரண‌மடைந்த‌ சிவாவின் ஆத்மா அலைபாய்ந்து கொன்டிருந்த அந்த ஆற்றோர செம்பனைக் காட்டு குடிசைக்குள் உண்மையறியாமல் தஞ்சமடைகின்றது. சிவாவின் ஆத்மா சூன்யமாய் அவர்களை சுற்றி சுழன்று கொன்டிருப்பதை இயற்‌கையைத் தவிர வேறு யாரும் அறியவில்லை அப்போது! இனி...

நாளும் கிழமைகளும் அந்தக் குடிசை வீட்டில் வெறுமையாய்க் கழிந்து கொன்டிருந்தன, குடும்பத்தலைவர் தோட்டத்துக்கு வெளியே அமைந்திருந்த ஒரு நெல் ஆலையில் பணிபுரியலானார். சொற்ப சம்பளத்தில் காலை தொடங்கி இரவு வரை வேலை. வீட்டில்...

குடும்பத்தலைவி சுசி(இவர் இக்கதையின் முக்கியப்புள்ளி, இவரைப் பற்றி சுவாரஸ்யமான விக்ஷயங்கள் மேலும் பல அறியக்கிடக்கின்றன, அவற்றை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்), குழந்தைகளோடு, ஆற்று நீரை இரைத்து, நெல் ஆலையிலிருந்து கண‌வன் குறைந்த விலையில் பெற்று வரும் அரிசியை உண‌வாக்கி, ஆற்றிலே தூண்டிலிட்டு, அதில் சிக்கிய அயிரையும், விராலும் குழம்பாக்கி குடும்பத்தை நகர்த்தி வந்தார் அவர்!அவர்களுக்கும் மறைந்த சிவாவின் ஆத்மாவுக்கும் முதன் முதலாய் சந்திப்பு நிகழ்ந்த அந்த சபிக்கப்பட்ட நாளன்று...முதல் நாளிலிருந்து நின்றும், நிற்காமலும் விட்டு விட்டுத் தொடர்ந்து அழுதுகொன்டிருக்கும் மழை...வானம் இருண்டு, மேகங்கள் திரண்டு, சூரியன் மறைந்து மாலை ஐந்து மணியே இரவு மணி எட்டாய் இருண்டிருந்தது, வானம் கிழிந்து கொட்டிய அருவியாய் நீரோட்டம் பூமி நனைத்து சேற்றோடு குழைந்து ! அருவருப்பான அழுக்கு நிறத்தில் வீட்டைச்சுற்றி ஓடிக்கொன்டிருந்தது மழை நீர், அதிலே சமயங்களில் தவளைகளும், செம்பனைக்காட்டு ஓலைபாம்புகளும் நீச்சலடித்துச் சென்று கொன்டிருந்தன.

மழையின் கோரம் அவர்கள் வீட்டு முன் வாசலையும் சேறடித்து அகோரமாக்கியிருந்தது... வெளியே கால் வைக்க முடியா வண்ணம் சேறும் சகதியும், செம்பனை எச்சங்களுமாக வெளிவாசல் படு கண்ராவியாக...,
சிறிது கால இடவெளியில் மழை சற்று ஓய்வதாய்த் தோன்ற சுசி கைலியை அள்ளி இடையில் சொருகிக்கொன்டு வெளி வாசலைத் தீய்மை செய்யும் பொருட்டு துடைப்பம், வாளி நீர் சகிதமாக வாசல் வந்தார்,

அப்போது அவரின் மூத்த மகளும் ஓடி வந்து அம்மா நான் கழுவுகிறேன் கொடுங்கள் எனக் கெஞ்சுகிறாள், சுசி கரிசனத்தோடு "அதெல்லாம் வேணாம் நீ வேணும்னா இங்கேயே அம்மா கழுவுவதைப் பார்' வாச்லில் அவளை இருத்திவிட்டு துப்புறவு பணியில் மூழ்கினார், முக்கால் வாசி தூய்மை செய்து விட்டு மேலும் நீரெடுத்து வர பின்கட்டிற்குள் அவர் நுழைய‌, அங்கே...


பெரியவள் வாசல் தாண்டி வெளியே வந்து தாயாய் பாவனை செய்து கொன்டு துடைப்பத்தை எடுத்து வாசலில் கூட்டுகிறாள், சிலீரென்று காற்று முதுகுத்தண்டை அறைய சற்றே தூரத்தில் யாரோ அழைப்பதாய் ஓர் உண‌ர்வு, தலை நிமிர்ந்து நோக்குகிறாள். வீட்டிற்குப் பக்கவாட்டில் சற்றுத்தள்ளி ஆற்றுநீர் பொங்கிப் பெருகி ஓடிக்கொன்டிருந்த அந்த கால்வாய்க்கு மறு புற‌த்தில், பருத்த பெரும் செம்பனை மரத்தின் ஓரத்தில், ஒரு அழகான சிறுவன், ஒல்லியாய், மாநிறமாய், வாய் திற‌ந்து பல் வரிசை தெரிய அவளைப் பார்த்து சிரித்துக்கொன்டு நிற்கிறான், ஒரு அழுக்கடைந்த கருநீல கால்சட்டை மட்டுமே அணிந்து, அந்த மழைத்தூரலிலும் மேல் சட்டையின்றி ஒரு கையை செம்பனை மரத்தில் ஊன்றியபடியும் மறுகையில் அவனைவிட நீளமான ஒரு கம்பையும் பற்றிக்கொன்டு அவன் அவளையே சிரித்து நோக்கியபடி நின்றுகொன்டிருக்கிறான்! அவளுக்கு பக்கத்து தோட்டத்தில் தான் பார்த்த ஒரு உற‌வுக்காரப்பையனாக அவன் தோன்றவே அவளும் சிரித்தபடியே அவனை நோக்கி சில அடிகள் வைக்கிறாள், இப்போது அவன் சிரிப்பு பண்மடங்கா‌க, செம்பனையைப் பற்றிக் கொன்டிருந்த அவன் கை அவளை நோக்கி வேகமாக அசைந்து அழைக்கிறது... குறுக்கே ஆறு ஓடிக்கொன்டிருக்க‌, தனை மற‌ந்து அவள் அவனை நோக்கி அடி வைத்துக்கொன்டிருக்கிறாள்...

Wednesday, July 29, 2009

தமிழ்ப்பூங்காவில் ஒரு விருது விழா


சுமார் 10 மணி இரவு இருக்கும், கடமை முடிந்து, கண் அயரும் நேரம், "ஜெய் ஜக்கம்மா!" என கணிணீயிலிருந்து ஒரு அசீரரி, என்னவோ ஏதோவென்று நாமும் கண்ணைக்கசக்கிக் கொன்டு கனினியைநோக்க, அங்கே! "எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்...."

இப்படி ஒரு அன்பு எச்சரிக்கை நம்ம குறை‌ ஒன்றும் இல்லாத, "குறை ஒன்றும் இல்லை" பதிவரிடமிருந்து! ஆத்தா கோபத்துக்கு ஆளாக முடியுமா? இரவாவது! தூக்கமாவது! பின்னங்கால் பிடரியில் பட எடுத்த ஓட்டம், குறை ஒன்றும் இல்லை பதிவில் நாம் அடுத்த நிமிடம்!

பார்த்தால் நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள் அழகான ஒரு விருது அது நட்பைப் போற்றும் விருது என்பது அதன் தனிச்சிறப்பு, தூக்கிக் கையில் கொடுத்து நமை வாழ்த்த! அந்த "நொடி" உண்மையிலேயே மிகவும் உன்ன‌தமான வாழ்க்கை "வானவெடி" போங்கள்!சந்தோசம், சிரிப்பு, உற்சாகம், ஆன‌ந்தக் கண்ணீர் என நவரசமாய் பொங்கிய பல உணர்ச்சிகளையும் பயங்கரமாய் கட்டுப் படுத்திக்கொன்டு, நண்பரின் விருதுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் நயமாக வைத்துவிட்டு, அவர் கொடுத்த விருதோடு, அக்கரை எனும் பொன்னாடை, நட்பு எனும் பணமுடிப்பு ஆகிய‌வற்றையும் பெற்றுக்கொன்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன்.

நேற்று இரவு நான் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா! அது தான் கிடையாது! சுத்தமாக ஒரு பொட்டு தூக்கமில்லை, "இதற்குமுன் விருது வாங்கிய அனுபவமே கிடையாதே அதனால்தான்" என நினைக்கிறீர்கள் அல்லவா, உண்மையாயிருந்தாலும் அது தவறு!நிஜத்தில் என்னவென்றால் அடுத்தபடியாக நாமும் நமது நண்பர்களாக நாம் நினைப்பவர்களுக்கு, நம்மை நண்பராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதைக் கொடுத்து, அவரும் நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து இதை ஏற்றுக்கொன்டு, நம்மையும், நமது நட்பையும் கெளரவிக்க வேண்டுமே எனும் நினைப்பு!மனம் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டதில் பல தேர்வுகளிலிருந்து சில முடிவுகள்! இவை அத்தனையும் சுய நினைவோடு, யாவ‌ரிடமும் கையூட்டு வாங்கிக்கொன்டு தேர்வுக்குழுவினரால்(அடியேன் மட்டுமே) பலவித குவிசுகள், சூடான கேள்விபதில்கள், குரோஸ் வேர்டு பரிட்சைகள், ஓட்டப்பந்தயங்கள் என திறமைக்கு ச‌வாலான ப‌ரீட்சைகள் அனைத்தும் வைக்கப்பட்டு அதில் வெற்றிகரமாக ஜெயித்த வெற்றியாளர்கள் இவர்கள் என்பதையும் தெரிவித்துக்கொன்டு, இன்றைய நமது பாராட்டு விழா மேடைக்கு செல்வோம் வாருங்கள்!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மாலை மயங்கும் நேரம், இனிக்கும் இரவு தொடங்கும் நேரம், தமிழ்ப்பூங்கா, வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, நட்பைப்போற்றும் தலைவரின் தளபதிப்படப்பாடலான "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே... பாடல் சீடி தேயும்வரை திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டுக்கொன்டிருக்கிறது....


பாராட்டு மேடையிலே தமிழ் கூறு நல்லுல‌கின் ஒட்டு மொத்த பிரபல்யங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர்! அவர்களுக்கு நடுவே நிகழ்ச்சியைத் தலைமை தாங்க நமது சிறப்பு விருந்தினர் திருவாள்ர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள் (ந‌ல்லவேளை, நைசா பாராட்டியாச்சு!இல்லேன்னா ஜக்கம்மாகிட்டே சொல்லிப்புடுவார் மனுக்ஷன்!)


மேலும் பூங்கா முழுக்க அழகழகாய் பல பதிவுலக தோழிகளும் "ஹேன்சம்", "மாச்சோ"வுமாக பல பதிவுலக காளையரும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொன்டிருக்கின்றனர்!

இந்த நிகழ்ச்சிக்காகவே வீட்டில் அழுது அடம்பிடித்து புது கோட்டு சூட்டெல்லாம் வாங்கிப் போட்டுக்கொன்டு கிளாமரான அவைத்தலைவராக வரவேற்புறை நிகழ்த்தத்துவங்கிய ந‌ம் திரு.தமிழ்வானன் அவர்கள் மைக்கைப் பிடித்து பேசுகிறார்... பேசுகிறார்... பேசிக்கொன்டேயிருக்கிறார்... அதற்குமேலும் பொறுக்க முடியாமல் பதிவர்கள் நால்வர் மேடைக்கு ஓடிப்போய் அவரை குண்டுக்கட்டாக கீழே தூக்கிவர, மைக்கை தரமாட்டேன் என அவர் அடம் பிடிக்க தமிழ்ப்பூங்காவே சில நேரம் ஆடிபோய்விட்டது போங்கள்!

அடுத்ததாக சிறப்புரையாற்ற ,நல்லவர் இதயத்தில் இருந்து வந்திருந்த திருவாளர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள், எழுந்தார், மைக்கை கையிலெடுத்தார், அவர் உதிர்க்கப்போகும் உரைக்காக கூட்டம் மொத்தமும் கூர்மையாய் காதுகளைத் தீட்டிக் கொன்டு காத்திருக்க மனுக்ஷன் ஒரே வரி, அதிலும் மூன்றே சொற்கள் "குறை ஒன்றும் இல்லை" என சொல்லிவிட்டு வாத்தியார் எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் கூட்டத்தை நோக்கி கையை அசைத்து விடை பெற்றுக்கொன்டார்! கூட்டம் "ஙே" என்று சிறிது நேரம் விழித்து விட்டு அவ்ளோதான் உரை போலும் என முடிவுக்கு வந்து பலமாக கையை தட்டுகிறது...தட்டுகிறது...தட்டிக்கொன்டேயிருக்கிறது..., அதில் எங்கே திரும்பிவந்து பேச ஆரம்பித்துவிடப்போகிறாரோ எனும் பயமும் சற்று ஒளிந்திருந்ததை காண முடிந்தது! :)))

சரி அடுத்ததாக நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி! அழகான வெண்புறா நம்ம தோழி சுபாதான், நேர்த்தியாக சேலையில் விருதுகளை, தங்க வேட்டை ரம்யாவைவிட விலை அதிகமான நகை(புன்னகை தானுங்கோ) அணிந்து எல்லோரையும் கவர்ந்தபடி மேடையில் விருதுகளை தங்கத்தட்டில் வைத்துத் தர,

அதிகம் பேச மாட்டேன் என உத்தரவாதம்(கையெழுத்துப்பிரதியாக) வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் திரு.தமிழ்வானன் அவர்கள் மேடையேறி மைக்கைப்பிடித்துக்கொன்டு நாம் எழுதிகொடுத்தபடி விருது பெற்ற பதிவர்களை மேடைக்கு அழைக்க, பிண்ணனியில் அவ்ர்களின் பதிவுகள், அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாய் வெண் திரையில் பிரதிபலிக்க‌...


இதோ எனக்கு நண்பர்களாக வாய்த்து என்னையும் நட்பையும் பெருமைபடுத்திய எனது நண்பர்கள் ...

* உரிமைக்குப் போராடும் நல்ல நண்பர் ஓலைச்சுவடி ‍சதீசு குமார் அவர்கள்

* பதிவுலகப்புயல் நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள்

* நல்லவர் இதயத்திலிருந்து நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள்

* இலக்கிய நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்ணா அவர்கள்

* என்‍ உலகத்திலிருந்து அன்பு தோழி சுபா அவர்கள்

* பின்னூட்டப்புயல் நம்ம தல தமிழ்வானன் அவர்கள்

* பிறமொழிப் பதிவராயிருந்தும் தமிழ்ப்பூங்கா வாசகரான "ரஞ்சீதா'ஸ் கார்னர்" " ரஞ்சீதா அவர்கள்

* விவேகமான எழுத்தாளர் விவேகம் வாசுதேவன் லட்சுமணன் அவர்கள்

‍‍* நேசமான கவிதைகளால் நெஞ்சை நனைத்துச் சென்ற தோழி ஈரமான நினைவுகள் புனிதா! (விரைவில் திரும்பி விடுவார் எனும் நம்பிக்கையோடு)

***
* இந்தப் பத்தாவது விருதைப் பெறும் நண்பர் நான் மட்டுமே அறிந்தவர்! அவருக்கு என்னை தெரியாது என்றே நினைக்கிறேன், அவரை யாரென்று கூறும் முன் ஒரு பிளாஸ்பேக்...

சில காலங்களுக்கு முன்னாள், நமது மதிப்பிற்குரிய அய்யா திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களின் அஞ்சல் ஒன்று அதிலே ஒரு பதிவு முகவரி அதற்கு முன் தமிழ்ப்பதிவுகளுடன் பரிட்சயமாகும் பாக்கியம் அமையவில்லை!அதை தட்டிப்பார்த்தால் கண்முன்னே அருமையான அந்தப் தமிழ்ப் பதிவு கண்சிமிட்டி வரவேற்கிற‌து! கருத்துக்களஞ்சியமாய் அற்புதமான பதிவுகள்!
அந்த வரலாற்றுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான, பூகோளப்பூர்வமான (அடக்கடவுளே!) நிகழ்ச்சிக்குப்பின் தொடங்கியது நமது தமிழ்ப்பதிவுலகுக்கு கக்ஷ்ட‌காலம் :( (பின்னே நாமலும் பதிவராயிட்டம்ல!)

திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷணர் அய்யா அவர்களின் விள‌க்க உரை‌கள், பதில்கள் ஆகியவற்றிலிருந்து பாடம் படித்துக்கொன்டு தொடங்கியது நமது பதிவுலக வாழ்வு!


அந்த அற்புதனமான பதிவர் வேறு யாருமில்லை நம‌து

* மாடப்புறா குமரன் மாரிமுத்து! அவர்கள்தான், நன்றி நண்பரே!

மேற்குறிப்பிட்ட நண்பர்களோடு நேரில் நட்பு பாராட்டிய அனுபவம் இல்லையெனினும் அவர்களின்

பதிவுகளின் வழி! பின்னூட்டங்களின் வழி அவர்களை நல்ல நண்பர்களாக அடையாளம் காண முடிகின்றது! மேலும் நாம் ஒரு "சைக்கிக்" சக்தி படைத்த டெலிபத்தி, எலிபத்தி போன்ற பல்வேறு மனதை ஊடுரும் மகா சக்திபடைத்த விக்ஷேச நபர் என்பது ஒரு கூடுதலான தகவல்(அதெல்லாம் சுத்தப் பொய்! நம்பாதீங்க, எத்தனை தூரமானாலும் உண்மை நட்பை உள்ளத்தால் உணர முடியுங்கிறது தானுங்க உண்மை!)

உண்மையில் சொல்லப்போனால் எல்லோருமே நண்பர்கள்தான், தமிழ்ப்பூங்காவின் ஓரத்திலே எனது வலைப்பட்டியல் வரிசையிலே நான் அமர்த்தியிருக்கும் அத்தனை பேரும் அடியேனின் நண்பர்களே! அவர்களில் சிலர் உயர்ந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! தமிழக நல்ல நண்பர்களின் ந‌ட்பு தற்பொழுது வாய்த்ததில் நிரம்ப மகிழ்ச்சி! கூடிய விரைவில் அவ‌ர்களையும் தமிழ்ப்பூங்காவின் வலைப்பட்டியலில் அமரவைக்க வேலைகள் நடந்துகொன்டிருக்கின்றன! இப்போதைக்கு நான் அறிந்தவர்களையே வரிசைப்படுத்தியிருக்கிறேன்! தமிழ்ப் பதிவுலகக் கடலில் அறிய வேண்டியவர் அனேகம் பேர் இன்னும் உள்ளனர்!

சரி நண்பர்களே, இந்த பாராட்டு விழா இனிதே நடைபெற வருகை எனும் நன்கொடை கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும், தலைமை தாங்கிய திருவாளர். "குறை ஒன்றும் இல்லை" அவர்களுக்கும் (அவர் அடியேனுக்கு விருது அளித்திருக்காவிட்டால் இந்த கும்மியே கிடையாது) ! நன்றி! நன்றி!

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நமது நட்பெனும் பொன்முடிப்பும், அக்கரையெனும் பொன்னாடையும், கூடவே அவர்கள் பதிவில் இட்டுக்கொள்ள அழகான விருதுப்பட்டையும் வழங்கிச் சிற‌ப்பிக்கப்படுகின்றது! இவர்களுக்கான சலுகைகள் பின்வருமாறு :

இவர்கள் பதிவு வெறும் வெள்ளைப்பக்கமாக ஒன்றுமே எழுதாது இருந்தாலும் நாம் அவர்களின் அந்தப் பதிவை ஆஹா ஓஹோ வெனப் புகழ்வோம்.


அடிக்கடி அவர்களின் பக்கங்களுக்கு விஜயமளித்து ஹீட்ஸ் கணக்கை ஏற்றுவோம்.


மற்றும் அடிக்கடி அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களை எக்கச்சக்கமாக வழங்கி மகிழ்விப்போம்.

விருது பெற்ற நண்பர்களே, மகிழ்ச்சிதானே!


சரி மீண்டும் அடுத்து ஒரு நிகழ்வில் சந்திப்போம், வணக்கம்.

நல்லது விருது பெற்ற நண்பர்களே, மேற்காணும் இந்த விருதை உங்கள் வ‌லைப்பதிவின் ஓர‌த்தில் அழகாக ஒட்டிவிடுங்கள், பின்னர் நீங்களும் உங்கள் நண்பர்களாக 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் இந்த விருதை வழங்கி அவர்களை மகிழ்வித்து தாங்களும் மகிழுங்கள்! நட்புக்குக் கைகொடுங்கள் நண்பர்களே!


பி.கு : விருது பெற்ற நண்பர்களுக்கும் ஏனைய எல்லோருக்கும், மறந்திராதீங்கப்பா , கம்பெனிக்கு உங்கள் அன்பும் ஆதரவும் இன்றுபோல் என்றும் தொடரட்டும்! ‌

Tuesday, July 28, 2009

இப்படியுமா ‌பரவும் எயிட்ஸ் நோய்?அன்பர்களே(நட்பெனும் கடல் மூழ்கி நான் கண்டெடுத்த நல் முத்துக்கள்)! நண்பர்களே ( நான் அறியாத, தெரியாத, பார்க்காத, பழகாத நபர்கள் ஆயினும் எனை மதித்து இங்கே எட்டிப்பார்த்திருக்கும் நல்ல உள்ளங்கள்)

இந்தப் பொன்னான மாலைப் பொழுதினிலே, கடலலையெனத் திரண்டிருக்கும் வாசகப் பெருமக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் ( இதெல்லாம் ரொம்பவே ஓவர்! உடனடியா விக்ஷயத்திற்கு வரலைன்னா இப்போதே வெளிநடப்புச் செய்துவிடுவோம்னு ஏகப்பட்ட குரல்கள்!) சரி சரி நேரடியாக விக்ஷயத்திற்கு வந்து விடுகிறேன்!
இதற்கு முன் அடியேன் எழுதிவந்த பேய்க்கதையைப் படித்து பயத்தால் நடுந‌டுங்கி வீட்டை விட்டு வெளியே போகவும் பலர் பயப்படுவதாக தகவல் வந்து குவிந்த வண்ணம் உள்ளது! ஆகையால் எங்கே நாமெழுதும் இந்தப் பேய்க்கதையால் பலபேர் பயத்தில் வேலைக்கே போகாமல் இருந்து அதனால் நாட்டின் பொருளாதரத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனும் நல்லெண்ணத்தில் தற்காலிகமாக கதை நிறுத்தப்பட்டு, ( அடக்கடவுளே இது அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு எல்லாத்தையும் தாண்டிய பிரபஞ்சப் புளுகா இருக்குதேடா சாமி!)

கதைகளை ஓய்வான மேலும் பல சமயங்களில் பரிமாறிக்கொள்வோம், அதையும் தாண்டிய ஒரு முக்கியமான செய்தியை இப்பொழுது கவனிக்கலாம் வாருங்கள் :‍

எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயின் விபரீதம் உலகறிந்த விக்ஷயம்! தவறான ஆண் பெண் உறவு, போதை ஊசிகளின் பறிமாற்றம்,புண்கள். காயங்கள் வழி எயிட்ஸ் கிருமியால் மாசடைந்த இரத்தத்தின் சேர்க்கையும் எயிட்ஸ் பரவ வழி வகுக்கிறது யாவரும் அறிந்த ஒரு செய்தியே ஆனால் நாம் நினைத்தும் பாராத மேலும் பல விதங்களில் எயிட்ஸ் நோயால் மாசடைந்த இரத்த சேர்க்கை நிகழ்வது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பெரும்பாலான ஜனரஞ்சகமான வீதியோரங்களில் பல ஆங்காடிக்கடைகளில் பலதரப்பட்ட உண்வு வகைகளை விற்பனை செய்வதை நாம் அனைவரும் அறிவோம். வெயில் சுட்டெரிக்கும் வேளைகளில் நாவரண்டு போகும். அப்பொழுது அழகழகாய் கண்ணாடிப்பெட்டிகளில் ஐஸ்கட்டிகளின் கூட்டங்களுக்கு மத்தியில் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித்துண்டுகள், குமுட்டிபழத்துண்டங்கள், மேலும் பலவகைப் பழங்கள் நம்மை கண்சிமிட்டி அழைத்து வாங்கி உண்ணத்தூண்டுவது போல் இருக்கும்! நாமும் ( முழுப்பழங்களை வாங்கி, சுத்தப்படுத்தி, பதப்படுத்தி உண்பதைவிட, இம்மாதிரி எல்லாமே த‌யாராய் அமைந்திருப்பது தானே நமக்கும் அதிகம் பிடிக்கும்! வேலை மிச்சம், நேரம் மிச்சம்! இப்படி பல வியாக்கியானம் வேறு!)
பல‌ சமயங்களில் எதையும் யோசிக்காது பண‌ம் கொடுத்து இது போல் பதப்படுத்தப்பட்ட பழ வகைகளை வாங்கி உண்கிறோம் அல்லவா! அது மிகவும் தவறு என்பது இந்தச் செய்தியைப்படிக்கும்ப்போது நமக்குப்புரிகிறது.
அந்த‌ச் சிறுவனுக்கு சுமார் 10 வயதிருக்கும், அவன் ஒரு வீதியோர அங்காடியில் வெட்டி விற்கப்பட்ட அன்னாசிப்பழத்துண்டங்களை வாங்கி உண்டிருக்கிறான், அதன் பின்னர் சில‌காலங்களில் அவனுக்கு சுக‌வீனம் ஏற்படத்துவங்கி சுமார் 15 நாட்கள் கழிந்த நிலையில் அவன் முழுமையான சுகாதாரப்பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது அவனுக்கு எயிட்ஸ் நோய் கண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! அதிர்ச்சியில் உறைந்த அவன் குடும்பம் மொத்தமும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள யாருக்குமே அந்த நோய் பீடிக்கப்படவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவனின் நோய் எப்படித்துவங்கியது எனும் ஆராய்ச்சித்தொடரில் நோயில் விழ சில காலங்களுக்கு முன் அவன் அன்னாசிப்பழத் துண்டங்கள் வாங்கி உண்டானே அந்தப்பழக்கடை அங்காடியும் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது, அந்த பழக்கடை வியாபாரிக்கு கையில் வெடிப்புக்களுடன் கூடிய சிறு சிறு இரத்தப்புண்கள் அடையாளம் காண்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்படுத்திப் பரிசோதிததில் அவர் பல காலமாக எயிட்ஸ் நோயின் ஆளுமையில் சிக்கிச் சீரழிந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! பாவம் அந்தச் சிறுவன் இந்த அங்காடிக்கடை வியாபாரியினால் அவனுக்கும் இந்த நோய் பரவி இன்று அவனும் ஒரு எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்நாட்களை எண்ணிக்கொன்டிருக்கிறான்.
நண்பர்களே பார்த்தீர்களா! விதியின் வடிவம் யார் கண்ணுக்கும் புரிவதில்லை , உண்மைதான் ஆனால் சிறிது எச்சரிக்கையாக இருப்பதன் வழி இது போன்ற பல அசம்பாவிதங்களை நிச்சயம் தவிர்க்கலாம் அல்லவா!
எனவே தயவு செய்து வீதிகளில் வெட்டி விற்கப்படும் இதுபோன்ற பழத்துண்டங்கள் மட்டுமல்ல, வெறும் கைகளோடு படைக்கப்படும் எல்லா வகை உண்வுகளையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள், நெகிழியிலான கயுறைகள் அணிந்து உண‌வுகளைப் பறிமாறும் கடைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். நமது பாதுகாப்பும், நமது ஆரோக்கியமும், நமது கைவசவமே!
சரி, நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்!